18 Nov 2015

மழையும் வெள்ளமும்

சென்னையில் வெள்ளம்! மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது! படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 76ல் புயலோடு கூடிய பலத்த மழையில்
அண்ணாநகர் வெள்ளக்காடானது நினைவுக்கு வருகிறது. அப்போது கலைஞர் ஆட்சிதான். இன்றைய நாட்களைப் போல் உடனுக்குடன் புகைப்படங்கள், தொலைக்காட்சிப் புலம்பல்கள் இல்லாத நாட்கள்.

நாங்கள் அண்ணாநகர் ஆரோவில் குடியிருப்பில் இருந்தோம். நல்ல மழை காரணமாக கூவம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோட அப்போதுதான்  உருவாகிக் கொண்டிருந்த புறநகர்ப் பகுதியாய் விளங்கிய அண்ணாநகர் முழுதும் வெள்ளக்காடு. மாலை நேரத்தில் திடீரென தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது! கழிவு நீரோடு கலந்து தண்ணீர்த் தொட்டிகள் எல்லாம் நிறைந்து விட்டது. நீண்ட பாம்புகள் தண்ணீரோடு தண்ணீராக மிதந்தன. என்ன செய்வது?

எங்கள் மாடியில் குடியிருந்த நண்பர் வீட்டில் வயதான மாமியாரையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு கட்டில் மேல் நாற்காலியை போட்டுக் கொண்டு உட்கார்ந்தோம்! வெள்ளம் வீட்டில் புகுந்தால் கதவுகளைச் சாத்தக் கூடாது ஆதலால் பின் பக்கக் கதவையும் திறந்து வைத்தோம். சமையலறை அலமாரியின் முதல் தட்டு வரை தண்ணீர்! அதே போல படுக்கை அறையிலும்! வெள்ளம் வீடு புகும் என்பதறியாததால் வைத்திருந்த புத்தகங்கள் எல்லாம் நனைந்து போயின. மின்சாரம் இல்லை, சமைக்க முடியாது, படுக்க முடியாது!

நல்ல வேளையாக மழை விட்டது. விடியற்காலையில் தண்ணீரும் சிறிது சிறிதாக வடிய ஆரம்பித்தது. அப்போதெல்லம் அண்ணாநகரில் ஹோட்டல்கள் கிடையாது. அப்படி வாங்கி சாப்பிடும் பழக்கமும் கிடையாது. ('sump')தண்ணீர் சேகரிக்கும் தொட்டி நிறைய சாக்கடை நீர்.
நான்கு குடித்தனக் காரர்களும் தண்ணீரை வாளிகளில் எடுத்துக் கொட்டி, பிளீச்சிங் பவுடரைப் போட்டு தேய்த்துக் கழுவி மீட்டெடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அந்தத் தண்ணீர் தொட்டியோ பத்தடி ஆழம்,நீளம் உடையது.

வீட்டுக்குள் சேர்ந்த தண்ணீரை வெளியேற்றி, துடைத்து எடுப்பதற்குள் முதுகு உடைந்தது. நடுவக்கரை பாலத்தில் ஐந்தடிக்கு மேல் வெள்ளம்! பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பேருந்தைப் பிடிக்க, பள்ளியை அடைய அண்ணாநகர் வளைவைத் தாண்டி நடந்து போக வேண்டும். 

இளமையின் வலிமையில் கடந்த   அந்த நாட்களின் நினைவுகள்!

அதற்குப் பின் இப்போதுதான் இப்படியொரு மழை என்று நினைக்கிறேன். இன்றைய அண்ணாநகரில் எங்கள் பழைய வீட்டில் தண்ணீர் புகுந்ததா தெரியவில்லை!


1 Aug 2015

நல்விருந்து


ஜே. பி. நகரின் பிரபல பள்ளி ஒன்று என் மகளை கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகக் கூப்பிட்டிருந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு அப்பள்ளியுடன் தொடர்பு
உண்டு ஆதலின் நானும் உடன் சென்றிருந்தேன்.

பள்ளி வளாகத்தில் நுழைந்ததுமே உயிர்த்தெழுந்தன நினைவுகள்.  மாணவர்களுடன் சென்று அமர்ந்ததுமே புத்துணர்வு பொங்கியது. அறிமுகமான ஆசிரியைகள் முகம் மலர அன்புடன் வரவேற்றார்கள்.

நடனம், ஓரங்க நாடகம், மாறு வேடம், ஓவியம், கைவேலைகள் என பலவிதமான போட்டிகளில் சுமார் 18 பள்ளிகள் பங்கு கொண்டன. குழந்தைகளுக்குத்தான் எத்தனை வித விதமான புது உத்திகள், யோசனைகள், புதிய பார்வைகள்.

நாட்டியப் போட்டியில் பத்து, பள்ளி மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலும் தாசர் பாடல்களுக்கு, குழலூதும் கண்ணனைக் கற்பனையில் காணச்செய்பவை!இருவர் மட்டும் சற்றே மாறுபட்ட நடனம் ஆடினர். ஆறாவது படிக்கும் குட்டிப் பெண் சிறிய பானை மேலேறி, தலையில் சிறு செம்புடன்! செம்பும் விழாமல், பானையிலிருந்து வழுக்காமல் சமநிலை காத்து, தாளம் தப்பாமல் ஆடிய அழகு, மன ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு!

அடுத்து நாட்டுப்புற நடனத்தைச் சார்ந்தது.  ஒரு ஆணும் பெண்ணும் மாற்றி மாற்றிப் பாடும் பாடல்.
தலையின் பின்பக்கம் ஆணின் முகமூடியை அணிந்து கொண்டு, அதற்கேற்றவாறு , ஆண், பெண் ஆடை அலங்காரங்களுடன் அந்தப் பெண் ஆடியது அற்புதமாயிருந்தது.

