28 Oct 2012

ஹிந்திஜி-ஆமாங்க!

                வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்த எங்கள் உறவுகள் சிலர் விடுமுறைக்கு வருவார்கள். பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென்று ஹிந்தியில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்குள்ளே சுவாரஸ்யமாக பேச்சு நடக்கும். ஹிந்தி பாஷை தெரியாததால் நாங்கள் முழித்துக் கொண்டிருப்போம். பேசுபவர்களுக்குத் தெரியும் நமக்குப் புரியாத மொழியில் அவர்கள் பேசுகிறார்கள் என்று. வேண்டுமென்றே எரிச்சல் மூட்டுவதற்காகப் பேசுவார்கள்.

அவர்களுக்கு சரியான தமிழோ, ஆங்கிலமோ பேசவராது. என்றாலும் நமக்குத் தெரியாத பாஷை அவர்களுக்குத் தெரியும் அல்லவா? என் மாமியார் எப்போதும் ஹிந்தி சினிமா, ஒளியும் ஒலியும் பார்ப்பார். புரியாத மொழியின் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று எனக்குப் புரிய சிறிது காலம் ஆயிற்று! அடிக்கடி மகன் வீட்டிற்குப் போகும் போது இந்த பாஷைப் பிரச்சினையை சமாளிக்க, அடிப்படையான தேவையான வார்த்தைகளை உபயோகிக்க அவர் யாருடைய உதவியும் இல்லாமல் கற்றுக் கொண்டவிதம்  பாராட்டுக்குரியது.

வட இந்தியாவில் காசி, கயா, பத்ரிநாத் பயணத்தின் போது ரயிலில் பயணம் செய்தோம். சக பயணிகளிடம் ஆங்கிலத்தில் ஏதோ கேட்க, 'ஹிந்துஸ்தான் மே அங்ரேஸி போல்தே ஹை?' என்று சொல்லி பதில் கூற மறுத்துவிட்டார்கள்.

 எல்லாவற்றுக்கும் அச்சா,போடவேண்டும். ஒரு ஹை, ஹு வேண்டும், 'தமிழ் ஹை, ஹிந்தி தோடா, தமிழ் தோடா,' கொஞ்சம் மாலும்ஜி,  ஆனா பஜ்ஜி மட்டும் இல்லஜி, சப்ஜி இருக்குஜி, என்று வேடிக்கை செய்வோம்.
ஹிந்தி தெரிந்தால் ஹை ஹீல் காலணி போட்டுக் கொண்டது போல்!

''ஜாடு , போச்சா, கரோ,'' என்று உதவியாளரிடம் சொல்ல, பாட்டியம்மா, என்ன போச்சு  என்று கேட்க, வீடு பெருக்கித் துடைக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.

பாமா விஜயம் படத்தில் செளகார் ஜானகி ஹிந்தி பேசுவார்களே, அதைப் பார்த்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரே குஷி.

தமிழ் நாடு ஹிந்தி எதிர்ப்பு மாநிலம்! என்னுடைய கல்லூரி நாட்களில்தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கொடி பிடித்திருக்கிறோம்! எனவே இயற்கையாகவே ஹிந்தி கற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லை

என்னதான் ஆங்கிலம் படித்தாலும் பேசும் போது சந்தேகம் வந்துவிடும். வீட்டில் இருப்பவர்களே கேலி செய்வது புதிது அல்ல. ஹிந்து பேப்பரைப் படித்தால் ஆங்கில அறிவு வளரும் என்பார் அப்பா

இப்போது பாருங்கள் கணினியைப் பயன் படுத்த, செல்போனின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள  இளைய தலைமுறையைப் போல் பெரியவர்களுக்குத் தெரிவதில்லை.

