27 Nov 2012

திருவண்ணாமலை தீபத்திருநாளில் - ஓர் அனுபவம்



நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலம்! 2668' உயரமான மலை. 


தீபத்திருநாளில் அண்ணாமலையார் தரிசனம் நேரில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை! அதற்கென்ன போகலாம் எனத் தீர்மானித்து தீபத்திருநாளுக்கு முதல் தினமே அங்கேபோய்ச் சேர்ந்தோம்.

தீபத்தன்று விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபம். தரிசனத்திற்கு 2 மணிக்கு எழுந்து குளித்து கோவிலுக்குப் போனோம். கோபுர வாசலிலே நீண்ட வரிசையில் நின்று, உள்ளே போய் சிறு மண்டபத்தின், மேல் தளத்தில் குழுமி இருந்த ஜனங்களுடன் சேர்ந்து கொண்டோம். நல்ல குளிர் காற்று, நட்சத்திர ஒளியை மங்கச் செய்யும் மின் விளக்குகள். நாம முழக்கங்களுடன் பரணீ தீப தரிசனமும் ஆயிற்று.

சும்மா இருப்பது என்னத்துக்கு, ஒரு முறை சுவாமி தரிசனம் செய்யலாம்னு போனோம்.
ஐயா, கொஞ்சம்...... ஒரு நிமிஷம்.... தள்ளாதீங்க, நாங்க  வெளியிலே போயிடரோம்!.....
எப்படிம்மா போவீங்க? அதெல்லாம் முடியாது முன்னாலே போங்க! 
நெருக்கித் தள்ளுகிறது கூட்டம்! அடிதடி சண்டை! ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, பிடித்துத் தள்ளுகிறார்கள். வழியை மறைத்துக் கொண்டு, வெறி பிடித்தார் போல் ஏதோ கைலாசத்திற்கு நேரடியாகப் போவதற்கு வானவர்கள்  வாகனத்தில் ஏற அழைப்பது போல அலை மோதுகிறார்கள்.

இந்தக் கூட்ட சுழற்சியில் நம்மை உள்ளேயும் போகவிடாமல், வெளியேயும் வரவிடாமல், எந்தக் கணத்தில் கீழே விழுவோம், விழுந்தால் எழுவோமா, உயிரோடு இருப்போமோ என்றெல்லாம்  தலை கிறுகிறுக்கச் செய்து விட்டது பக்திவெறியர்கள் கூட்டம். இதுதான் வாய்ப்பென்று மேலே உராய்கிற   பெரிசும், சிறிசும்! அப்பாடா, பத்து நிமிடத் தலை சுற்றலுக்குப் பின் ஒரு வழியாய் வரிசையில் நாங்கள் நிறுத்தப்பட்டோம்! ஆம் நாங்களாக நிற்கவில்லை!

வரிசை நகர்ந்து ஒரு வழியாக அண்ணாமலையாரின் சந்நிதிப் பிரகாரம் சேர்ந்தவுடன் சடாரென்று மீண்டும் வரிசையிலிருந்து எல்லோரும் அடுத்த தர்மதரிசன வரிசைக்கு ஓடினார்கள்! திரும்பவும் வரிசைக்குப் போக விரும்பாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்கவேண்டுமா, வேண்டாமா, (வேண்டும் என்றால் வெளியில் போய் மற்றொரு வரிசையில் நிற்கும்படி ஆகும்) என்று திகைத்து, இவ்வளவு தூரம் வந்தும் தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருந்தி நின்ற அந்த நேரத்தில் .......

சுமார் ஐம்பது வயது இருக்கும், நெற்றியில் குங்குமப் பொட்டு, தமிழ்நாட்டுக் கொசுவம் வைத்துக் கட்டிய புடவை, சாந்தமான முகம்! தனிவரிசையின் நுழை வாயிலில் நின்ற அந்த அம்மாள் எங்களைப் பார்த்து, உள்ளே போவணுங்களா? என்றார். ஆமாங்க, டிக்கட் இல்ல என்றவுடன், கையைக் காண்பித்து இருங்க என்று சொன்னார். ஒரு குழு உள்ளே புகுந்தபின் இடைப்பட்ட நேரம் அது. உள்ளே நுழைந்தால் நுழைவுச் சீட்டைக் காண்பிக்க வேண்டும்! அடுத்த குழுவினர் உள்ளே வர ஆரம்பித்தனர். ஒரு பத்துபேரின் நுழைவுக்குப் பின் அந்த அம்மா இரண்டு சீட்டுக்களைக் கையில் கொடுத்து எங்களை உள்ளே போகச்சொன்னார்.  நாங்களும் நுழைந்தோம். ஒரு பயம், எங்கே வெளியே போங்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று!  