மாணவியருக்குச் சற்றும் குறைந்தவர்கள் நாங்கள் இல்லை எனக் கூறியது மாணவர்கள் ஆடிய கூட்டு நடனம். என்ன கற்பனை வளம், ஈடுபாடு! (திரைப்படங்கள் வழிகாட்டுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.)

பெரிய தியானக் கூடம், சுற்றிலும் அலங்கரிக்கும் புகைப்படங்கள். புத்தக அலமாரிகள். அமைதியின் மடியில், மொழிகளுக்கு இடமற்ற தாய்மடியில், இன்றைய தினம் இனிய தினமாயிற்று.2 May 2015

நினைவலைகள்

இந்தப் பதிவு 'நமது திண்ணை' மே இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


வலைப் பதிவில் அறிமுகமான சிறந்த எழுத்தாள நண்பர் தமிழ் மாதப் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி வருகிறார்.  படிப்பதற்காக வாங்கிய அப்புத்தகத்தில், ஒரு பெண்மணி தன் உறவினரான கேன்சர் நோயாளி மைசூரைச் சேர்ந்த ஸ்வாமிஜியிடம் ஆயுர்வேத மருந்து வாங்கி சாப்பிட்டு குணமாகிவிட்டதாகப் பரிந்துரை செய்து எழுதியிருந்தார். அதனைப் படித்த காரணத்தால் இப்பதிவை இடுகிறேன்.

நோயாளிக்கு நிஜமாக புற்று நோய்தான் என்று நம்ப முடியவில்லை. மேலும் "கேட்டுக் கொள்வாராம், சொல்வாராம், தங்கவேண்டி வருமாம்," என்று எழுதியிருந்ததைப் படித்துவிட்டு இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்ற கேள்வி எழுந்தது! இந்த மாதிரி ஒரு மாத மருந்தில் குணமாகிற வியாதியாக கேன்சர் இருந்தால்  பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஸ்வாமிஜியின் ஆஸ்ரம வாயிலில் அல்லவா நிற்கவேண்டும்!

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ உலகத்திற்கு சவாலாக இருக்கிறது புற்று நோய்! நோயின் தன்மை என்ன, எதனால் வருகிறது, நோயின் அறிகுறிகள் ஆகிய பலவற்றையும் கண்டுபிடிக்கவே ஆண்டுகள் பல சென்றுவிட்டன. ஆனாலும் மனிதனுக்கு சவாலாக, நோய்கள் அனைத்திற்கும் அரசனாக மருத்துவர்களை, நோயாளிகளை ஆட்டிவைக்கும் புற்று நோய்க்கு குலம், கோத்திரம், சாதி, மதம், இனம், சிறியவர், பெரியவர், அரசன், ஆண்டி என்ற எந்த வித்யாசமும் கிடையாது.

யார் பேரரசன்? பல நாடுகளுடனும் போர் செய்து லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வெற்றிவாகை சூடியவன் தானே? உடலிலும் அந்தப் போர் நடக்கிறது! உடலிலுள்ள நல்ல அணுக்கள் அனைத்தையும் அழித்து கடைசியில் வெற்றி பெறுவது புற்றுநோய்தான். தனிமனிதனுடைய தலையெழுத்துதான் அவனை வல்லமை மிக்க இந்த அரசனிடமிருந்து காப்பாற்றுகிறது!

சர்வ வியாபியாக அனைவரையும் அச்சுறுத்திவரும் கேன்சர்-புற்று நோய் -நண்டுக் கொடியுடையது. அதிக சக்தி வாய்ந்த பாதிக்கப்பட்ட செல் அணுக்களுக்கும், பாதிக்கப்படாத நல்ல செல்களுக்கும் இடையே, நம் உடலுக்குள்ளேயே நடை பெறும்  மாபெரும் போர் நிகழ்வே புற்றுநோய்.
(புற்று நோய் என்றால் என்ன போன்ற செய்திகள் வலையில்  நிறையவே இருக்கிறது.)

இந்த நோய் வராத வரையிலும் எல்லோரும் பாதுகாக்கப்பட்டவர்கள். ஆனால் வந்துவிட்டால் இதற்கு அலோபதி எனப்படும் ஆங்கில வைத்திய முறைதான் கதி!  வேறு வழியில்லை! போலிகளை நம்ப வேண்டாம். திக்குத் தெரியாத காட்டில், அமாவாசையன்று இரவில் கதியற்றுத் திகைத்து நிற்கும் ஒருவனுடைய நிலைதான் கேன்சர் நோய் தாக்கப்பட்டவருடைய, அவருக்கு நெருங்கியவர்களுடைய நிலை!

எங்கோ ஒளிக்கீற்றாய்த் தோன்றி, கவலைப் படாதீர்கள் எல்லா முயற்சிகளும் செய்து குணப்படுத்த முயலலாமென்று தாங்கி நிற்பவர்கள்தான் மருத்துவர்கள். அவர்களுக்குத் தெரியும் நோயாளியின் நிலை மதில் மேல் பூனை என்று! ஒரு பக்கம் மரணம், மறுபக்கம் மறுபிறவி?!!!!! ஃபூ! இவ்விரண்டுக்கும் நடுவேதான் மனித வாழ்வு, ஒற்றையடிப் பாதையில் ''நான், நான்'' என்ற ஊன்றுகோலைப் பற்றிக் கொண்டு ....முடிவின் நிலையறியா ஒரு பயணம்.....?

