26 Jan 2012

1966-1967 சென்னை மா நகரம்.

 
                                                         ஆசிரியப் பயிற்சி.

எப்படியோ படிப்பு முடிந்தது. மேற்கொண்டு படிக்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் தகுதியான மாப்பிள்ளை தேடுவது கஷ்டம் என்று மறுத்துவிட்டார் அப்பா. சரிதான் என் தோழிகள் சரோஜினி,சிவகாமி ,பிரேமா மூவரும் ஆசிரியப் பயிற்சிக்கு போகிறார்கள் என்ற செய்தி தெரியவர அப்பாவிடம் அனுமதி கேட்டேன். மயிலாப்பூர் சாந்தோம் கடற்கரைக்கு மிக அருகே உள்ள ஸ்டெல்லா மேட்டிடூனா ஆசிரியப்பயிற்சி  கல்லூரியில் இடம் கிடைக்க சேர்ந்தேன். சிவகாமியும், சரோஜினியும் ஏற்கெனவே சேர்ந்து இருந்தார்கள். தோழி பிரேமா நேஷனல் கல்லூரியில் சேர்ந்தாள்.

இத்
எங்கள் கல்லூரியிலிருந்து இடது பக்கம் திரும்பி சாலையைத் தாண்டினால் சாந்தோம் சர்ச். கீழே இறங்கினால் கடற்கரை. தினமும் மாலைச் சிற்றுண்டி லஸ் கார்னர் உடுப்பி ஹோட்டலில். லஸ் கார்னரிலிருந்து பொடி நடையாக கடற்கரை சேர்ந்தால் 
ஊட்டியில் ஆசிரியப் பயிற்ச்சி முகாம்.
ஆறறை மணிவரை அங்குதான். ஏழு மணிக்கு  உணவு ஹாஸ்டலில். பிறகு ரூமுக்குள் நுழைந்தால் பத்து மணிவரை படிப்பு சரியாக இருக்கும்.

ஆசிரியப் பயிற்சியின் ஓர் பகுதியாக ஊட்டிக்கு பத்து நாட்கள் கேம்ப் அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து குன்னூர் சுற்றிப் பார்த்தபின் மைசூர் வந்து, மகாராஜாவின் அரண்மனை, காவிரி சங்கமம் பார்த்தபின் வீட்டிற்குப் போக அனுமதி அளித்தார்கள். எங்கு சேலம் பஸ்ஸில் ஏற்றி விட்டார்கள் என நினைவில்லை. சேலம் வந்ததும் கல்லூரி வேலைகளை செய்ததும் நினைவிருக்கிறது. அப்போதே என் பாட்டியார் உடல் நலம் குன்றி இருந்தார். டிசம்பர் மாதம் அவரும் காலமானார்.                                

ஆயிற்று, ஓடுகின்ற கதிரவனின் பின்னால் ஓடின நாட்கள். ஹாஸ்டல் உணவும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. மலையாளிகளே அங்கு சமையல் செய்து வந்தார்கள். காப்பி, துணியில் வடிகட்டிய டிகாஷனில் தயரிக்கப்பட்டதாலும், பால் குறைவாக சேர்ப்பதாலும் சுமாராக இருக்கும். காலையில் ரொட்டி, ஒரு மாதிரி வாசனை வரும் வெண்ணை! மதிய உணவில் பூண்டு சேர்த்த ரசம் அல்லது குழம்பு. மோரில் கடலைமாவை கரைத்துவிட்டு அதில் வேகவைத்து சேர்க்கப்பட்ட வாழைக்காய், அதாவது மோர்க்குழம்பு. மாலையில் அதே காப்பி, கருப்பு எள்ளைப் பொடித்து வெல்லம் சேர்த்த எள் உருண்டை, டென்னிஸ் பால் அளவு பெரியது! இரவு  புழுங்கலரிசி சாதம், ரசம் அல்லது குழம்பு. புளி சாதம் என்ற பெயரில், சாதத்தின் மேல் புளியைக் கரைத்துவிட்டு தாளித்துக் கொட்டியிருப்பார்கள்.

‘‘கீழ் நோக்கி ஓடும் நதியின் மேலே, துடுப்பைப் போட்டு படகைச் செலுத்து,
மென்மையாக படகைச் செலுத்து! உல்லாசமாக, உல்லாசமான வாழ்க்கை ஒரு கனவு, கனவு, கனவு!’’ ஆம் எல்லாம் கனவு போல்தான் இருக்கிறது. படகிலே பயணம் இன்பம் தான். தரையிறங்கினால் நடந்துதான் ஆகவேண்டும்.

ஒரு மரத்தில், அலைந்து திரிந்து குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து,  கீழே விழாதவாறு கவனத்துடன் கூடு கட்டியது தாய்ப் பறவை. முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. பறந்து பறந்து போய் ஆகாரத்தை தேடிக் கொண்டுவந்து குஞ்சுகளுக்கு ஊட்டியது. மழையோ, வெயிலோ அதற்கு  ஒரு பொருட்டில்லை. குஞ்சுகள் வளர்ந்தன. தாய்ப் பறவையைப் பார்த்து, ‘அம்மா நானும் பறக்கவேண்டும்,’ என்றன. அம்மா சொன்னது, ‘உங்கள் இறக்கைகள் இன்னும் பலமடையவில்லை, பலம் வந்ததும் பறக்கலாம்,’ என்றது. நாட்கள் சென்றன. தன் குஞ்சுகளுக்கு பறக்கப் பழக்கியது தாய். ஒரு நாள் குஞ்சுகள் பறந்து போயின. தாய் தன் வழியில்! கூட்டுக்குள்ளேயே குழந்தைகளால் இருக்கமுடியுமா?