அண்ணாமலையாரை கண் குளிர தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்தோம். அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகலாம் என்று அம்மன் சந்நிதி மற்றும் பிற இடங்களிலும் தேடியும் அவர்கள் கண்ணில் படவில்லை. கதை விடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? சத்தியமாக உண்மையாக நடந்ததுதாங்க!

தங்குமிடம் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டு, உணவருந்தியபின் மாலை 4  மணிக்கு கோவில் வாசலுக்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள், உள்ளே நடக்கும் எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து, தீபம் ஏற்றப்படுவதையும்  பார்க்கலாம் என்றார் நண்பர்.அவர் கோயில் கட்டளைக்காரர்.

மாலை 4 மணிக்குத் திருவண்ணாமலை கோவில் கிழக்கு வாசலில் நின்றோம். நண்பரைக் காணவில்லை! எங்கும் ஜன சமுத்திரம்!  'எள் போட்டால் எள் விழாத அளவுக்குக் கூட்டம்,' என்பார்களே, அந்தப் பழமொழியின் பொருள் அன்றைக்குதான் எனக்குப் புரிந்தது. மெதுவாக மேற்கு வாசல் வந்தோம்! பக்தர்கள் கோவிலைச் சுற்றி அலை அலையாக, நான்கு வீதிகளிலும் வந்த வண்ணம்! வீதிவலம் வருகிறார்கள்! மரியாதையாக ஒதுங்கி மீண்டும் தங்கும் விடுதியை அடைந்து ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்தோம். கோவிலிலிருந்து தீபத்தை மலைமேல் எடுத்துச் செல்வதையும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்படுவதையும், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அக்னிப் பிழம்பையும் கண்டு ஆனந்தித்தோம். 

வீட்டிலே அமர்ந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் நாம் காண்பதும், நேரிலே காண்பதும் வெவ்வேறு அநுபவங்கள். ஆண்டவனை மறந்துவிட்டு கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துத் திண்டாடுவதைவிட  வீட்டிலே ஏற்றிய விளக்கிலே, விளக்கின் ஒளியிலே, ஒளியின் பிரகாசத்திலே ஆண்டவனை, அமைதியைக் காணும் ஆனந்தம்! 'அன்பாகிய அகல் விளக்கில், ஆர்வமாகிய நெய் நிறைத்து, எண்ணங்களாகிய திரியை நனைய வைத்து,  ஆத்ம அநுபூதியாகிய சுடர் விளக்கை ஏற்றினேன் ' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. 

'நான் யார்' என்ற ஆத்மவிசாரத்தின் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியின் உண்மையை அறியலாம் என்று உணர்த்திய மகரிஷி ஶ்ரீ ரமணரின் 'அருணாசல அட்சர மண மாலை'யைப் பாடி இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அண்ணாமலையின் தீப ஒளி எங்கும்  பிரகாசிக்க   வேண்டுகிறேன்.
  
      அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ!

                       





21 Nov 2012

மாகாளிக்கிழங்கு வைபவம்

சமீபத்தில மாகாளிக்கிழங்கு ஊறுகாய் எப்படிப் போடுவது என்று சமையல்கலை  வலைத் தளத்தில்  பார்த்தேன்.  சேலம் மாவட்டத்தில்  நவம்பர், டிசம்பர் மாத விடியற்காலைப் பொழுதுகளில்  'மாவாணிகெழங்கு' என்ற குரல் கேட்கும். இந்த மாதங்களில் தான் முற்றாத கிழங்குகள் கிடைக்கும் என்பதால்  இதனை அகழ்ந்தெடுத்து மூட்டைகளில் விற்பனைக்குக் கொண்டுவருவார்கள். கூடவே எலுமிச்சம் பழ மூட்டையும் இருக்கும்.

