29 Aug 2017

ஶ்ரீஅரவிந்தர்- 16

ஶ்ரீஅரவிந்தர் - 16

'தன்னை அறிதல்' என்னும் ஆத்மஞானம்  பெற்ற அரவிந்தர் மீண்டும் தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு வாழ்க்கையே இறைமயமாயிற்று. இறைவனே அவருக்கு தலைவராகவும், வழிகாட்டியும் ஆனார்.
இறைவன் தன் விருப்பத்தையே, தன் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதாக உணர்ந்தார். தான் ஆற்றிய உரைகளெல்லாம் இறைவனுடைய உரைகள் என எண்ணினார். தன்னுடைய செயல்களையெல்லாம் செய்வது இறைவனே என அறிந்தார். ஆயினும்  அரசியல் வாழ்விலிருந்து தன்னை அவர் விடுவித்துக் கொள்ள விரும்பவில்லை.

'நான் புரிவன எல்லாம்தான் புரிந்து எனக்கே
வான் பதம் அளிக்க வாய்த்த  நல்நட்பே' என்பது வள்ளலார் வாக்கு.

இனி மீண்டும் அரவிந்தரின் வாழ்க்கைக்கு, வருவோம்!இறைவன் ஒருவரை ஆட்கொள்ள நினைத்தால் எந்த வழியிலாவது அதை நிறைவேற்றிக் கொள்வான். நம்முடைய வாழ்வு , வாழ்வின் நிகழ்வுகள் அனைத்துமே இறைவனின் ஆணைக்குட்பட்டே நடக்கின்றன என்பதை உணர்த்தும் நிகழ்வுகளைக் காண்போம்.
ஏற்கெனவே  11ம்  எண் கட்டுரையில்  அலிப்பூர் சதி வழக்கைப் பற்றிப் பார்த்தோம்.
1908, ஏப்ரல் 30 ஆம் தேதி முசாஃபர்பூர் என்னுமிடத்தில் ஜில்லா நீதிபதியின் மேல் குண்டுவீசிக் கொல்ல திட்டமிட்டனர் அரவிந்தரின் சகோதரர் பாரினும், அவரது நண்பர்களும். மே 1ஆம் தேதி பல தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

1908, மே மாதம் 2ஆம் தேதி நள்ளிரவில் ஶ்ரீஅரவிந்தரை அவரது இல்லத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது பிரிட்டிஷ் அரசு.கைகளில் விலங்கிட்டு அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மே19 ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலம் விசாரணை நடந்தது. 42 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 4000 சான்றாவணங்கள்(exhibits), 300- 400  விளக்கச் சான்றுகள்(proofs) இருந்தன.
222  பேர் சாட்சிகள். இந்த வழக்கு வங்காளத்தில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும்.

அலிப்பூர் சிறையில் ஒன்பதடி நீளமும், ஆறடி அகலமும் உடைய தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்தர். பகவத் கீதையைப் படித்தும்,உபநிஷதங்களின் ஆழ்ந்த கருத்துகளை ஆராய்ந்தும்,தியானம் செய்தும் வாழ்ந்தார். சிறைச் சாலையில் கைதிகளின் பேச்சு,சிரிப்பு, விளையாட்டுக் கூச்சல்கள் என பல சப்தங்களுக்கு நடுவிலும் அவரால் தியானம் செய்ய முடிந்தது. அதே சமயம்  அவர் தனக்குள்ளிருந்து எழும் இறைவனுடைய குரலைக் கேட்க ஆர்வமுடையவராயிருந்தார்

அரவிந்தரைக் கைது செய்வதற்கு சுமார் ஒரு மாதத்துக்குமுன் அரசியல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளும்படி அவரது ஆன்மாவின் குரல் கட்டளையிட்டது..ஆனால் அரவிந்தரோ தன்னை அரசியல் வாழ்விலிருந்து விடுவித்துக் கொள்ளமுடியாதவராக இருந்தார்.