வாழ்க்கையும் அவ்வாறுதானே? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்குத் தெரியும்? தேர்வுகள் முடிய மீண்டும் சேலம் வந்து சேர்ந்தேன். 21 வயது வாழ்க்கையில் கற்றதும் பெற்றதும் என்ன? தன்னம்பிக்கை. எந்தக் காரியம் ஆனாலும் யாருடைய உதவியும் இன்றி செய்ய முடியும் என்ற துணிவு. பிறர் மனதை எக்காரணம் கொண்டும் புண்படுத்தலாகாது என்ற ஆசை. மனித நேயம், கருணை, அன்பு, தேசபக்தி.

ஸ்வர்ணபுரியில் ஒரு நூலகம் ஆரம்பித்தார்கள். அதிலுள்ள பெரும்பாலான புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்.  தினமும் மாலையில் கோவிலுக்குப் போவதும், நூலக காப்பாளருடன் பேசுவதும் வழக்கம். பக்கத்தில் அம்மா செய்து தரும் வெங்காய பக்கோடாவை வைத்துக்கொண்டு கதைப் புத்தகம் படிப்பதில் தான் எத்தனை சுவாரஸ்யம்! அதுவும் கல்கியின் தொடர் கதைகளை பரிட்சைக்குப் படிப்பது போல் எத்தனையோ தடவை படித்திருக்கிறேன்.

வாழ்க்கை நாடகத்தில் அவரவர் கதாபாத்திரங்களை அனைவரும் செய்து வருகிறோம். என் பெற்றோருடைய கதாபாத்திரம், அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது. என் தந்தை வழிப் பாட்டியார், என் தாயாரைப் பற்றி எப்போதும் புகார் செய்வார். என் தந்தைக்கோ தன் தாயிடம் அபரிமிதமான பக்தி, பாசம், அன்பு. தன் தாயாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் கோபம் வந்து விடும். அடிக்கடி வாக்குவாதங்கள் நடக்கும். அம்மாவின் முகம் செவ செவ என்று கோபமாக இருந்தால் வானிலை அறிக்கை போல் நிச்சயமாக சண்டை காத்துக்கொண்டு இருக்கிறது என்று அறிவிப்புக் கொடுத்துவிடலாம்! இயலாமையின் காரணமாக வந்த கோபம் அம்மாவுடையது. ஆண்மையின் கோபம் அப்பாவுடையது. அந்த வயதில் இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவம், வயது இருக்கவில்லை. அதனால் சப்தம் போட்டுப் பேசினாலே பயமாக இருக்கும். அந்த பயத்தின் தாக்கம் இன்றும் என்னிடம் இருக்கிறது.

இந்தக்கால குழந்தைகளைப் போல் அம்மாவுடன் நெருங்கிப் பழகவில்லை. ரொம்பவும் உதவி செய்ததில்லை என்ற வருத்தம் இருக்கிறது. காலம் கடந்து வருத்தப்படுவதில் என்ன பயன்? குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! சுகதுக்கங்களைப் பற்றிக் கவலைப் படாமல் நினைத்தபோது உண்டு, உறங்கி அந்தந்த வினாடிகளை அவ்வப்போதே மறந்து போகும் குழந்தைப் பருவத்தை மிகக் குறைவாக அல்லவா இறைவன் அளித்துள்ளான்!

வாழ்வு ஒரு நதி போன்றது. ஒரு நதிக்குத் தெரியுமா தன்னுடைய பாதை எது என்று! இரு கரைகளையும் அணைத்துக் கொண்டு,கரையோர மரங்களுக்கு சுகம் தந்து, மனிதனுக்கு வாழ்வின் ஆதாரமாய், சக்தியாய் விளங்கி,பல ஜீவராசிகளையும் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு, தன் பெருமை அறியாமல் மனிதன் செய்யும் சிறுமைச் செயல்களால் மாசுண்டாலும் தன் கடமையினின்று வழுவாமல் பாய்ந்து செல்லும்  புனித நதிகளையும், இதே புனிதத் தன்மைகளோடு வாழும் பெண்மையையும்  வணங்கி வாழ்த்துகிறேன்.
                               
இந்தக்கால கட்டத்தில் ஒன்று, இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதால் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எங்களை யாரும் படி,படி என்று சொன்னதில்லை. தானாகவே படிக்கவேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அவரவர் வேலையை யாரும் சொல்லாமலே செய்துவந்தோம். வெளிப்படையாய் காண்பிக்காத பாச, நேசங்கள். மணியிடை பவளம் போல் உள்ளத்தில் ஊற்றெனப்பெருகும் அன்பு! விழாக்களும், பரிசளிப்புகளும் இல்லாத ஆத்மார்த்தமான பரிவு. எந்தத் துன்பம் வந்தாலும் சாய்த்துக் கொள்ளும் தோள்கள். வாய்திறந்து தற்பெருமை பேசாத சுமைதாங்கிகளாய், சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் சமுதாயம். வாழ்க்கை நதி புனிதமாய்!

காலம் மாறி விட்டது. அதற்கேற்றார் போல் வாழ்க்கையும்.................

18 Jan 2012

மீண்டும் தாய் மடியில், சேலம்.

                                                          சேலம் -சாரதா கல்லூரி.             
                             
                                                     சிவகாமி, சரோஜினியுடன் நான்.
                        
நான்கு ஆண்டுகளுக்குப் பின் பார்த்தபோது சேலம் வீடு மிகவும் அழகாக இருந்தது. மரங்களெல்லாம் வளர்ந்திருந்தன. ஒரு இனிய சங்கீதத்தை அனுபவிப்பதைப் போல்  மொட்டை மாடியும், தோட்டமும், பூக்களும்  என் இதயத்தைக் கொள்ளை கொண்டன. பூக்களுக்கு தான் எத்தனை சக்தி? வார்த்தைகளே இல்லாமல் பேசும் திறமையை அவற்றுக்கு யார் கொடுத்தார்கள்?