குரல் கேட்டவுடன் என் தந்தையார் கதவைத் திறந்துவிடுவார். பின் என்ன! குறைந்தது  அஞ்சு கிலோ+ கொசுரு, அந்தக்காலத்து அறுக்கஞ்சட்டியில் உட்காரும். தண்ணீர் ஊற்றப்பட்டு வீடே கமகமக்கும். என் அம்மாவின் தலை கிறுகிறுக்கும்! இன்னொறு முறத்தில் எலுமிச்சம் பழங்கள் பொன் போலத் தகதகக்கும். ஒன்றுமே பேசாமல் அம்மா வேலை பார்ப்பாள்............!

ஒரு சிலருக்கு இந்தக் கிழங்கு வாசனை பிடிக்காது. மூட்டைப் பூச்சி வாசனை அடிக்கிறது, பக்கத்திலேயே கொண்டுவராதே என்று ஓட்டம் பிடிப்பார்கள்!   நல்ல கெட்டியாக, தடித்த  தோலுடன் இருக்கும் இதன் தோலை முதலில் சுரண்டி, அடுத்த தண்ணீர்ப் பாத்திரத்தில் போடுவோம். ஒவ்வொறு கிழங்கையும் எடுக்கும்போதெல்லாம் அறுக்கஞ்சட்டியை இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்போம்! பார்த்தால் குறையுமா? அப்படியே மெதுவாக ஒரு மதியப் பொழுதுவரை தோல் சீவும் வைபவம் நடக்கும்.

அடுத்ததாக இதைப் பொடிப்பொடியாக அப்பா நறுக்குவார். நடுவிலே கெட்டியாக காம்பு இருக்கும். அதை எடுக்கவேண்டும். நறுக்கி முடிக்க சாயங்காலம் வரை ஆகிவிடும்.  இந்தக் கிழங்கில் காற்று பட்டால் கருத்து விடும் என்பதால் நறுக்கியதையும் தண்ணீரில்தான் போடுவோம். பெரிய ஜாடியை சுத்தம் செய்து வைத்திருப்பாள் அம்மா! அதில் நறுக்கிய கிழங்குகளை தண்ணீர் இல்லாமல் வடித்துப் போடவேண்டும். இந்தக் கிழங்கு உப்புப் போட்டாலும் தண்ணீர் விட்டுக் கொள்ளாது.

பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் குலுக்கி, அது முங்கும்வரை எலுமிச்சம் பழச்சாற்றை அபிஷேகம் செய்ய வேண்டும். அப்பாடா என்று, போடுபவர்கள்  கையை உடைக்கும் கிழங்கு இது. நன்றாக ஊறியபின் ஒரு கரண்டி அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் இட்டு, அதில் தயிர் சேர்த்து தொட்டுக் கொள்ளலாம்.

இந்தக் கிழங்கு சூட்டை ஏற்படுத்தும் அதனால்தான் எலுமிச்சம் பழம் பிழிகிறோம். 
ஏற்கெனவே சூட்டைக் கிளப்புவது எனவே, கடுகு தேவையில்லை. என் தந்தையாருக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப் போகாது. நாளாக நாளாக சுவை கூடுமே தவிர குறையாது.

மாகாளிக் கிழங்கு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்

1. மாகாளிக் கிழங்கு  2. மஞ்சள் தூள் 3.மிளகாய்த் தூள் 4.உப்பு 5. எலுமிச்சம் பழம்
மாகாளிக்கிழங்கை சுத்தம் செய்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். எலுமிச்சை சாற்றைப் பிழியவும்.

தாழ்வாரத்தில் 'அறுக்கஞ்சட்டி'யைச் சுற்றி உட்கார்ந்து எப்படி ஓடிப்போவது என்று தெரியாமல் கிழங்கு சீவிய நினைவுகள் ஓடாமல் இன்னும் சுற்றிவரும் வேடிக்கையை என்னென்பது!











17 Nov 2012

தேடிய படலம்

1968 ஆம் ஆண்டு. ஒரு விடியற்காலைப் பொழுதில் கண்ணன் கல்லூரிக்குத் தயாரானான். பரிட்சைத் தேர்வுத்தாளில் அண்ணனிடம் கையெழுத்து  வாங்கவேண்டும். மிகக் குறைவான மதிப்பெண் வாங்கி இருந்ததால் முதல் நாளே அண்ணனிடம் காட்ட பயம். புறப்படும் போது என்றால், அதிக நேரம் திட்டு வாங்கவேண்டாம் எனத் தீர்மானித்திருந்தான். மெதுவாக தேர்வுத்தாளை அண்ணனிடம் நீட்டினான்.

