26 Jul 2012

சங்கர நாரயணன்

''ஓ ரோஜாப்பூ ரொம்ப அழகாக இருக்கிறது, உன்னைப் போல,'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தால் மங்களவிலாஸ் மாமியின் இரண்டாவது பிள்ளை! அசடு வழிய ஒரு சிரிப்பு, காலில் இருப்பதைக் கழட்டி அடிக்கலாம் போல ஆத்திரம் வந்தாலும் கிறுக்கு என்று திட்டிக்கொண்டே போனாள் சாரதா. தன் சினேகிதிகள் பாமா,  பிரேமாவுடன் மெயின் ரோட்டில் காலடி எடுத்து வைக்கவும் இந்த லூசு சைக்கிளில் வேகமாக  வழுக்கைத்தலை சூரிய ஒளியில் மினுமினுக்கப் போகிறது! அரைக்கிழம் ஆனாலும் பெரிய ஹீரோ என்று நினைப்பு! டேய், எந்த ஷுபாலிஷ் போட்டுக்கறே தலையில, நல்லா பளபளன்னு இருக்கு என்று கேட்கணும் இதுகிட்ட, என்றாள் பாமா!

அடுத்து 'அழகான புடவை, திலகம் நல்லா இருக்கு, போன்ற வெவ்வேறு வியாக்கியானங்கள். தூவென்று துப்பிப் பார்த்தாள், ம்ஹூம் அந்த ஆளுக்கு சூடு சொரணை இருந்தால்தானே! இத்தனைக்கும் அரசாங்கக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் சங்கரநாராயணன்! குழந்தைச் செல்வம் இல்லை. பொழுது போவதற்கு இது போல  கிறுக்குத்தனம்.

அம்மாவிடம் சாயங்காலம் டிபன் சாப்பிட்டுக் கொண்டே சங்கரநாராயணனின் திமிர்த்தனத்தைச் சொல்லப்போய் மாட்டிக்கொண்டாள் சாரதா. இதோ பார், நீ நாளையிலிருந்து பக்கத்து ரோடு வழியாப் போ; போகும் போது புடவைத் தலைப்பை செருகிக்கொண்டு போ! தலையைக் குனிந்துகொண்டு போ. நீ ஏன் அவனைப் பார்த்தாய்? நீ ஏன் அவன் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கிறாய்? இப்படியாக அம்மாவின் புலம்பல்கள் தொடர்ந்தன.

அரசாங்கக் கல்லூரியில் படிக்கும் புவனா அன்று மாலையில் சாரதா வீட்டுக்கு வந்தாள்.  நோட்ஸ் ஏதாவது இருந்தால் கொடு சாரதா. இந்த ஆங்கில ஆசிரியர்  தொல்லை தாங்க முடியவில்லை, வகுப்பில் மானம் போகும்படி அசிங்கமாகப் பேசுகிறது. வேண்டாத கேள்வியெல்லாம் கேட்கிறது என்றவளின் கண்களில் கண்ணீர். அந்த ஆளுக்கு ஒரு சூடு குடுத்தாதான் சும்மா இருப்பான். நான் அது வரை கூடவரேன் என்று போனாள் சாரதா.

 ஒரு நாள் சாலையைக் கடக்கும்போது குறுக்கே வந்தது ருத்ராட்சப் பூனை. பறவைகள் சைக்கிளைச் சுற்றிக் கொண்டன. பிரேமா கேட்டாள், ''சார் மாமி நல்லா இருக்காங்களா? சாயங்காலம் பார்க்க வரேன்னு சொல்லுங்க.''
 ''சார், உங்க காலேஜ்ல  கணக்குப் பேராசிரியர்  ராமன்தான் எங்க அப்பா. நீங்க அவர் கூடப் பேசியிருக்கீங்களா?'' இது பாமா.
 '' ஒங்க கோட்டும் சூட்டும்  ரொம்ப நல்லாஇருக்கு. இல்லியாடி?'' இது சாரதா.
எதிர் பாராத இந்தத் தாக்குதலால் சங்கர நாராயணனுக்கு சப்தநாடியும்ஒடுங்கிப் போனது. தனியாகப் போறவங்களை கிண்டல் செய்வதிலே ஒரு ஆனந்தம்தான். ஆனால் ஒரு சமுதாயத்தில இருக்கிறதும், எல்லாரும் எப்பவும் ஊமையா வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள் என்று எண்ணியதும் முட்டாள்தனம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.  உண்மைக்கதைதாங்க!


