17 Nov 2012

தேடிய படலம்

1968 ஆம் ஆண்டு. ஒரு விடியற்காலைப் பொழுதில் கண்ணன் கல்லூரிக்குத் தயாரானான். பரிட்சைத் தேர்வுத்தாளில் அண்ணனிடம் கையெழுத்து  வாங்கவேண்டும். மிகக் குறைவான மதிப்பெண் வாங்கி இருந்ததால் முதல் நாளே அண்ணனிடம் காட்ட பயம். புறப்படும் போது என்றால், அதிக நேரம் திட்டு வாங்கவேண்டாம் எனத் தீர்மானித்திருந்தான். மெதுவாக தேர்வுத்தாளை அண்ணனிடம் நீட்டினான்.

மதிப்பெண்களைப்  பார்த்த சிவராமனுக்கு வந்தது கோபம். சமீபத்தில்தான் வீடு மாற்றி இருந்தார்.ஏகச் செலவு. வங்கி வேலை என்றாலும் மூன்று பேர் சாப்பிட வேண்டும். போதாக் குறைக்கு கல்யாணம்  செய்து கொண்டாயிற்று. அவசரமாக ஒரு  குழந்தை வேறு.  ஒரு மாதத்தில் மனைவியும் வந்துவிடுவாள். எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையே தம்பியை படிக்க வைக்கிறார். இந்தப் பையன் நூற்றுக்கு இருபது மார்க் வாங்கினால்!

வாய்க்கு வந்தபடி திட்டினது போதாதென்று ஒரு அடியும் வைத்தார்.......அம்மா ஓடிவந்து சமாதானம் செய்தாள். டிபன் டப்பா, கையில் புத்தகங்கள் - மிகுந்த வருத்தத்துடன், அழுகை  முட்டிவரக் கிளம்பினான்    கண்ணன். சிவராமனும் ஆபீஸ் போனார்.

மாலை ஆறுமணிக்கு மேல் தன் குடும்ப நண்பருடன் வீடு வந்தவர் வாசலிலே அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து என்ன ஆயிற்று என்றார் பதற்றமாக.
ஒன் தம்பி காலையிலே போனவன் வழக்கமா நாலுக்கெல்லாம் வீட்டில இருப்பானே இன்னும் காணலையே?
எல்லாம் வருவான் என்றவர்,  நண்பரைப் பார்த்து ,'சார் ராஜூ வந்துட்டானா பாருங்க,ரெண்டு பேரும் சேந்துதானே வருவாங்க' என்றார்.

என்ன இருந்தாலும் நீ அவனை அடிச்சிருக்கக் கூடாது. நல்லதனமா சொன்னா படிக்கமாட்டானா, என்று சொல்லிக்கொண்டே காப்பியைக் கொடுத்தார் அம்மா!
வாசலிலே நண்பரும் மகனும்! கண்ணன் இன்னிக்கு காலேஜுக்கே வரலியே மாமா என்றான் ராஜு.

அம்மா அழத்தொடங்க, சிவராமன் பதறிப் போனார். அது வரையிலும் காலை நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் இல்லை. அடடா! இப்போது என்ன செய்வது என்று திகைத்த அவரை நண்பர் சமாதானப்படுத்தினார்.
ராஜுவை    கண்ணன்  அம்மாவுக்குத்  துணைவைத்துவிட்டு  இருவரும் கிளம்பினார்கள்.

தேடும் படலம் ஆரம்பமானது. அந்தக் காலத்தில் 'செல்' இல்லையே! கல்லூரி, நண்பர்கள், உறவினர் வீடுகள் எங்கும் அவன் இல்லை.  ஏன் சார் என்ன ஆயிற்று, திட்டினீங்களா? என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அழுகையை அடக்கமுடியாமல், பெரிய தப்பு செய்து குற்றவாளிக்கூண்டில் நிற்கின்றவன் போலக் கூசிக் குறுகிப் போனார் சிவராமன். கூடப் பிறந்தவன், கண்டிக்க உரிமையில்லையா? ஏதோ அவனை ஒரு குழந்தையைப் போல் நினைத்து விட்டார். அவ்வளவுதான்.

