22 May 2012

நினைவு நாள்

வேடிக்கையான தலைப்பு அல்லவா? இன்று நினைவு நாள் என்றால் மற்ற நாட்கள் எல்லாம் நினைவு இல்லாத நாட்களா? இல்லை யாராவது ஞாபகப்படுத்தினால் தான் நினைவு வருமா? யார்,எதை நினைவுபடுத்தமுடியும்?

தலைவன் சொன்னான், 'நினைத்தேன் ' என்று.
தலைவி தலைவனை ஒரு வழி செய்கிறாள்.எப்படி நினைத்தேன் என்று சொன்னீர்கள்? அப்படியானால் என்னை மறந்ததாகதானே அர்த்தம்? அது எப்படி என்னை மறக்கமுடிந்தது? அப்போது வேறு யாரை நினைத்தீர்கள்! ஆகா, என்னை நீங்கள் ஒரு கணமேனும் மறக்கலாயிற்றா? சொல்லிச் சொல்லி புலம்புகிறாள்.

தலைவன் நிலைமை என்ன என்று கற்பனை செய்தால் சிரிப்புவரும். இந்த நாடகத்தை வள்ளுவர் இரண்டு வரிகளில் காவியமாகத் தீட்டுகிறார்.

பாருங்களேன் 'நினைத்தேன்' என்ற சொல்லின் சக்தியை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒருசில மனிதர்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றார்போல் இயற்கை நியமித்துள்ளது. ஒருவர் மறைந்து விட்டால் நாம் அவரை மறந்து விட்டோம் என்று அர்த்தமா?

ஏன் நினைவு வைத்துக்கொள்கிறோம்? ஒவ்வொருவரும், அவரவர்  பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என மூன்று தலை முறையினரை நினைத்து நன்றி சொல்வதற்காக. எதற்கு நன்றி? நம் மூதாதையர்களின்  வழிவழி வந்த அணுக்களையும்,  குணாதிசயங்களையும் நாமும் பெற்றுள்ளோம். எல்லோரையும் ஒரு சேர நினைக்கின்ற நாள்தான் நினைவு நாள்.

என் அண்ணா சொல்வார், நம்ம அப்பா அம்மா எல்லாம் அவர்களை மறக்கவே முடியாத மாதிரி பரம்பரைச் சொத்து கொடுத்து இருக்கிறார்கள் தெரியுமா?  அதுதான் சர்க்கரை வியாதி, ஆஸ்த்துமா, ரத்த அழுத்தம்! வேடிக்கையான விமர்சனம்தான் !
ஆனால் எத்தனை உண்மை பாருங்கள்.

பின் ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா?  மறக்க முடியாது. அதனால்தான்.
                                                   நினைவுநாள்!

21 May 2012

எனக்குப் பிடித்த கதை 2

அது ஒரு கடற்கரை கிராமம். அங்கு பிறந்து, வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவன் முத்தையா. கடலும் அலையும் அவனது தோழர்கள். மணிக் கணக்கில் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க அவனுக்குப் பிடிக்கும். எண்ணங்களும் சலனங்களும் அற்ற அந்த அமைதிதான் ஆண்டவனின் சந்நிதானம் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. எத்தனையோ பேர் ஆண்டுக்கணக்காக தவம் செய்தும் எட்டாத ஓர் இடம் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.

ஒரு நாள் பிரார்த்தனையின் போது அவன் மனம் ஒருமித்து இறைவனோடு இணைந்திருக்கையில் அவனுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல், உனக்கு விருப்பமான எதை  வேண்டுமானாலும் கேள். நீ எனக்கு மிகவும் பிடித்தமானவன் என்றது.

முத்தையா சொன்னான், 'ஐயா என்னோடு எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும். உங்களுடைய காலடிச் சுவடுகளை நான் எப்போதும் காணவேண்டும்.'
சரி, அப்படியே ஆகட்டும் என்றான் இறைவன்.

எப்போதும் ஆண்டவனுடைய அடிச்சுவடுகளை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வான். இன்பமடைவான்,  மனம் நிறைய நன்றி சொல்வான்.