சமீபத்தில்  மருத்துவர்கள் அதிகமாக டெஸ்டுகள் செய்யச் சொல்கிறார்கள்! அவர்கள் வணிக நோக்கோடு செயல் படுகிறார்கள் என்றெல்லாம் நிறைய குற்றச் சாட்டுகளை அள்ளி வீசுவதைக் காண்கிறோம்! சொல்ல வேண்டியது மருத்துவர்கள் கடமை. மாட்டேன் என்றால் பின்னால் வருவதை அனுபவித்தே ஆக வேண்டும் அல்லவா?

ஒரு அநுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இப்படிதான் இந்தப் பிடிவாதக்கார மனிதர் போய்ச் சேர்ந்தார்!  வெற்றிலை பாக்கு போடுவது ஒன்றும் தப்பு இல்லை. ஆனால் ஒரு நாளுக்கு நாலு தடவை போட்டால்? சில சமயங்களில் சுண்ணாம்பு அதிகம் ஆகிவிடும்! வாயில் புண் வரும். சரியாகும்.
ஒரு தடவை  சின்னதாக ஒரு புண் உள் நாக்கில் வந்தது. சரிதான் பயிற்றம்பருப்பு பாயசம் சாப்பிட்டால் சரியாகும் என்று சில நாட்கள், கசகசா தேங்காய்ப் பால் கீர், மணத்தக்காளிக் கீரைக் கூட்டு என்று காலம் போனது.

பிறகு போனால் போகட்டும் என்று அலோபதி டாக்டரிடம் போய்க் காட்ட, வலி நிவாரணி, வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தார். மூன்று வாரங்களில் -- சரியாகவில்லையே, எதற்கும் போய் ஒரு டெஸ்ட் செய்துவிடுங்கள் என்றார். கேட்போமா?

ஆமாம் இவங்களுக்கு வேறே வேலையில்லை, நான் போக மாட்டேன் என்று சொல்லி ஆயுர்வேத மருத்துவரிடம் போய்க் காண்பித்தாயிற்று! அவர் ஒரு பத்து நாள் மருந்து கொடுத்தார். கொஞ்சம் சரியானது மாதிரி இருந்து அங்கேயே ஆணியடித்து உட்கார்ந்தது புண்! நூற்றுநாலு டிகிரி ஜுரம்! வேறு அலோபதி மருந்துகள் வேண்டாம். இந்த ஆயுர்வேத மருந்தை மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்றார் மருத்துவர். வலி அதிகமாகி, ஜுரம் நிற்காமல், இருமலுடன் சாப்பிடமுடியாமல் போனதுதான் பலன்!

அடுத்ததாக ஹோமியோபதியை விடலாமா என்று அவரிடமும் போய்க் காண்பித்து மருந்து வாங்கியாயிற்று. வயதாயிட்டுது சார், புண்ணெல்லாம் ஆற நாள் எடுக்கும். கவலைப் படாதீர்கள் என்ற ஆறுதல் மொழி வேத வாக்கியமாயிற்று.

வங்கி மருத்துவரும் வயதான புராணம் சொல்லி கொஞ்சம் மாத்திரைகள் கொடுக்க ஜாம்ஜாம் என்று கேன்சர் செல்கள் பல்கிப் பெருகுவது தெரியாமல் வளரவிட்ட நிலையில் இரவு நேரங்களில் ஜுரம், இடைவிடாத இருமல் ஆரம்பமாயிற்று.

வாழ்க்கையில் சில சமயங்களில் எந்தப்பக்கமும் போக முடியாமல் எல்லாவழிகளும் அடை பட்டுவிடும்! எப்படியோ, எங்கிருந்தோ நீளும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு போக வேண்டிய கட்டாயம்! கடைசியில்......

வேறு வழியில்லை என்றவுடன் மீண்டும் அலோபதி மருத்துவரிடம் போனோம்! புற்று நோய் என்பது நிச்சயமாகத் தெரிந்துவிட்டது! இது விதியா, கர்மாவா?

அடுத்தவர்கள் வாழ்வைப் பற்றி வாய் கூசாமல் நம்முடைய எண்ணங்களைச் சொல்லி விடுகிறோம்! நல்லவன், கெட்டவன், அதனால், இதனால் என்று ஒரு மனிதனைக் கூறு போட்டு அறுத்து, மிதித்து அவமானம் செய்யும் வல்லமையை மனிதன் தன் அகங்காரத்தால் செய்கிறான்!

 மின்னல் வேகத்தில் முடிந்துவிட்ட வாழ்க்கை!  நம்பிக்கையின் தோள்களிலே தலை சாய்த்து, நோயுற்றோர் உட்புகும் ஹெச்.சி.ஜியின் நுழை வாயில், அங்கே மீன் தொட்டியில் விளையாடும் வண்ணமீன்களின் மெளன கீதம். அந்த வரவேற்பறையில் காத்துக் கிடக்கும் புன்னகை முகமூடியணிந்த எத்தனையோ நோயாளிகளின் உறவும் சுற்றமும்.

ஆரம்பத்திலேயே அலோபதி மருத்துவரிடம் போய் பரிசோதனை செய்து கொண்டிருந்தால் நோய் குணமாகியிருக்கலாம்! ஒரு பக்கம் பயம், மறுபக்கம் பிடிவாதம்! ஆனால் ஒரு முறை இழந்த அதே மனித வாழ்வு மீண்டும் கிடைக்குமா? எனவே மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ளத் தயங்காதீர்கள்! உடல்தான் தெய்வம். நோயற்ற வாழ்வுதான் செல்வம்.