25 Jul 2012

அமராவதிபுதூர், குருகுலம் பரிசளிப்பு விழா

                                      
                                                       ''வீடு தோறும் கலையின் விளக்கம்,
                                                        வீதிதோறும் இரண்டொரு பள்ளி:
                                                        நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
                                                        நகர்களெங்கும் பலபல பள்ளி;
                                                        கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
                                                        கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.'' 
                                                                        -- மகாகவி சுப்ரமணிய பாரதியார்.                               

பாட்டுக்கொரு புலவனுக்குத்தான் எத்தனை ஆசை! வீதிக்கு இரண்டு பள்ளி, நகர்களெங்கும்  பலபல பள்ளி! கல்வி  இல்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமாம்! அட நம் நாட்டில் மட்டுமல்ல கடற் புறத்தினில் காணும் பற்பல நாட்டில் எல்லாம் கல்வித் தேவியின் ஒளி ஓங்க வேண்டுமாம். ஓர் ஏழைக்கு கல்வி அறிவு கொடுப்பதைவிட ஏதய்யா பெரிய புண்ணியம்? அன்னச்சத்திரமும், ஆலயங்களும் ஆயிரக் கணக்கில் கட்டுவதைவிட கல்விக்கூடங்கள் அல்லவா வேண்டும்?


பாரதியின் இந்த அழைப்பு தமிழ்நாட்டில், தற்போதைய சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தேவகோட்டை ரஸ்தாவுக்கு இடையே உள்ள அமராவதிபுதூர் என்னும் சிறு கிராமத்தில் ஒரு பள்ளி தோன்றக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றால் மிகையாகாது. குழந்தைச்செல்வம் அற்ற செல்வந்தர் திரு. சுப்ரமணியம் செட்டியார் 1930களில் ஒரு லட்சம் ரூபாயை நிலம் வாங்கிக் கல்விக் கூடம் அமைக்க  வழங்கினார். அவருடைய நன்கொடையால் உருவானதுதான் சுப்ரமணியம் செட்டியார் குருகுலம்  பள்ளி.

காவடி ஆட்டம்
ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை இருந்த இப்பள்ளி, மாணவர் தங்கும் வசதி உடையதாகவும், ஏழை மாணவர்கள் இலவசமாகத் தங்கக் கூடியதாகவும் இருந்தது. இருக்கிறது. 1960 களில் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இந்தப் பள்ளியில் இரண்டே ஆண்டுகள் படித்திருந்தாலும், மூன்று ஆண்டுகளே பணியாற்றி  இருந்தாலும்  தன் தந்தை தலைமை ஆசிரியராகப் பதவி ஏற்றிருந்த காரணத்தால் 20 ஆண்டுகால தொடர்புடையவர், அமராவதிபுதூரையும் குருகுலம் பள்ளியையும் இதயத்தில் ஆராதித்து வந்தவர் ஶ்ரீமான்  சந்திரமணி அவர்கள்.

வங்கிப் பணி செய்து ஓய்வு பெற்றபின்னும் தன்னுடைய வேர்களை மறவாது குருகுலத்தில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தன் தந்தை ஶ்ரீமான்.நாகநாதன் அவர்கள் நினைவாக எஸ்.எஸ். எல். சி,  தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  முதல், இரண்டு, மூன்றாம் இடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளித்து ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வட்டித்தொகை வருமாறு பத்தாயிரம் ரூபாயை வைப்புநிதியில் வைத்தார். மிகக் குறைந்த தொகைதான்.
ஆனால் உடன் பலரும் இந்த நற்பணியில் பங்கு கொள்ளக் காரணமாக அமைந்தது இந்த நற் செய்கை!