அவனுடைய வாழ்விலும் ஏதோ துயரங்கள். சொல்லாமல் வருவதும், செல்வதும், மனிதனை அவ்வப்போது இழுத்துப் பிடித்து நான் இருக்கிறேன் என்று வாட்டி வதைப்பதும் துன்பங்கள்தானே?
வாழ்க்கைப் புயலில் சிக்குண்டவனாய் நொந்து போனவன்  பின்னால் திரும்பிப் பார்த்தான். தன்னுடைய காலடிச் சுவடிகள் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.

இறைவனிடம் கேட்டான்,'பார்த்தீர்களா, எப்போதும் என்னோடு இருப்பேன் என்று சொன்னீர்களே, உங்களுடைய காலடிச் சுவடுகளையே காணோமே? எங்கே போனாய் ஐயா?'

இறைவன் சிரித்தான் ,' நீ பார்த்தது உன்னுடைய காலடிச் சுவடுகளை அல்ல. எப்போதெல்லாம் துன்பத்தால் நீ துவண்டு போகிறாயோ அப்போதெல்லாம் நான் உன்னை என் மீது சுமந்து போகிறேன். அதனால்தான் உன்னால் இரண்டு காலடித் தடங்களைப் பார்க்க முடியவில்லை! நீ பார்த்த காலடித் தடங்கள் என்னுடையவை. உனதல்ல!'

துன்பம் வரும்போது சுமக்கிறேன். இன்பம் வருங்கால் இறக்கிவிடுகிறேன். மனிதனோ துன்பத்தில்தான் என் துணையை நாடுகிறான். இன்பத்தின் போது அடுத்த துன்பத்திற்கு அடிக்கல் நாட்டுகிறான் என்றார்.

உண்மைதான்! எத்தனை துன்பங்கள் வந்தாலும் மீண்டும் மனிதனை உயிர்த்தெழச் செய்யும், முன்னோக்கிச் செல்ல உந்தும் அந்த மஹாசக்திக்கு வந்தனைகள்.


19 May 2012

எனக்குப் பிடித்த கதை -1

அது ஒரு சிறிய கிராமம்.  அக்கிராம மக்களின் ஒரே பொழுது போக்கு அந்த ஊர் கோவிலிலே நடக்கும் உபன்யாசங்கள், வில்லுப்பாட்டு இவற்றைக் கேட்பது. ஒரு சமயம் அங்கு கதை சொல்வதிலே திறமை உள்ள  ஒருவர் முருகப்பெருமானின்  கதையை சொல்லவந்தார்.

மாலைப் பொழுது. ஜனங்கள் எல்லோரும் கூடினார்கள். கதையும் ஆரம்பித்தது. முருகப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி விளக்கியவர் குழந்தை  முருகனின்  அழகைச்  சொல்ல ஆரம்பித்தார். அந்த  நேரத்தில்  அவ்வட்டாரத்தில் திருட்டுக் கொள்ளையடிக்கும் மாயாண்டி அங்கே வந்தான்.  தூணிலே சாய்ந்து கொண்டு  அவனும் கதையை கேட்க ஆரம்பித்தான்.

வேணி இளம் பிறை முடித்த சிவபெருமான் ஆசனத்திலே  அமர்ந்திருக்கிறார். அன்னை பார்வதி குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட குட்டி முருகன் ஓடுகின்றான். காலிலே தண்டை சப்தமிடுகிறது. கொலுசு கொஞ்சுகிறது. தங்கச்சிலம்பு ஒலிக்கிறது. இடையிலே பொன் அரைஞாண் ஒளிவீசுகிறது.  கைகளிலே வளையல்களை அணிவித்திருக்கிறாள் அம்மை. விரல்களிலே வைர, வைடூரிய மோதிரங்கள் மின்னுகின்றன.

திருமார்பிலே நவரத்னங்கள் இழைக்கப்பட்ட பொன்னாபரணங்கள் சூரிய ஒளியைத் தோற்கடிப்பனவாய் வர்ணஜாலங்களை வீசுகின்றன, சிறிய ரோஜா இதழ்களை ஒத்த உதடுகள். அதிலே தவழும் மோகனப் புன்னகை. காந்தக் கண்கள்.  நெற்றியிலே திருநீறு. நடுநாயகமாய் பளிச்சென்று குங்குமப்பொட்டு. வைரங்கள் மின்னும் சின்னக் கிரீடம்.

