21 Apr 2013

மகிழம் பூவுக்கு ஒரு பாடல்!

சேலத்தில் எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்து வீடு திரு. நரசிம்மனுடையது. அவருக்கு  ஐந்து பெண்கள், இரு மகன்கள். அவர்கள் வீட்டுப் பக்கம் இலந்தைமரம், கோணப்புளியங்காய் மரம்,மகிழ மரம், புளிய மரம்  என நான்கு மரங்கள்! இலைகள் எல்லாம் எங்கள் வீட்டுப் பக்கம் விழும்.

அதை சுத்தப் படுத்துவது கஷ்டம். செய்யாவிட்டால் கீழே விழும் இலைகளால் சாக்கடை அடைத்துக் கொண்டு    தண்ணீர்  போகாது. தினந் தோறும் பெருக்க வேண்டும். பெருக்கும் வேலையைப் பெரும்பாலும் அப்பாதான் செய்வார். அம்மாவுக்கு நேரம் இருக்காது.

சார், கொஞ்சம் இந்தப் பக்கத்துக் கிளையையாவது வெட்டுங்க. இந்த இலைக்குப்பையை சமாளிக்க முடியல என்பார் அப்பா!
அதுக்கென்ன வெட்டிட்டா போச்சு என்பார் நரசிம்மன் 'அங்கிள்.'ஆனால் வெட்டமாட்டார்!

இந்த மரக் கிளைகள் இந்தப் பேச்சைக் கேட்டு பயப்படுமோ என்னவோ தெரியாது. எனக்கு பயமாயிருக்கும்.
பயம் என்ன பயம், வெட்டினால் இலவசமாக மரம் அன்பளிப்பாகக் கொடுக்கும் இலந்தப் பழம், கொடுக்காபுளி, புளியம் பழம் இதெல்லாம் கிடைக்காது! லீவு நாட்களின் மதியப் பொழுதுகளில் மதில் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, இந்தப் பழங்களை ருசித்துக் கொண்டே கதைப் புத்தகம் படிக்கும் சுகம் போய்விடும்!

காலையில் கண்விழித்ததும் ஓடிப் போய் சின்னக் கூடையில் மகிழம் பூக்களை சேகரித்து, இலந்தைப் பழம் பொறுக்கி என்னவோ வாழ்க்கையில் பெரியதாக சாதித்துவிட்ட திருப்தியில் மனம் முழுக்க சந்தோஷமாய், ம்.... .., என்ன நிறைவு!

இந்த மகிழம் பூ இருக்கிறதே அதை எனக்கு  மிகவும் பிடிக்கும். அதை ஒவ்வொன்றாகப் பொறுமையுடன் பொறுக்கி, நூலில் நிதானமாகக்  கோர்த்து,  ஆச்சர்யத்துடன் பார்ப்பேன்! எவ்வளவு சின்னப் பூ! எங்கே இருக்கிறது இந்த நறுமணம்? எப்படித் திருப்பிப் பார்த்தாலும் மணம் இருக்கும் இடம் தெரியவில்லையே?
விதவிதமான பூக்களில் வெவ்வேறு விதமான  நறுமணங்களை இரண்டற இயைத்து  எவ்வாறு
இறைவன் படைக்கிறான்? எத்தனை வண்ணங்கள், எத்தனைஅழகு!
நேற்று மாலை சாலையோரத்தில் ஓர் மகிழ மரம்! சாலையெங்கும் மகிழம்பூ!  வாகனங்களால் நசுக்குண்டு....பாவம், பார்த்ததும்  துளிர்த்தது பழைய நினைவு! கண்ணில் பட்டதும் மலரெடுக்காமல் வருவேனா?

