1 Oct 2017

ஶ்ரீ அரவிந்தர் -18


அலிப்பூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஶ்ரீ அரவிந்தர் 1909, மே மாதம் 30 ஆம் தேதி ' உத்தரபாரா' என்னுமிடத்தில் உரையாற்றினார். அவர் மீதிருந்த அன்பாலும்மரியாதையாலும் மாலை அணிவித்து வரவேற்க சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்தனர். இங்குதான் அவர் அலிப்பூர் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக் கூறினார்
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதற்குத் தேவையான உள்ள வலிமையை, சக்தியைப் பெறுவதற்கே நான் யோக வாழ்வைத் தேர்ந்தெடுத்தேன்!ஆனால் என்னுள் என்னை இயக்கும் தெய்வீக சக்தியை அறிந்து, உணர்ந்து அதனோடு இரண்டறக்கலந்த அனுபவம் தந்த ஆழ்ந்த அமைதியில் தெய்வ வாழ்க்கையைவிட்டு வெளியே வர இயலாதவனாய் உள்ளேன்.

 இந்தியாவிற்கு சுதந்திரம் நிச்சயமாகக்கிடைக்கும் என்ற வாக்குறுதியை இறைவன் எனக்குத் தந்தான். அதே சமயம் யோக வாழ்வைத் தொடர்ந்து புதிய  திருவுருமாற்றத்தை அடையவும், அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் வேண்டிய பணியைக் கொடுத்தான், என்றார்.

அரவிந்தர் சிறையில் இருந்த ஓராண்டில் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. திலகர், கோகலே போன்ற தலைவர்கள்,சிறையிலிருந்தனர். சிலர் அந்தமான் தீவின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தீவிர வாதிகள் சுதந்திரம் பெற வேண்டி பல  ரகசியசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாக அரவிந்தரின் பேனா மாறியது.

அரவிந்தர் மீண்டும் தன் வேலைகளைத் தொடர்ந்தார், "கர்மயோகின்" என்ற ஆங்கிலப்பத்திரிகையும், "தர்மா" என்ற வங்காளப் பத்திரிகையையும் ஆரம்பித்தார். பூரண சுதந்திரமே குறிக்கோள் என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார்அவரது எழுத்துகளும், உரைகளும் ஆங்கிலேயர்களுக்கு திகிலூட்டின.எனவே பல வழிகளிலும் அவரைஅடக்க முயன்றனர். எப்படியாவது மீண்டும் கைதுசெய்து நாடு கடத்திவிட வேண்டுமென எண்ணினர்

1910 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில் அவரைக் கைது செய்யவும், கர்மயோகின் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தேடவும் அதிகாரிகள் வரப் போவதாக அரவிந்தருக்கு செய்தி வந்தது. அவரை வழி நடத்திய தெய்வக் குரல் அவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமுள்ள சந்திர நாகூருக்குச் செல்லும்படிக் கட்டளையிட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் அரவிந்தர் தன் நண்பர்கள் இருவருடன் கங்கைக்கரையை அடைந்து சாதாரணப் படகொன்றில் பயணம் செய்து விடியலில் சந்திர நாகூரை அடைந்தார். அரவிந்தரின் அரசியல் பணி அன்றுடன் முடிந்தது.

அங்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ரகசியமாக நண்பர்கள் பாதுகாப்பில் சாதனைகளில் ஆழ்ந்தவரை மீண்டும் தெய்வக் குரல்  வேதபுரி எனப்பட்ட புதுவைக்குச் செல்லும்படி ஆணையிட்டது.

புதுவையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் ரகசியமாகச்செய்யப்பட்டன.
1910, ஏப்ரல் 1 ஆம் தேதி அரவிந்தர் தன் நண்பரோடு 'டியூப்ளெக்ஸ்'என்ற கப்பலில் 
பயணித்தார்.
1910, ஏப்ரல் 4 ஆம் நாள். மாலை நான்கு மணிக்கு புதுவையில் இறங்கிய அரவிந்தரை சீனிவாசாச்சாரியும்,மோனியும் வரவேற்று சங்கர் செட்டியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.ஸ்வாமி விவேகாநந்தரும் அதே வீட்டில் அவரது தென்னிந்திய விஜயத்தின்போது  தங்கியிருந்தார் என அறிகிறோம்.