இந்த முருகன் அழுகின்றவர்களை அள்ளி அணைக்கும் அன்னை. துன்பத்தில் துடிப்பவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தந்தை. அவன் பெருமை சொல்பவர்களுக்கு விளையாட்டுத் தோழன். அடியார்களுக்கு குரு.  கதை தொடர்ந்தது. மாயாண்டியின் மனம் அவன் வசமில்லை. அந்த  சின்னக் குழந்தையின் அழகிலே பூரணமாய் லயித்திருந்தது.

கதை முடிந்து அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். மாயாண்டி கதை சொன்ன கண்ணப்பர் பின்னால் போனான்.
சாமி அந்தச் சின்னப் பையனப் பத்தி சொன்னியே, அவன் எங்க இருக்கான்னு கேட்டான்.
சின்னப் பையனா, எந்த சின்னப் பையன்?
அதுதான் சொன்னியே காலில கொலுசு போட்டுக்கினு...
கண்ணப்பர் சிரித்தார். எ ன்னப்பா, வெளையாடிரியா? நான் கதையில்ல சொன்னேன். நெசமா அப்பிடி யாரும் கெடையாது.
ஏய், நெசமா சொல்லிப்பிடு. அவன் போட்டு இருக்கற நகை எல்லாம் எனக்கு வேணும்.  அந்தப் பையன் எங்க இருக்கான்? சொல்லலே கத்தியால குத்திப்பிடுவேன்,  என்று கத்தியை உருவினான்.
கண்ணப்பருக்கு  சப்தநாடியும் ஒடுங்கிற்று. ஐயய்யோ, ஏதோ ஒரு கிறுக்கனிடம் மாட்டிக்கொண்டோமே என்ன செய்வது என்று யோசித்தார். மாயாண்டியோ கத்தியும் கையுமாய் நின்றான்.

அந்தப் பையன் அதோ அங்க தூரத்தில தெரியுது பாரு ஒரு சின்ன மலை, அங்கதான் எங்கியாவது இருப்பான் என்றார்.
அவன்  பேர் என்னன்னு சொல்லிடு, அப்பதான் கூப்பிடமுடியும் என்றான் மாயாண்டி.
முருகன் என்று கண்ணப்பர் சொல்ல, நான் போய் கூப்பிடுவேன், கிடைக்கலன்னா திரும்ப இங்கதான் வருவேன். என்ன ஏமாத்தலாம்னு நெனைக்காதே புரிஞ்சுதா? என்று புறப்பட்டான் அவன்.

கண்ணப்பர் தலையில் கை வைத்துக் கொண்டார். மாயாண்டி மலைப் பக்கம் நடையைக் கட்டினான்.
அவன் நினைத்த மாதிரி அந்த மலை அவ்வளவு கிட்டத்தில் இல்லை. வழியில் ஒரு காடு வேறு. நடக்க நடக்க பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டி முருகா, முருகா என்று சொல்லிக்கொண்டு வழி நடந்தான்.

ஒரு வழியாக கண்ணப்பர் காட்டிய இடத்திற்கு வந்தான். ஏய் முருகா எங்க இருக்கே நீ? ஓடி வா, என்று கூப்பிட்டான். அந்த இடத்தில் ஒரு ஈ, காக்கை இல்லை. அவனுக்கோ அலுப்பு. அந்த ஆளை என்ன செய்யரேன் பாரு என்று சொல்லிக் கொண்டே மீண்டும் கூப்பிட்டான். தான் ஒரு சின்னக் குழந்தையை காட்டில் நின்று கொண்டு அசட்டுத்தனமாக கூப்பிடுவது அவன் புத்தியில் உரைக்கவில்லை.

ஆனால் அவன் கண் முன்னால் அந்தக் குழந்தை ஓடி வந்தது. இந்த நகை எல்லாம் வேணுமின்னுதானே என்னக் கூப்டே எடுத்துக்கோ, முண்டாசுத் துணிய கீழே விரி, என்றது. எல்லா நகைகளையும் கழட்டிப் போட்டது. ஒரே ஓட்டமாய் ஓடி மறைந்தது.

மாயாண்டிக்கு எதுவுமே புரியவில்லை. எல்லாம் கனவு போல இருந்தது. ஆனால் நிஜம்தான் என்பதற்கு சாட்சியாக விரித்த துணியில் பளபளக்கும் நகைகள்!
நகைகளை மூட்டையாகக் கட்டியவன் ஒரே மூச்சில் கண்ணப்பர் வீட்டில் போய் நின்றான். சாமி, சாமி என்று கூப்பிட்டவன், 'ஐயா, பாத்தீங்களா,' என்று மூட்டையைப் பிரித்தான். தன் கண்களையே நம்பமுடியாமல், கதையில் சொன்ன அத்தனை நகைகளையும் கண்முன்னே பார்த்தார்.