மதிப்பெண்களைப்  பார்த்த சிவராமனுக்கு வந்தது கோபம். சமீபத்தில்தான் வீடு மாற்றி இருந்தார்.ஏகச் செலவு. வங்கி வேலை என்றாலும் மூன்று பேர் சாப்பிட வேண்டும். போதாக் குறைக்கு கல்யாணம்  செய்து கொண்டாயிற்று. அவசரமாக ஒரு  குழந்தை வேறு.  ஒரு மாதத்தில் மனைவியும் வந்துவிடுவாள். எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையே தம்பியை படிக்க வைக்கிறார். இந்தப் பையன் நூற்றுக்கு இருபது மார்க் வாங்கினால்!

வாய்க்கு வந்தபடி திட்டினது போதாதென்று ஒரு அடியும் வைத்தார்.......அம்மா ஓடிவந்து சமாதானம் செய்தாள். டிபன் டப்பா, கையில் புத்தகங்கள் - மிகுந்த வருத்தத்துடன், அழுகை  முட்டிவரக் கிளம்பினான்    கண்ணன். சிவராமனும் ஆபீஸ் போனார்.

மாலை ஆறுமணிக்கு மேல் தன் குடும்ப நண்பருடன் வீடு வந்தவர் வாசலிலே அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து என்ன ஆயிற்று என்றார் பதற்றமாக.
ஒன் தம்பி காலையிலே போனவன் வழக்கமா நாலுக்கெல்லாம் வீட்டில இருப்பானே இன்னும் காணலையே?
எல்லாம் வருவான் என்றவர்,  நண்பரைப் பார்த்து ,'சார் ராஜூ வந்துட்டானா பாருங்க,ரெண்டு பேரும் சேந்துதானே வருவாங்க' என்றார்.

என்ன இருந்தாலும் நீ அவனை அடிச்சிருக்கக் கூடாது. நல்லதனமா சொன்னா படிக்கமாட்டானா, என்று சொல்லிக்கொண்டே காப்பியைக் கொடுத்தார் அம்மா!
வாசலிலே நண்பரும் மகனும்! கண்ணன் இன்னிக்கு காலேஜுக்கே வரலியே மாமா என்றான் ராஜு.

அம்மா அழத்தொடங்க, சிவராமன் பதறிப் போனார். அது வரையிலும் காலை நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் இல்லை. அடடா! இப்போது என்ன செய்வது என்று திகைத்த அவரை நண்பர் சமாதானப்படுத்தினார்.
ராஜுவை    கண்ணன்  அம்மாவுக்குத்  துணைவைத்துவிட்டு  இருவரும் கிளம்பினார்கள்.

தேடும் படலம் ஆரம்பமானது. அந்தக் காலத்தில் 'செல்' இல்லையே! கல்லூரி, நண்பர்கள், உறவினர் வீடுகள் எங்கும் அவன் இல்லை.  ஏன் சார் என்ன ஆயிற்று, திட்டினீங்களா? என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அழுகையை அடக்கமுடியாமல், பெரிய தப்பு செய்து குற்றவாளிக்கூண்டில் நிற்கின்றவன் போலக் கூசிக் குறுகிப் போனார் சிவராமன். கூடப் பிறந்தவன், கண்டிக்க உரிமையில்லையா? ஏதோ அவனை ஒரு குழந்தையைப் போல் நினைத்து விட்டார். அவ்வளவுதான்.

போலீஸ் புகார் கொடுக்க மனம் வரவில்லை. நண்பருடன் கீழ்ப்பாக்கம், பொது மருத்துவ மனைகளில் உள்ள விபத்துப் பிரிவுகளில், மரணமடைந்தவர்களை பாதுகாத்து வைக்கும்  'மார்ச்சுவரியில்,' சடலங்களின் முகப் போர்வையை நீக்கிப் பார்த்த ஒவ்வொரு கணமும் நெஞ்சு வெடித்தது.   எல்லா இடங்களிலும் தேடியதுதான் மிச்சம். எப்படியோ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று உறுதி ஆனதில் ஒரு நிம்மதி!

கடைசியாகத் தன்  உறவினர்களுக்கு 'அங்கு வந்தால் தெரியப்படுத்தவும்' எனத் தந்தி அடித்துவிட்டு வேறு வழியின்றி  இருவரும்  வீட்டிற்குத்   திரும்பினார்கள்.