அட, கொஞ்சம் உதவி என்றால், 'உனக்கு என்னதான் தெரியும்' என்று இந்தக்காலப் பசங்க கேலி பேசுவது, சும்மா ஒரு இதுக்காக. அவங்களுக்கென்ன ஏதாவது தப்பாப் போனா 'டேக் இட் ஈஸி டாட், இட் ஈஸ் எ லேர்ணிங் ப்ரோசஸ்' என்பார்கள். ஆகா, என் பையன் எப்படி எல்லாம் கத்துக்கிட்டான், ஹீ ஈஸ் எ  ஜீனியஸ்' என்பார் தந்தை.

அதுவே மனைவியென்றால்,'நீ எதுக்கு இதையெல்லாம் செய்யறே? உனக்கு ஒன்னும் தெரியாது. பையனைக் கேட்க வேண்டியதுதானே' என்பார்.

ஐயோ, இங்கிலீஷ், விங்லீஷ் படம் பார்த்ததால் வந்த வினை! ஶ்ரீதேவி மென்மையான மனம் புண்பட்ட இல்லத்தரசியாக தன் உணர்ச்சிகளை இயல்பாகக் காண்பித்து இருக்கிறார். அதே சமயம் கற்றுக் கொள்ளும் ஆர்வம், அதற்கான விடா முயற்சி, இவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

 நிஜ வாழ்வில் எத்தனையோ 'சசிகள் ' இருக்கிறார்கள்!

ஆனால் தியேட்டர்களில் அப்படி ஒன்றும் கூட்டத்தைக் காணவில்லை. See this ஒன்னும் பகுத் தொட்ட
காரியம் நஹி! ஏமிரா, சால நல்லா இருக்கீங்களா?

தலை கெட்டுப் போச்சுன்னு நினைக்கிறீங்களா?!.....................எங்கு போனாலும் சமாளித்துக் கொள்ளத் தெரியும் என் உதவியாளருக்குக் கூட. What big deal?









22 Oct 2012

கரும்பலகை!


என்ன வேலை கரி அடுப்பு ரூமுக்குள்ளே, என்று சத்தம் போடுகிறாள் அம்மா. இந்த அம்மாவுக்கு எப்படிதான்  தெரிகிறதோ,  பூனை மாதிரி அடிமேல் அடி வைத்துதான் நான் இங்கே வந்தேன். ஒன்னும் இல்லைம்மா, சும்மாதான் என்கிறேன். நெய்வேலி நிலக்கரி மூட்டையையும், மரக்கரி அடுப்பையும் நோட்டம் விட்டுவிட்டு, நான்கு பெரிய மரக்கரி உருண்டைகளை  பழைய     பேப்பரில்  பொட்டலம்      மடித்து  பாவாடைக்குள் மறைத்துக் கொண்டு  தோட்டத்திற்கு ஓடினேன்.

நல்லவேளை அம்மா பக்கத்துவீட்டுப் பாட்டியம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். ஆயிற்று, அடுத்தாற்போல் அந்தக் காய் காய்க்கும் குப்பைமேனிச் செடியைக் கண்டு பிடித்து இலையையும், காயையும் பறித்துக் கொள்ளவேண்டும். தெரு ஓரங்களிலே சர்வ சாதாரணமாகக் காணப்படும் செடிதான்!

செடியிலிருந்து இலைகளையும், காயையும் பறித்தாகிவிட்டது. அதையும் கையோடு கொண்டுவந்த பேப்பரில் சுற்றி, தோட்டத்துக் கரிப் பொட்டலத்தோடு சேர்த்து வைத்தேன். இப்போது ஏதாவது செய்தால் அடி விழும், பக்கவாத்யமாகத் திட்டும் கிடைக்கும். கொஞ்சம் பழைய கிழிசல் துணி பைக்கடியில் ஒளிந்து கொண்டது. அம்மாவுக்கு சந்தேகம், என்ன, சுத்தி சுத்தி வரே? ம், என்ன என்கிறாள்.