கடலூர், பெட்டி வீட்டில் அடைபட்டுக்கிடந்தபின், தோட்டமும் மொட்டை மாடியும், பெரிய வீடும் சந்தோஷத்தை தந்ததில் வியப்பில்லை அல்லவா?அதுவும் ஓராண்டு விடுதி வாழ்க்கைக்குப்பிறகு ....அட, எதுவும் ஸ்திரமானது அல்ல, வாழ்வு குறுகிய வட்டத்துள் வீழ்ந்து கிடப்பது அன்று என்பது ஒவ்வொறு கட்டமாகத்தானே மனிதனுக்குப் புரிகிறது!  ஆம், பிறந்ததிலிருந்து மெதுவாக வாழ்வைப் புரிந்து கொள்வதற்குள் முதுமை வந்துவிடும். மீண்டும் பழைய இடத்திற்கே குறுகிய கட்டத்திற்குள் பரமபத விளையாட்டுப் போல திரும்பி விடுவோம். அது போல நான்கு ஆண்டுகளில் மூன்று இடங்களைப் பார்த்தாகிவிட்டது! மீண்டும் யதாஸ்தானம். வாழ்க்கை ஒரு நதியைப்போன்றதுதானே. நான் ஶ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் பொருளாதாரம் முதல் ஆண்டில் சேர்ந்தேன். தம்பியர் இருவரும் லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும், தங்கை கலைமகள் பள்ளியிலும் சேர்ந்தனர். அப்பா சென்னையில் வேலைக்கு சேர்ந்தார். அவ்வப்போது லீவுக்கு வருவார்.

சாரதா கல்லூரி முதலில் பள்ளியின் ஒரு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. நான் இரண்டாவது பேட்ச். நாற்பத்து ஐந்து பேர் எங்கள் வகுப்பில். இந்தப் பொருளாதாரம் பாடம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது முதலில். ஷேக்ஸ்பியர் வகுப்பு பிரின்சிபால். மதிய உணவை வீட்டிற்குப்போய் சாப்பிட்டு வந்தவுடன் அவர்களுக்கு தூக்கமாக வரும். தூங்கிக் கொண்டே பாடம் நடத்துவார். பொங்கிவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் நாங்கள் பேப்்பர் காமெண்டரி நடத்துவோம். லலிதா அவர்கள் சரித்திரம், காவேரி மிஸ் வகுப்புகள் நன்றாகவே இருக்கும். தங்கம் சேஷனின் ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒவ்வொரு முக்கியமான குறிப்பு விழும். அவர்கள் வகுப்பு எடுப்பதே ஒரு அழகு! ஆழ்ந்த கவனத்துடன், தன்னம்பிக்கை துணைவர எடுத்த பாடத்தலைப்பில் யாருக்கும் எந்த சந்தேகம் வந்தாலும் தீர்க்கக்கூடிய அறிவு மிக்கவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.

இது தவிர தமிழ், ஆங்கில ஆசிரியைகள் நன்றாக எடுப்பார்கள். பேட்மிண்டன் விளையாட்டுப் பயிற்சி மாலை வேளைகளில் நடக்கும். ஆசிரியைகளுக்கு எதிராக விளையாடுவோம். தவிர கலைநிகழ்ச்சிகள் வேறு!

ஆனால் அடிக்கடி ராமகிருஷ்ணா மடத்தினரின் பிரசங்கங்கள் வைத்துவிடுவார்கள். ரொம்பவும் சலிப்புத்தட்டிவிடும். சில சமயங்களில் நானும் பிரேமாவும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியிருக்கிறோம். இந்தப் பிரசங்கங்கள் பயன் மிக்கவைதான், ஆனால் அந்த வயதுக்கு அதைக் கேட்கப் பொறுமை இல்லைதான்.

கேட்கப் பொறுமை இல்லையே தவிர, ஶ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின் வாழ்க்கை வரலாறும், ஶ்ரீ சாரதாமணி தேவியாரின் வரலாற்றையும் படித்திருக்கிறேன். அன்னையுடைய பதி பக்தியும், பரமஹம்சரின், காளியின் மீதான அளப்பரிய சரணாகதியும், உலகம் அனைத்தையும் அன்னை வடிவாகக் கண்ட அவருடைய தெய்வீகமும் என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றன. கல்கத்தா சென்று அன்னை காளியின் தரிசனமும் பரமஹம்சர் தோற்றுவித்த பஞ்சவடியையும் தரிசிக்க வேண்டும் என்ற என் ஆசை இது வரை நிறைவேற வில்லை. எத்துணை முறை படித்தாலும் திகட்டாத வாழ்க்கை வரலாறு பரமஹம்சருடையது. ஆன்மீக மணம் கமழ்ந்த ஶ்ரீ சாரதா கல்லூரியின் மாணவி என்பதில் இன்றும் நான் பெருமை கொள்கிறேன்.

வடலூர், நெய்வேலி, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாணவியர் அனைவரும் சுற்றுலா சென்று வந்ததும், கல்லூரிகளுக்கு இடையேயான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொள்ள கும்பகோணம், கோயமுத்தூரிலுள்ள பீளைமேடு சென்று வந்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

மூன்று ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கையில் என் நெருங்கிய தோழிகள் சிலருடன் இன்றும் தொடர்பு இருந்தாலும், எல்லோரையும் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் தான் எத்தனை மேடு பள்ளங்கள், நெளிவு, சுளிவுகள், காதலும், கண்ணீரும், ஆசாபாசங்களும் ஏற்படுத்தும் சுழல்கள்! இந்த அனுபவங்கள் அனைத்துமே ஒரு மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கான படிகள் என்கிறது ஆன்மிகம். விடை தெரியாத கேள்விகள் மனிதனிடம் நிறையவே இருக்கின்றன!


