26 Mar 2017

ஶ்ரீஅரவிந்தர் 3
அரவிந்தாவையும்,சகோதரர்களையும் இங்கிலாந்தில் வில்லியம் ட்ரெவிட் அவர்களிடம் ஒப்படைத்த பின் கிருஷ்ணதான் கோஸ் வங்கம் திரும்பினார்.

அரவிந்தரும், சகோதரர்களும் சுமார் நான்காண்டுகள் டிரெவிட் குடும்பத்தாருடன் வசித்தார்கள். டிரெவிட்டும், அவர் மனைவியும் ஆஸ்திரேலியா சென்றதால் சகோதரர்கள், டிரெவிட்டின் தாயுடன் லண்டன் மாநகரில் வசிக்கவேண்டி வந்தது.
அங்கு செயிண்ட் பால் பள்ளியில்1884 ஆம் ஆண்டு அரவிந்தர் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த டாக்டர். வாக்கர்(walker) அரவிந்தரின் நற்குணத்தையும், திறமையையும், லத்தீன் மொழியில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவையும் உணர்ந்து கிரேக்க மொழியை அவருக்குப் பயில்விக்க முன்வந்தார்.

கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடையவரான திருமதி. டிரெவிட் தினமும் பிரார்த்தனை நேரத்தில் பைபிளிலிருந்து சில பகுதிகளைப் படிக்க வேண்டும் என்ற வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.சகோதரர்கள் மூவரும் அதில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவேண்டும். பினாய் பூஷனே அதைப் பெரும்பாலும் முன்னின்று நடத்தினார்.  ஒரு நாள்  மன்மோகன் சொன்ன ஒரு அபிப்ராயத்தால் திருமதி டிரெவிட்,  கோபமடைந்தார்.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் தன்னால்  வாழமுடியாது என வருந்தினார். அது அவர்களுடைய வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.அதுவரையிலும் வாழ இடம் இருந்தது. உணவுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. பாதுகாப்பான கூட்டை விட்டுப்பறந்து செல்லும்  சிறகு முளைத்த பறவைகளைப் போல அவர்கள் ட்ரெவிட் அவர்களின் தாய் வீட்டை விட்டு வெளியேறினர்.நல்ல வேளையாக அது விடுமுறைக்காலமானதால் மூவரும் 'Lake district' என அழைக்கப்பட்ட ஏரிகள் நிறைந்த ஊருக்குச் சென்றனர்.  அந்த ஊர் நம் நாட்டின் காஷ்மிரைப் போல இயற்கைக் காட்சிகள் நிறைந்த ஊர். 'டேஃபடில்ஸ்' என்ற பெயருடைய மலர்கள் பூத்துக்குலுங்கும், சிறு குன்றுகளும், சிற்றோடையும்,மரம்,செடி கொடிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும் ஊர். மேலும் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் 'வேர்ட்ஸ்வொர்த்' (Wordsworth) பிறந்த ஊர்.

அங்குள்ள புறநகர்ப் பகுதியில்  விளைநிலங்களுக்கு அருகாமையில்  வீடுகள் இருந்தன.குறைந்த வாடகையில் அங்கே பயணிகள் தங்க முடியும்.எனவே அவர்கள் மூவரும் அத்தகைய ஒரு வீட்டில் தங்கினார்கள். காலைச் சிற்றுண்டிக்குப்பின் மூவரும் வனப்பகுதிகளில் சுற்றி இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பார்கள். இரண்டாவது சகோதரரான மன்மோகன் தன்னை மறந்து கவிதைகள் புனைவார். அரவிந்தரும் அதில் பங்கேற்பதுண்டு.

விடுமுறைக்காலம் முடிந்ததும் மூவரும் கிருஷ்ணதான் கோசின் நண்பரின் சகோதரரைச் சென்று சந்தித்தார்கள். அவர் பெயர் ஜேம்ஸ்காட்டன் என்பதாகும்.இவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையை அறிந்த அவர் கிருஷ்ணதான் கோசிடமிருந்து பண உதவி வரும்வரை அவருக்குச் சொந்தமான 'க்ளப்' எனப்படும் பொழுது போக்கு மனையில் வசிக்க இடம் அளித்தார். மூத்தவரான பினாய்பூஷனுக்கு தனக்கு வேலைகளில் உதவி  வாரம் ஐந்து ஷில்லிங் சம்பளமாகப் பணமும் கொடுக்க முன் வந்தார்.