மாயாண்டி சொன்னான், 'ஐயா நான் ஒரு திருடன்தான். நகை மேலே ஆசைப்பட்டுதான் குழந்தையைத் தேடிப் போனேன். ஆனால் அழகாக ஆபரணங்கள் அணிந்து வந்த குழந்தை அழகு என்றால், நகைகளை எல்லாம் கொடுத்துவிட்டு  நின்ற அந்தக் குழந்தை இன்னும் அதி அற்புதமான அழகு! எனக்கு திரும்பவும் போய் அந்தக் குழந்தையை தூக்கி, மடிமேல் வைத்துக்கொண்டு கொஞ்ச வேண்டும். இதெல்லாம் வேண்டாம்' என்றான்.

கண்ணப்பர் முருகனைக் கூப்பிட்டார். அப்பனே உன் கதையை பட்டிதொட்டி எல்லாம் சொல்லிவருகிறேன். என் கண் முன்னாலே நீ ஒரு தடவைகூட வந்ததில்லை. ஒரு திருடனுக்கு காட்சி கொடுத்தது மட்டுமல்லாமல் உன் நகைகளையும் கொடுத்திருக்கிறாயே? இது என்ன ஆச்சரியம்? என்று கேட்டார்.

முருகன் சொன்னான்,  "கண்ணப்பரே, பல ஆண்டுகளாக நீர் என் கதையை பலருக்கும் சொல்லி வருகிரீர். எப்படி? வெறும் கதையாகதான் சொல்லிவருகிரீரே தவிர உண்மையில் உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் மாயாண்டியோ கதையைக் கேட்ட அந்த நிமிடத்திலிருந்து என்னைத் தவிர வேறு  சிந்தனையின்றி என்னைத் தேடி வந்தான். அதனால்தான் நான் அவனுக்கு தரிசனம் தந்தேன்,' என்றான்.

கடவுளை எப்படி வணங்க வேண்டும்? காலெங்கோ நடக்க, கை எதையோ செய்ய, மனம் எங்கோ மேய, வாய் எதையோ பேச செய்யும் எந்தச் செயலும், பக்தி உட்பட வெற்றி பெறுவதில்லை.

பூஜை செய்ய உட்காருகிறோம்.  அப்போதுதான் செல்பேசி ஒலிக்கும்,  மனைவிக்கு சமையலில் சந்தேகம் வரும், பையனுக்கு கல்லூரி பீஸ் கட்டவேண்டும் என்று நினைவுவரும், நண்பர் வருவார், பைப் ரிப்பேர் செய்ய ஆள் வருவான்.

என்னதான் செய்வது? எந்தச் செயலை செய்தாலும் ஒரே ஒரு நிமிடம் எனக்கு அந்தச் செயலை அர்ப்பணித்துவிட்டு  செய். பூஜை புனஸ்காரங்கள் வேண்டாம் என்கிறான் கீதோபதேசம் செய்தவன். செய்து பாருங்களேன்.

நிறைய கதைகளைப் படிக்கிறோம். ஒரு சில கதைகளே மனதில் நிற்கின்றன. அவ்வாறு என் நினைவில் நிற்கும் கதை இது.


17 May 2012

இதயத்தில் நீ?

சென்றவாரம், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும்  ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரின் உள்ளம் உருக்கும் கடிதம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. ''எந்தத்  தவறும் செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை? ஒவ்வொரு மனிதனிடமும் இறைவன் குடி கொண்டு உள்ளான் என்று படித்திருக்கிறேன். ஆனால் மனிதர்களிடம்  என் நம்பிக்கை போய்விட்டது.'' எத்தனை தூரம் உள்ளம் உடைந்து போயிருந்தால் இவ்வாறு எழுத இயலும் என்று நானும் மனம் வருந்தினேன்.