குடும்ப வாழ்க்கையில் என் சகோதரன் பாலன், நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வரங்காவ் என்ற மத்தியப்பிரதேசத்திலுள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றான். பெரிய அண்ணாவுக்கு திருவனந்தபுரத்தில் கல்யாணமும் சென்னை ஏ.ஜி.எஸ்.ஆபீஸுக்கு மாற்றலும் ஆயிற்று. மூன்றாம் ஆண்டு படிக்கும் போது என் தந்தையார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேலம் வந்து தனிப்பட்ட முறையில் வணிகர்களுக்கான வழக்குகளை நடத்தும் தொழிலை செய்யலானார். பல சமயங்களிலும் எனக்கு சில வேலைகளைத் தருவார். அப்பாவுடன் சேர்ந்து நானும் அந்தத் துறையில் தேர்ச்சி பெறவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஏனோ அப்பாவும் அதைப் பற்றி எண்ணவில்லை. வேலைக்கு அனுப்பும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை!

நான் சாரதா கல்லூரியில் படித்த காலத்தில் தான் பண்டிட் ஜவஹர்லால் நேரு காலமானார். ஓராண்டு காலம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரோஜா மலர்களை தலையில் சூட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறேன். பைத்தியக்காரத்தனமோ?

இது மட்டுமா? தேசிய கீதம் ரேடியோவில் ஒலித்தாலும் எழுந்து நிற்கும் பழக்கம் எனக்கு இருந்தது. தேசிய கீதத்தைப் பாடினாலே உணர்ச்சி வசப்படுவேன். என் தொண்டை தழு தழுக்க கண்களில் நீர் கசியும்! போன ஜன்மத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேனோ என்று நானே வியந்ததுண்டு!

1963, 64 ஆண்டுகளில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்த காலகட்டம்!கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டார்கள். தமிழகமெங்கும் ஹிந்தி பாஷையை கற்றுக் கொள்ள கடும் எதிர்ப்பு. அதனால் தானோ என்னவோ நானும் சரி என் குழந்தைகளும் சரி ஹிந்தி கற்றுக் கொள்ளவில்லை. அதனால் பிற்காலத்தில் கஷ்டப்பட்டிருக்கிறோம்.

பசுமையான வயல் வெளிக்கு நடுவே அமைந்த ஒற்றையடிப் பாதையில் சுகமான தென்றல் காற்றை அனுபவித்தபடி, தோழிகளுடன் சிரித்துப் பேசியவாறு கல்லூரிக்குச் சென்று வந்த மூன்றாண்டுகள் முடிய ஒரு பட்டதாரியானேன். பெற்றோர்களுக்கு ஒரே சந்தோஷம். எனக்கும் பெருமையாகதான் இருந்தது.

12 Jan 2012

காவிரி நதியுடன் கை கோர்த்து....கடலூர், திருச்சி.


கடலூர்  ////   திருச்சி. 
தென்னாற்காடு மாவட்டத்தின் கடலூர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறிய ஊர். கழிவு நீர்ச் சாக்கடைகள் எதுவும் கட்டப்படாத நிலையில் நாற்றமடிக்கும் தொட்டிகளும், கொசுக்களும் நிறைந்த ஊர்தான் என் நினைவில் நிற்கிறது. கெடிலம் நதி, அதிகம் தண்ணீர் பாயாதது. சிவபெருமான் பாடலீஸ்வரர் என்ற பெயரில் கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் தலம்.

தூய்மையான காற்றும், இயற்கையின் இனிமையும் நிறைந்த குன்னூருக்கும்  கடலூருக்கும் எத்தனை வித்தியாசம்?ரோடோரத்து வீடு; வசதி குறைவானது. மாடியில் இரண்டும், கீழே ஒன்று என மூன்று படுக்கை அறைகள். ஒரு முற்றம். சமையலறை. அகலம் அதிகம் இல்லாத, நீளமான வீடு.,

St.Anne’s பள்ளியில் பத்தாம் வகுப்பு! ‘நுணலும் தன் வாயால் கெடும்,’ என்ற பொன்மொழிக்கேற்ப என் விளையாட்டுத் திறமையை காண்பிக்கப் போய், P.T. ஆசிரியையிடம் அகப்பட்டுக் கொண்டேன். மானில விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதல், 200.மீட்டர் ஓட்டம், 400 மீட்டர், ‘ரிலே,’ என எல்லவற்றிலும்  என்னை வற்புறுத்திச் சேர வைத்தது மட்டுமன்றி, வகுப்பு நேரங்களில் பயிற்சிக்கு எப்போது கூப்பிட்டாலும்  அனுப்ப வேண்டுமென்று  ஆசிரியைகளுக்கும், போகவேண்டுமென்று எனக்கும் உத்தரவாயிற்று. ஏன் சேர்ந்தாய் என வீட்டிலும்,  விளையாடினால் போதுமா, படிக்க வேண்டாமா என  ஆங்கிலம், கணக்கு, சைன்ஸ்  டீச்சர்களும் கேட்பார்கள். படிப்பிலே நான் சுமார் தான். காலை 10 மணிக்கு பொது மைதானத்தில் ஓட்டப் பயிற்சி ஆரம்பித்தால், பன்னிரண்டு மணிவரை பயிற்சி. மதிய உணவிற்கு வீட்டிற்குப் போய்விடுவேன்.  மதியம் கடைசி வகுப்பில் ஆரம்பித்து, 5 மணி வரை மீண்டும் மைதானம்.

அது ஒரு புது அனுபவம் மட்டுமன்றி மற்ற மாணவியரின் நடுவே ஒரு மதிப்பும், பள்ளிக்காக பெருமை தேடித் தருவதில் ஒரு தற்பெருமையும் இருந்தது. ஆனால் அப்பாவோ அப்படியா என்று சொன்னதோடு சரி. அம்மாவுக்கு  இதற்கெல்லாம் நேரம் கிடையாது. எப்படியோ, வெற்றியும், பதக்கமும் பெற்று ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. ஓராண்டு ஓடியே போயிற்று. பரிட்சையும் முடிந்தது. பொழுது போவதற்காக தையல் வகுப்பில் சேர்ந்தேன். பிரேமா ஒன்றாம் வகுப்பு அதே பள்ளியில்தான் படித்தாள். ஸ்கூலுக்கு வரவே அழுவாள் பாவம், பூஞ்சை உடம்பு.

