26 Apr 2014

காதல் பரிசு!

''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின் பாடல்.

காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்று பாடினான் பாரதி.
காதல் சாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டது.  வாலிப வயதில் காதல்வருவது இயற்கை. வயதாகி திருமணம் முடித்து இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆனபின் வருவது காதலா, காமமா? 
   
வாசல் கேட் சத்தப்பட்டால் காலை மணி பத்து என்று கடிகாரத்தை சரி செய்து கொள்ளும் அளவுக்கு நேரம் தவறாதவள் கண்ணம்மா! அன்று... அம்மா..ஆ.. என்று சத்தம் போட்டபடி வந்து நின்றாள்.

என்னம்மா ஆயிற்று, என்று திடுக்கிட்டுப் போய் கதவைத் திறந்தோம். பாருங்கம்மா, காப்பி ஆச்சான்னு கேட்டதுக்குப் போய், பத்துப் பாத்திரம் தேய்க்கிற கழுதைக்கெல்லாம் பதில் சொல்லணுமோன்னு இந்தப் பெருமாள் கேலி செய்யறான். பத்துப் பாத்திரம் தேய்க்கிறவ குடுக்கற பணம் மட்டும் நல்லாயிருக்காமில்ல......கெட்ட வார்த்தைகளால் கொஞ்சம் அர்ச்சனை.... முணுமுணுப்பு..... கண்கசக்கல்..மூக்குசிந்தல்......!

    எங்கள் வீட்டில் பணி செய்யும் உதவியாளர் மிகவும் சுறு சுறுப்பானவர். கருப்பேயானாலும் முகத்தில் ஒரு களை! அழகு!கிராமத்தில் பிறந்து தினை,கம்பு, கேழ்வரகு சாப்பிட்ட வலிமையுள்ள உடற்கட்டு. ஒரு தடவை அழகு நிலையம் அழைத்துப் போய் வந்தபின், நல்ல பட்டுப் புடவை கட்டி, காதிலும், மூக்கிலும் வைரத்தைப் போட்டு விட்டால் அழகாகவே காட்சி அளிப்பார்! கடவுளுக்குதான் எத்தனை ஓர வஞ்சனை? ஏழைக்குடும்பத்தில் பிறக்க வைத்து, குடிகாரனுக்கு வாக்கப் பட வைத்து, காலை முதல் மாலை வரை சொந்தமில்லாத வீடுகளை சொந்தமானது போல் கூட்டி மெழுகி வாழ வேண்டிய கட்டாயம்.
      ஒரு தடவை சொன்னால் போதும் அந்த வேலையை சரியாக செய்து விடுவார். மாடியும் கீழுமாக தோட்டத்தோடு கூடிய வீடு எங்களுடையது.  எங்களுக்கு வலது, இடது கை எல்லாமே அவர்தான். திருமணமாகி வந்ததில் இருந்து பதினேழு ஆண்டுகளாக வேலை செய்கிறார். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி. ஏதாவது காணோமென்றால் அவரைக் கேட்டால் போதும், சரியாகச் சொல்லிவிடுவார். அதாவது சமையல் தவிர மற்ற எல்லா வேலைகளும் கச்சிதமாக செய்வார். நாம் எதுவும் சொல்லவே வேண்டாம். அதற்குத் தகுந்தார் போல் சம்பளமும் அதிகம்தான். காலை பத்தரை மணிக்கு டிகிரி காப்பி. பன்னிரண்டரை மணிக்கு மதிய உணவு. ............ வீட்டில் அவரை வேலையாளாகக் கருதுவதில்லை.

 கண்ணம்மாவுக்கு மூன்று பையன்கள்.
பெரியவன் பி.யூ.சி முதல் வருடம் சிலகாலம் படித்து விட்டுவிட்டான். இரண்டாவது மகன் எட்டாம் வகுப்பிலேயே வேலைக்குப் போய் விட்டான். கடைசி மகன் படித்துவருகிறான். சின்ன சொந்த வீடு. வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கப்பட்ட கட்டில், மெத்தை இன்ன பிற சாமான்கள். நாங்கள் கொடுத்த டீ. வி, தானே வங்கிய கேஸ் அடுப்பு. சுமார் ஆறு வீடுகளில் வேலை செய்வதால் கிட்டத்தட்ட 10000 ரூபாய் சம்பாதிக்கிறார்.