ஒரு வயதுக்கு மேல் ஒவ்வொருவரும்  சுதந்திரமாக தனக்கு வேண்டிய பொருளைத் தானே தேடிக்கொள்ள வேண்டும். இடர்களையும், வறுமையையும், துன்பங்களையும் சந்தித்தால்தான் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் முன்னேறவும் முடியும். அனுபவங்களே வாழ்க்கை என்பது ஐரோப்பியர்களுடைய வாழ்க்கைத் தத்துவமாகும். எனவே ஜேம்ஸ்காட்டன் 'பினாய் 'வேலை செய்து பணம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியதில் வியப்பில்லை.

'க்ளப் ஹவுஸ்'லண்டனின் மிக நாகரிகமான சவுத் கென்சிங்டன் என்ற பகுதியில் இருந்தது. மாலை நேரங்களில் பல பெரிய மனிதர்கள் வரும் சப்தம் மிகுந்த இடமாக இருந்தாலும் அங்குள்ள நூலகம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


சுமார் ஐந்தாண்டுகாலம் அரவிந்தரும் சகோதரர்களும் மிகுந்த வறுமையில் வாழவேண்டி வந்தது. அவர்களுடைய தந்தை கிருஷ்ணதான் கோஸ் பண உதவி எதுவும் அவர்களுக்கு செய்யாததால்  பள்ளியில் கிடைத்த (ஸ்காலர்ஷிப்) நிதிஉதவி
யில் எளிமையாக அவர்களுடைய வாழ்வு நகர்ந்தது.

இங்கிலாந்தின் கடுமையான குளிரில் போர்வைகளும்,குளிர் தாங்கும் கம்பளி ஆடைகளும் அவர்களிடம் இருக்கவில்லை!காலையில் வெறும் இரண்டு ரொட்டி சாண்ட்விச்சுகளும் ஒரு கோப்பைத் தேனீர் மட்டுமே உணவு! மதிய உணவும், இரவு உணவும் வாங்க பணம் இல்லையாதலால் மாலையில் குறைந்த விலையில் கிடைத்த  சூப், ரொட்டித்துண்டுகள் ஆகாரம்.

எல்லாத் துன்பங்களுக்கிடையிலும் அரவிந்தர் தொடர்ந்து பிரெஞ்ச் இலக்கியம், இத்தாலி, ஜெர்மன், ஸ்பானிஷ் சரித்திரங்களைக் கற்றார். சகோதரர்களுக்கு கவிதைகள் எழுதுவதிலும், படிப்பதிலும் பொழுது போயிற்று.

1890 ஆம் ஆண்டு  அரவிந்தர்  மிக உயர்ந்த, கடினமான ஐ சிஎஸ் தேர்வில் 11ஆம் இடத்தில் தேர்வுபெற்றார். இளம்வயதில் யாருடைய வழிகாட்டலும், உதவியும் இன்றி அவர் பெற்ற வெற்றியால் அவருக்கு சிறிது அதிகமான நிதிஉதவி கிடைத்தது. ஆனால் பட்டம் பெறத் தேவையான குதிரை ஏற்றத் தேர்வுக்கு நான்கு முறை அனுமதி கிடைத்தும் அவர் செல்லவில்லை.

 முதலில் குதிரை ஏற்றத் தேர்வுக்குத் தேவையான பயிற்சியை எடுத்துக் கொள்ளத் தேவையான பணம் அவரிடம் இருக்கவில்லை. ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு அலுவலராகப் பணியாற்ற அவர்  விரும்பவும் இல்லை. அதையே தனக்குக்  கிடைத்த அங்கீகாரமாக எண்ணி வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டார்.

1879ஆம் ஆண்டு தொடங்கி  1893ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் அரவிந்தரும், சகோதரர்களும் மிகுந்த துன்பங்களுக்கு இடையே கல்வி கற்றார்கள். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் இல்லாவிடினும் இலக்கியங்களே அவர்களுக்கு ஆறுதலாகவும், உற்ற துணையாகவும் இருந்தது.
அறிவிற்சிறந்தவராகவும், ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவராகவும்,மிகக்கடினமான ஐசிஎஸ் தேர்வில் தன்னுடைய திறமையால் சிறப்பிடம் பெற்றவராகவும் விளங்கிய அரவிந்தருக்கும், இந்திய அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(அரவிந்தர், வாழ்க்கை வரலாறு, இங்கிலாந்துக் கல்வி (1879 -1893 )


20 Mar 2017

ஶ்ரீஅரவிந்தரின் வாழ்க்கை வரலாறு -2


1872, ஆகஸ்ட் 15
அற்புதமான அந்த விடியலில் இந்திய நாட்டின் மானசரோவரில் பூத்தது அரவிந்த வெண்தாமரை. வங்கத்தில் பிறந்து, லண்டனில் கல்வி பயின்று, குஜராத் மாநிலம், பரோடாவில் பணியாற்றி,சுதந்திரப் போராட்ட வீரர்களை வங்கத்தில் உருவாக்கி, ஶ்ரீகிருஷ்ணவாசுதேவரின் பாதுகாப்பில் பாண்டிச்சேரியை அடைந்து அதனைத் தன் யோகசாதனைக் களமாக்கிக் கொண்டவர் ஶ்ரீஅரவிந்தர்.