கலைந்த தலை தளர்ந்த நடை, கண்ணீர் வழியும் கண்கள்! தன் சொந்த சவுகரியங்களைத் தியாகம் செய்துவிட்டுப்  பல  கஷ்டங்களுக்கு  இடையே  படிக்க  வைத்ததற்கு  கிடைத்த  பலன் இதுதானா என்று உள்ளம் அழுதது.
அவருடைய தாயின் கோபமும் அவர்மேல் பாய அழுதவண்ணம் உறங்கிப் போனார் சிவராமன்.

வீட்டைவிட்டு  வெளியே வந்த  கண்ணனுக்கு அழுகையாக வந்தது. பத்தாம்வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு ஆங்கில மீடியத்தில் பி.யூ.சி படிக்க கஷ்டமாக இருந்தது அவனுக்கு. படிப்பில் உதவி செய்ய யாருமில்லை. அது மட்டுமல்லாது கல்லூரி திறந்து இரண்டு மாதம் தான் ஆகியிருந்தது.
அதுவும் தினமும் திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகர் போகவேண்டும்! சும்மா வகுப்பு டெஸ்ட், அதுக்குப் போய் அண்ணா அடிக்கிறாரே!  அவன் நேராக ரயில்வே ஸ்டேஷன் போய், புறப்பட்டுக் கொண்டிருந்த ரயிலில் ஏறி விட்டான். சிதம்பரம் ரயில் நிலையம் நெருங்கிய போது டிக்கெட் பரிசோதகர் உள்ளே நுழைந்தார். கண்ணனிடம்  டிக்கட் இல்லை. அதற்குள் ரயில் நிலையம் வர கீழே இறங்கியவன் கோவிலுக்குப் போனான்

கோவில் குளத்தைப் பார்த்தவுடன் பேசாமல் அதில் குதித்துவிடலாமா என்று தோன்ற, சமயம் பார்த்து ஒரு குடும்பம் அங்கே உட்கார்ந்து சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தது. கண்ணனுக்கும் பசித்தது. டிபன் டப்பாவைத் திறந்து அம்மா வைத்திருந்த தேங்காய் சாதத்தை ருசித்து சாப்பிட்டான். கொஞ்சம் தெளிவு வந்தது. தான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், கையில் காசு இல்லை. கோபத்தில் பேருந்துக்கு எடுத்து வரும் பணத்தையும் வாங்கிக் கொள்ளவில்லை.  என்ன செய்வது? திரும்ப ரயில் நிலையம் போய் காரைக்குடி வண்டியிலே ஏறினான்.

விடியற்காலையில் வாசலில் வந்து நின்ற தம்பியைப் பார்த்து அண்ணா, வா வா என்றார். சூடான காப்பி வருவதற்குள்  ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று தபால் தந்தி அலுவலகம் சென்று தம்பிக்கு செய்தி அனுப்பினார்

சிவராமனுக்கு போன உயிர் திரும்பியது. எப்படியோ போகட்டும். இனி ஒருநாளும் தம்பியைத் திட்டவோ அடிக்கவோ செய்ய மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டார். அவருடைய மாமனார் எழுதிய கடிதத்தை மீண்டும் படித்தார்.

 ''பாரப்பா, ஒரு ஆண் மகனால் குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. உன்  தம்பியைத் திட்டினால் உன் அம்மா பரிந்து கொண்டு வருவாள். சொந்தப் பிள்ளையைத் திட்டினால் மனைவி ஆகா  என்று ஓடிவருவாள். தம்பியோ, பிள்ளைகளோ, இவர்கள் தாங்குவதால் நாம் சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்கள். எல்லோரும் ஒரே கட்சி! இவர்கள் ஓடிப் போவதும், நாம் தேடித்திரிவதும், வீட்டில் சண்டைதான் மிச்சம். என்னுடைய இரு தம்பிகளும் இதே போல் ஓடிப் போய் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள். எனவே ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். உன் தம்பியை ரொம்பத் திட்டாதே.''