தன் விருப்பத்தை பள்ளித்தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தார். இவருடைய விருப்பத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்தது. 15.07.2005 ல் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.குப்பான் செட்டி வரவேற்புரை வழங்க, பள்ளிச் செயலர் திரு.முரு.கணேசன் செட்டியார் தலைமையில், பள்ளித் தலைவர் திரு.சா. சு. முருகப்பச் செட்டியார் முன்னிலையில், கயிலைமணி காசிஶ்ரீ அரு. சோமசுந்தரம் ஶ்ரீமான்.திரு. நாகநாதன் அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து பாராட்டிப் பேசினார்.

ஶ்ரீமான்.சந்திரமணி பரிசளித்து மாணவர்களை வாழ்த்தினார். அவருடைய மாணவர் தமிழாசிரியர் இராம. வள்ளியப்பன்! அவருடைய பணி நிறைவுப் பாராட்டு விழாவும் உடன் இனிதே நடைபெற்றது.

இவ்வாறாகத் தொடங்கிய ஒரு புனிதமான நற்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா திரு.எம் ஆர். கணேசன் செட்டியர் தலைமையில், திருமதி. ஜி. காந்திமதி ஆச்சி அவர்கள் முன்னிலையில் இனிதே நடை பெற்றது.

தலைமை ஆசிரியர் உயர்திரு.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும் நன்கொடையாளர்கள் பலருடைய உதவியால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும்  பரிசளித்துப் பாராட்டினார்கள்.

சிவதாண்டவம்

மாணவ, மாணவியரின் காவடி ஆட்டமும், சிவதாண்டவ நடனமும், நடைபெற்றது. அகிலம் புகழும் கவியரசு. கண்ணதாசன் கல்வி பயின்ற கலைக்கூடம் என்ற பெருமையுடைய குருகுலத்தில் கண்ணதாசன் குடும்பத்தார் பங்கு கொண்டு பரிசளித்துப் பாராட்டினார்கள். உயர் திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் அருமையான கதையைச் சொல்லி, படிப்புடன் பணிவும், நல்லொழுக்கங்களும், தேவை என்பதை விளக்கினார். பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் மறவாமை வேண்டும் என்றார்.
தலைமை ஆசிரியர் திரு. சொக்கலிங்கம், பரிசு பெறும் மாணவி அமுதா,ஶ்ரீமதி. சந்திரமணி.           

நல்ல உள்ளங்களை ஆண்டவன் விரைவில் கவர்ந்து சென்று விடுகிறான்! தற்போது  அதிக மதிப்பெண் பெற்ற மூன் று மாணவியர்களுக்கு ஶ்ரீமான். சந்திரமணி அவர்களின் நினைவாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. உயிருக்கும் மேலாகத் தான் நேசித்த பள்ளியின் பரிசளிப்பு விழாவிலே கலந்துகொண்டு மகிழ அவர் இல்லையே என்று வருத்தமடைந்த தருணத்தில் என் மகன் ''பாருங்கள் அம்மா, ஒலி பெருக்கியை'' என்றான். மூன்று ஒலி பெருக்கிகள் மீதும் ''சந்திரா'' என்ற பெயர்!!


அமராவதி புதூர் குருகுலம் பள்ளியை விரைவில் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த ஆங்கில மீடியம் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதிபுதூர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து படிக்கவரும் மாணவியர் பயன் பெறுவர். தொடர்ந்து ஒரு மகளிர் கல்லூரியாகவும் உயிர்த்தெழவேண்டும் என்பதே என் ஆவல்.

ஆசைப்பட்டு என்னத்தை செய்கிறது? கட்டிடம் வேண்டும், பரிசோதனைக் கூடம், மற்றும் வகுப்பறைகளுக்குத் தேவையான டெஸ்குகள் வேண்டும்! எத்தனையோ தேவைகள்! கடவுளே!
குருகுலத்தில் கல்வி பயின்ற மாணவர்களைத்தான் கூப்பிடுகிறேன்! சிறு துளி பெருவெள்ளமன்றோ?

என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்குத்தான் இங்கே என் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளேன். வணக்கம்.


''நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!''