அம்மா, உனக்குப் பிடித்த பாட்டுப் பாடட்டுமா? நீ சொல்லிக் கொடுத்த தேவாரம்  மனப்பாடமாகிவிட்டது. அம்மா சந்தோஷமாகக் கேட்கிறாள்.
காலையில் வெகு வேகமாக ஸ்கூலுக்கு கிளம்பி ஓடிவிட்டேன். வகுப்பறை திறந்துதான் இருந்தது. இன்னும் யாரும் வரவில்லை. கொண்டுவந்த கரி, இலைகளை எடுத்துக்கொண்டு பள்ளித் தோட்டத்தில் உள்ள கருங்கல்லில் கரி, இலைகளைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கல்லால் அழுத்திப் பொடித்துக் கூழாக்கி, பேப்பரில் போட்டு எடுத்துக் கொண்டு   வெளுத்துக் கிடந்த கரும்பலகையை தண்ணீரால் துடைத்துவிட்டு கரி இலைச்சாறை கரும்பலகையில் அழுத்தித் தேய்த்து, காய்ந்தவுடன் திரும்ப ஒரு தடவை! மற்றும் சில மாணவியரும் கூடச் சேர்ந்து கொள்கிறார்கள். அற்புதமான அந்தக் கருத்த கரும்பலகையைப்பார்த்த போது என்ன திருப்தி, சந்தோஷம்.

தரையைப் பாழ்செய்து விழுந்திருந்த கரித்தூள்களை எடுத்து எறிந்து, தண்ணீரால் துடைத்து முடிவதற்குள் பெல் அடித்து விட்டது. தோட்டத்துக்கு ஓடிப் போய் கையைக் கழுவினால் கரிக் கருப்பு போனால்தானே? கை நகமெல்லாம் கருப்பு! அப்படியே பாவாடையில் துடைத்தேனா, பாவாடையெல்லாம் கருப்பு.வீட்டுக்குப் போனவுடன் இருக்கிறது மண்டகப்படி!

வகுப்புக்குள் நுழைகின்றார்  கணக்கு டீச்சர். கன்னங்கரேல் என்ற கரும்பலகையைப்  பார்த்தவுடன்   அவருக்கு ஒரே சந்தோஷம். எப்படியாவது அம்மாவை சரிக்கட்டி ஒரு 'டஸ்டர்' தைத்து விடவேண்டும் என்று தீர்மானித்துக் கொள்கிறேன்.  பாவாடை அழுக்கும், கைக்கரியும் மறந்தே போய் விட்டது!

(அப்போதெல்லாம் வகுப்பு லீடர் கிடையாது. எல்லோருக்கும் வகுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு உண்டு. சாதி, மதம் என்பது தெரியாமல் பள்ளியில் படித்த அந்த நாட்களின் நினைவுக் குவியலிலிருந்து  ஒரு துளி)

 




20 Oct 2012

கூட வந்த அனுமார்

இன்றைக்குக் காலையிலே திடீரென்று ஒரு ஆசை வந்து விட்டது! பெங்களூர், வசந்தநகர் அனுமார் கோவிலுக்குப் போகவேண்டும் என்பது தான் அது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருந்தோம். சிறிய கோவில், சுற்றிலும் மரங்களோடு அமைதியாய் இருக்கும் சூழ்நிலை, ராமநாமம் எப்போதும் ஒலிக்க, ஆரத்தி நேரம் சிலிர்க்க வைக்கும். மாலையில் வசந்தநகர் சென்று, காய்கறிகள் வாங்கிக்கொண்டு சரியாக ஏழு மணிக்கு உள்ளே சென்றுவிடுவோம்.பிரசாதம் பெற்றுக் கொண்டு வரும் வழியில், தெரு முனையில் இருக்கும் தொலை பேசியையும் உபயோகப் படுத்திய பின் வீடு திரும்பிய நாட்களை மனம் எண்ணிப் பார்க்கிறது.