சிறையில் அவருடன் அந்தக் குரல் மீண்டும் பேசியது! " உன்னால் விடுவித்துக் கொள்ள முடியாமல் இருந்த அரசியல் பந்தங்களிலிருந்து நான் உன்னை விடுவித்துவிட்டேன்......உனக்கு மகத்தான வேறு வேலை ஒன்று உள்ளது, அதற்குத் தயார் செய்யவே உன்னை இங்கே கொண்டுவந்திருக்கிறேன்என்றது. அந்த நேரத்தில் அரவிந்தர் மனதாலும் உடலாலும் தளர்ந்து போயிருந்தார்

"நான் இறைவனை தீவிரமாக, மிகுந்த மனஒருமைப்பாட்டுடன் வழிபட்டு என் அறிவு மழுங்கி போகாமலிருக்க வேண்டும் என வேண்டினேன். அந்தக் கணத்தில் என் உடலில்  மென்மையான  குளிர்ந்த காற்று தழுவுவதை உணர்ந்தேன். சூடேறியிருந்த என் மூளை அமைதியடைந்தது. எழுத்துகளில் வடித்தற்கரிய ஒரு ஆனந்தம் என்னுள் நிறைந்தது. அப்போதே என் சிறை வாழ்க்கை துயரமற்றதாயிற்று. அந்தக் கணத்தில்  என் உள்ளம் அளப்பறிய வலிமையடைந்தது.
அதுவரை இருந்த துயரங்கள் சுவடற்று மறைந்தன. தனிமைச் சிறையில் நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்
பிரார்த்தனை....மனிதனை,இறையருட் சக்தியுடன் இணைக்கும் பாலம் என்பதை உணர்ந்தேன்." என்கிறார்.
(இவருடைய சிறை அனுபவங்கள்" சிறைச்சாலைக் கதைகள்" என்ற பெயரில் வெளிவந்துள்ளன.)

(ஶ்ரீஅரவிந்தர், வாழ்க்கைவரலாறு, ஆன்மிக சாதனைகள், அலிப்பூர்சிறைச்சாலை)






26 Aug 2017

பூங்கொடியும் பூங்கொடியும்!

Have you seen this creeper called 'Thunbergia mysorensis'? Its also called  'Lady's  slipper Vine Doll's shoe due to the flowers shape and size!
முதல் முறையாக நான் இந்தக் கொடியை அரவிந்த அன்னை பக்தரும், பெங்களூரில் ஶ்ரீஅரவிந்தர் பெயரால் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் நடத்திவரும்  தோழி ஒருவரின் இல்லத்துத் தோட்டத்தில் பார்த்தேன்!

ஆ... அது ஒரு பொற்காலம்!  ஆம் அந்தக் காலகட்டத்தில் ஶ்ரீஅரவிந்தரின் 'சாவித்ரி' காவியத்தை  தினந்தோறும் காலை 11 மணிமுதல் 12 மணிவரை படித்தும், விவாதித்தும், பொருள் விளக்கங்களை அலசியும் வேறோர் உலகத்தில் இருப்போம்! ஶ்ரீ அரவிந்தரின் சாவித்ரி காவியம் உலகின் திருவுருமாற்றத்திற்கான மந்திரம் எனப் போற்றப்படுகிறது. 24000 வரிகள் உடைய இக்காவியத்தை சுமார் ஓராண்டு காலம்  நாங்கள் பயின்றோம்.

இன்பமயமான அந்த நாட்களின் நினைவுகளை இந்தக் கொடி மீண்டும் உயிர்ப்பித்துவிட்டது.  நாங்கள் வாசிப்பதற்காகப் பயன்படுத்தியது ஒர் அழகிய வீடு. வீட்டைச் சுற்றிலும் மலர்த்தோட்டம். அந்தத் தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய பந்தல்! அதிலே இந்தக்கொடி! கொடியிலிருந்து தொங்கும் இந்த மலர்ச்சரத்தில் தேன்சிட்டுகள் தேன் அருந்தவரும்! வந்தவை தேனை மட்டும் அருந்தாமல் கொஞ்சம் கொஞ்சிப் பேசி எங்கள் கவனத்தைக்கலைக்கும்! தேனருந்திக் கொண்டே சாவித்ரி காவியத்தைப் பற்றி அவைகளும் கருத்துச் சொல்கின்றன என்று தோன்றும். என்னவொரு ஆனந்தம்?
பறவைகள் தேனருந்துவது போல நாங்கள் காவியத்தின் பொருளழகையும், சொல்லழகையும் மாந்தித்திளைப்போம்!
முடிவில் பந்தலின் கீழ் டீத்தண்ணீரும், பிஸ்கோத்துகளும் எங்கள் வயிற்றுப் பசியையும் ஆற்றும்!
இந்த நாள் இனிய நாள் என்ற உள்ள நிறைவோடு வீடு திரும்புவோம்.