புருஷன் வேலனுக்கு  இவள் இரண்டாவது பெண்டாட்டி. முதல் மனைவி கொஞ்சம் வசதியானவள்.  அவளுக்கு ஒரு பெண். பக்கத்து ஊரில் வசிக்கிறாள். வேலன் மொடாக் குடியன். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணம் அப்படியே குடிக்குப் போய் விடும். போதாக்குறைக்கு கண்ணம்மாவிடம்  பணம் பிடுங்கிக் கொண்டு போய் விடுவான். கொடுக்காவிட்டால் அடிஉதைதான்.  இவன் அடிக்கடி  முதல் மனைவியிடம் போய்  ஒரு சில நாட்கள் தங்குவதும், திரும்பி வரும் போது எங்க ஜெயந்தி போல வருமா என்று பெருமையடித்துக் கொள்வதையும்,  மூஞ்சியப் பாரு கருப்பி என்று இவளைத் திட்டுவதையும் கேட்டு அழுகையாக வரும் கண்ணம்மாவுக்கு. அவளுக்கு இலவச இணைப்பு அவனுடைய அம்மா!

அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் யாருமில்லாமல் தவித்தது கண்ணம்மாவின் மனம்.  அட, நல்ல புடவை கட்டி, தலையில் பூச்சூடி அலங்காரம் செய்து கொண்டு, ஆசையாய் ஒருநாள் ஹோட்டலுக்கு சேர்ந்து போய் பிடித்தமானதை சாப்பிட்டு, திரைப் படம் பார்த்துச் சிரித்து, இவையெல்லாம்  இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா? பிள்ளைகளோ சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. புருஷனும் சரியில்லை. இவ்வாறு இருந்த வாழ்க்கையில் அவள் கண்ணில் பட்ட மன்மதராஜாதான் பெருமாள்.

பெருமாள் ஒரு டிரைவர். கன்னங்கருப்பு! சிரித்தால் வெளுப்புப் பற்கள் அழகூட்டும். கையில் தங்கப் பட்டை வாட்ச் கருப்பில் மினுக்கும். ரொம்ப மென்மையாகப் பேசுவான்.  குடி, சிகரெட் கெட்ட பழக்கங்கள் அவனுக்குக் கிடையாது. நீலகிரியில் பிறந்தவன். பெங்களூரில் பல வேலைகளும் செய்ய வைத்து, கடைசியில் காரோட்டும் திறமையைக் கண்டறிந்த அவன் அண்ணன் அவனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

காரோட்டியாக அவனுடைய வாழ்வு நன்றாகவே நடந்தது. திருமணம், ஒரு பெண், ஒரு பையன் எனப் பெருகியது குடும்பம். இதற்கிடையில் விற்பனைக்கு அந்த வீடு ஒன்றை 'வங்கிக் கடன்' பெற்று வாங்கிக்
கொண்டான். பேராசையால் இரண்டாவதாக வீடு வாங்கிய போது கடனாளியானான்.அவனுக்கு ஒரே வருத்தம் கடன் வாங்க பிரம்மா 1000 கைகளை வைக்க மறந்துவிட்டாரே என்பதுதான். அவனுடைய முகராசியும், நடிப்பும் அவன் யாரிடம் கடன் கேட்டாலும் அவனுக்குக் கிடைத்தது.

ஆனால்  அவன் கேட்காமலே கிடைத்தது கண்ணம்மாவின் காதலும், கடனுக்குப் பணமும். விட்டுவிட மனம் வருமா? போகவர பேசுவது, 'செல்' பேச்சில் வளர்ந்து, 'பைக்கில்' பூங்காவுக்குப் போவது, எஜமானுடைய கார் கிடைக்கும் போது சொந்தக் கார்போல பெங்களூர் சாலைகளில் பவனி  வருவது மிக ரகசியமாகத் தொடர்ந்தது.
பெருமாளுக்குப் பணம் தேவைப் பட்டபோது சீட்டுப் பணத்திலிருந்தும், சேமிப்பிலிருந்தும் பணம் கொடுத்து உதவிய கண்ணம்மா அவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சொல்ல ஆரம்பித்தாள்.  அவன் மனைவியிடம் கண்ணம்மாவே தங்கள் தொடர்பைச் சொல்ல வந்தது வினை. பெரியவர்கள் புத்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.

வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்த பெருமாள் சிறிது சிறிதாக அவளிடமிருந்து விலக ஆரம்பிக்கவே  கண்ணம்மா அவனை எஜமானிடம் காட்டிக்கொடுப்பேன் என்று பயமுறுத்த ஆரம்பித்தாள்.  எதையாவது சொன்னே கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினான் பெருமாள். காதல் போயிற்று  சண்டை தொடங்கியது.

 அன்று........அதுதான் 'அம்மா' என்று சத்தமிட்டு வந்த அன்று......சாயம் வெளுத்துப் போச்சு......