காலையில் போக முடியவில்லை! மாலை 5 மணிக்கு ஆட்டோவில் ஏறினோம். என்ன போக்குவரத்து!
அப்பாடா,வெகு வேகமாய்ப் போய் சிக்னலில், நகராத நெரிசலில், டீசல், பெட்ரோல் புகை நடுவில்!
பேருந்துகள் புகமுடியாத இடைவெளிகளில் புகும் மோட்டார் வாகனங்கள், இடையே நுழையும் சிறு கார்கள், குறுக்கும் நெடுக்குமாய், சுற்றிவளைத்துப் புகுந்து போகும் இரு சக்கர வாகனங்கள்! இவற்றுக்கு இடையே 10, 12 வயது பையன்கள் இருவர் சைக்கிளில் புகுந்து புகுந்து சிரிப்பும், உல்லாசமுமாய்  என்னை பயமுறுத்தினார்கள். இளங்கன்று பயமறியாது.  நிஜமாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போனோம். ஆட்டோக்காரர் கன்னாபின்னா என்று ஓட்டி, பத்திரமாகப் போய்ச் சேர்ந்தால்  போதும் என்று செய்துவிட்டார்.

ஆறேகால் மணிக்கு கோவிலை அடைந்தோம். எப்போதும் போல் ஆஞ்சனேயர் ஆனந்தமாய் தரிசனம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசிவிட்டு, வலம் வந்து பிரசாதத்தோடு ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தோம்.
என் கணவர் சொல்வார், 'ஏம்மா, பக்கத்தில இருக்கிற முருகன் கோவிலுக்கு வேண்டிக் கொள்ளக் கூடாதா. அது என்ன திருச்செந்தூர், எப்போதும்'?
நான் சொல்வேன், வைத்யநாதன் என்றபெயரில் ஊர் உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
ஆனால் பிறந்ததில் இருந்து முகம் பார்த்துச் சிரித்து, உரிமையோடு என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தையைத் தான் ஏதாவது வேண்டுமானால் கேட்கமுடியும். பக்கத்துத் தெருவில் அதே பெயருடைய வைத்திய நாதன் என்பவரைக் கேட்க முடியுமா? 

அது போலதான் எனக்குப் பிடித்தவன், என்மனத்தைத் திறந்து பேசவைப்பவன், என்னை நெகிழச் செய்பவன் அந்தச் செந்தில்நாதன்தான்! வருடத்துக்கு ஒரு முறையாவது அவனைப் பார்க்க வேண்டாமா? என்பேன்.
அதையேதான் இப்போதும் சொல்கிறேன். பக்கத்திலேயே இருக்கும் அனுமார் கோயிலுக்கு எல்லோரும் வர, போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் நேரத்தில்  எதற்கு வசந்தநகர் போகவேண்டும்? என் உள்ளம் கவர்ந்தவர் வசந்தநகர் அனுமன்தான். நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்!

திரும்ப வரும்போதும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, ஆட்டோக்காரர் அசுர வேகத்தில் வண்டியை ஓட்ட,   பயந்து  நடுங்கிக் கொண்டு முன்னே பார்த்தால்.......

 ஆட்டோவில் அனுமன் கையில் கதையோடும், சஞ்சீவி மலையோடும், கயிற்றில் தொங்கிக் கொண்டு வந்தார்! பத்திரமாக எங்களை வீட்டில் விட்டார். உண்மைதாங்க!இது வரையிலும் நிறைய ஆட்டோக்களில் பயணித்திருக்கிறேன், எந்த ஆட்டோவிலும் பொம்மைகளைப்  பார்த்ததில்லை. மியூசிக் சிஸ்டம்தான் இருக்கும். நீங்கள் என்றாவது இந்த ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தால் மீண்டும் இந்த வலைப் பதிவைப் படியுங்கள்!

ஶ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்!


15 Oct 2012

நவராத்திரி

                         இன்று மஹாளய அமாவாசை. நவராத்திரி, தசரா என்றும், பொம்மைக்கொலுப் பண்டிகை என்றும் காலம் காலமாகக் கொண்டாடப்படும் சக்திவழிபாடு தொடங்குவதற்கு ஆயத்தம் செய்யும் நாள். வீடுகளிலே பரம்பரையாக வைக்கப்படும் கொலுப் பொம்மைகளை ஐந்து, ஏழு எனப்படிகள் அமைத்து வைத்து துர்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரை வழிபடும் காலம்.