பாரதியின் வேண்டுகோளின் சக்தியால் கனவு மெய்ப்படுமாக!
மாணவச்செல்வங்கள்13 Jul 2012

ஆட்டோ, ஆட்டோ........

ஆட்டு என்றால் விளையாட்டு, கூத்து என்று பொருள் சொல்கிறது அகராதி. அட இந்த பத்மினியும், வைஜயந்தி மாலாவும் என்னமா ஆடறாங்க, 'சபாஷ் சரியான போட்டி' என்கிறது வஞ்சிக் கோட்டை வாலிபன் சினிமா!
மழையும், காத்தும் பேயாட்டம் ஆடும்-- வானிலை அறிக்கை!
என்ன ஆட்டம் போடறே, அப்பன் வீட்டுக்குப் போ-- புருஷன்!
என்னமா என்னைய ஆட்டிப் படைக்குதுங்க-மனைவி!
ஆடுதல் வல்லானின் ஆட்டத்தால்தான் இந்த உலகம் இயங்குகிறது. அவன் ஆட்டி வைக்கிறான் நாம் ஆடுகிறோம். கடவுளைப் போல நம்மை ஆட்டிப் படைப்பது ஆட்டோ!

அட, கார் இல்லாதவர்களுக்கு இருபத்து நாலு மணி நேரமும் பயணிப்பதற்காகவே இருக்கிறது ஆட்டோ! ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டி வைக்கிறதாலதான் ஆட்டோன்னு பேரு வந்திருக்க வேண்டும். எலும்பு சிகிச்சை நிபுணர்களோடு இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு எல்லாம் ஏதாவது 'tie up' இருக்குமோன்னு சந்தேகப்பட வைக்கிறது ஆட்டோப் பயணங்கள். பள்ளங்களிலே படக் என்று இறங்கி, வேகத்தடைகள் மேலே வெகு வேகமாக ஏறிக் குதித்து நம் உடம்பிலே இருக்கிற எலும்புகள் மளுக் என்று அபாய அறிவுப்பு கொடுக்க, கொஞ்சம் மெதுவாப் போறீங்களா என்று பணிவாக வேண்டிக்கொள்ளாவிட்டால் கண்டிப்பாக ஆட்டோ, 'ஆர்த்தோ க்ளினிக்' வாசலிலதான் போய் நிற்கும்.

ஒரு நாள் ஆட்டோ சாரதியிடம் சொன்னேன் கொஞ்சம் மெதுவா போப்பான்னு. பிலுபிலுன்னு திட்டித்தீர்த்துவிட்டான். ஆட்டோக்களுக்கெல்லாம் முதல் எதிரி ரோடுதானாம். இந்த பெங்களூரு மஹாநகரத்தை பரிபாலனம் செய்யும் அதிகாரிகளில் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் சாலைகளுக்கு எதிரிகள். இம்சை மன்னன் இரண்ய கசியபுவுக்கு அடுத்தார் போல சாலைகளை மாற்றி மாற்றித் தோண்டி ஆட்டோ பாகாங்களை ரிப்பேர் செய்யும் பரம எதிரிகள் என்றார்.

மெட்ரோ ரயிலா, தோண்டு, கேபிள் போடணுமா அந்தப்பக்கம், சாக்கடைக் குழாய் போடணுமா இந்தப் பக்கம், தண்ணீர் பைப் போடணுமா தோண்டு எல்லாப் பக்கமும் என்று தோண்டிவிட்டு அப்படியே போட்டுவிட்டுப் போயிடராங்க. பெங்களூரில ரோட்டைக் கண்டுபிடித்துக் கொடுக்க ரகசிய போலீஸ்தான்மா வரணும், ஆட்டோ டிரைவர் ராஜேஷின் சரியான தீர்ப்பு.

எப்படியோ வேற பொழப்பு இல்லன்னு ஆட்டோதான் ஒட்டிக்கிட்டு இருக்கேன். நஞ்சுண்டையாவின் புலம்பல் இது. என் குழந்தைக்கு உடம்பு சரியில்லே, இந்த டாக்டருங்க பாருங்க சரியா கவனிக்கிறது இல்ல. அம்மா ஒரு நிமிஷம்  ஓரத்தில நிறுத்திட்டு ஒரு டீ குடிச்சிட்டு வந்திடறேன். வெயிட்டிங் சார்ஜ் கம்மிபண்ண முடியுங்களா?