ரகசியப் போலீசாரின் பல தொந்தரவுகளுக்கு ஆளான போதிலும் அரவிந்தர் தன் யோக சாதனைகளக் கை விடவில்லை. 1914 ஆம் ஆண்டு அன்னை புதுச்சேரி வந்தார்.  
அரவிந்தர்  அன்னையின் யோகப் பயிற்சியே 'integral yoga'  எனப்படுகிறது. விழிப்புணர்வுடன், மன ஒருமைப்பாட்டுடன்  கணந்தோறும் இறைவனில் வாழ்வதுதான் அது

பின்பு அரவிந்த ஆசிரமம் தோன்றியது
 வங்கத்தில் பிறந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, பரோடாவில் பணியாற்றி, வங்கத்தில் சுதந்திரத் தீயை மூட்டி,சுதந்திரம் எனது பிறப்புரிமை,அதனை அடைந்தே தீருவோம் என முழங்கி,சிறையில் இறையனுபவம் பெற்று, புதுச்சேரியில் திருவுருமாற்றம் பெற்று 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார். ஐந்து நாட்கள் அவருடைய உடல் ஒளியால் சூழப்பட்டிருந்தது.
ஶ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து தன்னுடைய வாக்குறுதியை வசுதேவ ஶ்ரீகிருஷ்ணன் நிறைவேற்றினார் என்பது அரவிந்த பக்தர்களின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் அரவிந்தரின்  யோக வழியைப் பின்பற்றுவோர் புதுச் சேரியில் கூடி அவரது ஆசிரமத்தில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். அன்று அவர் வாழ்ந்த அறைக்குச் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.

ஓம் நமோ பகவதே ஶ்ரீ அரவிந்தாய! ஓம் நமோ பகவதே ஶ்ரீ மீராம்பிகாய!
                   வணக்கம்.
17 Sep 2017

ஶ்ரீஅரவிந்தர் -17


அரவிந்தரின் கைது அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.அரசியலிலிருந்து விலகி முழுமையாக தன்னையறியும் தவ வாழ்வை அவர் மேற்கொண்டார். 

குண்டு வெடிப்பில் அரவிந்தருக்கு தொடர்பு இருக்கவில்லை என்றாலும் அவருடைய எழுத்துகள் சுதந்திரத் தீயை மூட்டுவதாய் இருந்தது. எப்படியாவது அவரை அரசியலில் இருந்து முடக்கிவிடவேண்டும் என்பதற்காகவே அவர் கைது செய்யப்பட்டர்
இறைவனோ அவர் ஆன்மிகத்தில் நுழைய, தவ வாழ்வு மேற்கொள்ள, பயணிக்கும் பாதையைக்  காண்பிக்கும் ஆரம்ப பாடசாலையாக சிறைச்சாலையை மாற்றினார்.

எப்படி சிறைச் சாலையை தவச் சாலையாய் மாற்றியது இறையருள்? தனிமைச் சிறையில் அடை பட்ட அரவிந்தரை வசுதேவ தெய்வ சக்தி ஆட்கொண்டது. "எல்லா இடத்திலும் என்னுடையே சக்தியே நிறைந்துள்ளது. எல்லோருடைய இதயத்திலும் மறைந்திருப்பவன் நானே. நானன்றி வேறில்லை" என்றது. மேலும் தன்னை எங்கெங்கும் காணச்செய்தது.

அவரது தனிமைச் சிறை அறையின் ஒரு புறம் பசுக்கொட்டில், மறுபுறம் சிறைச்சாலைப் பணியிடம்.
 அரவிந்தருக்கு அவரது அறையிலிருந்து வெளி வந்து நடை பயில அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு நடை பயிலும் போது  அவர் சக்தி வாய்ந்த உபநிஷத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டும், பணியாற்றும் கைதிகளை ஆழ்ந்து உற்று நோக்கி அவர்களுக்குள் மறைந்து நிற்கும் இறைச் சக்தியைக் காணவும் முயல்வார்.

 " sarvam khalvidam brahma"  எல்லாம் இறைமயம், எல்லோரிடத்திலும் இறைவன் உள்ளான் எந்ற உபநிஷத மந்திரத்தின் உண்மை அனுபவத்தை அவர் அப்போது பெற்றார். 

"சிறைச் சாலையின் உயரமான சுவர் எனக்கு வசுதேவராகவே காட்சியளித்தது.
என் தனிமைச் சிறையின் முன்னால் இருந்த மரமும் கூட வசுதேவராய் எனக்காக நிழல்தரும் கிளைகளைத் தாங்கி நிற்பதைக் கண்டேன்
சிறைக் கதவுகளும், காவல் செய்தவனும் கூட வாசுதேவனாய்க் காட்சியளித்தனர்.

எனக்கு கரகரப்பான போர்வையும், விரிப்பும் கொடுக்கப்பட்டிருந்தனஅந்தப் போர்வை கண்ணனாகிய என் காதலனின், நண்பனின் அன்புக்கரங்களின்  அணைப்பாய் இதம் தருவதாய்  இருந்தது

சிறைச் சாலையில் உடன் இருந்த கொள்ளையர்கள், கொலைகாரர்கள், திருடர்கள் அனைவரிடமும் நான் நாராயணனைக் கண்டேன்."  