போலீஸ் புகார் கொடுக்க மனம் வரவில்லை. நண்பருடன் கீழ்ப்பாக்கம், பொது மருத்துவ மனைகளில் உள்ள விபத்துப் பிரிவுகளில், மரணமடைந்தவர்களை பாதுகாத்து வைக்கும்  'மார்ச்சுவரியில்,' சடலங்களின் முகப் போர்வையை நீக்கிப் பார்த்த ஒவ்வொரு கணமும் நெஞ்சு வெடித்தது.   எல்லா இடங்களிலும் தேடியதுதான் மிச்சம். எப்படியோ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று உறுதி ஆனதில் ஒரு நிம்மதி!

கடைசியாகத் தன்  உறவினர்களுக்கு 'அங்கு வந்தால் தெரியப்படுத்தவும்' எனத் தந்தி அடித்துவிட்டு வேறு வழியின்றி  இருவரும்  வீட்டிற்குத்   திரும்பினார்கள்.

கலைந்த தலை தளர்ந்த நடை, கண்ணீர் வழியும் கண்கள்! தன் சொந்த சவுகரியங்களைத் தியாகம் செய்துவிட்டுப்  பல  கஷ்டங்களுக்கு  இடையே  படிக்க  வைத்ததற்கு  கிடைத்த  பலன் இதுதானா என்று உள்ளம் அழுதது.
அவருடைய தாயின் கோபமும் அவர்மேல் பாய அழுதவண்ணம் உறங்கிப் போனார் சிவராமன்.

வீட்டைவிட்டு  வெளியே வந்த  கண்ணனுக்கு அழுகையாக வந்தது. பத்தாம்வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு ஆங்கில மீடியத்தில் பி.யூ.சி படிக்க கஷ்டமாக இருந்தது அவனுக்கு. படிப்பில் உதவி செய்ய யாருமில்லை. அது மட்டுமல்லாது கல்லூரி திறந்து இரண்டு மாதம் தான் ஆகியிருந்தது.
அதுவும் தினமும் திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகர் போகவேண்டும்! சும்மா வகுப்பு டெஸ்ட், அதுக்குப் போய் அண்ணா அடிக்கிறாரே!  அவன் நேராக ரயில்வே ஸ்டேஷன் போய், புறப்பட்டுக் கொண்டிருந்த ரயிலில் ஏறி விட்டான். சிதம்பரம் ரயில் நிலையம் நெருங்கிய போது டிக்கெட் பரிசோதகர் உள்ளே நுழைந்தார். கண்ணனிடம்  டிக்கட் இல்லை. அதற்குள் ரயில் நிலையம் வர கீழே இறங்கியவன் கோவிலுக்குப் போனான்

கோவில் குளத்தைப் பார்த்தவுடன் பேசாமல் அதில் குதித்துவிடலாமா என்று தோன்ற, சமயம் பார்த்து ஒரு குடும்பம் அங்கே உட்கார்ந்து சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தது. கண்ணனுக்கும் பசித்தது. டிபன் டப்பாவைத் திறந்து அம்மா வைத்திருந்த தேங்காய் சாதத்தை ருசித்து சாப்பிட்டான். கொஞ்சம் தெளிவு வந்தது. தான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், கையில் காசு இல்லை. கோபத்தில் பேருந்துக்கு எடுத்து வரும் பணத்தையும் வாங்கிக் கொள்ளவில்லை.  என்ன செய்வது? திரும்ப ரயில் நிலையம் போய் காரைக்குடி வண்டியிலே ஏறினான்.