மனிதனிடம் கடவுள் இருக்கின்றான் என்றால், மனிதன் மிருகங்களைவிடக்  கேவலமாக சக மனிதனை நடத்துகின்றானே ஏன்? எங்கெங்கு நோக்கினும் எத்தனை வெறியாட்டங்கள்! இலங்கைப் படு  கொலைகள், கவுதமாலாச்  சிறைக் கைதிகளின் அவல நிலை, என்று தொடரும் வகைவகையான கொடூரங்கள்!

உலகம் தோன்றிய நாளிலிருந்து மனிதனின் மனதில் எழுந்த, இன்னும் விடை கிடைக்காத கேள்வி ஒன்று உண்டென்றால் அது கடவுளைப் பற்றியதுதான். இந்த உலகைப் படைத்தவன் யார்? எப்படி இருப்பான்? உருவம் உண்டா, இல்லையா? மனிதனைப் போலவா? ஒரு முகமா, ஆனை முகமா? ஆறு முகமா? கைகள் இரண்டா, நான்கா, ஆறா, பத்தா, பன்னிரண்டா?
அவர் வசிக்கும் இடம் எது? திருப்பதியா, திருப்பாற்கடலா, வைகுண்டமா, கைலாசமா? அவருடய தரிசனம் எங்கு கிடைக்கும்?
என்ன செய்தால் அவர் அருள் கிடைக்கும்? அர்ச்சனையா, அபிஷேகமா, அலங்காரமா?
உபவாசம் இருக்க வேண்டுமா? வேண்டாமா?
அங்கப் பிரதட்சணம் செய்தால் அருள்வானா!
ஆசார அனுஷ்டானங்கள் மூலம் அவனை அடைய முடியுமா?
இன்னும் எத்தனையோ கேள்விகள்!

மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் காளியின் அருளால் மகாகவிகாளிதாசன் ஆனான்.
வேடன் வால்மீகியானான். நான் ஆக முடியாதா?  எத்தனையோ கதைகள் நம் நாட்டில்! தடுக்கி விழுந்தால் கோவில், எழுந்து நின்றால் கதை! 

எல்லா மஹான்களும் கடவுள் இருக்கிறார், நம்பிக்கையோடு, பக்தியோடு அவனை வணங்கினால் கண்டிப்பாக அவன் அருள் கிடைக்கும். கடவுள் எங்கும், எல்லாமுமாய், இருக்கிறார். எல்லோருடைய இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார் என்கிறார்கள். அவ்வளவு தானே, நம்முடைய இதயத்தில் இருக்கின்ற ஒன்றை நம்மால் காண முடியாதா?

நீங்கள் எந்த முறைப்படி தியானம் செய்கிறீர்கள் என்று சகோதரி ஒருவர் கேட்டார். இதயத் துடிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொன்னார்கள் என்றேன். இதயமா, அது எங்கே இருக்கிறது? எனக்கு இதயம் நல்லெண்ணை விலை ஜாஸ்தி என்பதுதான் தெரியும் என்றார்கள்.

சமீபத்தில் இதய நோய் நிபுணர் ஒருவர் பேட்டியளித்த போது அவரிடம்  ''கடவுள் இருக்கும் இதயம் என்று ஒன்று மனித உடம்பில் இருக்கிறதா? ஏழு சக்கரங்களும், அவற்றில் தாமரை மலர்களும் உள்ளனவாமே?''எந்த ஆபரேஷனின் போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. மருத்துவ உலகில் தலை சிறந்த மேதைகள் கூட துடிக்கின்ற இதயத்தைத் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை என்ற பதில் வந்தது.

'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம், வள்ளல்  பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்,''
'நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்,'' என்ற பாடல்கள் உணர்த்துவது என்ன?

காசியையும், கைலாசத்தையும் தரிசித்தேன், கங்கையிலே நீராடினேன், காலைமுதல் மாலைவரை உன் நாமம் மொழிந்தேன், ஆனாலும் நீ எனக்கு தரிசனம் தரவில்லையே! தரிசனம் தராவிடினும் பரவாயில்லை! கஷ்டங்களை அல்லவா கொடுக்கிறாய்?

கடவுள் மின்சாரம் மாதிரி. அவர் எங்கும் இருக்கிறார். ஆனால் அவரைப் பார்க்கமுடியாது. எப்போது, எங்கே பவர்கட், எத்தனை மணி நேரம் என்று சொல்லமுடியுமா? கஷ்டங்கள் பவர்கட் மாதிரி. மின்சாரம் வந்து விடும் என்ற நம்பிக்கைதான்.