அடடா சாலையில் நடந்து போவையில்                    
                      காற்றுத்  தேவன் வந்தான்                                                
கையைப் பிடித்துச் சற்றே நிறுத்தி
                      நறுமணப் பன்னீர் தெளித்தான்        
பொன் வண்ணச் சின்னக் காதோலை
                       மணக்கும் மகிழம் பூவாம்.
பூவோ சிறிது   மணமோ    பெரிது
                       பொறுமை* தந்திடும் அழகு
காலையில் பூத்து மாலையில் வீழ்ந்து
                        காலங்கள் மாறிப்  போச்சு
வாடி வதங்கி வற்றிச் சுருங்கி
                         நிறமது மாறி நின்றும்                                
நறுமணம் மாறா நல்ல சிறுமலர்
                        மணக்கும் மகிழம் பூவாம்.
                  --------------------------

பொறுமை* பாண்டிச்சேரி அன்னை மகிழம் பூவுக்கு கொடுத்துள்ள பெயர்.                          


10 Apr 2013

விஜய வருடம்


இளவேனில் என்னும் அரசன் செங்கோலோச்ச வந்துவிட்டான். இதோ புதிய ஆண்டு, தமிழ்,தெலுங்கு, கன்னடப் புத்தாண்டுகள் வரிசையாய் அணிவகுத்து நிற்கின்றன. தினம் தினம் புதிய நாள்! கணந்தொறும் புது மூச்சு! எதிர்காலம் நிகழ்காலமாகிக் கொண்டே இருக்க, இரண்டையும்  எண்ணிப்பார்ப்பதற்கு முன் இறந்தகாலமாகி நம்மை நோக்கி நகைக்கிறாள் காலமகள்!

நாம் புத்தாண்டு கொண்டாடுகிறோம்!

வெயில் பொன்னொளிக் கரம் கொண்டு அனைவரையும் இறுகத் தழுவித் திகைக்க வைக்கிறான்!பச்சைக் கூந்தலில் பொன்னிற,  செந்நிற, இளஞ்சிவப்பு மலர்களை சூடிக்கொண்டு இயற்கை அன்னை இளநகை புரிகிறாள்! ஆன்மிகச் சூழலை ஏற்படுத்தும் வேப்பமலரின் நறுமணத்தைச் சுமந்து கொண்டு பவனி வருகிறது தென்றல் காற்று! வானம் பார்த்து மழை வேண்டி தவம் செய்கிறது பூமி!

நந்தன வருடம் விடை பெற்றுச் செல்ல, வெற்றிதருவேன் என அறிவித்து, நுழைகிறது விஜயவருடம்!
வீடு  தோறும் மாவிலைத் தோரணம், உடன் வேப்பிலைக் கொத்து, வாசலிலே கோலம், மலர்கள், நாவுக்கு ருசியாக வேப்பம்பூவுடன் கலந்த வெல்லம், இனிப்புப் பாயசம்! புத்தாடை  அணிந்து ஆனந்தமாக விளையாடும் அழகுச் சிறு குழந்தைகள். வாழ்த்துப் பரிமாறிக் கொள்ளும் இளவயதினர்.  பெரியோரிடம் ஆசி பெறும்  முது வயதினர்.
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர் மக்கள். வள்ளலாரின் அருட்பா சொல்லும் செல்வம் என்றேன். என்ன செல்வம் அது?

நான் ஒருவரிடம் போய் நின்று எனக்கு ஒரு பொருளைத் தாருங்கள் என்று இரந்து கேட்காத  வரம் வேண்டும்.'' இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று நில்லாத நற்கதியை அளித்த அம்மையே''என்கிறது அபிராமி அந்தாதி.

என்னிடம் ஒருவர் வந்து வேண்டும், கொடுங்கள் எனக் கேட்கும் போது, 'இல்லையென்று' சொல்லாமல் கொடுக்கின்ற ஈகைக் குணம் வேண்டும். வைத்துக் கொண்டே இல்லையென்பது பாவம் என்கிறது வேதம். அதிகமில்லை, நொய்யரிசியின் ஒரு பாதியையாவது கொடுங்கள்.''நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்,'' பிடி சோறாவது வறியவர்க்கு இட்ட பின் உண்ணுங்கள்,'' என்கிறார் அருணகிரிநாதர்.

பிறருடைய செல்வத்தை அபகரிக்க நினைக்காத  நல்ல மனம் எனக்குத் தருவாய்.

