26 Aug 2017

பூங்கொடியும் பூங்கொடியும்!

Have you seen this creeper called 'Thunbergia mysorensis'? Its also called  'Lady's  slipper Vine Doll's shoe due to the flowers shape and size!
முதல் முறையாக நான் இந்தக் கொடியை அரவிந்த அன்னை பக்தரும், பெங்களூரில் ஶ்ரீஅரவிந்தர் பெயரால் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் நடத்திவரும்  தோழி ஒருவரின் இல்லத்துத் தோட்டத்தில் பார்த்தேன்!

ஆ... அது ஒரு பொற்காலம்!  ஆம் அந்தக் காலகட்டத்தில் ஶ்ரீஅரவிந்தரின் 'சாவித்ரி' காவியத்தை  தினந்தோறும் காலை 11 மணிமுதல் 12 மணிவரை படித்தும், விவாதித்தும், பொருள் விளக்கங்களை அலசியும் வேறோர் உலகத்தில் இருப்போம்! ஶ்ரீ அரவிந்தரின் சாவித்ரி காவியம் உலகின் திருவுருமாற்றத்திற்கான மந்திரம் எனப் போற்றப்படுகிறது. 24000 வரிகள் உடைய இக்காவியத்தை சுமார் ஓராண்டு காலம்  நாங்கள் பயின்றோம்.

இன்பமயமான அந்த நாட்களின் நினைவுகளை இந்தக் கொடி மீண்டும் உயிர்ப்பித்துவிட்டது.  நாங்கள் வாசிப்பதற்காகப் பயன்படுத்தியது ஒர் அழகிய வீடு. வீட்டைச் சுற்றிலும் மலர்த்தோட்டம். அந்தத் தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய பந்தல்! அதிலே இந்தக்கொடி! கொடியிலிருந்து தொங்கும் இந்த மலர்ச்சரத்தில் தேன்சிட்டுகள் தேன் அருந்தவரும்! வந்தவை தேனை மட்டும் அருந்தாமல் கொஞ்சம் கொஞ்சிப் பேசி எங்கள் கவனத்தைக்கலைக்கும்! தேனருந்திக் கொண்டே சாவித்ரி காவியத்தைப் பற்றி அவைகளும் கருத்துச் சொல்கின்றன என்று தோன்றும். என்னவொரு ஆனந்தம்?
பறவைகள் தேனருந்துவது போல நாங்கள் காவியத்தின் பொருளழகையும், சொல்லழகையும் மாந்தித்திளைப்போம்!
முடிவில் பந்தலின் கீழ் டீத்தண்ணீரும், பிஸ்கோத்துகளும் எங்கள் வயிற்றுப் பசியையும் ஆற்றும்!
இந்த நாள் இனிய நாள் என்ற உள்ள நிறைவோடு வீடு திரும்புவோம்.

இந்தக் கொடியைத் தேடிப் பிடித்து எங்கள் வீட்டின் பின்புறம் பந்தலில் படர வைத்துள்ளோம். ஒவ்வொரு இலை அரும்பும் போதும் ஒரு ஆனந்தம். நன்றாகப் படர்ந்துமலர்ச் சரங்களுடன் விளங்கும் இக்கொடி தோட்டத்தில் உலாவரும் செம்போத்துப் பறவைக்கு மிகவும் பிடிக்கிறது. எதற்கென்றால் அது கூடு கட்ட உதவும் கயிறாய் இந்தக் கொடியைக் காண்கிறது! காலைப் பொழுதுகளில்  இந்தக் கொடியை மூக்கினால் திருகித் திருகி வெட்டி எடுத்துப் போகிறது. கொடி அழுகிறது! வாடி நிற்கிறது! மனம் வருந்தும், மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையோடு  செம்போத்தை விரட்டுகிறேன்! அதுவோ காரியத்தில் கண்ணாயிருக்கிறது!

No comments:

Post a Comment