 இதனிடையே என் பெரிய மாமா மகனுடைய பூணூல் பழனியில். அழைப்பிதழும்  வந்தது. எங்களையும் அம்மாவையும், முதலிலேயே ஒற்றைப் பாலத்திற்கு அனுப்பிவிட்டார் அப்பா. அம்மாவிற்கு உடன் பிறந்த சகோதரிகள் ஆறு பேர், மூன்று சகோதரர்கள். ஜே ஜே என்று தாத்தா வீடு நிரம்பி வழிந்தது. ஒற்றைப்பாலத்திலிருந்து பழனிக்கு ரயில் பயணம். இறங்கும் முன்பே எனக்கு ஜுரம் வந்து விட்டது. மறு நாள் அப்பா வந்தார். உடனேயே டாக்டரிடம் அழைத்துப் போனார். மதியமே புறப்பட்டு இரவு ஹோட்டலில் தங்கி, மறு நாள் கடலூர் வந்து சேர்ந்தோம். சுமார் ஒரு வாரம் பிடித்தது உடம்பு சரியாக; அது ஒரு தனி அனுபவம். பாவம் அம்மா, அவளால் தான் பிறந்தவீட்டின் உடன் பிறப்புகளுடன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை.

கடலூர் வாசத்தின் போதுதான் அப்பா எங்களை வடலூர், சிதம்பரம், சீர்காழி      
வைத்தீஸ்வரன் கோயில், திருக்கோயிலூர் ஆகிய கோயில்களுக்கு அழைத்துச்சென்றார்.

ஒருமுறை பாலன் அண்ணா லீவில் வந்தபோது நாங்கள் இருவரும் கடலூர் கடற்கரைக்குப் போக முடிவு செய்தோம். ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டு கடற்கரையில் பட்டாம்பூச்சிக் கிளிஞ்சல்களைப் பொறுக்கினேன். நேரம் போனது தெரியவில்லை. திரும்பி  வரும் போது மழை பிடித்துக்கொள்ள, வீட்டிற்கு வந்ததும் திட்டுமழை பொழிய, கண்ணீர் மழையால் கண்மை கரைந்தது.

கடலூரில் இருந்தபோதுதான் என் தங்கை பிரேமாவுக்கு  ைபாய்டு காய்ச்சல் வந்தது. மிகவும் மோசமான நிலையில் அவள் படுத்திருந்ததும்  மருத்துவர் வந்து ஊசி போட்டதும், நாங்கள் எல்லோரும் கவலையுடன் சுற்றி நின்றதும், இன்னும் நினைவில் நிற்கிறது. கடவுள் கிருபையால் அவளும் பிழைத்தாள்.
                             
1962—-1963.

ஆயிற்று பத்தாம் வகுப்பு பாஸானவுடன், திருச்சி சீதாலஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பி.யூ.சி. யில்  சேர்த்துவிட்டார் அப்பா. என்னுடைய வகுப்பு மாணவிகள் குமுதா, வசந்தா, வசந்தகுமாரி எல்லோரும் அங்கேயே சேர்ந்தார்கள். கல்லூரியிலிருந்து பார்த்தால் நேரே மலைக் கோட்டை. காலை ஐந்து மணிக்கு பாட்டு போட்டுவிடுவார்கள். ஆறு மணிக்கு எழுந்து டைனிங் ஹால் போனால், முதலில் இறை வணக்கம், பின்னாலேயே ஏ ஒன் காப்பி கிடைக்கும். லேட்டானால் எட்டு மணிக்கு டிபனுடன் கிடைக்கும் காப்பி சுமார் தான். சும்மா சொல்லக்கூடாது, டிபன், சாப்பாடு எல்லாமே சுவையாக இருக்கும். மாலையில் சிறு தீனியுடன் காப்பி. இரவு சாப்பாடு. சரியான சாப்பாட்டு ராமி போல இருக்கே என்று நீங்கள் நினைக்கிரீர்களா?அட,’’ எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் ‘‘ அல்லவா?

முதல் நாள் நான் சேர்ந்தபோது, பி.யூ.சி.ஹாஸ்டலில் இடமில்லாததால் எம்.எஸ்.சி. மாணவியர் விடுதியில் ஒரு வாரம் தங்கும்படி நேர்ந்தது. அங்குதான் சுசீலா அக்கா அறிமுகமானார். அம்மாவும் அவர்களும் சில நாட்கள் கடிதப்போக்குவரத்து கூட வைத்திருந்தனர். பின்னர் ஜூனியர் விடுதிக்கு  குமுதா, வசந்தாவுடன் சேர்ந்து கொண்டேன்.

விடுதி வாழ்க்கை ஒரு தனி அனுபவம். யாருடனும் மிகவும் நெருங்கிப் பழகாமலும், அதே சமயம் ஒதுங்கி நிற்காமலும் வாழும் கலையை அங்கேதான் கற்றேன்.  ஒவ்வோர் நாள் ஒவ்வொருவரிடம்  டூத் பேஸ்ட் கடன் வாங்கிக் காலம் தள்ளும் சாமர்த்யசாலிகளிலிருந்து, காசு கடன் வாங்கி டிமிக்கி கொடுப்பவர், சீயக்காய் தூள் கூட ஸ்வாதீனமாக எடுத்துப் போகின்றவர்வரை எல்லா குணாதிசயங்களையும் அங்கே பார்க்கலாம். நல்லவர்களைக் கூட கெட்டவர்களாக மாற்றும் சக்திவாய்ந்த கெட்டிக்காரிகள் அங்கே உண்டு.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் பிழைத்தோம்.