இந்தக் கொடியைத் தேடிப் பிடித்து எங்கள் வீட்டின் பின்புறம் பந்தலில் படர வைத்துள்ளோம். ஒவ்வொரு இலை அரும்பும் போதும் ஒரு ஆனந்தம். நன்றாகப் படர்ந்துமலர்ச் சரங்களுடன் விளங்கும் இக்கொடி தோட்டத்தில் உலாவரும் செம்போத்துப் பறவைக்கு மிகவும் பிடிக்கிறது. எதற்கென்றால் அது கூடு கட்ட உதவும் கயிறாய் இந்தக் கொடியைக் காண்கிறது! காலைப் பொழுதுகளில்  இந்தக் கொடியை மூக்கினால் திருகித் திருகி வெட்டி எடுத்துப் போகிறது. கொடி அழுகிறது! வாடி நிற்கிறது! மனம் வருந்தும், மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையோடு  செம்போத்தை விரட்டுகிறேன்! அதுவோ காரியத்தில் கண்ணாயிருக்கிறது!

15 Aug 2017

முத்துலட்சுமி ரெட்டி - (பூ.கொ. சரவணன் அவர்கள் பதிவின் மீள் பதிவு)

நேற்று முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாள். மறக்க முடியாத மருத்துவர்கள் உரைக்குத் தயாராகிற போது தான் அவரின் ஆளுமையின் ஆழமும், வீச்சும் கூடுதலாகப் புலப்பட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்த அவரின் வாழ்க்கை முழுதும் சமூக, உடல் நோய்களோடு போராட வேண்டியதாக இருந்தது. ரத்த சோகை அவரைப் பள்ளிக்காலத்தில் வாட்டி எடுத்தது. படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.

கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அவர் விண்ணப்பித்தார். பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள். ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. புதுக்கோட்டை மன்னரான பைரவத் தொண்டைமானை செய்தி எட்டியது. அவரின் உத்தரவால் முதல் பெண் மாணவியாக நுழைந்தார் முத்துலட்சுமி. அங்கேயும் அசத்தினார்.

Madras Medical College-ல் இடம் கிடைத்தது. அங்கே பெண்களுக்கு என்று தனி விடுதி இல்லை. தெரிந்தவரின் வீட்டில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல். ஆண் மருத்துவ மாணவர்கள் சீண்டல்களில் ஈடுபட்டார்கள். வகுப்பிற்கு வீட்டில் இருந்து வருகையில் திரை போட்ட வாகனத்திலேயே வருவார். 'போயும், போயும் பெண்ணெல்லாம் படிக்கப் போகிறாள்' என்றெல்லாம் வசைபாடுவது மக்களின் வழக்கமாக இருந்தது. ஆஸ்துமா வாட்டி எடுக்க, கொடிய வலியை, தூக்கமில்லாத இரவுகளை மருத்துவக் கனவுக்காக அவர் தாங்கிக் கொண்டு போராடினார்.