பிறரைப் பார்த்து, ''சீயென்றும், பேயென்றும், நாயென்றும்'' இகழ்ந்து சொல்லாத  அன்பு மனம்!

உறுதியுடைய வாய்மை! நெறி பிறழாத வாய்மை! உள்ளத் தூய்மை!

இதற்கும் மேல் இறைவனுடைய நினைவை விட்டு நீங்காத உள்ளம்.

இன்னும் ஒன்றே ஒன்று உள்ளது!

தாயாய் தந்தையாய், சற்குருவாய், நண்பனாய் விளங்குபவனே! கந்தகோட்டத்து மாமணியே! மயிலேறிய மாணிக்கமே!  நீ என்றைக்கும், எப்போதும் என்னைக் கைவிடாது  இருக்க வேண்டும்.

இதுவே நான் கேட்கும் வரம்!

'அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கை, ஆதிகடவூரில் வாழ்பவள், அமுதீசர் ஒரு பாகம் அகலாத அபிராமி'யிடம் என்ன வேண்டுவது?

1. கலையாத கல்வி 2. குறையாத வயது 3. கபடு வாராத நட்பு 4. குறையாத வளமை 5. குன்றாத இளமை 6. பிணிகள் இல்லாத உடல் 7. சலியாத மனம் 8. அன்பு அகலாத மனைவி 9. தவறாத சந்தானம் 10. தாழாத கீர்த்தி 11. மாறாத வார்த்தை 12. தடைகள் வாராத கொடை 13. தொலையாத நிதி 14. தன் நிலை பிறழாமை15. துன்பம் இல்லாத வாழ்வு 16. இறைவியின்  பாதத்தில் அன்பு.

விஜய வருடத்தில் மட்டுமன்றி எப்போதும் இந்த 16 செல்வங்களையும் எல்லோருக்கும் அன்னை அபிராமி வழங்குவாளாக!















9 Apr 2013

ஆனந்தம்


மலைசூழ் மாநகராகிய சேலம் ஒரு காலத்தில் மிக அழகிய ஊர். அடர்ந்து, குடை கவிழ்த்தினார் போலும் பசிய இலைகள் சலசலக்க, மஞ்சள் நிறத்தில் சின்னஞ்சிறிய பூக்களில் அழகு காட்டி, பிஞ்சாய்த் துவர்த்து, காயாகி, அரைப்பழமாய் இனித்து, புளித்துத்தித்திக்கும் பழங்களுடைய புளிய மரங்கள் இரு பக்கங்களிலும் கவரி வீச, சாலையின் இரு பக்கங்களிலும் பச்சைப் பட்டாடை அணிந்த மண்மகள் அழகுத் திருக்கோலம் காட்டி, தென்றலிசைப் பாட்டில் மயங்கி நிற்பாள். ஆங்காங்கே வானுயர்ந்து நிற்கும் மரமல்லி மரங்கள் மணம் பரப்ப, ஏற்றம் இறைக்கும் உழவர்களின் இசைப்பாட்டு  ஏலேலோ என முணுமுணுக்கும்.

பெளர்ணமி  நாளின் மாலைப் பொழுதில் இலைகளுக்கு இடையே ஊடுருவி  கண்ணாமூச்சி ஆடும் ஒளிக்கீற்றுக்களுக்கு இடையே தோழிகளுடன் உலாவிவர அனுமதி கிடைக்கும்! கனவுகளின் பகிர்தல்கள், மெல்லிய சிரிப்பொலியுடன் கைகோர்த்து நடக்கும்.

இன்றைக்கு உலாவுவதற்கு  இடமின்றி  நெருக்கடியுடன், மரங்களற்ற மொட்டைச் சாலைகள்!

பெங்களூர் வாசிகளுக்கு கிடைத்துள்ள  மிகப் பெரிய வரம் இங்குள்ள பூங்காக்கள். மலர்ச் செடிகள்  கண்களுக்கு விருந்தளிக்க, கால்களுக்கு  நடைப் பயிற்சி! சிறுவர்களுக்கு  விளையாடும் இடம் !அமர்ந்து ஆர அமரப் பேச இருக்கைகள்! நல்ல பொழுது போக்குக்கு உகந்த இடம்.