என்னங்க, அட்டத்தில இருக்கிற கொலுப் பெட்டிய எல்லாம் கீழே எறக்கிவச்சுட்டு ஆபீசுக்குப் போவீங்களாம், சரியா?
சரி, சரி அந்தச் சின்ன மர ஏணியைக் கொண்டா என்கிறார் சிவன். அவருடைய இரண்டு குழந்தைகளும் உதவி செய்ய ஆஜர். ஒரு பெரிய இரும்புப் பெட்டி, இரண்டு அட்டைப் பெட்டிகள், ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா. அம்புட்டுதான்.

அம்மா, நாந்தான் பார்க், மலை, கிராமம் எல்லாம் செய்வேன் என்கிறான் பிள்ளை.
நாந்தான் கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வேன், இந்தவாட்டி வயல், மரம் வைத்து 'க்ரீன் ப்ளேனட்' செய்வேன், அவன் என்னோட சண்டை போடக்கூடாது, இது பெண்.

என்ன சொன்னேன் நான்? சண்டை போடாம ரெண்டுபேரும் என்ன வேணுமினா செய்யலாம்! ஓ.கே?
இன்னிக்கு படி கட்டப் போறோம், அதனால சீக்கிறமா குளிச்சுட்டு வருவீங்களாம், சரியா?........

அரிசி, பருப்பு வகைகள் என வருடசாமான்கள் உள்ள பெரிய டின்களிலிருந்து பத்து நாட்களுக்கு வேண்டியவற்றை சின்ன டப்பாக்களுக்கு மாற்றி, டின்கள் எல்லாம் வாசல் ரூமில். மரப்பலகைகள், பழைய தினசரித்தாள்கள், பழைய வேஷ்டிகள், பட்டுப் புடவை என எல்லாம் ரெடி!

சுத்தமாக ஒட்டடை அடித்து, துடைத்த இடத்தில் கிழக்கு மேற்காக டின்களை அடுக்கி,மேலே பலகைகள்! அதன் மேலே தினசரித் தாள்கள், கீழே விழாமல், மடித்து ஒட்டி, அதன் மேல் பழைய வேஷ்டிகள். பக்கவாட்டில் டின்கள் தெரியாமல் மறைத்துக் கட்டி, படிகள் மேல் பட்டுப் புடவை சரிகை பார்டர் தெரியுமாறு செய்து, ஆங்காங்கே காயிதப் பூக்களை ஒட்டியாயிற்று.

பித்தளைச் செம்பு பளபளக்க, மஞ்சள் குங்குமம் வைத்து, ஏலம், பச்சைக்கற்பூரம் உள்ளே இடப்பட்டு, தண்ணீர் நிரப்பி, மாவிலைக் கொத்தை வைத்து அதன் மேல் மஞ்சள்குங்குமம் பூசிய அழகிய தேங்காயைக், குடுமி மேலே தெரியுமாறு வைத்து, பொன்னாபரணம் சூட்டி மேல்படியில், நடுவே வைத்து அம்மனை கலசத்தில் ஆவாகனம் செய்தாயிற்று.

அம்மா முதலிலே விநாயகர் தானே?யானை சாமி!
பார்த்தாயா, யானை வலிமை உடையது. கூடி வாழும் இயல்புடையது. அது போல நமக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெற சக்தியைக் கொடு, கூடிவாழும் நல்ல மனதைக் கொடு என்று கேட்பதற்காக முதலில் விநாயகர்.  அடுத்தது வள்ளி தெய்வானையோடு முருகன்!

ராமர் சாமி அவங்க அப்பா காட்டுக்கு, போ அப்பிடின்னு சொன்னதும் எதித்துப் பேசாம சரின்னு சொல்லிட்டார் இல்லியாம்மா? சீதாம்மா பொறுமையோட எந்தக் கஷ்டம் வந்தாலும் சரின்னு கூடப் போனாங்க. அனுமார்னா பக்தி, சரியாம்மா?
தசாவதாரங்கள்! பரிணாம வளர்ச்சிக்கு சாட்சியாய், ஒவ்வொரு அவதாரத்தையும் ஒரு கற்பனைக் கதையாய், சொல்லியுள்ள திறமை வியப்புக்குரியது!
ஒவ்வொரு பொம்மையிலும் ஒரு புராணக் கதை மாதிரி, ஒவ்வொன்றையும் வாங்கிய இடம் வருடம் எனக்
கதை சொல்லும் பொம்மைகளை எல்லாம் வைத்து, செட்டியார் கடையும் வைத்தாகிவிட்டது. கொலு ரெடி! வண்ணவிளக்கு அலங்காரமும் முடிந்தது.