'என் வகுப்பிற்குள் ஒரு பெண் நுழையக்கூடாது' எனக் கர்னல் ஜிப்போர்ட் கர்ஜித்தார். முத்துலட்சுமி வகுப்பிற்குள் நுழையவில்லை. தேர்வு முடிவுகள் வந்தன. முத்துலட்சுமி கண்டிப்பிற்கும், கச்சிதத்திற்கும் பெயர் பெற்ற ஜிப்போர்ட்டின் அறுவை சிகிச்சை தாளில் முதல் மதிப்பெண்ணைப் பெற்று இருந்தார். அதற்குப் பிறகே முத்துலட்சுமியை தன்னுடைய வகுப்பில் அவர் அனுமதித்தார். முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்ற தருணத்தை , 'இந்தக் கல்லூரி வரலாற்றின் பொன்னாள்' என்று சிலிர்த்து ஜிப்போர்ட் எழுதினார்.

1927-1930 காலத்தில் சட்டசபையில் நுழைந்தார். அப்படி நுழைந்த காலத்தில் துணைத் தலைவராகவும் இயங்கினார். பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், பால்ய விவாகத் தடை சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் முதலிய பல்வேறு சட்டங்கள் அவரின் முயற்சியால் இயற்றப்பட்டன. குறிப்பாகத் தேவதாசி முறை ஒழிப்புக்காகத் தீவிரமாக இயங்கினார். அதற்குக் காந்தி, பெரியார் எனப் பல்வேறு தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகியது. 1930-ல் துவங்கிய அந்தப் போராட்டத்தில் சனாதானிகளின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

சத்தியமூர்த்திக் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை என்று பேசினார்.  “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய  காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.

முத்துலட்சுமி “உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?' என்று கேட்டதோடு சத்தியமூர்த்திப் பேயறைந்து அமர்ந்துவிட்டார்.

பாரீஸ் வரை சென்று பெண்களின் உரிமை சார்ந்த குரலை முத்துலட்சுமி எழுப்பினார். திருமணமே வேண்டாம் என்று இருந்தவர் சுந்தர ரெட்டியை மணந்து கொள்ளச் சம்மதித்தார். 'திருமண உறவில் இருவரும் சமமானவர்கள். என்னுடைய விருப்பங்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது.' முதலிய விதிகளைச் சுந்தர ரெட்டி ஏற்ற பின்னே திருமணம் செய்து கொண்டார். சடங்குகள் இல்லாத திருமணமாக அது அமைந்தது.

தேவதாசி முறையைச் சட்டம் இயற்றி மட்டுமே ஒழித்துவிட முடியாது என்கிற தெளிவு முத்துலட்சுமி அவர்களுக்கு இருந்தது. 'ஓயாமல் செயல்பட வேண்டும்' என்று அவர் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். தேவதாசி முறை ஒழிப்பால் ஆதரவற்றுப் போன பெண்களுக்கு என்று அடைக்கலம் தர இரண்டு இல்லங்களே சென்னையில் இருந்தன. ஒன்று பிராமணப் பெண்களுக்கு மட்டுமானது. இன்னொன்று பிராமணர் அல்லாதவர்களுக்கு உரியது. நள்ளிரவில் அவரின் வீட்டு கதவை மூன்று இளம்பெண்கள் தட்டி அடைக்கலம் கேட்டார்கள். தான் பொறுப்பில் இருந்த அரசு மருத்துவமனையின் கீழ்வரும் விடுதியின் பொறுப்பாளரை பார்க்க சொல்லி அனுப்பினார்.

அந்தப் பெண்களின் குலத்தின் பெயரை சொல்லியும், அவர்களின் பண்புகளைக் கேவலப்படுத்தும் வகையிலும் வசைபாடல்களை நள்ளிரவில் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. கண்ணீரோடு முத்துலட்சுமி அவர்களின் வீட்டுக்கதவை தட்டினார்கள். அந்தக் கணமே தன்னுடைய வீட்டையே பெண்களுக்கான ஆதரவு இல்லமாக மாற்றினார். சில காலத்துக்குப் பிறகு ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக என்று 'அவ்வை இல்லத்தை' உருவாக்கினார். அந்த மூன்று பெண்களும் மருத்துவர், ஆசிரியர், செவிலியர் என்று சாதித்துக் காட்டினார்கள். அவ்வை இல்லத்தின் பெண்களின் கல்வியை முத்துலட்சுமி தானே கவனித்துக் கொண்டார்.

தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போதே புற்றுநோய்க்கு என்று தனியான ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். தன்னுடைய தங்கையைப் புற்றுநோய்க்கு இளம் வயதிலேயே இழந்ததன் வலி அது. சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் புற்றுநோய் சிகிச்சை தர வேண்டும் என்று கனவு கண்டார். இலவசமாகச் சேவை செய்ய வேண்டும் என்று அவர் தன்னுடைய கனவை விளக்கினார். விடுதலைக்குப் பிறகு அப்போதிருந்த மருத்துவ அமைச்சரிடம் உதவி கேட்டார். "ஏன் மக்கள் புற்றுநோயால் மட்டும் தான் இறக்கிறார்களா?" என்று துடுக்காகப் பதில் வந்தது. சுகாதாரச் செயலாளர் , 'உங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால்...' என்று பீடிகை போட்டு இந்த மாதிரி திட்டமெல்லாம் தேறாது என்று எழுதியிருந்தார்.

அமெரிக்காவில் போய் மேற்படிப்பு படித்துவிட்டு வந்திருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார். அவரோடு அரசு மருத்துவ வேலையைத் துறந்திருந்த சாந்தாவும் இணைந்து கொண்டார். அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கான அடித்தளம் போடப்பட்டது. பெரிதாகக் கையில் பணம் இல்லை என்றாலும், மக்களின் உயிர் காக்க ஓடி, ஓடி நிதி திரட்டினார். எளிய இடத்தில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை 12 படுக்கைகளோடு எழுந்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட ஐநூறு படுக்கைகளோடு வருடத்திற்கு இரண்டு லட்சம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக அவரின் விதை, விழுதுகள் பரப்பி விரிந்துள்ளது.

அரசியல் களத்தில் அயராது இயங்கிய முத்துலட்சுமி தன்னுடைய மருத்துவர் பணியை விட்டுவிடவில்லை. மருத்துவத்தைப் பொருளீட்டும் முதலீடாகப் பார்க்காமல் எளியவர்கள் குறித்த கரிசனத்தோடு இயங்கினார். பொது வாழ்க்கையில் மூழ்கி குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கவில்லை. அவருடைய தங்கை நல்லமுத்துவை தன்னுடைய செலவிலேயே படிக்க வைத்தார். அவர் ராணி மேரி கல்லூரியின் முதல் இந்திய  முதல்வராகப் பொறுப்பேற்று சாதித்தார். புதுக்கோட்டையில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிப் புத்துலகை சமைத்த முத்துலட்சுமி ரெட்டிக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

கலைச்சொற்கள்- தமிழாக்கம் (நன்றி- தனித்தமிழ் மாநாடு, மலேசியா)

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .

1. WhatsApp      -       புலனம்
2. youtube          -       வலையொளி
3. Instagram       -       படவரி
4. WeChat          -        அளாவி
5.Messanger     -        பற்றியம்
6.Twtter              -         கீச்சகம்
7.Telegram        -         தொலைவரி
8. skype             -          காயலை
9.Bluetooth       -          ஊடலை
10.WiFi             -          அருகலை
11.Hotspot        -          பகிரலை
12.Broadband  -         ஆலலை
13.Online           -         இயங்கலை
14.Offline            -        முடக்கலை
15.Thumbdrive   -        விரலி
16.Hard disk       -        வன்தட்டு
17.GPS                -        தடங்காட்டி
18.cctv                 -        மறைகாணி
19.OCR              -         எழுத்துணரி
 20 LED              -         ஒளிர்விமுனை
21.3D                  -        முத்திரட்சி
22.2D                 -         இருதிரட்சி
23.Projector       -        ஒளிவீச்சி
24.prinder          -        அச்சுப்பொறி
25.scanner         -        வருடி
26.smart phone  -       திறன்பேசி
27.Simcard          -       செறிவட்டை
28.Charger          -        மின்னூக்கி
29.Digital             -         எண்மின்
30.Cyber            -          மின்வெளி
31.Router           -         திசைவி
32.Selfie             -         தம் படம் - சுயஉரு
33 Thumbnail              சிறுபடம்
34.Meme           -         போன்மி
35.Print Screen -          திரைப் பிடிப்பு
36.Inket             -           மைவீச்சு
37.Laser            -          சீரொளி
நல்ல முயற்சி நாமும்  மனனம் செய்வோம் .
இனி இவற்றின் பெயர்களைத் தமிழில் எழுத
முனைவோம் .

தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்கும்
பகிரலாம் .

ஶ்ரீஅரவிந்தர் -15

ஶ்ரீஅரவிந்தர் -15


சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குப்பின் அரவிந்தருக்கு  யோக வாழ்வில் மேலும் நாட்டம் ஏற்பட்டதுசூரத்தில் அவர்  'சகரே பாபா'என்ற மகாராஷ்ட்ர யோகியை சந்தித்தார். பாபாவும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுடையவராக இருந்தார். பல வினாக்களை எழுப்பினார்.  

அரவிந்தரும் தன் சாதனைகளைத் தொடர தனக்கு ஒரு வழிகாட்டி தேவை என்பதை  உணர்ந்தார்தன் விருப்பத்தை தன் சகோதரர் பாரினிடம் தெரிவித்தார்

பாரினுக்கு விஷ்ணு பாஸ்கர் லேலே என்ற யோகியின் அறிமுகம் இருந்தது. எனவே பரோடா வரும்படி அவருக்குத் தெரிவித்தார். விஷ்ணு பாஸ்கரும் தானொரு மேன்மையான மனிதரை சந்திக்கப் போவதை உணர்ந்து பரோடா விரைந்தார்.

பரோடாவின் "டாண்டியா பசாரில்" உள்ள கேசவ்ராவ் ஜாதவ் அவர்களின் இல்லத்து மாடி அறையில், 1908 ஜனவரி திங்கள் முதல் வாரத்தில் விஷ்ணு பாஸ்கர் லேலே, அரவிந்தரை அரைமணி நேரம் சந்தித்துப் பேசினார்.

அரசியலிலிருந்து விலகினால் தன்னால் உதவ முடியும் என்றார் லேலே! அரவிந்தரோ தற்காலிகமாக விலக ஒப்புக் கொண்டார். எல்லோரிடமிருந்தும் விலகி தனியே தன்னை சந்திக்குமாறு கூறினார் லேலே. மூன்று நாட்கள் அவர்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது. விஷ்ணு பாஸ்கரும் அரவிந்தரை அமரும்படி சொன்னார். "கண்களை மூடிக்கொண்டு உங்களுடைய எண்ணங்களை கவனியுங்கள். அவை வெளியிலிருந்து உங்கள் மனதில் நுழைவதைக் காண்பீர்கள்! ஆனால் அவை உங்களுக்குள் நுழைவதன் முன் அந்த எண்ணங்கள் நுழையாதவாறு தள்ளிவிடுங்கள். தடுத்து நிறுத்தி விடுங்கள் " என்றார்

 என்ன நடந்தது என்று அரவிந்தர் சொல்வதைக் கேட்போம்: "வெளியிலிருந்துதான் எண்ணங்கள் மனதுக்குள் நுழைகின்றன என்பதை அதுநாள்வரை நான் அறிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் அப்படி இருக்கக்கூடும் என்பது  உண்மைதானா என்று கேள்வி கேட்கவும்விரும்பவில்லை. நான் அப்படியே அமர்ந்து கொண்டு அவர் சொன்னபடியே செய்தேன்! என் மனம் ஒரு கணத்தில் அமைதியுற்றது. மலைச் சிகரத்தின் உச்சியில் அமரும் போது கிடைக்கும் அசைவற்ற ஆழ்ந்த அமைதி! அப்போது எண்ணங்கள் ஒவ்வொன்றாக வெளியிலிருந்து என் மனதில் நுழைவதைக் கண்டேன். அவை உள் நுழையும் முன்னர் அவற்றைத் தூக்கி எறிந்தேன். மூன்று நாட்களில் நான் எண்ணங்கள் என்னுள் நுழையாமல் பாது காப்பதில் வெற்றி அடைந்தேன். என் மனம் என்றும்  நீங்காத ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. அது இன்னும் இருக்கிறது.