                              விடுதியின் இரு பக்கத்திலும் வேப்பமரங்கள் அணி வகுத்து நிற்கும். வெயில் காலத்தில் வேப்பம் பூ மணமும், மென்மையான காற்றின் தழுவலும், சுகமான தூக்கத்தை வரவழைக்கும் மதியப் பொழுதுகளில்  தேர்வுக்காக  மரத்தடிகளில்  படித்த நேரங்கள் நினைவில் வலம் வருகிறது.

ஒரு நாள் எங்கள் அறை ஜன்னலை மூடாமல் போய்விட்டோம். மதிய உணவுக்கு வந்தவர்கள் கதவைத் திறந்தால் எல்லா சாமான்களும் தரையில்.      குரங்குகள் கைவண்ணம்! அதிலிருந்து கதவை மூடாமல் போனதேயில்லை. எல்லாவற்றையும் சரி செய்ய மூன்று மணி நேரம் பிடித்தது.

கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருமே நல்லவர்கள். எங்களுக்குதான் தமிழ் மீடியம் படிப்பிலிருந்து தாவி, ஆங்கிலத்தில் எல்லாம் படிக்க கஷ்டப்பட்டோம். எங்கள் வேதியல் ஆசிரியை குள்ளம்; டேபிள் பின்னால் நின்றால் தலை மட்டும் தான் தெரியும். ஜன்னல் வழியாக காவிரியின் குறுக்கே உள்ள பாலத்தில் போகும் ரயில்களை வேடிக்கை பார்ப்போம். இயற்பியல் பாட ஆசிரியை போர்டை விட்டுத் தலையைத் தூக்கவே மாட்டார். விலங்கியல் ஆசிரியை நன்றாக பாடம் சொல்லித்தருவார். அதிலே செயல் முறைப்பாடம் தான் பயமுறுத்தும். அடடா, கரப்பான் பூச்சியைக் கண்டாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் எங்களை அதன் வாயின் பாகங்களை வெட்டிக்காண்பியுங்கள் என்றால் எப்படி? ஏதோ நல்லகாலம், என்னுடன் பயப்படாத ஒரு மாணவி இருந்ததால் நான் பிழைத்தேன்.

என்.சி.சி ஆசிரியைதான் லாஜிக் பாடம் எடுப்பார். நல்ல வாட்ட சாட்டமாய், பெரிய கண்ணாடி அணிந்திருப்பார். கண்ணாடிக்குப் பின்னால் கண்ணை உருட்டி முழித்துப் பார்த்தாலே பயமாயிருக்கும். மதியம் முதல் வகுப்பு லாஜிக், சாப்பாட்டுக்குப்பின் நல்லா தூக்கம் வரும். தூங்கி மாட்டிக்கொண்டிருக்கிறேன்!

மலைக்கோட்டை பிள்ளையார் கோயிலிலிருந்து ஒலி பரப்பாகும் திருப்பாவை, திருவெம்பாவை, சுப்ரபாதப் பாடல்கள் மனப்பாடமாயிற்று. மலைக்கோட்டைப் பிள்ளையார் மானசீக நண்பர் ஆனார். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் நேரமும் வந்தது. ஓராண்டு முடிந்து, தேர்வுகள் வந்தன. பிள்ளையார் ஆசீர்வாதம் பரிட்சையில் தேர்ச்சியும்  பெற்றேன்.

திருச்சி வாழ்க்கையும் நன்றாகத்தான் இருந்தது. சேலத்தில் உடன் படித்த பவானியை இங்கே சந்தித்தேன். பேட்மிண்டன் விளையாட்டில் நல்ல பயிற்சி கிடைத்தது இங்குதான். பிற்காலத்தில் சாரதா கல்லூரி பேட்மிண்ட்ன் டீமின் கேப்டனாக இது  மிகவும் உதவியது.

இங்கே கற்றுக்கொண்ட சந்திரசேகராஷ்டகம் அம்மாவுக்குப் பிடித்த ஸ்லோகம். அடிக்கடி சொல்லச்சொல்வாள். எப்படியோ, கால நதி யாருக்காகவும்  நிற்பதில்லையே? 1963 ஆம் ஆண்டு என் தந்தையார் மீண்டும் பதவி உயர்வுடன் சென்னைப் பட்டிணத்திற்கு  மாற்றப்பட்டார். குடும்பத்துடன் சென்னை வாழ்க்கை சரிப்படாது என்றும், மீண்டும் சேலம் போவது  எனவும் தீர்மானம் செய்து எங்களை சேலம் அழைத்துச்சென்றார்.

3 Jan 2012

நீலகிரி மாவட்டம்......குன்னூர்.

நீலகிரி மாவட்டம்......குன்னூர்.

தமிழ் நாட்டின் கோடை வாசஸ்தலம், மலைகளின் அரசி எனப் போற்றப்படும் உதகமண்டலம். நீலகிரி அதன் மற்றொரு பெயர். தொலை தூரத்தில் இருந்து பார்க்கும் போது நீலநிறமாகக் காட்சியளிப்பது, நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். நெடிதுயர்ந்த மரங்களும், குன்றுகளும், பனிமூட்டமும், குளிரும், பல வண்ணங்களில்  பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களும், சாரல் மழையும், மழையூடே தவழ்ந்துவரும் யூகலிப்டஸ் மரங்களின் மணமும், அகல் விளக்கு ஏற்றினார் போலும் இரவு நேரங்களில்
ஆங்காங்கே காட்சிதரும் விளக்குகளும் காணக் காணத் தெவிட்டாதவை.

