16 Dec 2013

குருவிக் கூடு........

அடேயப்பா, எத்தனை புத்தகங்கள்! எப்படி சேர்த்தீர்கள்? எத்தனை வருடமாக?  அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா? என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் பார்த்து மூக்கின் மேல் கை வைத்தவர்கள் ஏராளம் பேர். புத்தகம் மட்டும் கடன் கொடுத்தால் திரும்ப வராது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை!
அதனால் புத்தகம் கேட்டால் வேறு ஏதாவது பேச்சை மாற்றுவது என் வழக்கம். ஆனால் அதையும் மீறிக் கொடுத்ததும் உண்டு. ஒரு சில திரும்ப வரும். சில வராது. சில புத்தகங்கள் மடக்கப் பட்டு, நுனி முக்கோணமாகி, கசங்கி வரும். அடி பட்ட குழந்தை!

புத்தகங்களை மடக்கினாலோ, கவிழ்த்து வைத்தாலோ வருத்தமாக இருக்கும்.. புத்தகங்களின் பக்கங்களை அடையாளம் வைக்கவென்றே அழகான வடிவில் கத்தரிக்கப்பட்ட 'விரலளவு அடையாளக் குறியீடுகள்,' புத்தகங்களிலேயே வைத்து விடுவோம்.

சென்னை மாநகரத்தின் அத்தனை புத்தக விற்பனை நிலையங்களுக்கும் பள்ளி நூலகத்திற்காக புத்தகங்கள் வாங்கப் போயிருக்கிறேன். 'ஹிக்கின்பாதம்ஸ்' எனக்கு மிகவும் பிடித்தமான புத்தக விற்பனை நிலையம். ஆண்டு விழா பரிசுகள் வாங்க  ஒரு நாள் முழுதும் செலவிடுவோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் சுற்றிச் சுற்றி கால் வலி வந்துவிடும். ஆனாலும் அடுத்த நாள் வரமுடியாது என்பதால் விடாமல் கண் வலிக்க புத்தகங்களை மேய்வோம்.

சிறுவர்களுக்கான புத்தகங்கள், நாவல்கள், ஆங்கில இலக்கியங்கள், பொது அறிவுக் களஞ்சியங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!.....! புத்தக உலகம் மிகப் பெரியது. நான் வேலை செய்த இரு பள்ளி நூலகங்களின் புத்தகங்கள் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதை எதற்காக எழுதுகிறேன்? என்னை புத்தக உலகிற்கு அறிமுகப் படுத்தியது என் பொறுப்பில் விடப்பட்ட அதிகப்படியான நூலக வேலைதான். எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட.

மதிய நேர உணவுக்குப் பின் ஆசையுடன் வரும் மாணவர்களுக்கு அம்புலிமாமா, கோகுலம், அமர சித்திர கதைகள், சம்பா ஆகிய குழந்தைகள் பத்திரிகைகளைக் கொடுப்பதிலும், அவர்களுக்கு உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதிலும்  மகிழ்வேன்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரி முனையில்! சங்க இலக்கியங்கள் முழுதும் அங்கே கிடைக்கும். லிப்கோ பதிப்பகம், தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, நேஷனல் புக் டிரஸ்ட்,
பாரி நிலையம், வானதி பதிப்பகம், பழனியப்பா பதிப்பகம், .... தி. நகரில்., சென்னையின்
எல்லா பதிப்பகங்களுக்கும் போயிருக்கிறேன்.

மெரினாவில் காற்று வாங்கி விட்டுத் திருவல்லிக்கேணி  நடை பாதைக் கடைகளில்
வேர்க்க விருவிருக்கத் தேடித் தேடி வாங்கிய புத்தகங்களிலிருந்து ஆரம்பித்து....பாண்டிச்சேரி கடற்கரைக் காற்றை விட்டுப் பிரிய மனமின்றி, பெட்டி நிறைய வாங்கிய புத்தகங்களைத் தூக்க முடியாமல் சுமந்து சேர்த்த புத்தகங்களின் குவியல்! எங்களுடைய செல்லக் குழந்தைகள்!