தினந்தோறும் வானத்தையும்  பூமியையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளியாய், எண்ணங்களற்ற அமைதி நிறைந்த மனதுடன்,  நானே நானாய், என்னுள் ஒன்றி பூங்காவை நோக்கி  நடக்கையில் எல்லாமே அழகு. காற்றின் தழுவலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் போது பொங்கி வழியும் அந்த நிமிடத்தின் உயிர்ப்பு, சுவாசத்தில்!  மாலைக்கதிரவன் மேற்குத் திசையில் வாரி இறைக்கும்  சிந்தூர வர்ணஜாலங்களைச்   சுமந்து, கணத்துக்குக் கணம் வடிவம் மாற்றி விந்தை காட்டும் மேகப் பொதிகள் அன்றையப் பொழுதின் செய்திச் சுருக்கம்.

செயற்கை அழகின் கலப்புக் கலவாது பொலியும் வெண்ணிற நாரைக்கூட்டங்கள்! பச்சைமேனியின் சிவப்பு ஆரம் பளிச்சிடப் பறக்கும் தத்தைகள் ! கன்னங்கரிய மேனியுடன் கட்டைக்குரல்  எட்டுத்திக்கும்
ஒலிக்க அச்சமின்றித் திரியும் காகங்கள்!  ஒன்றாய்ச் சேர்ந்து வட்டமிடும் புறாக்கள்.

வானளாவிய மரங்கள், பலவிதமான செடிகள், மலர்களற்ற அழகுப் புதர்கள் நிறைந்திருக்க, ஆங்காங்கே போடப் பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்ந்து பார்க்கும் முகங்களில் ஒரு சிறு புன்னகையைத் தேடும் 
மனிதர்கள்.  அரசியல் பேசியவாறு நண்பர்கள்! 
ஒரு பக்கம்  பெண்கள் 'சிரிப்போர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்' நின்றவாறே பல உடற்பயிற்சிகளைச் செய்து, அவ்வப்போது 'ஹ ஹ' எனச் சிரித்துக் கொண்டிருப்பர். மறு பக்கம் விநாயகர் கோயிலின் முன் உட்கார்ந்தவாறே மூச்சுப் பயிற்சியுடன் இணைந்து செய்யும் உடற் பயிற்சி செய்வோர் 90% பெண்கள்!இன்றைய பெண்களுக்கு உடல் நலம்  பேணுதலில் உள்ள ஆர்வம் பாராட்டற்குரியதாகும்.

பல வண்ண இடுப்புப் பட்டிகளுடன் கராத்தே கற்றுக் கொள்ளும் சிறுவர் சிறுமிகள்!

பூப்பந்தாட்டம் ஆடும் வாலிபர்கள். சறுக்கு மரத்தில், ஊஞ்சலில், சீசாவில் விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள்!    தங்கள் மழலைச் செல்வங்களின் விளயாட்டைப் பார்த்து மகிழும் பெற்றோர்கள்.

காதில் பாட்டுக் கேட்கும் கருவியுடன் கால்சராயும், சட்டையும் அணிந்த யுவதிகள் போட்டி போட்டுக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க ஓட்டநடை பயில்வர்.  சமையலிலிருந்து தூக்கம் வரை சகல செய்திகளையும் உரக்கப் பேசும் நடமாடும் வானொலிகள், ஒற்றையாய், பேசத் துணையின்றி அமைதியின் மடியில் மெளனமாய் வேடிக்கை பார்க்கும் முதியோர்கள். பல முகங்களின் தரிசனங்கள்.

 பலவகைச் செடி, கொடி, மரங்களின் ஊடே மெளன பாஷையின் சுகத்தில் நானும் ஆனந்தமாக ஒரு செடிமரமாய்!










