நான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள்! சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்கும். ஒன்று சாப்பிட்டால் போதும், வாயெல்லாம் ரோஜா நிறமாகும். அதைக் கண்ணாடியில் பார்ப்பதில் ஓர் ஆனந்தம்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் கம்மர் கட்டு மிட்டாய், வாயில் ஒட்டிக் கொள்ளும் ஜவ்வு மிட்டாய், கையில் கடிகாரமாய் கொஞ்சநேரம் அழகு காட்டும் கலர் மிட்டாய் எனப் பலவகை மிட்டாய்களைச் சுவைத்ததுண்டு.
பாரி& கோ வின் மிட்டாய்கள் எல்லாம் அக்காலத்தில் பிரபலமானவை. ஆரஞ்சு சுளை வடிவில் வரும் மிட்டாய், வடிவிலும், நிறத்திலும் மட்டுமே தவிர சுவை ஆரஞ்சுடையது அல்ல! அது மஞ்சள் நிறத்திலும் உண்டு. சுக்கு மிட்டாய், சீரக மிட்டாய், புளிப்பு மிட்டாய், லாலிபாப் எனப் பல வகைகளிலும் மிட்டாய்கள் வருகின்றன. சாக்லேட்டிற்கும், மிட்டாய்களுக்கும் போட்டி வைத்தால் என் ஓட்டு மிட்டாய்களுக்குதான்.
வெகு நேரம் வாயில் வைத்துச் சுவைத்து இனிப்பை அனுபவிக்க மிட்டாய்தான் சரி. எதைப்போல என்றால் திரு. சொக்கன் அவர்களின் 'மிட்டாய்க் கதைகள்' போல! அது என்ன 'மிட்டாய்க் கதைகள்'?பலவிதமான மிட்டாய்களின் தனித்துவமான சுவையைப் போல் அவர் 'கலீல் கிப்ரனின்' எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுத்து, வடிவம் கொடுத்துள்ள 50 குட்டிக் கதைகள் நகைச்சுவையோடு நம் சிந்தனையைத் தூண்டுவதாகவும், ஆழ்ந்த கருத்துடையனவாகவும் அமைந்துள்ளன. ஆம் கதைகளிலும் மிட்டாய்ச் சுவை!
முதல் பக்கமே அசத்தலாக 'பால் வெள்ளைக் காகிதம்' என்ற தலைப்பில்! பாலும் காகிதமும் வெண்மை நிறத்தன. எழுத்தினால் பெருமையுடைத்து காகிதம்! ஆராய்ந்து பார்க்குமிடத்து காகிதம் என்றால் என்ன, அதை எப்படித்தயாரிக்கிறார்கள், எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன, பால் எங்கிருந்து கிடைக்கிறது, முக்கியமான அடிப்படை நிறங்கள், நிறங்களில் வெண்மையின் பங்கு என விவாதம் செய்ய பல விஷயங்களை உள்ளடக்கியதாம். ஆயின் 'பால் வெள்ளைக் காகிதம்' கற்புடைத்து!
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று இன்றும் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறோம். கடவுளைக் கண்டவரைப் பற்றிச் சொல்கிறது ஒரு கதை. தவளைகள் பாடுகின்றன, கட்டைமேல் அமர்ந்து பயணிக்கின்றன! மரக்கிளைகள் பேசுகின்றன. விசிறிகள் கூட விவாதம் செய்கின்றன. உலகத்தின் மொழி உங்களுக்குத் தெரியுமா? குயிலும் பாம்பும் பேசுமா? பேசுகின்றன! தூக்கத்தில் நடக்கிறவர்கள் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள்.
'கலீல் கிப்ரன்' ஆழ்கடல். அதில் இறங்கி அருமையான முத்துக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் திரு. சொக்கன் என்றால் அது மிகையாகாது. ஒரு ரோஜா மலரைப் பார்க்கிறோம். ஓ அதன் அழகு, நிறம், மணம் அனைத்தும் நம்மைக் கவர்கின்றன. என்ன நேர்த்தியான படைப்பு என வியக்கிறோம்! அதுபோல தான் ஒரு எழுத்தாளனின் எழுத்துகளும். சிறந்த நடை, சிந்தனையைத் தூண்டும் கருத்துகள், மிளிரும் நகைச் சுவை. படித்து முடிக்காமல் கீழே வைப்பதில்லை என்று படிப்பவர் முடிவெடுத்தால் அது எழுத்தாளனின் வெற்றி. சிந்திக்கவும், சிரிக்கவும் தூண்டும் அருமையான மொழி பெயர்ப்புக் குறுங்கதைகள் 'மிட்டாய் கதைகள்.'
ஆசிரியர் - என். சொக்கன்
மதிநிலையம் வெளியீடு.
உங்கள் எழுத்துச் சுவை மிட்டாய் சுவையை விட இனிப்பாக உள்ளது :-)
ReplyDeleteசொக்கனின் மிட்டாய் கதைகளுக்கு நல்ல ஒரு ஆய்வுரை!
amas32