குழந்தைகள் இருவரும் மணலைக் கொண்டு வந்து கொட்டி, பூங்கா, மலைக் கோவில், மிருகக்காட்சி சாலை, கிராமம் என நினைத்து நினைத்து ஒவ்வொன்றாகச் செய்து குச்சிகளால் வேலி கட்டினார்கள்.

வண்ண நிறப்பொடிகளால் கோலம் வாசலையும், கொலுவையும் அலங்கரிக்க,மாவிலைத் தோரணங்களால் விழாக்காலம் பூண்ட வீடு!

அம்மா நான்தான்  எல்லோருக்கும் வெற்றிலை, பாக்கு கொடுப்பேன். அண்ணா பிரசாதம் கொடுப்பான், நீ சந்தனம், குங்குமம் கொடு.

பத்து நாட்களும் காலையில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மாலையில் சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பிற ஸ்துதிகள்! குழந்தைகளின் சங்கீதாஞ்சலி, பாயச, சுண்டல் பிரசாதங்கள். உறவினர், நண்பர்கள் என ஒருவறை ஒருவர் சந்தித்து, செய்திப் பரிமாற்றங்கள் செய்து மகிழ்ந்து, போவது தெரியாமல் பறக்கச் செய்யும் பண்டிகை.

மனம் லேசாகும், ஒரு நிம்மதி, சந்தோஷம், எனக் குடும்பம் முழுதும் ஆனந்திக்கும்! இதுதான் தசரா கொண்டாடுவதின் அடிப்படை நோக்கம். வழிபாட்டிற்காக பத்து நாட்கள்! முழு மனதோடு செய்தால் வருடம் முழுவதும் சந்தோஷம் கிடைக்கும்.

பிரபஞ்சம் முழுவதும் அவளுடைய சன்னிதி, சூரிய, சந்திரர்கள் தீபங்கள். வான விதானத்தின் கீழே அமர்ந்து, வாயு சாமரம் வீச, ஆர்ப்பரிக்கும் கடலலைகளின் நடனத்தைக் கண்டு, ஆணந்திக்கிறாள் அன்னை பராசக்தி!
அம்மா, அம்மா என்று உன்னைத் தேடி, இந்த  உடற்சிறையிலிருக்கும் உயிர்க் கிளியானது உள்ளம் நொந்து குழைகின்றது அம்மா!
மழைக்கு நடுங்கும் சிறுகுயில் போல, இந்த வாழ்க்கையின் இன்பம், துன்பம் என்ற உணர்வுகளில்   உழன்று   உன்னை அழைக்கின்றேன் அம்மா!
அறியாச் சிறுமியாம் எனக்கு உன் அருளைத்தர வருவாய்.
அம்மா, செந்தமிழ்த் தேன் பொழியும் நாவு வேண்டும்.
யார் வந்து கேட்டாலும் இல்லை எனச் சொல்லாமல் செல்வம் பொழியும் கைகள் வேண்டும்.
துன்பப் படும் மாந்தரைச் சாய்த்துக் கொள்ளும் வலிமை மிக்க தோள்கள் வேண்டும்.
பந்தங்கள் இல்லாத மனம் வேண்டும்!
உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன் அன்னையே!
என் வாழ்க்கையை உன் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன் அன்னையே, அருள் மழை பொழிவாய்!