4 Apr 2013

அக்ரீமெண்ட்

                    பத்து வருஷமா பொண்ணு தேடி கடைசியில கஸ்தூரியம்மா மகனுக்கு கல்யாணம்!  என்னத்தச் சொல்ல?  இந்தக் காலத்தில இப்பிடிதான்! பையனுக்கு கல்யாணம் செய்யணும்னா   என்ன விலை தெரியுமா?

அந்தக் கல்யாணமண்டபத்தில் முகூர்த்த நேரம்! சுற்றங்கள் எல்லாம் மேடையில் நிற்க, கெட்டிமேளம் என்று யாரோ கையை ஆட்ட, மேளக்காரர் பிளந்து கட்டுகிறார்!ஆனந்தம் ஆனந்தம் என்று நாதஸ்வரக்காரர் பின்னாலேயே! சங்கரன், சங்கரி கழுத்தில் டாலர் வைத்த சங்கிலியைப் போட, சங்கரி சங்கரன் கழுத்தில் டாலர் வைத்த சங்கிலியைப் பதிலுக்குப்  போட்டாள். ரெண்டுபேரும் தாலி செயின் போட்டுக்கிறதா தீர்மானம்,.... யாரு பொண்ணுதான்! மஞ்சக்கயிறு வேண்டாம்! நாலு நாளிலே கழட்டிப் போடுவதற்கு பதிலாக இருவரும் படித்து சமமான வேலை செய்வதால் செயின் 'எக்ஸ்சேஞ்'. கல்யாணம் முடிஞ்சு போச். மொத அக்ரீமெண்ட்!

பையனின் அம்மா, அதுதான் சங்கரனைப் பெற்றவள் சங்கரியின் பெற்றோரிடம் வந்தாள். கைகுலுக்கிக் கொண்டார்கள். என்  பையனை ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன். இனிமேல் நீங்கதான் எல்லாம்! பாத்திரம் தேய்க்க 'டிஷ் வாஷரும், துணி தோய்க்க வாஷிங் மிஷினும் சீரா வெச்சுட்டேன். அவனுக்கா வாங்கின அபார்ட்மெண்ட்டில சமையலறையில சகல சாமான்களும் இருக்குங்க. ஒரு மாசமா  ''கிட்சன் மாஸ்டர் தனுகிட்ட டிரெயினிங்'' முடிஞ்சு சர்டிபிகேட் வாங்கிட்டான். நல்லா சமைச்சுடுவான்! ரெண்டாவது அக்ரீ...........ட்!

சங்கரியின் அம்மா சொன்னாள்,''நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.நாங்க பாத்துக்கறோம். ஆமா, நீங்க சொன்னீங்களே, என் பொண்ணுக்கு 50 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி, டவுரி தரேன்னு?(மூணாவது அக்ரீமெண்ட்)

ஆமாங்க, அதெல்லாம் இதோ இந்தப் பெட்டில இருக்கு! லாக்கர் சாவி இந்தாங்க! அதோட என் பையனோட பேங் பாஸ்புக், ATM கார்ட் எல்லாம் அவன்கிட்டதான் இருக்கு. தயவு செஞ்சு என் பையன மட்டும் கண்கலங்காம பாத்துக்குங்க. அப்பப்போ கொஞ்சம் தாராளமா பாக்கெட் மணி  குடுக்க மறந்துடாதீங்க!
சரிம்மா நாங்க பாத்துக்கிடரோம். வாசல்ல டாக்ஸி ரெடியா இருக்கு!

ஏண்டா, நான் போய்ட்டு வரேண்டா, மகராசியா நல்லா இரும்மா, என்ன?
சரிம்மா, முதியோர் இல்லத்துக்கு முடிஞ்சபோது வந்து உன்னைய பாக்கறேன். பை,பை!(அக்ரீ 4.)
                                       --------------------------------------------------
இந்த வலைப்பதிவு திரு கிரீஷ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய வலைப்பதிவின் தொடர்பு கீழே காண்க.

http://blog.gireesh.me/2013/04/a-scary-future-rain-drops.html