 ------------------------------------------------------------------------------------------------------------------------
பிறந்ததுமே மனித வாழ்க்கை மரணத்தை நோக்கிப் பயணிக்கிறது! எங்கு, எப்படி, எப்போது என்பதைதான் யாரும் அறிய மாட்டார்கள்!
--------------------------------------------------------------------------------------------------------------------------
              1. உங்களுக்கு இடைவிடாத இருமல்
              2. இருமித் துப்பினால் இரத்தம்,
              3. மூன்று வாரங்களுக்குள் குணமாகாத உடல் புண்கள்,
              4. எடை குறைதல், பலவீனம், சோர்வு,
              5. உடலின் எந்தப் பகுதியிலிருந்தாவது திடீர் இரத்தக் கசிவு,
              6. மூச்சு விடுவதில் சிரமம்,
             -----------------------------------------------------------------------------------------
             இவையெல்லாம் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
             ------------------------------------------------------------------------------------------
             அதிகமாக வெற்றிலை, பாக்கு போடாதீர்கள்.
             புகையிலை  உபயோகிக்காதீர்கள்.
             மது வேண்டாம்!
             சிகரெட் பயன்படுத்தாதீர்கள்.

அலோபதியால் முழுமையாக எல்லோரும் குணமாவார்கள் என்ற உறுதி மொழி கொடுக்கமுடியாது. புற்று நோய்க்கான சிகிச்சையின் கீமோதெரபியும், ரேடியேஷனும் மிகுந்த வலியைக் கொடுக்கக் கூடியவைதான். வலியைத்தரும் வலிமையான மருந்துதான் வலியிலிருந்து விடுதலைதரும் என்னும் போது வேறு வழியில்லை! வருமுன் காப்பீர்!


21 Apr 2015

அட்சயதிரிதியை

இன்றைக்கு அட்சய த்ரிதியை, என்ன நகைக்கடைக்குப் போகலியா, என்றாள் தோழி.
அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று அர்த்தம்.வங்கியிலிருந்து எடுக்க எடுக்க எப்படி பேங்க் பேலன்ஸ் குறையாம இருக்கும்? என்றேன். 

அதுதான் நகையா வளரும் என்கிறாள்! நகை தானாக வளருமா என்றேன். 

நகைக்கின்றாள்!

தங்கக் கனிமத்தை வெட்டி எடுத்து, உருக்கி, பிரித்து அதை ஒரு வடிவில் கொண்டு வந்து சூட்சுமமாக நகாசு வேலை செய்வதால்  அது நகை.அந்த நகைக்கு சொந்தக்காரியாக ஆகும் போது மென்மையாகப் புன்னகை வருவது இயல்புதானே!

ஆமாம். ஆனால் இந்த நகை படுத்தும் பாடு, பெரும்பாடு!
 'நகையோ', நகையோ இரண்டும் பயங்கரமானவை என்றேன்.

ஆம், பெண்கள் இடம், காலம், நேரம் பார்த்துதான் நகைக்கவேண்டும். இல்லாவிடில்,'என்ன கர்வம், சிரிக்கிறாயா 'என்று அழவைத்து விடுவார்கள். 
திரெளபதி நகைத்தாள், பாரத யுத்தம் வந்தது!

தங்க நகையை வீட்டில் வைத்தால் திருடிவிடுவார்கள் என்று தினந்தோறும் பயப்பட வேண்டுமே! வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்துக்கு பணம் கட்ட வேண்டும். அதிர்ஷ்டம் செய்தவை நகைகளால் அணிபெறும் இரும்புப் பெட்டிகள்!

நகை வாங்குகிறோமோ இல்லையோ பிறர் நகைப்புக்கு ஆளாகக்கூடாதம்மா என்றேன். ஆமாம் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று ஒரு பாடல் கூட இருக்கிறதே என்றாள்.

அடடா, அப்பா நகை வாங்கிக் கொடுக்கும் போது, சந்தோஷம்!
கணவன் வாங்கிக் கொடுக்கும் போது பெருமை!
தன்னுடைய உழைப்பால் பெற்ற பணத்தால் வாங்கும் போது பெருமிதம்!

பட்டுப் புடவையோடு நகைகளை பொருத்தமாக அணிந்து கொண்டு,மலர் சூடி,புன்னகையோடு நிற்கும் மகளிரைப் பார்த்து மகிழாதவர் உண்டோ? 

25 Mar 2015

கூப்பிடுங்கள் "ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......


சென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம்! ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவதற்குள் பொட்டி பொட்டியாய் கட்டடங்கள் காட்சியளிக்கும்.  அந்த முக்கால் மணிதான் ஜாலி....! 

விமானநிலையத்தில் இறங்கியதும் கதிரவனின் தழுவலில் நனைந்து, வேர்வையில் குளிக்க ஆரம்பித்துவிடுவோம். சொந்தக்காரர்கள் காரில் போனால் பரவாயில்லை. இல்லையென்றால்.............லொங்கு லொங்கென்று பேருந்து நிற்குமிடம் நடந்து, நொந்து நூலாகி பஸ் பிடித்து வீடு போய் சேர்வதற்குள் இனிமேல் கடவுள் சாட்சியாக எந்த ஊருக்கும் போவதில்லை என்று பிரசவ வைராக்யம் வந்துவிடும்! ( வந்திருக்கிறது)

இந்த முறை சென்னையில் ஒரு திருமணம்! கிழக்குக் கடற்கரைச் சாலையில்...!பல ஆண்டுகளுக்குப் பின் உறவினர்களை சந்திக்க வேண்டும், தம்பி, தங்கையோடு சில நாட்கள் பேசி மகிழவேண்டும் என்ற ஆவல் காரணமாக ''லேண்டட்"

சென்னையில் மட்டுமல்ல பெங்களூரில் கூட 'கால் டாக்சி' கலாசாரம் அதிகமாகிவிட்டது. எல்லோருக்கும் எல்லா டாக்சிகளையும் அழைப்புவிடுக்கும் நம்பர்கள் தெரிந்திருக்கிறது! போனால் வந்தால் கூப்பிடு டாக்சியைதான்.
நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா? ஓ.எம்.ஆர் சாலையில் பயணிக்க வேண்டுமென்றால் என்னத்தை செய்வது? டாக்சி டாக்சி......

