7 Feb 2012

பேச்சு வகை

வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். எண்ணிலாத முகங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகை. நவரச முகங்கள்; நவரசப் பேச்சுக்கள். என் வழியில் வந்த சில பேச்சு வகைகள்!

அழுவது போல் தழுதழுத்து பாசம் காட்டுவதாய் வேஷமிட்டுப் பேசும்.
கோபத்துடன் கொந்தளித்து வாயில் வந்ததெல்லாம் சிந்திக்காமல் பேசும்.
பயத்தினால் நடுநடுங்கி உள்ளதைச் சொல்லாமல் திணறிப் பேசும்.
உள்ளத்தில் உள்ளதை வெளிக்காட்டாமல் பசப்பலுடன் புறம் பேசும்.
பிறர் சிரித்துப் பார்க்க வேண்டி வேடிக்கை கதை சொல்லிப் பேசும்.
பிறர் குரலைத் தன் குரலாய் மாற்றி வாய் பிளந்து கேட்கப் பேசும்.
ஊர் வம்பு எங்கே எனத் தேடித்தேடி தெருவெங்கும் திரிந்து பேசும்.
வெட்டொன்று  துண்டிரண்டாய் பட்டென்று கண்டிப்பாய்ப் பேசும்.
வெண்டைக்காய் வழுவழுப்பாய் நழுவி நழுவி வழுக்கப் பேசும்.
நீண்ட நெடுஞ் சாலைபோல் சுற்றி வளைத்து நெளிந்து ஒளித்துப் பேசும்.
எல்லாம் தெரிந்தும் புரியாதது போல் நடித்துப் பேசும்.
இழித்தும் பழித்தும் எதையும் பேசும் நாக்கு............
எப்போதும் சாய்ந்து கொள்ள என் தோள்கள் உண்டு எனக் கனிவோடு பேசும்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென வீரம் கொள வைத்துப் பேசும்.
யான் இருக்க பயமேன் என்று அணைத்துக் கொண்டு பேசும்.
பசித்தமுகம் பார்த்துப் பரிவோடு உணவளித்துக் கருணையுடன் பேசும்.
அன்பினால் அரவணைத்து கருணையெனும் சொல் கொண்டாரைப்
பார்த்தாலே அமைதி வரும்,நேசமுடன் பாசம் வரும் ஆனந்தம் பெருகும்.
இனிய சொல்லே என் நாவு பேச வேண்டும் இறைவா!
எப்போதும் உன் நாமம் புகல வேண்டும் தலைவா!
                             ---------------------

1 comment:

  1. theeyinal sutta punn ulaarum, aaradhey
    naavinal sutta vadu.

    .valluvar.

    ReplyDelete