பெருமாள் தான் செய்த தவறை சொல்லி வேலையை விட்டு நின்றுவிடுகிறேன் என்று எஜமானர் காலில் விழுந்துவிட்டுச் சென்றான். மறுநாள் பெருமாள் வேலையை விட்டுவிட்டான் என்றதும் அவன் இல்லாத வீட்டில் நானும் வேலை செய்ய மாட்டேன் என்று கண்ணம்மாவும் வேலையை விட்டாள்.

இருவரும் வெவ்வேறு இடத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எங்களால் இவர்களுடைய 'காதல் பரிசின் 'அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அது என்ன காதல் பரிசு எங்களுக்கு? அதுதாங்க இதுவரை எந்த வேலையானாலும் கவலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஞானோதயம் ஏற்படச் செய்து, யாரையும் நம்பாதே, பிறரைச் சார்ந்து இருக்காதே
என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்திய பரிசுதான்....!

பாத்திரம் தேய்க்கும் எந்திரமும் (Dishwasher) மந்திரம் போட்டதுபோல் வீடு துடைக்கும் கோலையும்
( Magic mop) வாங்கி விட்டோம். வீட்டு வேலைகள் பத்து மணிக்குள் முடிந்து விடுகிறது.
ஆனால்.......
எத்தனை நம்பிக்கை துரோகம்! வீட்டு மனுஷியாய் அவளுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் தீர்வு சொல்லி, வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து, ஊரே பொறாமைப் படும்படி அவளைப் பெருமைப் படுத்தி....................! தான்செய்த தவறை ஒப்புக்கொண்ட போதும் சிறிது கூட எந்த உணர்வுமின்றி......அவள் போனாள்! எப்படி என்று ஆச்சர்யப் படுகிறது மனம்! காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான்! 
ஆனால் எங்களுக்கு...ஞானக்கண் திறந்தது!

காதலுக்கு கண் இல்லை, வயது இல்லை! உறவுகள் இல்லை!பிள்ளைக்குட்டிகள், பெண்டாட்டி புருஷன் தடையில்லை!?
யாரும் லட்சியமில்லை!

பெருமாளோ எல்லாம் அந்தக் கண்ணம்மா தப்புதான், நான் ரொம்ப நல்லவன் என்று தன் ஆண்பிள்ளைத் தனத்தை பெருமையுடன் சொல்லி விட்டுப் போனான். எங்களிடம் வாங்கிய கடன் இரண்டு லட்சம்..........?  \|/ ....

பெருமாளின் பெண்டாட்டி குழந்தைகளையும், கண்ணம்மாவின் மூன்று பிள்ளைகளையும் நினைத்தால்தான்  பாவமாயிருக்கிறது!

(இது ஒரு உண்மைக்கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)


5 comments:

 1. Truth is stranger than fiction. But now a days this scene has become the norm. very sad state of affairs!

  amas32

  ReplyDelete
  Replies
  1. Thank you. இன்னும் கூட நம்பமுடியவில்லை. வருத்தமாக இருக்கிறது.

   Delete
 2. the path of life has its own twists and turns, often filled with surprises, which sometimes make us happy, sometimes sad and sometimes......

  ReplyDelete
 3. ஒருமுறை ஒருவர் கதை சொன்ன போது... கேட்டவரால் நம்ப முடியவில்லையாம். ”நம்புற மாதிரி கதை சொல்லுங்க. அதென்ன கல்யாண வீட்ல இருந்து வெளிய வரும் போதுதான் மரக்கிளை முறிஞ்சு கீழ விழனுமா?” என்று கேட்டாராம். கேட்டு சில நாட்களிலேயே அப்படியொரு செய்தி நாளிதழில் வந்த போது திகைத்துப் போய் விட்டாராம்.

  கதைக்குக் கால் இல்லை என்பது ஒருபுறம் இருக்க.... கதைகளை விட நிகழ்வுகள் இன்னும் வியப்பானவை என்பதற்கு நீங்கள் சொல்லியிருப்பது ஒரு சான்று.

  ReplyDelete
 4. நன்றி ராகவன். பிறரைச் சார்ந்திருத்தல் என்பது தற்காலத்தில் அதிகமாகிவிட்டது.இரண்டாவதாக ஆங்கிலத்தில் misplaced sympathi என்பார்களே,நம்முடைய செளகரியத்துக்காக அதிகமாக சலுகைகளையும், அன்பையும் காட்டுவது தவறு என்ற பாடத்தையும் கற்றுக் கொண்டோம்.

  ReplyDelete