பதினைந்து, பதினாறு வயதில் குழந்தைப் பருவத்திலிருந்து, வாலிபப் பருவத்திற்கு உடலும் உள்ளமும் மாற்றமடையும்  காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு நண்பனைப் போல் நடத்த வேண்டும். நிறையப் பேச வேண்டும். புத்தகங்கள் படிப்பதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பரிட்சைகளில் மதிப்பெண் குறைந்தாலும்  அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தட்டிக் கொடுத்து அவர்களாகவே பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்  ஆகிய படிப்பினைகளை இந்தச் சம்பவம் கற்றுக் கொடுத்தது என்பது மிகையில்லை

அநுமன் சீதா தேவியைத் தேடி இலங்காநகர் முழுவதும் அலைந்தார் என்பதைக் கம்பராமாயண உரைநடையில் படித்தபோது சென்னை மாநகரில் அண்ணன் கோபித்தார் என்று  வீட்டுக்கு நேரத்தோடு திரும்பாத தம்பியைத் தேடிய படலம் ............ 'மார்ச்சுவரியின்' சடலங்களில் உறவுகளைத் தேடும்  கொடுமை  யாருக்கும் வரக்கூடாது

மனித உறவுகள் கண்ணாடிப் பாத்திரம் போன்றது. எப்போதும் கவனம் தேவை.

கோபம் மனிதனின் முதல் எதிரி.

குழந்தைகளின் மனவியலை அறிந்து கொள்வது முக்கியம்.

குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அவர்களுடைய மனம் புண்படாதவாறு

நடந்து கொள்ளுதல் வேண்டும்.


அறிவுரை சொல்லாதீர்கள், நடந்து காட்டுங்கள்.

9 Nov 2012

சாபம்


பாருக்குள்ளே நல்ல நாடென்று
மீசை முறுக்கி நெஞ்சை நிமிர்த்தி
பாரதி பாடிய பாரத நாட்டை,
பஞ்சவர் தேவியின்  மானத்தைக் 
காத்த மாயவனை ராதை நாயகனை
தேடித் தருவீரா? தேடித்தருவீரா?

பச்சைக் குழந்தையை, பருவப் பெண்களை
நல்லவர் இவரென நம்பி வரும் பிற 
நாட்டுப் பெண்டிரை,
நாலுபேர் சேர்ந்து, நாணின்றித் 
தொட்டு, அடித்துச் சாய்த்தே,
மானத்தை அழிக்கிறார்- பாருக்குள்ளே...

பத்து பேர் இதனைப் பார்த்து மகிழ,
அடடா, எனச் சிலர் படம் பிடித்து
மார் தட்டிப் பிறர் காண நெஞ்சை
நிமிர்த்தி, நாய்களெனச் சுற்றி
நகைத்து நிற்பார்!-- பாருக்குள்ளே...

காட்டு மிராண்டியர், பேடியர்
எங்கள் பாரதத் தாயின் 
வயிற்றினில் பிறந்தவரோ?
பெற்றதாயினைக் கற்பழிப்பாரோ?
சொந்த சகோதரி எனின் பார்த்து
நிற்பாரோ? இவர் மானுடரோ?
இல்லைப் பேய் மக்களோ? -அட
ஒவ்வொரு பெண்ணும் தாயன்றோ?- பாருக்குள்ளே...

தாய்க்குல வயிற்றினில் வைத்திட்ட தீ
மானுடக் கூட்டத்தை அழிக்குமன்றோ?
அழுது தீர்ப்போமோ? ஆங்காரம் 
கொண்டு காளி அவதாரம் எடுப்போமோ?
நெருப்பினில் வீழ்வோமோ? அட
நஞ்சைக் குடிப்போமோ?
வயிற்றினில் வளரும் கருவைக் 
கலைப்போமோ? கயமையின் 
சின்னத்தைக் கட்டியணைத்தே
ஒரு முத்தம் கொடுப்போமோ? 
முலைப் பாலில் ஓர் துளி 
நஞ்சைக் கலப்போமோ? - பாருக்குள்ளே...

மெல்லப் பெண்ணினம் இனிச் 
சாகும், பிள்ளையைப் பெறும்
பாவம் போகும்!
பிள்ளையைப் பெறும் சாபம்
இங்.... கினிப்.....  போகும்.  சாபம் போகும்.......!
                                                    

2 Nov 2012

திருப்புகழ் -முத்தைத் தரு

முகுந்தன், ருத்ரன், கமலன் என்ற மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டவன் மு, ரு, க,  எனும் அழகன்.  அன்றாட வாழ்வின் அல்லல்களில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு அருமருந்தானவன்.