சாந்த்பாஷாவின் ஆட்டோ! எங்க போகணும்? மாமூலான கேள்வி.
ஜே. பீ நகர், முதல் பகுதி. மீட்டார் சரியா இருக்கா?
இருக்கு. எந்த ரூட்டில போகணும்? ரிங்ரோட்டில போனா திரும்பாம நேரா போயிடலாம். (எனக்கு திரும்பி வரணுமே)
எத்தனை சிக்னல்ல நிக்கணும்! அந்த ரூட் வேண்டாம்- நான்.
எப்படி சொல்றீங்களோ அப்படியே போறேன், ஏறுங்க.

சோமசேகர் வழி கேட்டுக்கொண்டே போனார். ரைட்டா, லெப்டா, நேரேயா? ஒரு நிமிடம் ஏதோ நினைவு, சடார் என்று வேறே வழியில் திருப்பிட்டார்.
என்னப்பா இது?
நீங்க சொல்லலையே? ( அதாவது நமக்கு வழி தெரியுமான்னு செக்கிங்)

ஒரு நிமிஷம், சிலிண்டர் மாத்திடறேன்னு சொல்பவர்களும், ரெண்டே நிமிஷம் காத்து நிரப்பிக்கறேன் என்பவர்களும், ஓரங்கட்டி வண்டியை நிறுத்தி செல்லில் பேசுபவர்களும், எல்லாவண்டிகளையும் முந்திக் கொண்டு போய் நம்மை பயமுறுத்துபவர்களும், முணுமுணுத்துக் கொண்டே ஓட்டும் மூட் அவுட் ஆனவர்களும், ஸ்பீக்கரில் பாட்டுப் போட்டு தலைவலி வரவழைப்பவர்களும் என பலமுகங்கள் உடைய ஆட்டோ ஓட்டுனர்கள்.

எனக்கு ஒரு கெட்ட பழக்கம்! எந்த ஆட்டோவில் ஏறினாலும் ஓட்டுனர் பெயரும், வண்டி எண்ணையும் எழுதி வைத்துக் கொள்வதுதான் அது. சில நாட்களில் போகும் போது வெங்கடேஷ கவுடாவும், வரும் போது வெங்கடேஷும் ! பெருமாள் ஆசீர்வாதம்! இன்னார் உடைய ஆட்டோவில் போனேன் என்றால் சிரிப்பாள் என் பெண்! பஷீர், நூருல் ஹாசன், சங்கரலிங்கம், மாரி கவுடா எனப் பெயர் பட்டியல் நீளும்.

பச்சை நிற ஆட்டோக்கள் சீட்டோடு நம்மைக் கீழே கவிழ்க்கும் சதித் திட்டம் போடுவதில்லை என்பதால் அதில்தான்பெரும்பாலும் பயணிப்பது. என்னதான் சொல்லுங்க, பெங்களூரிலிருந்து சென்னை போக ஆகும் செலவைவிட நாலுமடங்கு காசு ஆட்டோக்களில் போக செலவு செய்யவேண்டும் சென்னை மாநகரிலே! கரெக்டாக சில்லறையைக் கூட திருப்பித் தந்துவிடும்  பெங்களூர் ஆட்டோ சாரதிகளுக்கு ஒரு 'ஜே' போடதான் வேண்டும்.

என்னதான் ஆட்டிவைத்தாலும் ஆட்டோ இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எப்படிப் போவது? ஆட்டோக்கள் வாழ்க! ஆடல் வல்லான் வாழ்க!
11 Jul 2012