பாண்டிச்சேரி 'ஹிக்கின்ஸ் பாதாம்' புத்தகக் கடை ஒன்றும் ரொம்ப பெரிதில்லை! ஆனால் நிறைய தமிழ் புத்தகங்கள் கிடைக்கும். 'திருவருட்பா ஆறாம் திருமுறையும், திரு.கோவிந்த சாமி ஐயா அவர்களின்  அகவல்  உரை இரண்டு பகுதிகளும் அங்கு வாங்கியதுதான்.

'சப்தா' ஆசிரமத்துப் புத்தக விற்பனை நிலையம்! ஶ்ரீஅரவிந்தர், அன்னை, ஆசிரமத்தைச் சார்ந்த வர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். எதைப் பார்த்தாலும் வாங்கத் தோன்றும்!

வீட்டிற்கு வந்ததும் அவற்றில் பெயர், வாங்கிய இடம், நேரம் பதிவு செய்து, அட்டை போட்டு அதற்கான இடத்தில் இன்னும் படிக்கப் படாத புத்தகங்களின் தனி வரிசையில் சேர்த்து.........!
தமிழ், ஆங்கிலப் புத்தக வரிசையில் பிரித்துப் பிரித்து.....!

ஶ்ரீரமணருக்கு ஓரிடம். ஶ்ரீஅரவிந்தர், அன்னை, ஸ்வாமி விவேகானந்தர், ராமகிருஷ்ன பரமஹம்சர், வள்ளலார், பாரதி, வா.ரா, கல்கி, எல்லோருக்கும் தனித்தனி இடங்கள்.சிறுகதைகள், புதினங்கள், ஆன்மிகக் கட்டுரைகள், மூன்று அலமாரிகள் முழுக்க முழுக்க!

வாங்கிய புத்தகங்கள் போதாதென்று சேமித்து வைத்து, பைண்ட் செய்தவை பல.

பாதி இரவு பன்னிரண்டு மணிக்கு ஏதாவது நினைவுக்கு வரும்! உடனே விளக்கைப் போடாமல்
எடுக்க முடிந்த அளவுக்கு பரிச்சயமான புத்தகங்கள். சப்தங்கள் அற்ற இரவில்  படிக்கும் போது,
புத்தக உலகம் இரவைப் பகலாக்கும்; பகலை இரவாக்கும்!

திருவண்ணாமலை போகும் போதெல்லாம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும். எத்தனை குழந்தைகள் இருந்தால் என்ன?

அத்தனையும் தித்திக்கும் அறிவுக் கருவூலங்கள், நண்பர்கள்!
தாங்கிப் பிடிக்கும் தோழர்கள்.
வழிகாட்டும் ஆசான்கள்.
கதை சொல்லும் குழந்தைகள்!!
கற்பனை உலகத்தில் சஞ்சாரம் செய்ய வைக்கும் மந்திரவாதிகள்.
பயப்படுத்தும் ராட்சசர்கள்?
அழ வைக்கும் பயங்கரவாதிகள்.
அன்போடு அணைக்கும் தாய்மார்கள்!
எல்லா உறவுகளும் கதை உலகில் உண்டு!

அது மட்டுமா? சூரிய மண்டலத்தின் வெப்பத்தில், சந்திரனின் குளிர்ச்சியில் உலாவரலாம்!
நட்சத்திர மண்டலத்தின் அதிசயங்களைக் கண்டு வாய் பிளக்கலாம்.ஆகாயத்தில் பறக்கலாம்! ஆழ்கடலின் ரகசியங்களைக் கண்டு மகிழலாம். அடர்ந்த கானகத்தில் பயமின்றிச் சுற்றலாம்.
அரசனாய், அரசியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆணையிடலாம்! இன்னும் எத்தனையோ?!

தேம்பித் தேம்பி அழவைக்கும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும், நினைந்து நினைந்து உருக வைக்கும், கோழையாய் பயந்து ஓட வைக்கும், வீரனாய்ப் போர்க்களம் புக வைக்கும்!
துயரத்தில், துக்கத்தில், கோபத்தில், மனச்சோர்வடையும், தன்னம்பிக்கை இழக்கும் தருணங்களில் கை கொடுக்கும் தெய்வங்கள் பாரதியும், பாரதிதாசனும், சித்தர்களும், வள்ளலும்தான்.

