அருட்பாவில் அருவி
நீர் வீழ்ச்சியை அருவி என்னும் அழகு தமிழ்ச் சொல்லால் அலங்கரிக்கிறோம்.
‘தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்’, என்று குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்பக் கவிராயர் குற்றால அருவியின் சிறப்பை
எடுத்துக் கூறுகிறார். குற்றாலத்தின் ஐந்தருவி, தேனருவி இரண்டும் பிரபலமானவை.
கர்நாடக மாநிலத்தின் சிவசமுத்திரம், ‘ஜோக்ஃபால்ஸ்’ நீர்வீழ்ச்சிகள் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வனவாம்.
மலையிலிருந்து கீழ் நோக்கிப் பாயும் நீர் முழு வேகத்துடன் வீழ்வதையே நீர்வீழ்ச்சி என்கிறோம்.
அடடா, என்ன திடீரென்று அருவி ஆராய்ச்சி?
நேற்று வள்ளல் பெருமானின் திருவருட்பாவில் இடம் 11பெற்றுள்ள “மகாதேவ மாலை” யின் அழகை நுகர்ந்து கொண்டிருந்தேன். எத்தனை இனிமையான பாடல்கள்!
நீர்வீழ்ச்சிகளில் மழைக்காலங்களில் அதிக நீர் கொட்டும், மற்ற நாட்களில் நீர்குறைந்துவிடும். அருவியே ஆனாலும் குறைபாடுடையதுதான்!
குறையவே குறையாமல் இடைவிடாது ஒரேபோல வழிந்து கொண்டே இருக்கும் அருவியை உங்களுக்குத் தெரியுமா?
வள்ளல் பெருமான் சொல்கிறார் அப்படி ஓர் அருவியிருக்கிறது என்று! அதுதான் இறைவனுடைய அருளாகிய அருவி!
இறைவனுடைய அருளிருந்தால்தான் எதுவுமே நடக்கும். இல்லாவிடில் ஓரணுவும் அசையாது! அவனருள் இருந்தால்தான் அவனை வணங்கமுடியும்.
“அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே.
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்கவென்று அருளிய சிவமே”
-அகவல்
அவனுடைய அருள் தங்கு தடையின்றி வழிந்து ஒழுகும் நீர்வீழ்ச்சி!
நீர் வீழ்ச்சி என்றால் மலை வேண்டாமா?
மலையிலிருந்துதானே அருவிகள் தோன்றுகின்றன?
மலைகள் கம்பீரமானவை! நம்பிக்கையளிப்பவை! கயிலாய மலையைக்
கண்டு பரவசமடையாதவர்களும் உண்டோ?
பழனி மலையைப் பார்த்து பக்திவசப்படாவதர்கள் யார்?
அருணாசலத்தை வலம் வந்து மனம் நெகிழாதவர் எவர்?
இறைவனோ இயற்கை இன்பம் நிறைந்த, ஓங்கி உயர்ந்த
ஆனந்த மலையாய் நிற்கிறானாம்! அவனுடைய
ஆனந்தத்தில்
அருளாகிய அருவி பொங்கிப் பெருகுகிறது.
அருள் என்றால் என்ன?
அருள் என்றால் பிற உயிர்களிடம் நாம் காட்டும் இரக்கம், கருணை!
அதையே ஜீவகாருண்யம் என்பார் வள்ளல். உடலாலோ, மனதாலோ துன்பப்படும் எவ்வுயிர்க்கும் அத்துன்பம் நீக்குதலே ஜீவகாருண்யம். அதனால்தான் புலால் மறுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். எவரிடம் இந்த அருள் உள்ளதோ அவர்களே ஈசனுக்கு நெருங்கியவர்கள்!
இறைவனுடைய இந்த அருளாகிய அருவி பொங்கிப் பெருகி வழிந்து வழிந்து தங்கு தடையின்றி வெளியே பாய்கிறது! அவனருளாலே அந்த அருளருவியில் நனைந்து அனுபவிக்கும் பேறு பெற்ற வர்கள் யோகிகள். ஆனால் யோகம் செய்யாமலே அருட்பாவைப் படித்து அந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம். அந்த ஆனந்தத்தைத் தரும் ஒப்பற்ற திருவருட்பாவாகவும் இறைவன் விளங்குகிறான்.
‘கருணை நிறைந்து அகமும் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கெல்லாம் களை கணாகி’ என்று காப்புச் செய்யுளிலேயே இயம்புகிறார் வள்ளலார்.
“அருளருவி வழிந்துவழிந் தொழுக வோங்கும்
ஆனந்தத் தனிமலையே”
என்ற இந்த வரிகள் தியானத்திற்கு உரியதாகும்.
‘உள்ளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழுந்தேனாய்” விளங்கும் வள்ளலை வள்ளலின் வாய்மொழி அறிந்து இன்புறுவோமாக.
- வள்ளலார், மகாதேவமாலை, பாடல் 35, அருவி,அருள்,திருவருட்பா
- 11-2-18,ஞாயிறு
No comments:
Post a Comment