பூந்தமல்லி சாலையிலிருந்து, சிறுசேரி செல்ல வேண்டியிருந்தது. வேகத் தேடுதலில் (ஃபாஸ்ட் டிராக்) இண்டிகா காரை அனுப்பச்சொன்னால்  பிரம்மாண்டமான பெரிய வேன் வந்து நிற்கிறது! பயணிப்பது நான் மட்டும். கேன்சல் செய்ய முடியாது. எனவே சரிதான் என்று ஏறிவிட்டேன். எப்படிப் போக வேண்டும் என்று தெரியாதாம்! நீங்க சொல்ற வழியில போறேன், கரக்டா சொல்லுங்க, நான் ஊட்டிக்குப் போனப்போ வாடிக்கையாளர் செல் வழிகாட்டியால் சரியான இடத்துக்கு வழிசொல்லிட்டாரு, என்று நமக்கு வழி தெரியுமா என்ற கொஞ்சம் நோண்டல்!  (மகன் வழி சொல்லிவிட்டார்)

டிரைவர் சரியான "ஜொள்ளுப் பார்ட்டி.'' மவுண்ட் ரோடு போவதற்குள் பத்து தடவை திரும்பித் திரும்பி பின்னால் பார்க்கிறார். கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச முயல்கிறார். லட்சக் கணக்கில் வண்டி வாங்கி லாபம் இல்லையாம்! இன்னும் என்னவோ........ 

ஜி. பி. எஸ் சிஸ்டம் என்ற 'சாலை வழிகாட்டி'யை என் அலை பேசியில் உயிர்ப்பித்தேன்! அடக் கடவுளே! சார்ஜ் ரொம்ப கம்மியாகி இருந்தது. என் மகளுக்கு ஒரு குறுஞ் செய்தி..... அவளோடு கன்னடத்தில் பேச ஆரம்பித்தேன். ஓ, ஒரு வழியாக சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டி, என்னை சிறு சேரியில் இறக்கிவிட்டார் கேரளத்து மேனன்.

அதற்குப் பின் எட்டு நாளில் ஓ ஒலா, அழுக்குக் கார், தூங்குமூஞ்சி டிரைவர், அது என்ன, சுங்கச் சாவடி காசை நீங்கதான் கொடுக்க வேண்டும், போக வர 44 ரூபாய் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் சொல்லுங்க என்று வம்புக்கார டிரைவர்கள்!

ஒருகாலத்தில் நடக்க முடிகிறதூரம், அதாவது ஒரு கிலோ மீட்டர் என்றால் நடந்தே போய் விடுவோம். அத்ற்கும் மேலே எனில் பேருந்துக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து பயணிப்போம். ஆட்டோ ஊருக்குப் போகும் போது மட்டுமே! எங்க சேலத்தில் குதிரை வண்டி ரொம்ப பிரசித்தம்! வண்டிக்குள்ளே பரப்பியிருக்கும் புல்லின் வாசனை நாசியை நிரப்பும். ஆளைப் பார்த்து வண்டிக்குள்ளே உட்கார வைக்கும் வண்டிக்காரன் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார விடமாட்டான். அவனைப் பார்த்தால் தெனாலிராமனும் குதிரையும் கதை ஞாபகம் வரும்.

இருந்த எட்டு நாளில் ஏழு நாட்கள் 'ஓலாவிலும், ஃபாஸ்ட் டிராக்கிலும்' சென்னையின் சாலைகளில்.  டாக்சிக்காக 5000 ரூபாய்  செலவாயிற்று!.......பரவாயில்லை...! 

எப்படியிருந்தாலும் பிறந்த வீட்டின் பாசமும், நேசமும் மறக்கப் போமோ! சென்னையின் கடற்கரைக் காற்றும், வெயிலும்,  மறக்கமுடியுமா என்ன? 

சென்னை சென்னைதான்! 


8 Mar 2015

ஒளிப் பெண்

மத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந்தைப் பேறு வேண்டி தியானம் செய்தான். அவன் வேண்டுகோளுக்கு இரங்கி இறையருளால் பிறந்த தெய்வக் குழந்தையே சாவித்ரி. 

அவள் பிறந்த அந்த நாளில், எங்கும் மென்மையான இசை ஒலித்தது. வெண்மையான  மல்லிகையின் நறுமணம் வீசிற்று. மாமரங்களின் மலர்மணம் நாசியை நிரப்பிற்று. தேனுண்ணும் வண்டுகள் ரீங்கரித்து ரகசியமாய் மலர்களுக்கு சேதி சொல்லியது. சூரிய ஒளி இறைவனின் புன்னகையைச் சுமந்து வந்தது. இயற்கை ஆராதனை செய்ய அழகுக் கோலம் பூண்டது .

இறைவனையும் மனித மனதையும் இணைக்கும் பாலமாய் தெய்வத்தன்மை வாய்ந்த அழகுக் குழந்தையாய்த் தோன்றினாள் சாவித்ரி. அவள் பிரபஞ்ச ஒளிச் சக்தியின் மகள். பேரழகும், அறிவும், கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் நிறைந்து சகலகலாவல்லியாய், அரண்மனையின் ஒளிவிளக்காய், மரியாதைக்குரியவளாய் தன் தெய்வத்தன்மை வெளியே புலப்படாவண்ணம் வளர்ந்த சாவித்திரிக்கு உரிய பருவம் வந்தும் ஏற்ற கணவன் கிடைக்கவில்லை. அதனால் தந்தையான அசுவபதி அவளை பயணம் மேற்கொண்டு அவளுக்கு ஏற்ற மணாளனைத் தேடிக்கண்டு வருமாறு கூறுகிறார்.