கிருஷ்ணாதன் தன் மகனுக்கு அரவிந்தா அக்ராய்ட் கோஸ் என்ற பெயரைச் சூட்டினார். ஐரோப்பிய ஆங்கில மோகம் கொண்டு ஆங்கிலேய நாகரிகத்தைக் கற்றுக் கொடுக்க விரும்பினார். குழந்தைகள் ஆங்கிலம் கற்க ஒரு ஆங்கில செவிலியை நியமித்தார். வங்க மொழியை வீட்டில் பேசுவதற்கும் தடை விதித்தார்.இந்திய கலாசாரத்ததையும், வாழ்க்கை முறைகளையும் வெறுத்தார்.

1877 ஆம் ஆண்டு, அரவிந்தரின் ஐந்தாம் வயதில்  டார்ஜிலிங் என்ற  இடத்தில் ஐரிஷ்காரர்களால் நடத்தப்பட்ட 'லோரெட்டோ' கான்வெண்ட் பள்ளிக்கு சகோதரர்களோடு அனுப்பினார். 
டார்ஜிலிங், வங்கத்தில் உள்ள தேயிலை உற்பத்தி செய்யும் மலைப்பிரதேசமாகும். அங்கு ஆங்கிலக் கல்விபயில்விக்கும் கான்வெண்ட் பள்ளிகள் நிறைய உண்டு.

வெண்பனிப்படலம் போர்த்திய 'கஞ்சன் ஜங்கா' மலைத்தொடரின் அற்புத இயற் கைக்காட்சிகள் சகோதரர்களுடைய உள்ளத்தை அந்த இளம் வயதிலேயே கொள்ளை கொண்டன.
இரண்டு ஆண்டுகள்! 
தாய் தந்தையரின் அன்பும் கவனிப்பும் இல்லாத ஹாஸ்டல் வாழ்க்கை.

1879 ஆம் ஆண்டு கிருஷ்ணதான் தன் மூன்று மகன்களுடனும், மகள் சரோஜினியுடனும் இங்கிலாந்து சென்றார். அங்கு ஆங்கில கனவான், வில்லியம் டிரெவிட் என்பவரின் குடும்பத்தாரிடம் தன் மூன்று மகன்களையும் ஒப்படைத்தார்.
ரங்கபூரின் மாஜிஸ்ட்ரேட் 'டிரெவிடின்' உறவினர்தான் இந்த ஆங்கிலேயர்.இந்திய கலாசாரத்தின் தாக்குதல் தன் மகன்களுக்கு எந்தவிதத்திலு ஏற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். 

ஆங்கில கலாசாரம் மட்டுமே அவர்களை கனவான்களாக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இங்கிலாந்தில் அவர் இருந்தபோது அவர் மனைவி தன் ஐந்தாவது குழந்தையான பாரிந்த்ர குமாரை பெற்றெடுத்தார்.

மான்செஸ்டரின் இலக்கணப்பள்ளியில் பினாய் கோஸும், மன்மோகனும் சேர்க்கப்பட்டார்கள். உயர் கல்வி பயின்றவரும் அறிவிற்சிறந்தவருமான திரு. ட்ரெவிட்  அரவிந்தரின் முதல் ஆசிரியரானார். வீட்டிலேயே லத்தீன், ஆங்கில மொழிகளைக் கற்பித்தார். இவரது மனைவி பிரெஞ்ச், பூகோளம், கணக்குப் பாடங்களைப் பயில்வித்தார். ஆங்கிலக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி,  இவர்களின் ஆங்கிலக் கவிதைகளையும் எழுத்துகளையும்,ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், கிறித்துவ வேதமான பைபிளையும் அந்த இளம் வயதிலேயே பயில அரவிந்தருக்கு நிறைய நேரம் கிடைத்தது.