Twinkle, Twinkle Grandpa Star

பாட்டி வீடு இருக்கும் காலனியில் இளந்தாய்மார்கள் அணி ஒன்று உண்டு. அதிலே பெரியவர்களிடம் மதிப்பும், மரியாதையும், உடைய பெண் லஷ்மி. கணவருக்கு பெரிய வேலை. மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாய். பெரியவளுக்கு ஆறு வயதான போது ஒரு வயது வித்யாசத்தில் இரண்டு பெண்கள்.
மூன்றும் மூன்று முத்துக்கள். திவ்யா பகவத் கீதையும், குட்டிகள் இரண்டும் தெய்வப் பாடல்கள் கற்றுக் கொள்ளவும் பாட்டியிடம் வருவார்கள். தாத்தாவிடம் கேள்விகள் கேட்பார்கள். வெகு சீக்கிரம் கற்றுக் கொடுத்தவற்றைக் கற்றுக் கொள்வார்கள். பயமெல்லாம் கிடையாது! யார் பாடச்சொன்னாலும் பாடுவார்கள்.
அங்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. நடந்து கொண்டிருந்த பாட்டியிடம் ஓடி வந்தாள் அக்ஷயா.'' பாட்டி, அது தேன் கூடு தானே?''
ஆமாம்  அதிலிருந்து தான் தேன் கிடைக்கிறது.  உனக்கு பிடிக்கும் இல்லையா?
 தேனை எப்படி எடுப்பாங்க? -அடுத்த கேள்வி. பதில் கிடைத்ததும்,
''அப்பிடின்னா, நாம்ப தேனிய எல்லாம் கொலை பண்ணிட்டு தேனைத் திருடரோமா?
நான் இனிமே தேனே சாப்பிடமாட்டேன்,'' என்று தீர்ப்பு சொல்லிவிட்டுப் போனாள். ஒரு குழந்தையின் கருணை நிறைந்த இதயத்தின் வெளிப்பாடு.
 காலையில் பள்ளிக்கூடம் போக பஸ் ஏற தாத்தா வீட்டு முன்னால்தான் நிற்க வேண்டும்.
கைஅசைத்து டாட்டா காட்டும் தாத்தா ஒரு நாள் டாட்டா காட்டிவிட்டு மேலுலகம் போனார்.

பாட்டியிடம் வந்தார்கள் அக்ஷயாவும்,ஹரிப்ரியாவும். ''பாட்டி, பாட்டி தாத்தா எங்கே போனார்? சாமிகிட்ட போயிட்டார்னு அம்மா சொல்றாங்க.'' பாட்டி சிரித்தாள்.
பாட்டி, ப்ரியா சொல்றா, தாத்தா 'ஸ்டார்' ஆயிட்டார்னு-இதுஅக்ஷயா.
ஆமாம், உங்க வீட்டுக்கு மேல ராத்திரியில தெரியுது இல்லியா? அதுல ஒரு நட்சத்திரம்தான் தாத்தா!==இது ஹரிப் ப்ரியா.
தாத்தா அங்கே இருந்துதான் நம்பளை எல்லாம் பாத்துட்டு இருக்கார் -இது அக்ஷயா
நாளைக்கு எனக்கு கணக்கு 'எக்ஸாம்' இருக்கு. சாமி ஆனதனாலதான் தாத்தா ஸ்டார் ஆயிட்டார். நான் தாத்தாவ வேண்டிகிட்டா நான் பரிட்சை நல்லா எழுதுவேன், தெரியுமா?--இது ஹரி ப்ரியா.
அக்ஷயா,ஹரிப்ரியா,  நீங்க ரெண்டுபேரும் சரியா படிச்சாதான் நல்லா பரிட்சை எழுதமுடியும். படிக்காம தாத்தா ஹெல்ப் பண்ணமாட்டார், இது பாட்டி.
பாட்டி, பாட்டி பக்கத்து வீட்டில இருக்காரே சாந்தாவுடைய தாத்தா, அவருக்கு நம்ம தாத்தாவவிட நாலு வயசு ஜாஸ்தினு அம்மா சொன்னாங்க. அவரு இன்னும் இருக்காரே, ஏன் பாட்டி, நம்ம தாத்தா மட்டும் சாமிகிட்ட போனாரு?
 வயதானவர்கள் யார் வந்தாலும் அக்ஷயா இந்தக் கேள்வியைக் கேட்கிறாள்!
குழந்தைகளின் கேள்விகளுக்கு யாரால் பதில் சொல்லமுடியும்?