ரதத்தில் ஏறிய இளவரசி நெடிய பரந்த சாலைகளையும்,, நகரங்களையம், சிறு கிராமங்களையும், சமவெளிகளையும், நதிகளையும், காடுகளையும் கடந்து செல்கிறாள். வானத்து விண்மீன்கள் அவளுடைய நண்பர்களாகின்றனர். இரண்டு ஆண்டு பயணத்தின் பின் அழகியதோர் காட்டின் விளிம்பில் பகைவர்களால் காட்டிற்குத் துரத்தப்பட்ட சால்வ தேச அரசன் த்யுமத்சேனனின் மகன்  சத்யவானைக் காண்கிறாள். அவனே தன் 'ஆன்மாவின்சினேகிதன்' துணை என்பதை அறிகிறாள். மயில்கள் ஆட, குயில்கள் கீதமிசைக்க, காட்டுமரங்கள் தலையசைத்து ஆசிவழங்க தென்றல் மந்திரம் மொழிய காட்டுப் பூக்களால் ஆன மாலையை சத்யவானுக்கு அணிவிக்க அவர்களுடைய திருமணம் வானமும் பூமியும் சாட்சியாக நடக்கிறது. மனங்கள் ஒன்று படுவதே மணம் அல்லவா?

தந்தையின் அரண்மனைக்குத் திரும்பிய சாவித்ரியின் முடிவைக்கேட்டு அசுவபதி மகிழ்கிறார். ஆனால் அங்கே அந்த சமயம் வந்த நாரதர் சத்யவான் ஒரே ஆண்டில் மரணமடைவான் என்பது விதி என்கிறார். தன்முடிவை மாற்றிக் கொள்ள விரும்பாத சாவித்ரி தன் தாய் தந்தையர் ஆசிகளுடன் சத்யவான் வசிக்கும் கானகத்தை அடைகிறாள். 

அரசகுமாரி, கானகத்தில், குடிசையில் தன் திருமணவாழ்வைத் தொடங்குகிறாள். சத்யவானின் தாயும் தந்தையும் அவனுடன் வசிக்கின்றனர். அவர்களுடைய தேவைகளை அறிந்து பணிவிடை செய்யும் சாவித்ரி என்ற மங்கையர் திலகம் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்கிறாள். கணவனுடைய காதலில் மெய்மறந்து வாழும் அவளுக்கு சத்யவான் அந்த ஆண்டு முடிவில் இறந்துபோவான் என்ற உண்மை தெரிந்தும் அதை வெளியே காண்பித்துக் கொள்ள முடியாமல், அதே நேரத்தில் தனக்குள்ளே அந்த ரகசியத்தைப் பாது காக்கவேண்டிய கட்டாயத்தில் கடமைகளைச் செய்கிறாள். 

வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில் ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது.  தன் கணவனின் மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டு,தன் துயரத்தை வெளிக்காட்டாது வாழ்வது என்பது எத்தனை கடினமான செயல்! மானுடம் மரணத்திற்கு அடிமைப்பட்டக் கிடக்கிறது. மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வழியைக் காண்பதற்கே நீ பிறந்தாய்! எல்லோரையும் போல துயரத்தை ஏற்றுக் கொள்வதற்காகப் பிறக்கவில்லை. மானுடத்தின் விதியாகிய மரணத்தை எதிர்த்து நிற்கும் வழியை உனது ஆத்மசக்தியால் காண்பாயாக என்ற குரல் அவள் உள்ளத்தில் ஒலிக்கிறது.

பகல் வேளைகளில் பணிவிடையும்,இரவு நேரத்தில் கணவன் உறங்கியபின் சத்யவானை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கான யோகத்தை ஆரம்பிக்கிறாள். அதுதான் ஆன்மாவின் யோகம்! அது என்ன யோகம்? நம்முடைய தினசரி வாழ்வில் நாம் உண்கிறோம், உறங்குகிறோம்.வேலை செய்கிறோம்! ஆனால் உண்மையில் நம்முடைய உடலாகிய அதிசயத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. நோய் வந்தால் ஒழிய நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயற்சிப்பதில்லை!

நம் உடலின் முக்கிய செயலான மூச்சை உள் வாங்கி வெளிவிடும் பிராணமய உறுப்புகளை, உண்பவற்றை சீரணித்து சமநிலைப் படுத்தும் அன்னமய தேகத்தை, சிந்தித்துச் செயல்பட உதவும் மூளையின் அறிவு சார்ந்த செயல்களை நடத்தும் மனமய உறுப்புகளை, நரம்பு மண்டலத்தை இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் சக்தியை, அதற்கு பக்கபலமாக இருக்கும் ஆன்மாவை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.சாவித்ரி ஒருமைப்பட்ட மனதுடன் தன்னுள்ளே ஆழ்ந்து நோக்குகிறாள். முதன் முதலில் மிகமிகப் பெரிய வெறுமையிலிருந்து தோன்றிய ஏதோ ஒன்று மெல்லமெல்ல ‘நான்’ எனும் முனைப்பை ஏற்படுத்துகிறது. “நான்” என்ற முனைப்பைச்சுற்றி எண்ணங்கள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் உருவாகின்றது. இதற்குப் பின்னால் ஆன்மா உள்ளது! ஐம்புலன்களின் வசப்படும் மனது காலமெனும் அலைகடலால் அமைதி இழக்கிறது. அதனால் தன் ஆழ்மனதின் தனிமையில் இறைவனின் ஒரு பகுதியாகிய விளங்கும் ஆன்மாவைக் கண்டறிய மனிதனால் முடிவதில்லை. ஆயின் ஆன்மாவைக் கண்டவனால் மரணத்தை வெல்லமுடியும் என்பதை சாவித்ரி உணர்கிறாள்.  அளப்பறிய அமைதியும், ஆனந்தமும், வலிமையும் பெறுகிறாள்.அவள் முகத்தில்  அமைதி பிரதிபலிக்கிறது.

