11 Feb 2018

அருட்பாவில் அருவி

அருட்பாவில் அருவி

 நீர் வீழ்ச்சியை அருவி என்னும் அழகு தமிழ்ச் சொல்லால் அலங்கரிக்கிறோம்
தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்’, என்று  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்பக் கவிராயர்  குற்றால அருவியின் சிறப்பை
எடுத்துக் கூறுகிறார்குற்றாலத்தின் ஐந்தருவி, தேனருவி இரண்டும் பிரபலமானவை
 கர்நாடக மாநிலத்தின் சிவசமுத்திரம், ‘ஜோக்ஃபால்ஸ்நீர்வீழ்ச்சிகள் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வனவாம்.
மலையிலிருந்து கீழ் நோக்கிப் பாயும் நீர் முழு வேகத்துடன் வீழ்வதையே நீர்வீழ்ச்சி என்கிறோம்.
அடடா, என்ன திடீரென்று அருவி ஆராய்ச்சி?

நேற்று வள்ளல் பெருமானின் திருவருட்பாவில் இடம் 11பெற்றுள்ளமகாதேவ மாலையின் அழகை நுகர்ந்து கொண்டிருந்தேன். எத்தனை இனிமையான பாடல்கள்!  

நீர்வீழ்ச்சிகளில் மழைக்காலங்களில் அதிக நீர் கொட்டும், மற்ற நாட்களில்  நீர்குறைந்துவிடும்அருவியே ஆனாலும் குறைபாடுடையதுதான்!  

குறையவே குறையாமல் இடைவிடாது ஒரேபோல வழிந்து கொண்டே இருக்கும் அருவியை உங்களுக்குத் தெரியுமா?   
வள்ளல் பெருமான் சொல்கிறார் அப்படி ஓர் அருவியிருக்கிறது என்று! அதுதான் இறைவனுடைய அருளாகிய அருவி

இறைவனுடைய அருளிருந்தால்தான் எதுவுமே நடக்கும்இல்லாவிடில் ஓரணுவும் அசையாது! அவனருள் இருந்தால்தான் அவனை வணங்கமுடியும்

அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே.
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்கவென்று அருளிய சிவமே
 -அகவல்

அவனுடைய அருள் தங்கு தடையின்றி வழிந்து ஒழுகும் நீர்வீழ்ச்சி!
நீர் வீழ்ச்சி என்றால் மலை வேண்டாமா
மலையிலிருந்துதானே அருவிகள் தோன்றுகின்றன

மலைகள் கம்பீரமானவை! நம்பிக்கையளிப்பவை! கயிலாய மலையைக் 
கண்டு பரவசமடையாதவர்களும் உண்டோ
பழனி மலையைப் பார்த்து பக்திவசப்படாவதர்கள் யார்?
அருணாசலத்தை வலம் வந்து மனம் நெகிழாதவர் எவர்?

இறைவனோ இயற்கை இன்பம் நிறைந்த, ஓங்கி உயர்ந்த 
ஆனந்த மலையாய் நிற்கிறானாம்! அவனுடைய 
ஆனந்தத்தில்
அருளாகிய அருவி பொங்கிப் பெருகுகிறது
அருள் என்றால் என்ன?
அருள் என்றால் பிற உயிர்களிடம் நாம் காட்டும் இரக்கம், கருணை
அதையே ஜீவகாருண்யம் என்பார் வள்ளல்உடலாலோ, மனதாலோ துன்பப்படும் எவ்வுயிர்க்கும் அத்துன்பம் நீக்குதலே ஜீவகாருண்யம். அதனால்தான் புலால் மறுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். எவரிடம் இந்த அருள் உள்ளதோ அவர்களே ஈசனுக்கு நெருங்கியவர்கள்!

இறைவனுடைய இந்த அருளாகிய அருவி பொங்கிப் பெருகி வழிந்து வழிந்து  தங்கு தடையின்றி வெளியே பாய்கிறது! அவனருளாலே அந்த அருளருவியில் நனைந்து அனுபவிக்கும் பேறு பெற்ற வர்கள் யோகிகள்ஆனால் யோகம் செய்யாமலே அருட்பாவைப் படித்து அந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம். அந்த ஆனந்தத்தைத் தரும் ஒப்பற்ற திருவருட்பாவாகவும் இறைவன் விளங்குகிறான்.

கருணை நிறைந்து அகமும் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கெல்லாம் களை கணாகிஎன்று காப்புச் செய்யுளிலேயே இயம்புகிறார் வள்ளலார்

அருளருவி வழிந்துவழிந் தொழுக வோங்கும்
ஆனந்தத் தனிமலையே
என்ற இந்த வரிகள் தியானத்திற்கு உரியதாகும்

உள்ளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழுந்தேனாய்விளங்கும் வள்ளலை வள்ளலின் வாய்மொழி அறிந்து இன்புறுவோமாக.