நீதிமன்றத்தில் அலிப்பூர் சதி வழக்கு ஆரம்பமானது.
நீதிமன்றத்தில் இரும்பாலான கூண்டுக்குள் அமர்ந்திருந்த போது அவர் காதில் மீண்டும் ஒலித்தது அந்தக் குரல்!
"கண்விழித்துப் பார்"என்றது. அந்த நீதி மன்றத்தின் நீதிபதியும், அவருக்காக வாதாட வந்த வழக்கறிஞரும்  வசுதேவராகவே காட்சி அளித்தனர்.
"இப்போது உன் பயம் நீங்கியதா? நானே அனைவருடைய மனதிலும் வீற்றிருந்து அவர்களுடைய சொல்லாகவும், செயலாகவும் இருக்கிறேன். உன்னை நானே பாதுகாக்கிறேன். 

நீதி  மன்றத்தில் வழக்கு நடை பெறும் போதும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் தன்னுள் ஆழ்ந்து தியானத்தில் இருப்பார் அரவிந்தர். தன்னுள்ளிருந்து ஒலித்த அந்தக் குரலை மட்டுமே அவர் செவி மடுத்தார்
அக்குரல் மீண்டும்  சொல்லியது, "நானே வழக்கை வழி நடத்துகிறேன். பயம் வேண்டாம். உனக்காகக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய். " 

காரண காரிய தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட, வியக்கத்தக்க பல அனுபவங்களும் அவருக்கு சிறைச்சாலையில் ஏற்பட்டன. சுவாமி விவேகாநந்தரின் குரல் அவருக்கு யோகசாதனையின் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பற்றி பதினைந்து நாட்களுக்கு உரையாற்றியது
யோக சாதனையின் போது அவருடைய  உடல்  பூமியில் படாதவாறு மேலெழும்புகின்ற காட்சியை சிறைக் காவலர்கள் பகிர்ந்துள்ளனர்

நாள்தோறும் அறிவியலால் விளக்கம் தர முடியாத பல அனுபவங்களையும் இறைவன் எனக்குத் தந்தான் என்கிறார் திரு அரவிந்தர்.
".....Day after day He showed me His wonders", says SriAurobindo....things were opened to me which no material science could explain ".

கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "சஞ்சீவினி," என்ற பத்திரிகை அரவிந்தர் சார்பில் வழக்கை  நடத்துவதற்காக நிதி வசூல் செய்தது. நீதிபதி நார்ட்டன் என்பவர் எந்த விதத்திலும் அரவிந்தர் விடுதலை ஆகாமலிருக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அரவிந்தருடன்  லண்டனில் கல்வி பயின்ற சி.ஆர். தாஸ் அரவிந்தரின் வழக்கை எடுத்து நடத்தினார். 


அதற்குக் காரணமாக அமைந்தது சரித்திரப் புகழ் பெற்ற சி. ஆர். தாசின் பேச்சு.'இந்த வழக்கு முடியலாம். குற்றம் சாட்டப்பட்டுள்ள  இவரோ மாபெரும் கவிஞர், தேசியவாதத்தின் தலைவர், சகமனிதநேயமிக்கவர், நாட்டுப்பற்று நிறைந்த இவருடைய எழுத்துகள் காலத்தால் அழியாதவை. சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.
ஆகவே இந்த வழக்குடன் சற்றும் தொடர்பில்லாத இவர் குற்றமற்றவர் என்றார்.

1908,மே 2ஆம் நாள் கைது செய்யப்பட்ட அரவிந்தர் 1909 மே 5 ஆம் தேதி விடுதலை செய்யப் பட்டார்.

(குறிப்பு:  சிறைவாசம்,அனுபவங்கள், வழக்கு, விடுதலை)29 Aug 2017

ஶ்ரீஅரவிந்தர்- 16

ஶ்ரீஅரவிந்தர் - 16

'தன்னை அறிதல்' என்னும் ஆத்மஞானம்  பெற்ற அரவிந்தர் மீண்டும் தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு வாழ்க்கையே இறைமயமாயிற்று. இறைவனே அவருக்கு தலைவராகவும், வழிகாட்டியும் ஆனார்.
இறைவன் தன் விருப்பத்தையே, தன் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதாக உணர்ந்தார். தான் ஆற்றிய உரைகளெல்லாம் இறைவனுடைய உரைகள் என எண்ணினார். தன்னுடைய செயல்களையெல்லாம் செய்வது இறைவனே என அறிந்தார். ஆயினும்  அரசியல் வாழ்விலிருந்து தன்னை அவர் விடுவித்துக் கொள்ள விரும்பவில்லை.

'நான் புரிவன எல்லாம்தான் புரிந்து எனக்கே
வான் பதம் அளிக்க வாய்த்த  நல்நட்பே' என்பது வள்ளலார் வாக்கு.