மறுநாள் சத்யவான் இறக்கவேண்டிய தினம். என்றுமில்லாத அதிசயமாக சத்யவானுடன் அனுமதி பெற்றுச் செல்கிறாள் அவள். காட்டின் அதிசயங்களையெல்லாம் அவளுக்குக் காண்பித்துக் கொண்டே செல்கிறான் சத்யவான். மரம் வெட்டுகையில் கீழே சாய்கிறான்.உலகத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்தவன் மரணதேவன்தான். பிறவி எடுத்தவர்கள் அனைவருமே அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவனுடைய பாசக் கயிற்றிலிருந்து யாருமே தப்பமுடியாது.

மரணதேவன் அவனுடைய ஆன்மாவைக் கவர்கிறான். பெரியதோர் மரத்தின் கீழ் கணவனுடைய உடலை மடிமீது தாங்கிய சாவித்ரி, உயிரற்ற சத்யவான்! சத்யவானின் ஒளிஉடலாகிய ஆன்மாவை கவர்ந்து செல்லும் எமனின் பின் தன்னுடைய *“உட்சோதியில் கலந்து உலகத்தை மறந்து, ஒருமையுற்று” பயணிக்கிறாள் சாவித்ரி. 

மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தை பகவத்கீதை காட்டுகிறது. ஆனால் உலக மாதாவாகிய அதிதி என்னும் ஆதிபராசக்தியின் தரிசனத்தை ஶ்ரீ அரவிந்தர் தன் “சாவித்ரி” மகாகாவியத்தில் அற்புதமாகக் காண்பிக்கிறார். 

 சாவித்ரியின் இதயக் கோயிலில் குடிகொண்டிருக்கும் அன்னை அவளுடைய யோகத்தால் எமனுக்கு தரிசனம் தருகிறாள். எப்படி?மரண தேவன் திகைத்து நிற்குமாறு, ஒளிமயமாக காட்சியளித்துத் தன் முகத்திரையை நீக்குகிறாள். நட்சத்திரங்களாக ஜொலிக்கும் கண்கள், பிரபஞ்சத்தையே ஆடையாய் அணிந்த மகாசக்தி. அறிய விரும்பும் யோகியரின் மூலாதாரத்திலிருந்து, சகஸ்ரகமலத்தை அடைந்து, மூளையின் அணுக்களைத் தங்க மயமாக்கி ஆனந்த அமுதத்தைப் பொழியும் அன்னை!

*“வாலை உமாதேவி, மாகாளி, வீறுடையாள்
மூலமாசக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மகாமாயை தானாவாள்
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்.
கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மகா ராணி.
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆதி பராசக்தி -"

 மரணமற்றவன், பிறத்தலும் இறத்தலும் இல்லாத அதிதி தேவியின் தரிசனத்தை சாவித் ரியிடம் பெறுகிறான். மனிதனால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழமுடியும் என்பதற்கு முதற்படியாக சத்யவானின் ஆன்மாவைக் கொடுக்கும்படி ஆணையிட சாவித்ரி சத்யவானுடைய உயிருடன் பூமிக்கு வருகிறாள்.

சாவித்ரி தன் கணவனின் உயிரை மீட்டு வந்த நாளாகக் கருதப்படும் மாசி- பங்குனி மாதங்கள் சேரும் நல்ல நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்டிர் காரடையான் நோன்பு மேற்கொள்கிறார்கள்.

யமனோடு சாமர்த்யமாகப் பேசிய பெண் என்ற வகையில் சாவித் ரி பேசப்படுகிறாள். அதே போல நோன்பு நாளில் விரதம் இருந்து, அரிசிமாவினால் செய்த அடையை நிவேதனம் செய்து நோன்புக் கயிறு அணிந்து கொள்வதுதான் சாவித்ரி விரதம் என நம்பப்படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பெண்கள் இயற்கையிலேயே  தன்னுடைய குடும்பத்திற்காக திருமணமானபின் பிறந்த வீட்டையும் வாழ்ந்த வாழ்வையும் துறந்தவர்கள். பின் பெற்ற குழந்தைகளுக்காகவும் கணவனுக்காகவும் வாழ்பவர்கள்! அதுவே தவம்.  

ஆன்மாவை அறிய, ஒருமையோடு தூய்மையான வழிபாடு செய்யும் சக்தியுடையவர்கள் பெண்கள். ஆண் பெண் இருவரிடமும் சக்தியாய் அன்னை விளங்குகிறாள். அவளை வழிபடுவோம். ஆணின்றிப் பெண்மை முழுமையடைவதில்லை. பெண்மையின் அன்பு இன்றி ஆணின் வாழ்வு ஒளி பெறுவதில்லை!

இந்தக் கதை மகாபாரதத்தில் வருவதாகும். மகாபாரதத்தின் திரெளபதி, இராமாயணத்து சீதை, அகலிகை, மண்டோதரி, தாரை ஆகிய அனைத்து மாந்தரையும் விட மிக உன்னதமானவளாக, யோக வாழ்வினால், தன் தவத்தால் கணவனின் உயிரை மீட்டு வந்த சாவித்ரி பெருமைக்கு உரியவள்.