ஒவ்வொரு முறையும் புதிதாகத் தோற்றமளிக்கும் சிம்ஸ் பார்க். மிகப்  பழமையான, அரிய வகை மரங்கள் பலவும் அங்கே உண்டு. பெரிதும் சிறிதுமாய் வண்ண வண்ண ரோஜா மலர்கள், சிறிய குளம், பலவேறு வகையான பூக்கள், பறவைகள் என பொழுது போவதே தெரியாது. எங்கள் வீட்டில் இருந்து போய்வர சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கும். அண்ணா குடையும் கையுமாய் புறப்படுவது தெரிந்தால் கூடவே நானும் கிளம்பிவிடுவேன். அமைதியாய் இயற்கையை ரசித்துக் கொண்டு, நடப்பது  ஒரு சுகமான அனுபவம். சாலை வழியே நடந்து போய் ‘சிம்ஸ் பார்க்‘ அடைந்து விட்டால் அங்கிருந்து கீழே இறங்கிவர படிக்கட்டுகள் சுமார் அறுபது உண்டு. அதன் வழி இறங்கிவிடுவோம். அண்ணா தான் என்னுடைய யோகாசன குரு. எனக்கு என் ராஜப்பா அண்ணாவை ரொம்பவே பிடிக்கும்.

ஒரு மேட்டின் மேல் இருந்த சிறிய வாடகை வீட்டிற்குத்தான் முதலில் நாங்கள் சென்றோம். அங்கிருந்து பார்த்தால் கீழே குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் நன்றாகத் தெரியும். முதன் முதலாக மேட்டுப்பாளையம்- ஊட்டி குட்டி ரயிலில் பயணம் செய்தது நினைவில் இருக்கிறது. ஸ்டேஷனின் எதிர்ப் பக்கம் பதினைந்து மண் படிகள் ஏறினால் மைசூர் லாட்ஜ் ஹோட்டல். முதன் முதலாக எங்களுக்கு அப்பா, ஸ்வெட்டர், சாக்ஸ், ஷூ  எல்லாம் வாங்கிக் கொடுத்தார். நான் ஷாந்தி விஜயா ஜெயின் ஹைஸ்கூலில் சேர்ந்தேன். பாலன் ஊட்டி கவர்மெண்ட் காலேஜில் பி.யூ,சி. சேர்ந்தான்.

முட்டை குடிக்கும் வைபவம் இங்குதான் நடந்தது. குன்னூர் தட்பவெட்ப நிலையில் குழந்தைகள் உடம்பைத் தேற்ற வேண்டும் என்று அப்பா, பியூனிடம் கோழி முட்டை வாங்கிவரச் சொல்லி, காலை ஏழு மணிக்கு  அதை ஒவ்வொன்றாக உடைத்து ஒவ்வொருவரையும் குடிக்க வைக்கச் சொல்வார். தம்பிகள் என்ன செய்தார்களோ யான் அறியேன். எனக்குப் பார்த்தாலே குமட்டும். ‘மூக்கைப் பிடித்துக் கொண்டு குடி,’ பின் இந்த ஊறுகாயை வாயிலே போட்டுக்கோ, இல்லை சர்க்கரை வேண்டுமா,’ என்று பின்னாலேயே நிற்பாள் அம்மா. டம்ளரை வாய்ப் பக்கத்தில் கொண்டு போனாலே வாந்தி எடுப்பது போல் ஓக்காளிக்கும். கடைசியில் இது தேறாத கேஸ் என்று விட்டுவிட்டார்கள். முட்டை குடித்தால் போதுமா? அது ஜீரணமாக வேண்டாமா? அதற்காக ஒரு கிலோ மீட்டர் நடைப் பயிற்சி.   இந்தக் கூத்தெல்லாம் ஞாயிற்றுக் கிழமைக்கு! சவுக்கு மரவேலிகளில் எல்லாம் பனித்துளிகள் சூரியஒளியில் பளபளப்பதைப் பார்த்துக்கொண்டு  நடப்பது என்றால் எனக்கு ரொம்பப்பிடிக்கும். வானளாவி நிற்கும் யூகாலிப்டஸ் மரங்கள்! மஞ்சள்,காவி நிறங்களில் சண்பகங்கள் மணம் பரப்பும். இயற்கையின் மடியில், தென்றலின் தாலாட்டு! 

இந்த வீட்டின் வலதுகைப் பக்கம் ஒரு புல்சரிவு உண்டு.  அது தான் என்னுடைய சாம்ராஜ்யமாக கொஞ்ச நாள் இருந்தது. அந்தப் புல் சரிவில் படுத்துக் கொண்டு கதைப் புத்தகம் வாசித்தல், வானம் பார்த்துப் படுத்துக் கிடத்தல், நிலவை ரசித்தல் எனக்குப் பிடித்தமானவை. ஒன்பது பேருக்கு அந்த வீடு சிறியது என்பதால் ஆபீஸுக்குப் பக்கத்தில் பெரிய வீட்டிற்கு இடம் பெயர்ந்தோம். வெளிகேட்டில் இருந்து உள்ளே நுழைய, வலது பக்கச்சரிவு முழுதும் யூகாலிப்டஸ் மரங்கள்.


image

நூறு அடி நடந்தால் வீடு. விருந்தினர் அறை, ஹால், மூன்று படுக்கை அறைகள், பூஜை ரூம், நடையைக் கடந்தால் சமையலறை. நடையிலிருந்து  இடது பக்கம் இறங்கினால் பெரிய விளையாட்டு மைதானம். மைதானத்தின் நடுவிலிருந்து அப்பாவின் ஆபீஸுக்கு ஆறு படி ஏறினால் போய்விடலாம். வலது பக்கம் காப்பிக்கொட்டைச் செடியோடு கூடிய புற்சரிவு. மைதானத்திலிருந்து பார்த்தால் லோயர் குன்னூர் நன்றாகத் தெரியும். மாலை நேரங்களில் ஹாக்கி, ‘பேட்மிண்டன்’ விளையாடுவோம். அப்பாவும்  இதில் கலந்து கொள்வார். குளிர் காலங்களில் கம்பளிகளை ’டெண்ட்’ மாதிரி கட்டி பாட்டியுடன் புல் தரையில் குளிர் காய்வோம். அப்பா யூகாலிப்டஸ் மரப்பட்டைகளை லீவு நாட்களில் சேகரம் செய்யும் போது நானும் சேர்ந்து கொள்வேன்.
                                       குன்னூர் வந்தவுடன் அப்பா வாங்கி வளர்க்க ஆரம்பித்த நாய்க் குட்டிதான் டாமி. டாமி ரொம்பவே புத்திசாலி. எங்களுடன் நன்றாக விளையாடும். ‘ரிங் பாலை’ மரத்தின் கிளையில் கட்டினால் ஜம்ப் பண்ணி எடுக்கும். ஒளித்து வைத்தால் தேடிக்கண்டுபிடிக்கும். ஒரு நாள் கீழ் வீட்டில் மேய்ந்து கொண்டிருந்த கோழியைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு! கீழ் வீட்டு ஆங்கிலோ இந்திய அம்மணி வந்ததும் அப்பா மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். நாங்கள் ஒரு நாள் சினிமாவிற்குப் போகும் போது எப்படியோ  கூடவே வந்து தியேட்டரில் கலாட்டா செய்தது. பிறகு அண்ணா அதை வீட்டிற்கு கூட்டிவந்து, கட்டியபின் வந்தார்.