பெண் குழந்தையும் கல்வியும்

திருமணமான இரு இளஞ்சிறுமிகள் கல்வி பயில அனுமதி!
திருமணமான  இளம்பெண்களை கல்விபயில அனுமதித்தால் மற்ற மாணவ, மாணவியருக்கு முன் உதாரணமாக ஆகிவிடும். ஆகவே தவறான எடுத்துக்காட்டை ஆதரிக்க கூடாது!

இந்த இரண்டும் 7.7.12, இந்து பத்திரிக்கையின் கடைசிப் பக்கச் செய்திகள். 
 17 வயதான என் பெண் 402/500 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். என் சகோதரனுக்கே திருமணம் செய்துவிட்டேன். அவனோ மீண்டும் வேலையின் பொருட்டு  வெளிநாடு  போகிறான். மனைவி மேலும் படிக்க அனுமதி கொடுத்து விட்டான். அதனால் கல்வித் துறை அதிகாரிகளின் உதவியோடு பதினொன்றாம் வகுப்பில், அரசாங்கப்பள்ளியில் சேர்க்கமுடிந்தது என்று பெண்ணின் தாய் சொல்லியிருக்கிறார்.

அகில இந்திய மகளிர் மன்றத் தலைவி குழந்தைத் திருமணங்கள் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், ஆயின் திருமணமானசிறுமிகள் படிக்கவிரும்பினால் தடை செய்யக் கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

குழந்தைத் திருமணம் செய்பவருக்கு, இரு தரப்புப் பெற்றவர்களுக்கும் ஒராண்டு கடுங்காவல் தண்டனையையாவது கொடுத்தால்தான் இந்தப் பழக்கம் மாறும். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்திருந்தால்தான் திருமணம் செய்யலாம் என்ற சட்டமும் வந்தால் பரவாயில்லை.

அரசாங்கப் பள்ளிக் கூடங்களின் தரம் அதிகரித்தால்தான் சரியான கல்வியை அனைவருக்கும் கொடுக்கமுடியும்.

கல்வித்திட்டத்திலும் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பாடங்கள் தேவை. 'வாழ்க்கைக் கல்வி,' என்ற பெயரில் ஒரு வகுப்பு நேரம் ஒதுக்கப்படவேண்டும். அவர்களுடைய உரிமைகள் உணர்த்தப்பட வேண்டும். திருமண வயதுக்கு, அதாவது பெண்கள்(18) வயதுக்கு முன்னால் திருமணம் செய்து கொள்ள மறுக்கவேண்டும்.  திருமணத்திற்குப் பின்னால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் நிச்சயமாக மாணவ, மாணவியருக்குத் தெரிய வேண்டும்.

ஆண்,பெண் உறவின் விளைவுகள், குடும்பவருமானத் தேவைகள்,  ஆகியவைகள் இருபாலருக்கும் தெரியவேண்டும். ஒரு ஆண் மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது தவறு, தண்டனைக்கு உரியது என்பது உணர்த்தப்பட வேண்டும். உண்மையாகவே கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பலதார மணங்களை கட்டுப்படுத்தமுடியும்.

 எதுக்காக இதையெல்லாம் எழுதரேன்னு பாக்கரீங்களா? வயித்தில ஒன்னு, இடுப்புல ஒன்னு, கைபிடிச்சுக்கிட்டு ஒன்னு என்று ரோட்டோரத்தில வேலை செய்யராங்க பாருங்க பெண்கள்
அவங்க சொன்ன கதைகள்தான்.பெண்ணுக்குப் படிப்பறிவு இருந்தால் இந்த அவல நிலைவருமா?

கல்யாணம் பண்ணி மூணு பிள்ளையைக் கொடுத்துவிட்டு, போரடித்ததும் அடுத்து மீண்டும் மாப்பிள்ளை வேஷம் போடத்தயாராகும் அஹங்காரம் மிக்க ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கவாவது பெண்களுக்கு கல்வி வேண்டும்.

பணக்காரவர்கத்திலும் இந்த அக்கிரமம் நடக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால் தவறு செய்பவரைப் பின்பற்ற வேண்டிய அவசியமுமில்லை. பெண் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு அளிப்போம்.