(ஶ்ரீஅரவிந்தர், பெற்றோர், இங்கிலாந்தில் கல்வி)

14 Mar 2017

ஶ்ரீஅரவிந்தரின் வாழ்க்கை வரலாறு --1இந்தியாவின் வடகிழக்கே  வங்கமா நிலத்திலுள்ள  ஹூக்ளி மாவட்டத்தில் பாய்கிறது பாகீரதி நதி. அந்நதியின் மேற்குக் கரையில் ஜனத் தொகை மிகுதியான கொன்னகர் எனப்படும் ஊர்- கல்கத்தாவின் வடக்கே 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள  பெருமை வாய்ந்த ஊர் அது.

இந்த கொன்னகரில் 'ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் என்னும் ஊரிலிருந்து வந்து குடியேறிய 'கோஸ்' என்ற குடும்பப் பெயருள்ள பலகுடும்பங்கள் வாழ்ந்து வந்தன.  கோஸ் என்ற பெயருக்கு 'புகழ் பெற்ற' என்று பொருள். 

கொன்னகரில் வாழ்ந்துவந்த காளிப்பிரசாத் கோஸுக்கும், கைலாஸபாஸினி தேவிக்கும் 1845 ல் மகனாகப் பிறந்தவர் கிருஷ்ணதான் கோஸ். பரம்பரைப் பணக்காரர்களான இவர்கள் கிருஷ்ணதான் தாஸ் பிறந்த வேளையில்  மிகவும் ஏழ்மையான நிலையிலேயே இருந்தனர். எனவே உதார குணமுடையவர்களின் உதவியினால் இவர் பள்ளி,கல்லூரி படிப்பை முடித்தார்.

1858 -ல் கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். நான்காம் ஆண்டு படிக்கும் போது  ரிஷி இராஜநாராயணபோஸின் முதல் மகளான பன்னிரண்டு வயது ஸ்வர்ணலதா தேவியை பிரம்மசமாஜ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

1869 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் கிருஷ்ணதான்கோஸ். ஆங்கிலேயர்களுடைய நடை, உடை, பாவனைகளில் மோகம் உடையவராகவும்,கடவுள்நம்பிக்கை இல்லாதவராகவும் இருந்தார். மிகச்சிறப்பாக மருத்துவத்தில் தேர்வு பெற்று 1871 ல் இந்தியா திரும்பினார்.   அந்தக்காலத்தில் கடல் கடந்து சென்றவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கம் இருந்தது. அதை செய்ய மறுத்த கிருஷ்ணதான் கோஸ், கொன்னகரில் தனக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்தான வீட்டை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு அரசாங்க மருத்துவராக பல மாநிலங்களிலும் பணியாற்றினார்.

வங்காளத்தின் பாகல்பூர், ரங்பூர், குல்னா போன்ற ஊர்களில் அவர் பிரபலமானவராக விளங்கினார். அறிவிற்சிறந்தவர், தாராளமனப்பான்மையும், மென்மையான இதயமும் உடையவர், தன்னுடைய நலனைவிட மற்றவர்களின் துன்பத்தைப் போக்குவதில் நாட்டமுடையவர் என்றெல்லாம் போற்றப்பட்டவர் கிருஷ்ணாதான் கோஸ்

ரங்கப்பூரின் ரோஜா, எனப்புகழப்பட்டவர் இவர் மனைவியார் ஸ்வர்ணலதா தேவி. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். மூத்தவர் பினாய் பூஷன், அடுத்தது மன்மோகன். மூன்றாவது மகனாக 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள், விடியற்காலை 5 மணியளவில்  பிறந்தவர் மகாயோகியாகவும், இந்தியாவின் இளைஞர்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவராகவும் விளங்கிய ஶ்ரீஅரவிந்தர்.

குறிப்பு;
(பிரம்ம சமாஜம் - 1774 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தலை சிறந்த சீர்திருத்தவாதியான இராசாராம் மோகன் ராய். தன்னுடைய புரட்சிகரமான கருத்துகளைப் பரப்புவதற்காக ஆன்மிகசபை என்ற அமைப்பினை ஏற்படுத்தி, பின்னர் பிரம்மசமாஜம் என்று அதன் பெயரை மாற்றினார்.
 1.உருவ வழிபாட்டை எதிர்த்தார்.
 2. மூட நம்பிக்கைகளை அழித்தொழிக்கப் பாடுபட்டார்.
3.ஆணுக்குப் பெண் சமம் என்ற நீதியைப் பரப்பினார். பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தார்.
பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார் )

 (ஶ்ரீஅரவிந்தர், வங்கம், பெற்றோர், பிறப்பு, பிரம்மசமாஜம்)                          -இன்னும் வரும்