(மகான் மகாயோகி ஶ்ரீஅரவிந்தரின் மந்திரச் சொற்களால், படைக்கப்பட்ட காவியம் “சாவித்ரி”. அவருடைய கருத்துக்களை இங்கே சேர்த்திருக்கிறேன்.)

  • பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
25 Jan 2015

புதுவருடமும் நானும்எப்போதுமே புத்தாண்டு என்றால் தியான மையம் சென்று அமைதியாக கூட்டுத் தியானத்தில் பங்கேற்று மனநிறைவுடன் திரும்புவது வழக்கம். இந்த ஆண்டு இரவு முழுதும் மழையானதால் காலையில் போக முடியவில்லை.  மாலையில் சென்றேன்.
தியான மையத்தில் அமைதிக்கும், ஆழ்ந்த தெய்விக சூழ்நிலைக்கும் என்றும் குறைவே இல்லை. இதயமெங்கும் பரவி, உள்ளத்தை நிரப்பும் அன்னை, அரவிந்தரின் புன்னகை! ஒரு தாயின் தோளில் சாய்ந்து கொண்ட இனிய அனுபவம்.

ஒரு மேகப் பொதிபோல் வானில் பறக்கும் உணர்வோடு கீழே இறங்கி வந்தேன். நான் விட்டுவந்த இடத்தில் என் காலணிகளைக் காணவில்லை. ஆனால் அதே நிறத்தில் சற்றே உயரமான 'ஹீல்ஸ்'
உடைய ஒரு ஜதை பக்கத்தில். காலணிகள் மாறிப் போச்சு! 
அங்கே மேற்பார்வையாளர் வேலை செய்யும் சகோதரி சொன்னார், 'சில்க் போர்ட்' பக்கத்திலிருந்து வந்த அந்த அம்மாதான் உங்களுடைய காலணிகளைப் போட்டுக்கொண்டு போயிருக்க வேணும். இங்கே இருப்பது அவர்களுடையதுதான். என்ன செய்வது? காலணியில்லாமல் வீட்டுக்குள்ளேயே என்னால் நடக்க முடியாது. காலண்டர் கூட மாட்ட முடியாத "காலாணி"களைக் கொண்ட கால் என்னுடையது!

தியானமையத்திற்கு எதிரே பெருமாள் கோயில்......

புத்தாண்டு தினத்தன்று வைகுண்ட ஏகாதசி. எனவே பெருமாள் கோயில் தரிசனத்திற்காக நீண்ட நெடும் வரிசையில் மக்கள் கூட்டம். ஒரு புறம் டிக்கட் தரிசனம், மறுபுறம் இலவசம்.  ஆட்டோக்காரர்களுக்கு அன்று பெருமாள் ஆசியால் லாப தினம். ஜெயநகர் போக எவரும் வரமாட்டார்களாம்! ஐம்பது ரூபாய் கொடுத்தால்  சரி. இல்லாவிட்டால்  வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு ஜெய நகர்?

என்காலுக்கு ஏற்ற "சாஃப்ட்" காலணி அங்கேயுள்ள கடை ஒன்றில் மட்டுமே கிடைக்கும். சரி, முப்பது தருகிறேன் என்று சொல்லி ஒரு ஆட்டோவில் ஏறிவிட்டேன். இருள் கவிகிற நேரம், சரியான போக்குவரத்து நெரிசல். ஒரு போக்குவரத்துப் போலிசையும் காணவில்லை. ஆட்டோக்காரரோ முழு போதையில் வளைத்து, குறுக்கே புகுந்து, இப்படியா, அப்படியா என்று குழறிக் குழறி கண்டபடி ஓட்டுகிறார்....! என் மனமோ ''எங்குறு தீமையும் எனைத் தொடராவகை கங்குலும் பகலும் மெய்க்காவல் செய் துணையே" என்று அகவலை விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு தப்பு என்னவென்றால் ஏறியவுடனே மீட்டரைப் போடச் சொல்லாதது. அது ஏற்கெனவே 200 ரூபாய் காட்டிக் கொண்டிருந்தது. நாம்தான் முப்பது ரூபாய் என்று சொல்லிவிட்டோமே என்று நானும் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த ஆட்டோவில் ஓட்டுனர் விவரம் அடங்கிய அட்டையும் இருக்கவில்லை. 

ஒரு வழியாக கடை வாசலை அடைந்தவுடனே தயாராக வைத்திருந்த மூன்று பத்து ரூபாய்த் தாள்களை ஆட்டோக்காரர் கையில் திணித்துவிட்டு ஒரே ஓட்டம் கடையை நோக்கி!

 அன்று என்னை மிகவும் சந்தோஷப் படுத்திய இரண்டாவது விஷயம் என்னவென்றால், பெருமாள் கோயில் வரிசையைப் படம் பிடித்த போது இரு இளம் பெண்கள் என்னைப் பார்த்து சிரித்து, ''ஹை ஆண்ட்டி'' என்று சொன்னது மட்டுமல்லாமல் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள என்னை அணைத்துக் கொண்டதுதான்! அந்த நாளை அது இனியதாக்கியது.

புத்தாண்டு தினத்தன்று இப்படியான ஒரு அனுபவம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? 

( புத்தாண்டு பிறந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு எதற்கு இதை பதிவு செய்கிறேன் என்கிறீர்களா? ஆரம்பித்தேன்.......நடுவே கொஞ்சம் ....நாட்கள் ...காணாமல் போய்விட்டது.  ஒவ்வொரு நாளும் புதிய நாள்தானே?  எல்லோரும், எல்லா நலன்களையும், எப்போதும் பெற்று இனிது வாழ வேண்டுமென்று
ஆண்டவனை வாழ்த்தி வணங்குகிறேன்)