இனி மீண்டும் அரவிந்தரின் வாழ்க்கைக்கு, வருவோம்!இறைவன் ஒருவரை ஆட்கொள்ள நினைத்தால் எந்த வழியிலாவது அதை நிறைவேற்றிக் கொள்வான். நம்முடைய வாழ்வு , வாழ்வின் நிகழ்வுகள் அனைத்துமே இறைவனின் ஆணைக்குட்பட்டே நடக்கின்றன என்பதை உணர்த்தும் நிகழ்வுகளைக் காண்போம்.
ஏற்கெனவே  11ம்  எண் கட்டுரையில்  அலிப்பூர் சதி வழக்கைப் பற்றிப் பார்த்தோம்.
1908, ஏப்ரல் 30 ஆம் தேதி முசாஃபர்பூர் என்னுமிடத்தில் ஜில்லா நீதிபதியின் மேல் குண்டுவீசிக் கொல்ல திட்டமிட்டனர் அரவிந்தரின் சகோதரர் பாரினும், அவரது நண்பர்களும். மே 1ஆம் தேதி பல தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

1908, மே மாதம் 2ஆம் தேதி நள்ளிரவில் ஶ்ரீஅரவிந்தரை அவரது இல்லத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது பிரிட்டிஷ் அரசு.கைகளில் விலங்கிட்டு அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மே19 ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலம் விசாரணை நடந்தது. 42 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 4000 சான்றாவணங்கள்(exhibits), 300- 400  விளக்கச் சான்றுகள்(proofs) இருந்தன.
222  பேர் சாட்சிகள். இந்த வழக்கு வங்காளத்தில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும்.

அலிப்பூர் சிறையில் ஒன்பதடி நீளமும், ஆறடி அகலமும் உடைய தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்தர். பகவத் கீதையைப் படித்தும்,உபநிஷதங்களின் ஆழ்ந்த கருத்துகளை ஆராய்ந்தும்,தியானம் செய்தும் வாழ்ந்தார். சிறைச் சாலையில் கைதிகளின் பேச்சு,சிரிப்பு, விளையாட்டுக் கூச்சல்கள் என பல சப்தங்களுக்கு நடுவிலும் அவரால் தியானம் செய்ய முடிந்தது. அதே சமயம்  அவர் தனக்குள்ளிருந்து எழும் இறைவனுடைய குரலைக் கேட்க ஆர்வமுடையவராயிருந்தார்

அரவிந்தரைக் கைது செய்வதற்கு சுமார் ஒரு மாதத்துக்குமுன் அரசியல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளும்படி அவரது ஆன்மாவின் குரல் கட்டளையிட்டது..ஆனால் அரவிந்தரோ தன்னை அரசியல் வாழ்விலிருந்து விடுவித்துக் கொள்ளமுடியாதவராக இருந்தார்.

சிறையில் அவருடன் அந்தக் குரல் மீண்டும் பேசியது! " உன்னால் விடுவித்துக் கொள்ள முடியாமல் இருந்த அரசியல் பந்தங்களிலிருந்து நான் உன்னை விடுவித்துவிட்டேன்......உனக்கு மகத்தான வேறு வேலை ஒன்று உள்ளது, அதற்குத் தயார் செய்யவே உன்னை இங்கே கொண்டுவந்திருக்கிறேன்என்றது. அந்த நேரத்தில் அரவிந்தர் மனதாலும் உடலாலும் தளர்ந்து போயிருந்தார்

"நான் இறைவனை தீவிரமாக, மிகுந்த மனஒருமைப்பாட்டுடன் வழிபட்டு என் அறிவு மழுங்கி போகாமலிருக்க வேண்டும் என வேண்டினேன். அந்தக் கணத்தில் என் உடலில்  மென்மையான  குளிர்ந்த காற்று தழுவுவதை உணர்ந்தேன். சூடேறியிருந்த என் மூளை அமைதியடைந்தது. எழுத்துகளில் வடித்தற்கரிய ஒரு ஆனந்தம் என்னுள் நிறைந்தது. அப்போதே என் சிறை வாழ்க்கை துயரமற்றதாயிற்று. அந்தக் கணத்தில்  என் உள்ளம் அளப்பறிய வலிமையடைந்தது.
அதுவரை இருந்த துயரங்கள் சுவடற்று மறைந்தன. தனிமைச் சிறையில் நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்
பிரார்த்தனை....மனிதனை,இறையருட் சக்தியுடன் இணைக்கும் பாலம் என்பதை உணர்ந்தேன்." என்கிறார்.
(இவருடைய சிறை அனுபவங்கள்" சிறைச்சாலைக் கதைகள்" என்ற பெயரில் வெளிவந்துள்ளன.)

(ஶ்ரீஅரவிந்தர், வாழ்க்கைவரலாறு, ஆன்மிக சாதனைகள், அலிப்பூர்சிறைச்சாலை)