  • வள்ளலார், மகாதேவமாலை, பாடல் 35, அருவி,அருள்,திருவருட்பா
  • 11-2-18,ஞாயிறு22 Nov 2017

22-11-17-கூகுள் சிறப்பிக்கும் இரும்புப் பெண்மணிகள்- மதிப்பிற்குரிய ருக்மாபாய்

தன்னம்பிக்கையும்,மன உறுதியும்,விடாமுயற்சியுமுடைய பெண்கள்  பலரும் வாழ்ந்த நாடு நம் பாரத நாடு. இவர்களில் மருத்துவத் துறையில் சிறந்த பணியாற்றிய மதிப்பிற்குறிய ருக்மாபாய் அவர்களை கூகுள், டூடுல் எனப்படும் ஓவியம் மூலமாக சிறப்பித்துள்ளது

கேள்விப்படாத பெயராக அல்லவா இருக்கிறது? அப்படியென்ன புதுமையை இவர் செய்தார்?
பதினெட்டாம் நூற்றாண்டில் கடல் கடந்து சென்று ஒரு பெண் மருத்துவம் பயில்வதும், விருப்பமில்லாத திருமண உறவிலிருந்து மணமுறிவு பெறுவதும்
பெரிய சாதனைகள் அல்லவா?

1864 ஆம் ஆண்டு பம்பாயில் வசித்த ஜனார்தன் பாண்டுரங்கா, ஜெயந்திபாய் தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார்  ருக்மாபாய்.அவருடைய 8 ஆம் வயதில் தந்தையை இழந்தார். 11 ஆம் வயதில் தாதாஜி பிகாஜி,என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ருக்மாபாயின் தாய் ஜெயந்திபாய், சகாராம் அர்ஜுன் என்ற தலைசிறந்த மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார்.

ருக்மாபாய் திருமணத்திற்குப் பிறகும் தன் தாயுடனும்,வளர்ப்புத் தந்தையுடனுமே வாழ்ந்து வந்தார். அவரை மணம் புரிந்த தாதாஜி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து  தன் மனைவி தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஆனால் விருப்பமில்லாத ஒருவருடன் வாழ முடியாது என்று மறுத்தார் ருக்மாபாய். இந்த வழக்கு மூன்றாண்டுகாலம் நடந்தது. இந்த வழக்கு குறித்து பல விவாதங்களும் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடந்தன. இறுதியில் ருக்மாபாய் கணவருடன் வாழ வேண்டும் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றது நீதி மன்றம்! ருக்மாபாயோ சிறை தணடனையை அனுபவிக்கவே தயாராயிருந்தார்.இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் நீதி மன்றத் தீர்ப்பை ஒதுக்கித் தள்ளினார்
மாறுதலை விரும்பாத பழமைப் பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி திருமண வயது நிர்ணயச்சட்டம் 1891 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
1888ல் சட்டப்படி விவாகரத்து பெற்றார் ருக்மாபாய்!

பிறகு மருத்துவம் பயில இங்கிலாந்து சென்றார். பலருடைய ஆதரவினால் மருத்துவப் படிப்பை சிறப்பாக முடித்த ருக்மாபாய் 1894 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.சுமார் 35 வருட காலம் சூரத், ராஜ்கோட், பம்பாய் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 1955 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி இயற்கை எய்தினார்

ஒரு மருத்துவராக அவர் ஆற்றிய தொண்டு பாராட்டற்குரியதுஅதே நேரத்தில் தன்னுடைய சுதந்திரத்திற்காக அவர் மன உறுதியுடன் போராடி, மணமுறிவு பெற்றது ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியதாகும்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களும்  மன உறுதியும், தன்னம்பிக்கையும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ருக்மாபாயின் வாழ்வு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்.
-நன்றி,கூகுள்1 Oct 2017

ஶ்ரீ அரவிந்தர் -18


அலிப்பூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஶ்ரீ அரவிந்தர் 1909, மே மாதம் 30 ஆம் தேதி ' உத்தரபாரா' என்னுமிடத்தில் உரையாற்றினார். அவர் மீதிருந்த அன்பாலும்மரியாதையாலும் மாலை அணிவித்து வரவேற்க சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்தனர். இங்குதான் அவர் அலிப்பூர் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக் கூறினார்
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதற்குத் தேவையான உள்ள வலிமையை, சக்தியைப் பெறுவதற்கே நான் யோக வாழ்வைத் தேர்ந்தெடுத்தேன்!ஆனால் என்னுள் என்னை இயக்கும் தெய்வீக சக்தியை அறிந்து, உணர்ந்து அதனோடு இரண்டறக்கலந்த அனுபவம் தந்த ஆழ்ந்த அமைதியில் தெய்வ வாழ்க்கையைவிட்டு வெளியே வர இயலாதவனாய் உள்ளேன்.