என் இதயம் மிகவும் பெரியது என்றாள் என் தோழி! அப்படியா மிக்க சந்தோஷம். எல்லோருக்கும் அத்தகைய மன நிலை வாய்ப்பதில்லை என்றேன். என்ன நீ, எனக்கு 'heart enlargement,' ஆகியிருப்பதாக நேற்றுதான் எக்ஸ்ரே  பரிசோதனையில் தெரியவந்தது! நீ என்ன சந்தோஷப் படுகிறாயா? என்றாள்.


'இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே ,'என்ற பாடல் ஒலிக்கிறது.

கடவுளே, இறைவனே, ஆண்டவனே, பரம்பொருளே, எங்களுக்கு உன்னை உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தியைத் தருவாய்!

13 May 2012

துத்தி அம்மா

அம்மா என்றால் அழகுதான்.  அதுவும் பிள்ளையோ பெண்ணோ ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் என்ன பெருமிதம்! எங்கள் துத்தி அம்மாவும் அப்படிதான். பிள்ளையைப் பெற்றுவிட்டாளாம். சாப்பிடவும், டாய்லெட் போகவும் மட்டும்தான் எழுந்திருப்பாள். மற்ற நேரமெல்லாம் ஒரே தூக்கம். பிள்ளை பெற்ற அயர்ச்சி. தன் குழந்தை இந்தப்பக்கம் கொஞ்சம் வந்துவிட்டால் முன்னால் படுத்துக்கொள்வாள்.

ஆயிற்று கொஞ்சம் நடக்கப் பழகியதும் கீழே வந்தாகிவிட்டது. என்ன அரவணைப்பு, என்ன காவல் ஆஹாஹா பார்க்கப் பார்க்க ஆச்சரியம்தான். விளையாட்டு முடிந்துவிட்டால் பத்திரமாக தூங்க வைப்பாள்.எங்கெல்லாம் போகவேண்டுமோ அவசர அவசரமாகப் போய்விட்டு வந்துவிடுவாள். விழித்துக் கொண்டாலும் இடத்தைவிட்டு நகரக்கூடாது என்று  குழந்தைக்கு கண்டிப்பான உத்தரவு வேறு.

குழந்தைக்கு கால் முளைத்து விட்டது. அங்கும் இங்குமாய் எங்கு போனாலும் பின்னாலேயே போய் கேட்டை விட்டு  வெளியே போகவிடாமல், சுற்றிச்சுற்றி வந்து துத்திக்கு கால்வலி வந்துவிடும். மேலே ஏறவும் கீழே இறங்கவும் கற்றுக் கொடுத்துவிட்டாள். போக்கிரியான குழந்தை. எங்களோடு மாலையில் வந்து உட்காருவாள். கொஞ்சம் சத்தம் கேட்டால் போதும் ஒரே ஓட்டம்தான்.

இடம் மாறிவிட்டாள் தன் குழந்தையின் பாதுகாப்புக்காக. நன்றாக நடக்கவும், ஓடவும், விளையாடவும் ஆரம்பித்தது சின்னப்பெண். சிறிது சிறிதாக எங்களுடன் பழக அனுமதித்தாள். ஒரு நாள் காலையில் எப்படியோ இறந்துவிட்டது சின்னப்பெண்.

எழுந்து வந்ததும் தோட்டத்திற்குக் கூட்டிப் போய் காண்பித்தாள் துத்தி. என்ன ஆறுதல் சொல்வது அவளுக்கு. சுற்றிவந்து நகர்த்திப் பார்த்து என்ன செய்தும் பயனற்றுப் போகவே அழுதது அதன் மனசு. இரண்டு மூன்று நாட்கள் பால்குடிக்காமல் பித்துப்பிடித்தது போல் அலைந்து வேறு எங்கோ போய்விட்டாள். அவளைத் தேடித்தேடி அலுத்துப் போனோம்.