விடியற்காலையில் வாசலில் வந்து நின்ற தம்பியைப் பார்த்து அண்ணா, வா வா என்றார். சூடான காப்பி வருவதற்குள்  ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று தபால் தந்தி அலுவலகம் சென்று தம்பிக்கு செய்தி அனுப்பினார்

சிவராமனுக்கு போன உயிர் திரும்பியது. எப்படியோ போகட்டும். இனி ஒருநாளும் தம்பியைத் திட்டவோ அடிக்கவோ செய்ய மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டார். அவருடைய மாமனார் எழுதிய கடிதத்தை மீண்டும் படித்தார்.

 ''பாரப்பா, ஒரு ஆண் மகனால் குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. உன்  தம்பியைத் திட்டினால் உன் அம்மா பரிந்து கொண்டு வருவாள். சொந்தப் பிள்ளையைத் திட்டினால் மனைவி ஆகா  என்று ஓடிவருவாள். தம்பியோ, பிள்ளைகளோ, இவர்கள் தாங்குவதால் நாம் சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்கள். எல்லோரும் ஒரே கட்சி! இவர்கள் ஓடிப் போவதும், நாம் தேடித்திரிவதும், வீட்டில் சண்டைதான் மிச்சம். என்னுடைய இரு தம்பிகளும் இதே போல் ஓடிப் போய் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள். எனவே ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். உன் தம்பியை ரொம்பத் திட்டாதே.''

பதினைந்து, பதினாறு வயதில் குழந்தைப் பருவத்திலிருந்து, வாலிபப் பருவத்திற்கு உடலும் உள்ளமும் மாற்றமடையும்  காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு நண்பனைப் போல் நடத்த வேண்டும். நிறையப் பேச வேண்டும். புத்தகங்கள் படிப்பதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பரிட்சைகளில் மதிப்பெண் குறைந்தாலும்  அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தட்டிக் கொடுத்து அவர்களாகவே பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்  ஆகிய படிப்பினைகளை இந்தச் சம்பவம் கற்றுக் கொடுத்தது என்பது மிகையில்லை

அநுமன் சீதா தேவியைத் தேடி இலங்காநகர் முழுவதும் அலைந்தார் என்பதைக் கம்பராமாயண உரைநடையில் படித்தபோது சென்னை மாநகரில் அண்ணன் கோபித்தார் என்று  வீட்டுக்கு நேரத்தோடு திரும்பாத தம்பியைத் தேடிய படலம் ............ 'மார்ச்சுவரியின்' சடலங்களில் உறவுகளைத் தேடும்  கொடுமை  யாருக்கும் வரக்கூடாது

மனித உறவுகள் கண்ணாடிப் பாத்திரம் போன்றது. எப்போதும் கவனம் தேவை.

கோபம் மனிதனின் முதல் எதிரி.

குழந்தைகளின் மனவியலை அறிந்து கொள்வது முக்கியம்.

குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அவர்களுடைய மனம் புண்படாதவாறு

நடந்து கொள்ளுதல் வேண்டும்.


அறிவுரை சொல்லாதீர்கள், நடந்து காட்டுங்கள்.

3 comments:

  1. உங்கள் கட்டுரை படிக்கும்போது, தந்தையின் கண்டிப்பால் வீட்டை விட்டு வருடக்கணக்கில் ஓடிப்போன மகன், பெற்றோரின் எதிர்ப்பால், பிடிவாதத்தால் தீக்குளித்த பெண் போன்ற உறவினர்கள் குடும்பங்களில், கடந்த காலங்களில் நடந்த துர்சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. தீவிரமாக யோசிக்கவேண்டிய கருத்து.

    ReplyDelete
  2. Thank you. It is very much true that Parents do not spend much time with their kids and find out their thought process.

    ReplyDelete
  3. Of Human Bondage...Where to strike the balance & when ... Lovely article...I am happy to have practically realized both sides of the spectrum. The Father in me and the child in me... Lessons from life.. Of Human bondage

    ReplyDelete