நினைக்க  முக்தி தரும் திருஅண்ணாமலையில் அருணகிரிப் பெருந்தகையார் முன் காட்சி அளித்து,
''முத்தைத் தரு'' என்று அடியெடுத்துக் கொடுத்துப், பாடப் பணித்து மறைந்தார் முருகப் பெருமான்.

திசைகள் நான்கிலும் உள்ள அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று ஆனந்திக்கும்,  சித்திர கவித்துவ சத்த மிகுத்து அருளாலும், பொருளாலும், சந்தத்தாலும், ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவருளினால் இந்தத் திருப்புகழின் பொருள் விளக்கம் வேண்டுமென ஒருவர் கேட்க அதை எழுதப் புகுந்தேன். முதலில் பாடல்.

                                                          நூல்

ராகம்: ஷண்முகப்ரியா                                                            தாளம்: த்ரிபுடை


                          முத்தைத்தரு பத்தித் திருநகை
                                 அத்திக்கிறை சத்திச் சரவண
                                 முத்திக்கொரு வித்துக் குருபர                        எனவோதும்-

                          முக்கட்பர மற்குச் சுருதியின்
                                  முற்பட்டது கற்பித் திருவரு
                                  முப்பத்துமு வர்க்கத் தமரரு                             மடிபேணப்;

                          பத்துத்தலை தத்தக் கணைதொடு
                                  ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                                   பட்டப்பகல் வட்டத் திகிரியி                          லிரவாகப் -

                          பத்தற்கிர தத்தைக் கடவிய
                                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                                 பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது                         மொருநாளே;

                          தித்தித்தெய வொத்தப் பரிபுர
                                   நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                                   திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாடக்-

                          திக்குப்பரி யட்டப் பயிரவர்
                                  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
                                  சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக                             எனவோதக்;

                          கொத்துப்பறை  கொட்டக் களமிசை
                                   குக்குக்குகு குக்குக் குகுகுகு
                                   குத்திப்புதை புக்குப் பிடியென                      முதுகூகை

                          கொட்புற்றெழ நட்பற் றவுணரை
                                    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
                                    குத்துப்பட வொத்துப் பொரவல                   பெருமாளே.


முத்தைத் தரு பத்தித் திருநகை-
பத்தியென்றால் வரிசை. முத்துப் போன்ற பல்வரிசை தெரியுமாறு புன்னகை பூக்கிறான் முருகன். அது முருகப் பெருமானுடைய முகத்தில் -'திருநகை'-முத்தால் ஆன ஆபரணம் போல-ஒளி வீசுகிறது. அது பக்தர்களுக்கு 'திரு'வைக் கொடுக்கிறது. திரு என்றால் செல்வம். என்ன செல்வத்தைக்  கொடுக்கிறது? பக்தியைக் கொடுத்து, மோட்ச சாம்ராஜ்யமாகிய அழியாத செல்வத்தைக் கொடுக்கிறது.

அத்திக்கிறை-
அத்தி-தெய்வானை. தெய்வானை முத்தின் தலைவனை

சத்திச் சரவண
மலைமுத்தான உமையம்மையின் புதல்வன், சரவணப் பொய்கையில் தோன்றியவன். எனவே 'சத்திச் சரவணன்.'அன்னையிடம் இருந்து சக்தி மிக்க வேலாயுதத்தைப் பெற்றவன்.

முத்திக்கொரு வித்து
முக்தி அடைய விரும்புபவர்கள் முருகவேளுடைய திருவடிகளிலே கருத்தைச் செலுத்தி பக்தி எனும் விதையை இதயத்தில்  நடவேண்டும்.

குருபரன்
கு - அந்தகாரம் அல்லது இருள்
ரு -   நீக்குபவர். ஆணவ இருளை நீக்குபவர்
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு குருவடிவாய் வந்து அருள் புரிபவர் குருபரன்.