14 Oct 2012

மரமல்லி நினைவுகள்

மல்லிகைப் பூக்களிலே பல வகைகள். குண்டு மல்லி, ஜாதி, முல்லை, பிச்சி, ராமபாணப்பூ என வடிவத்திற்கும், மணத்திற்கும் தக்கவாறு பெயர்கள் மாறும். இவை எல்லாமே கொடியில் பூப்பவை. மர மல்லிக்குப் பெயர்க் காரணமே சொல்லத் தேவையில்லை. நெடிதுயர்ந்து நிற்கின்ற மரம், அதிலே நீண்ட காம்புடன் கூடிய  மூன்று தனி இதழ்களும், சற்றே நடுவில் பிளவுபட்டுக் காணும் ஓரிதழுமாய்,கொத்துக் கொத்தாய்ப் பூத்து மணம் பரப்பும். இந்த மலருக்கு புதுச்சேரி அன்னை திருவுருமாற்றம் எனப்பெயர் சூட்டினார். இதன் தாவரப் பெயர் Millingtonia hortensis என்பதாகும். இதன் ஆங்கிலப் பெயர் Indian cork Tree, Tree Jasmine என்பதாகும். மனித மனத்தைத் தாழ்ந்த நிலையிலிருந்து உயரிய நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் இருப்பதால்தான் அன்னை இம்மலரை திருவுருமாற்றம்  என அழைத்தார்.

முதன் முதலில் என் தந்தையார் என்னைச் சேர்த்த பள்ளி சேலம் நகரிலே புகழ் பெற்ற, செயிண்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் நடுவே அணிவகுத்து நிற்கும் வீரர்களைப் போல   இருபுறமும் வானளாவி வளர்ந்து, நறுமணம் பரப்பி, மலர்க் கம்பள வரவேற்பு நல்கும் மரமல்லி மரங்கள். பள்ளியின் உள்ளே நுழைந்தால் வகுப்பறையுள், புத்தகப் பையை வீசிவிட்டு மரமல்லி மலர்களைச் சேகரித்து, நீண்ட காம்புகளைப் பின்னி, மாலையாக்கி, ஓடிச்சென்று நிற்பது அன்னை மேரியின் மலைக் கோவில் முன்னே.

அன்றைக்குப் போலவே 58 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும், சுற்றுப் புறச்சூழல்களால் பாதிக்கப்படாத, பிரார்த்தனை அலைகளால் நிரப்பப்பட்ட, நிர்மலமான நீலவானம் சாட்சியாக நிற்கும் அக்கோவிலின் முன் கருணைவடியும் திருமுகத்தில் புன்னகையோடு அன்னையை தரிசித்த போது என் மனம் அமைதியில் ஆழ்ந்தது.

அன்று இருந்த கூரைக்கொட்டகை வகுப்பறைகள் எல்லாம் செங்கற்கட்டிடங்களாகக் காட்சியளிக்க
வகுப்பறைகளின் வாசலிலே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவியரிலே என்னையே மீண்டும் கண்டேன்.

என்னுடன் படித்த செபாஸ்டியானா என்ற மாணவி இறைப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிஸ்டர், உடன் உயிர்த் தோழி வசந்தா. இன்றைக்கு உறவுகளைவிட, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, நட்பு வாழ்க்கையை உயிர்ப்பிக்கிறது. என்னுடைய சேலம் பயணம் என்னை  மீண்டும் ஓர் சிறுமியாக்கிய அற்புதத்தைச் செய்தது.

திருவுருமாற்றம் செய்யும் மரமல்லி மலர் எனக்கு மிகவும் பிரியமானது. நினைவுகளோடு இரண்டறக்கலந்தது. களிமண்ணைப் பிசைந்து, குயவன் பானைகளும், பிற மட்பாண்டங்களும்  செய்வது போல் கள்ளமற்ற குழந்தை மனங்களை தன்னம்பிக்கையுடன் கூடிய அறிவு ஜீவிகளாக்கும் பள்ளிக் கூடங்களின் பணி மகத்தானதாகும்.



இப்பணியை கடந்த அறுபது ஆண்டுகளாகச் செய்து வரும் செயிண்ட் மேரி பள்ளிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.