 இந்தியாவிற்கு சுதந்திரம் நிச்சயமாகக்கிடைக்கும் என்ற வாக்குறுதியை இறைவன் எனக்குத் தந்தான். அதே சமயம் யோக வாழ்வைத் தொடர்ந்து புதிய  திருவுருமாற்றத்தை அடையவும், அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் வேண்டிய பணியைக் கொடுத்தான், என்றார்.

அரவிந்தர் சிறையில் இருந்த ஓராண்டில் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. திலகர், கோகலே போன்ற தலைவர்கள்,சிறையிலிருந்தனர். சிலர் அந்தமான் தீவின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தீவிர வாதிகள் சுதந்திரம் பெற வேண்டி பல  ரகசியசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாக அரவிந்தரின் பேனா மாறியது.

அரவிந்தர் மீண்டும் தன் வேலைகளைத் தொடர்ந்தார், "கர்மயோகின்" என்ற ஆங்கிலப்பத்திரிகையும், "தர்மா" என்ற வங்காளப் பத்திரிகையையும் ஆரம்பித்தார். பூரண சுதந்திரமே குறிக்கோள் என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார்அவரது எழுத்துகளும், உரைகளும் ஆங்கிலேயர்களுக்கு திகிலூட்டின.எனவே பல வழிகளிலும் அவரைஅடக்க முயன்றனர். எப்படியாவது மீண்டும் கைதுசெய்து நாடு கடத்திவிட வேண்டுமென எண்ணினர்

1910 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில் அவரைக் கைது செய்யவும், கர்மயோகின் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தேடவும் அதிகாரிகள் வரப் போவதாக அரவிந்தருக்கு செய்தி வந்தது. அவரை வழி நடத்திய தெய்வக் குரல் அவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமுள்ள சந்திர நாகூருக்குச் செல்லும்படிக் கட்டளையிட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் அரவிந்தர் தன் நண்பர்கள் இருவருடன் கங்கைக்கரையை அடைந்து சாதாரணப் படகொன்றில் பயணம் செய்து விடியலில் சந்திர நாகூரை அடைந்தார். அரவிந்தரின் அரசியல் பணி அன்றுடன் முடிந்தது.

அங்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ரகசியமாக நண்பர்கள் பாதுகாப்பில் சாதனைகளில் ஆழ்ந்தவரை மீண்டும் தெய்வக் குரல்  வேதபுரி எனப்பட்ட புதுவைக்குச் செல்லும்படி ஆணையிட்டது.

புதுவையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் ரகசியமாகச்செய்யப்பட்டன.
1910, ஏப்ரல் 1 ஆம் தேதி அரவிந்தர் தன் நண்பரோடு 'டியூப்ளெக்ஸ்'என்ற கப்பலில் 
பயணித்தார்.
1910, ஏப்ரல் 4 ஆம் நாள். மாலை நான்கு மணிக்கு புதுவையில் இறங்கிய அரவிந்தரை சீனிவாசாச்சாரியும்,மோனியும் வரவேற்று சங்கர் செட்டியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.ஸ்வாமி விவேகாநந்தரும் அதே வீட்டில் அவரது தென்னிந்திய விஜயத்தின்போது  தங்கியிருந்தார் என அறிகிறோம்.

ரகசியப் போலீசாரின் பல தொந்தரவுகளுக்கு ஆளான போதிலும் அரவிந்தர் தன் யோக சாதனைகளக் கை விடவில்லை. 1914 ஆம் ஆண்டு அன்னை புதுச்சேரி வந்தார்.  
அரவிந்தர்  அன்னையின் யோகப் பயிற்சியே 'integral yoga'  எனப்படுகிறது. விழிப்புணர்வுடன், மன ஒருமைப்பாட்டுடன்  கணந்தோறும் இறைவனில் வாழ்வதுதான் அது

பின்பு அரவிந்த ஆசிரமம் தோன்றியது
 வங்கத்தில் பிறந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, பரோடாவில் பணியாற்றி, வங்கத்தில் சுதந்திரத் தீயை மூட்டி,சுதந்திரம் எனது பிறப்புரிமை,அதனை அடைந்தே தீருவோம் என முழங்கி,சிறையில் இறையனுபவம் பெற்று, புதுச்சேரியில் திருவுருமாற்றம் பெற்று 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார். ஐந்து நாட்கள் அவருடைய உடல் ஒளியால் சூழப்பட்டிருந்தது.
ஶ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து தன்னுடைய வாக்குறுதியை வசுதேவ ஶ்ரீகிருஷ்ணன் நிறைவேற்றினார் என்பது அரவிந்த பக்தர்களின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் அரவிந்தரின்  யோக வழியைப் பின்பற்றுவோர் புதுச் சேரியில் கூடி அவரது ஆசிரமத்தில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். அன்று அவர் வாழ்ந்த அறைக்குச் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.

ஓம் நமோ பகவதே ஶ்ரீ அரவிந்தாய! ஓம் நமோ பகவதே ஶ்ரீ மீராம்பிகாய!
                   வணக்கம்.