எனவோதும்
என்று போற்றிய

முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து
மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு, நான்கு வேதங்களிலும் முதன்மையான 'ஓம்'என்ற பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்து

இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண
பிரமனும், திருமாலும், முப்பத்து முக்கோடி தேவர்களும் திருவடிகளிலே வணங்கப் பெரும் பெருமை உடையவன்,

பத்துத்தலை தத்தக் கணைதொடு
இராமாவதாரத்தில் இலங்காபுரி அரசனான இராவணனின் பத்துத் தலைகளும் வீழுமாறு அம்பு தொடுத்த வீரனும்

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்தரமலையை மத்தாக்க, அதைத் தாங்கும் பொருட்டு கூர்மாவதாரம் எடுத்தவனும்

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் 
மகாபாரதப் போரில், கண்ணனாய், பட்டப்பகலில் சூரியன் மறைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி  ஜெயத்ரதன்  மாளும்படிச் செய்தவனும்

பத்தற்கு இரதத்தைக் கடவிய
தன் நண்பனும், பக்தனுமான அர்ச்சுனனுக்குத்  தேரோட்டியாய் இருந்து அருள் புரிந்தவனும் ஆகிய

பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்
நீலமேக வண்ணனான திருமாலும்லும்  பாராட்டப் பெற்ற பெருமை உடைய முருகப்  பெருமானே.

பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது  ஒரு நாளே
பரிவோடு  என்னைக்  காத்து  அருள் புரிதல் வேண்டும்.

தித்தித்தெய வொத்தப் பரிபுர           

கால்களில் அணிந்த சிலம்புகள் தித்தித்தோம் என ஒத்து ஒலிக்கவும்

நிர்த்தப்பதம்  வைத்துப் பயிரவி
காளியானவள் நடனமிட

திக்கொட்க நடிக்கக் கழுகொடு-  கழுதாட
திசைதொறும்  ஒலிக்குமாறு ஆட, உடன் கழுகுகளும் பேய்களும் ஆடுகின்றன.

திக்குப்பரி யட்டப் பயிரவர்
எட்டுத் திக்குகளையும் காக்கும் அஷ்ட பயிரவர்களும்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
தொ..க்..குத்.... தொ....கு... என

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக - எனவோதக்
அழகிய வாத்ய ஒலிக்கு ஏற்றவாறு கூத்தாட

கொத்துப்பறை கொட்டக் களமிசை
பல பறைகள் முழங்க, போர்க்களத்தில்

குக்குக்குகு குக்குக் குகு
குத்திப்புதை புக்குப் பிடியென  - முதுகூகை
குத்து, வெட்டு, பிடியென கிழக்கோட்டான்கள்  சுழன்று ஆட,

கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
சுழன்றாடும்  எதிரிகளாகிய அசுரர்களை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
கொன்று குவித்து கிரவுஞ்சமலையை வேலால் துளைத்து

குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே.
பொடிப்பொடியாக்கி  வெற்றிவாகை சூடிய முருகப்பெருமானே.
என்னையும் கருணையுடன் காத்து அருள் புரிவீராக.

குறிப்பு;
குலகிரியான  பொன்னிறமான கிரவுஞ்சமலை மாயைக்கு எடுத்துக்காட்டு. தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் கிரவுஞ்சன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். இவன் முனிவர்கள் செல்லும் வழியில் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக நின்று, மலைக்குள் வழியிருப்பது போலக் காட்டி, உள்ளே நுழையும்  முனிவர்களை மயக்கிக் கொன்று தின்பான்.

அகத்திய முனிவர் மேருமலையிலிருந்து  தென்திசையில் உள்ள பொதியமலைக்கு வந்தார். அவர் வரும் வழியில் பெருமலை உருவாக நின்று அதற்குள் வழியிருப்பது போல் காட்ட, அவரும் உள் நுழைந்து வெகு தூரம் போய் வழிகாணாமல், அறிவுக் கண்ணால் அசுர மாயையை அறிந்து, வெளி வந்து ''அறுமுகப் பெருமான் அயில் வேலால் அழியக் கடவாய்" எனச் சபித்தார். சூரனுடன் போர் புரிந்த போது  கிரவுஞ்சன் மலைவடிவாய் நின்று வீரவாகுத் தேவர் முதலியோரை மலைக்குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் கிரவுஞ்சத்தைப் அழித்தார்.

மந்தர மலை பீகார் மாகாணத்தில் உள்ள பாகல்பூருக்குத் தெற்கே 50 கி.மீ. தொலைவிலுள்ள மலை எனக் கருதப்படுகிறது. Ref.A concise Encyclopedia of Hinduism, Vol 2.

எட்டு குலகிரிகள்-கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.


                     
                           
                           
                   .
                                                      -----------------