ஆம் எங்கள்வீட்டுப் பூனைக்குட்டி, அம்மா!அற்புதமான அன்பு வடிவான அம்மா! அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
8 May 2012

முற்றுப்புள்ளி

ஓர் புள்ளி,  ஒரு புள்ளி,  ஒற்றைப் புள்ளி, ஒரேயொரு புள்ளி                                     
சிறு புள்ளி, சின்னப் புள்ளி,  சின்னஞ் சிறு புள்ளி !                                            
வெண்மைத் தாளில் குத்துப் புள்ளி!                               
காலம் கணத்தில் நிற்கும் போது,                                                               
கண் இமைகள் மூடும் போது,
முன்னால் போகத் தடைக் கல் ஆகும்!                                                                  
எனக்கு மட்டும் தெரியாமல்
எல்லோருக்கும் முன்னால் நிற்கும் !
சின்னப் புள்ளி, முழுப் புள்ளி
முழுமைப் புள்ளி, முற்றுப் புள்ளி.                                                                                       
---------------------------------------

Translation

Full stop

Dot, single dot, one dot, only dot!
Tiny dot, small dot, smallest dot,
On a pure white sheet of paper.
When time stands still
And eyelids close forever,
Blocking the forward march.
Blind to me, 
Visible to everyone it stands,
The small, complete, filled-
FULL STOP. 

1 May 2012

பிறந்த நாள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்கிறோம்! முதல் எழுத்தை எடுத்துவிட்டு 'இ' போட்டால் அர்த்தம் மாறிவிடும்.
இறந்தநாள் வாழ்வில் துக்கம்! ஆம். 'துக்கள்'- -'ள்' மாறி 'ம்' வந்தால் துக்கம் ஆகிவிடும். வேடிக்கையான மொழியல்லவா?
எதற்காக இந்தப் பிறந்த நாள், கல்யாண நாள் எல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது  எனக்குத் தெரியாமலே இருந்தது. நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நாட்கள் அவை. என் தோழி சொன்னாள், '' அட அசடே, இந்த மாதிரி நாட்களில் எல்லாம் ஒரு மாதாத்திற்கு முன்னாலேயே  புதுப் புடவை வேண்டும் என்று சொல்லக் கற்றுக் கொள், இல்லையென்றால் புடவைகள் சேராது. புடவை, நகை எல்லாம் வாங்கிக் கொள்ள ஒரு புதிய யுக்திதான் இது'' என்றாள்.

சரிதான் சொல்லிதான் பார்ப்போமே என்று என்னவரிடம் சொன்னேன், ''நம்ம கல்யாண நாள் வருது. எல்லாரும் புதிசு வாங்கிக்கறாங்க. நீங்க எனக்கு என்ன வாங்கிக் கொடுக்கப் போறீங்க?''
அதுக்கென்னம்மா, வாங்கித் தந்தாப் போச்சு, என்றார். 
எங்கள் திருமண நாளும் வந்தது. மாலை வீட்டிற்கு வந்தவரின் கையில் ஒரு பார்சல்! 

பரவாயில்லையே, முதல் தடவை சொன்னவுடன் வாங்கிவந்து விட்டாரே, என்று ஒரே சந்தோஷம்.
காப்பி, டிபன், பாயசம் எல்லாம் முடிந்தவுடன், பார்சலைப் பிரியேன்மா! உனக்குப் பிடித்ததைதான்
வாங்கி வந்திருக்கிறேன்.
மிகுந்த ஆவலுடன் பார்சலைப் பிரித்தேன். உள்ளே..........!
புத்தகங்கள் என்றால் எனக்கு உயிர்! நிஜம்தான்.  அதற்காக?
ஸ்வாமி சித்பவானந்தரின் பகவத் கீதைப் பேருரைகள் புத்தகம் என்னப் பார்த்து சிரித்தது!  ஒரு திருமண நாளுக்கு கொடுக்கக் கூடிய பரிசா இது என்று எனக்கு ஒரே ஏமாற்றம்! ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலை.

தன் கையெழுத்தோடு, வாழ்த்தோடு, அன்போடு கொடுத்த அந்தப் புத்தகம் இன்று என்னை புன்னகையோடு மனத்தை நெகிழ வைக்கிறது. எத்தனையோ பிறந்த நாட்கள், மணநாட்கள் வந்து போயின. எத்தனையோ புடவைகள்,....  எல்லாம்  கிழிந்து போயின.
 திருவருட்பாவும்,  திருப்புகழும், கீதையும் மனதை நிமிர்ந்து நிற்கச் செய்து, வாழ்க்கையை நடத்திச் செல்லும் தோணிகளாய் துணை நிற்கின்றன.
 நேற்று வழிநடந்த ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தேனா.............!