அதன்பின் பல தீவிரமான தாக்கங்கள் உடைய பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. பரந்த  பெருவெளியில் உலகமே ஒரு திரையரங்காய்க் காட்சி அளித்தது.
எழுத்துக்களால் வர்ணிக்கமுடியாத அமைதி, மிகப்பெரிய மெளனம்,
அனைத்திலிருந்தும் விடுபட்ட சுதந்திரம் என்னை அரவணைத்தது."

எண்ணங்களின் மூலம் இறந்த காலமும், எதிர் காலமும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.எனவே எண்ணங்கள் எழாமல் தடுக்க முடிந்தவர்களால்தான் ஆன்மிக வாழ்வில் வெற்றி அடைய முடியும்

இந்த நிலையில் மும்பையின் நேஷனல் யூனியன் அரவிந்தரைப் கூட்டமொன்றில் பேச அழைத்தது.எண்ணங்களற்ற வெற்றிடமாக இருந்த மனதை வைத்துக் கொண்டு எவ்வாறு உரையாற்றமுடியும் என வியந்தார் அரவிந்தர். மக்களிடையே மிகவும் பிரபலமான, மதிப்புமிக்க பேச்சாளரான அவர் பேச முடியாது என மறுக்கமுடியுமாஆகவே விஷ்ணு பாஸ்கரிடம் என்ன செய்வது எனக் கேட்டார்.
அவரோ பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்
பிரம்மத்தின் பரிபூரண அமைதியில் ஆழ்ந்துகிடந்த தன்னால் பிரார்த்தனை செய்யவும் முடியாது என்றார் அரவிந்தர்.
சரி, அப்படியானால் பரவாயில்லை. உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். நீங்கள் உங்கள் முன்னால் இருக்கும் கூட்டத்தினரை  இறைவனாகக் கருதி வணங்குங்கள். பின் என்ன நடக்கிறது எனப் பாருங்கள் என்றார் லேலே
அதன்படியே அவர் கூட்டத்தினரை வணங்கியதும்  அவர் உள்ளே இருந்து ஏதோ ஒன்று பேசியது
 " உங்களுக்கு உள்ளே இருக்கும் வலிமை வாய்ந்த இறை சக்தியை , சத்தியத்தின்  ஒளியை உணர்ந்து, வெளிக் கொணரப் பாருங்கள்.அது நீங்களல்ல!அது உங்களுக்குள்ளே மறைந்திருக்கும் இறையுருவாகும்"எனப் பேசினார் அரவிந்தர். நீயே அது, 'தத் த்வம் அசி' என்ற பேருண்மையே அது.

பிறகு விஷ்ணு பாஸ்கர் அரவிந்தரிடம் அவருள் ஒளிரும் இறை சக்தியிடம் தன்னை பரிபூரணமாக, சமர்ப்பித்து சரணடையுமாறு கூறினார். அரவிந்தரும் 
தன் ஆன்ம குருவிடம் தன் உடல், உயிர், உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக சமர்ப்பித்தார். அன்று முதல் அவருடைய ஆன்மாவின் குரல் அவருக்கு வழிகாட்டியானது.
இந்த ஆத்ம சமர்ப்பணத்திற்குப் பின் பல கூட்டங்களிலும் அவர் ஆற்றிய உரைகள் மேல் மனதிலிருந்து தோன்றியதாகும். (Over mind)
மீண்டும் அரசியலில் நுழைந்தார் அரவிந்தர். ஆனால்  இறையருள்  வேறுவிதமாக இருந்தது.  
குறிப்புகள்:
(ஶ்ரீஅரவிந்தர்,யோக வாழ்வு, விஷ்ணு பாஸ்கர் லேலேயுடன் சந்திப்பு, மேல்மனம்)