தீபாவளி சமயத்தில் ஒரு நாள் சிறிய ஊசிப்பட்டாசு சரம் ஏற்றப் பட்டவுடன் எதிர் பாராமல் எங்கிருந்தோ ஓடி வந்த டாமி, டக்கென்று அதை வாயில் கவ்வி விட்டது. பட்டாசு வெடிக்க வாயெல்லாம் புண்ணாகி கஷ்டப்பட்டதைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டோம். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அதற்கு ‘ரேபிஸ்’ நோய் வந்து விட்டதால் அதனைக் கருணைக் கொலை செய்யவேண்டி வந்தது. அப்பா, ரவி இருவருடைய கைகளிலும் அதன் எச்சல் பட்டதால் இருவரு ‘பாஸ்ச்சர் இன்ஸ்டிடியூட்டில்’ ஊசி போட்டுக் கொண்டார்கள். டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அது இறந்த நாள்! கவிமணியாரின், ‘வையகத்தில் நாய் போல் வாய்த்த துணையும் உண்டோ,’ என்றவரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. அதன் பின் பிராணிகளைப் பிரியப்பட்டு வளர்த்து, அதனுடைய அன்பில் திளைத்து,    எக்காரணங்கொண்டு அதனை இழந்தால் தாங்கும் மன வலிமை இன்மையால் அவற்றை வளர்ப்பதில்லை.

ஷாந்தி விஜயா பள்ளிக்கூடம் மிகச்சிறியது. ஆறாம் வகுப்பு முதல் பத்து வகுப்பு வரை, இரண்டு பிரிவுகள் A,B, என்று. என்னை எட்டாம் வகுப்பு ‘ஏ’ பிரிவிற்கு அனுப்பினார்கள். திருமதி. ஜெயலட்சுமிதான் வகுப்பு ஆசிரியை. ஒன்பதாம் வகுப்பில் சோஷியல் ஸ்டடீஸ் பாடம் தனம் டீச்சர் எடுப்பார்கள். வெள்ளிக் கிழமைதோறும் மாலை கடைசி இரண்டு பீரியட், ஒவ்வொரு  வாரம் ஒவ்வொரு வகுப்பு கலை நிகழ்சிகள் கொடுக்க வேண்டும். பிறகு பஜனை, தீப ஆராதனை. ஜைன மதத்தை சார்ந்தவர்கள் பள்ளி ஆகையால் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் அங்கே படித்ததும் கற்றுக் கொண்டதும் நிறைய. கலை நிகழ்ச்சிகள் தயார் செய்யவும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது அங்கே தான். என்னுடைய ஆசிரியை திருமதி.ஜயலஷ்மி எப்போது கடிதம் எழுதினாலும் பதில் எழுதுவார். தனம் டீச்சர் அன்பின் உறைவிடம். என் தோழி பட்டு, மனோன்மணி ஆகியோர் எங்கே இருக்கிறார்களோ?

நாங்கள் குன்னூர் சென்ற ஓராண்டில், அண்ணா  திருவனந்தபுரம் ஏ.ஜி.எஸ் ஆபீசில் வேலை கிடைத்துப் போனார். பாலன் அண்ணாவும் காரைக்குடி, செட்டினாடு பாலிடெக்னிக்கில் எல்.எம்.ஈ., படிப்பில் சேர்க்கப்பட்டான்.  பழனியில் வைத்து பாலனுக்குப் பூணூல் போட்டார்கள்.

இதமான குளிரும், இயற்கை அழகும், அற்புதமான, அன்பு நிறைந்த தோழிகளும், சண்பக மரங்களின் மணம் நிறைந்த பூங்காற்றும், இதமாக இதயத்தை மயிலிறகால் வருடினார் போலும் பொங்கிப் பெருகும் ஆனந்தமும் நிறைந்த குன்னூர் வாழ்க்கை என் தந்தையாரின் பிரமோஷனுடன் கூடிய இட மாற்றத்தால் ஒரு முடிவுக்கு வந்தது.

அதற்குப் பின் நான்கு முறை, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மலையரசியின் கரம் பற்றி  நடந்திருந்தாலும், சுதந்திரப்பறவையாய், கட்டுப்பாடுகள் அற்ற காட்டாற்று வெள்ளமாய், சுற்றித் திரிந்த இளமையின் இன்பம் காணாமல் போனது உண்மைதான்.

1961 ஆம் ஆண்டு, தென்னாற்காடு மாவட்டம், கடலூர், கடற்கரை ஊர் வந்து சேர்ந்தோம். ‘’புட்டிடியாப்பே……, மல்லாட்டே,’’ என்று இரவு முழுதும் கூவும் குரல்………,கொசுக்கடிக்கும், யானைக்கால் நோய்க்கும், சாக்கடைகளுக்கும் புகழ் பெற்ற கடலூர்……….!

‘’உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்’’