அலைபேசியில் பதிவு செய்த பாடல்களை எங்கும், எப்போதும் கேட்கக் கூடிய மகத்துவம் இப்போதுதானே வந்துள்ளது.

நாங்கள் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவதில்லை. நூலகத்திலிருந்து எடுத்துப் படிப்பதோடு சரி, அவற்றைப் பாதுகாப்பது பெரிய வேலை என்ற ஞானம் உள்ளவர்களைப் பாராட்டதான் வேண்டும்.
ஆனாலும் பெற்ற குழந்தையைப் போல் கையில் வைத்து, பார்த்துப் பார்த்து,  விரும்பிய போதெல்லாம் சுவைக்கும்  சுகம் நம்முடையதாக இருந்தால் தானே முடியும்?

மானுட பந்தங்களைப் போல் புத்தக பந்தங்களும் சக்தி வாய்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை.

குஞ்சுகள் அற்ற குருவிக்கூடு ஒன்று எங்கள் தோட்டத்தில் உள்ளது. வெறும் கூடு!
அந்தக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் புத்தகங்களை நினைத்துக் கொள்கிறேன்.







9 comments:

  1. உங்களுக்கும் புத்தகங்களுக்கும் உள்ள காதல் தெய்வீகக் காதல் தான் :-) புத்தக வாசிப்பு மட்டுமே ஒருவனின் ஞானத்தை நல்ல முறையில் வளர்க்கிறது. அவனை யோசிக்க வைக்கிறது, கேள்வி கேட்க வைக்கிறது, எழுத வைக்கிறது. இத்தனை நல்ல விஷயங்களை உள்ளடக்கிய இந்த வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தொடக்கி வைக்கும் பெற்றோர்/ஆசிரியர்கள் சமூகத்துக்கு மிகப் பெரிய சேவையை ஆற்றுகிறார்கள்.

    அருமையானப் பதிவு!

    amas32

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுஷிமா! புத்தகங்களைப் பிரிந்த துயரம் என்னுள் நீறுபூத்த நெருப்புப் போல் உள்ளது. அதுதான் இந்தப் பதிவு.உணர்ந்து உங்கள் கருத்தை எழுதியதற்கு எழுதியதற்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  2. அற்புதமான பதிவு. ரசித்து, மகிழ்ந்து படித்தேன், இந்தக் காலையை இன்னும் இனிமையாக்கிவிட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது போல் இருக்கிறது. மிக்க நன்றி.

      Delete
  3. அபாரம்! அருமையான பதிவு.
    புத்தகங்களை படிப்போருக்கும் பாதுகாப்போருக்கும் தான்
    இந்த பதிவின் அனுபவம் புரியும். மிகவும் இரசித்துப் படித்தேன்

    ReplyDelete
  4. அழகான பதிவு. ஆழமான பதிவு. புத்தக நேசிப்பாளர்களை உள்ளம் நெகிழ வைக்கும் பதிவு. உங்கள் உணர்வுகளை அருமையாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்.

    எனக்கு பைண்டிங் செய்யப் பட்ட புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். டி.நகரில் ஒரு பழைய லைப்ரரி இருந்தது. அங்கு பைண்டிங் செய்யப்பட்ட பல அற்புதமான நாவல்கள் இருபது ரூபாய்க்கும் முப்பது ரூபாய்க்கும் கிடைக்கும். அந்த நூலகத்து வரத்து குறைந்து போனதால் கிடைத்த வரை விற்றுக் கொண்டிருந்தார்கள். காந்தி வறுகடலை நிலையம் அருகில் இருந்த அந்த நூலகம் இப்போது பெரிய பெரிய துணிக்கடைகளால் விழுங்கப்பட்டு விட்டது. காந்தி வறுகடலை நிலையும் தான்.

    ReplyDelete
  5. An Excellent expression of your thoughts, Amma. I cherish those days at school wherein you got me the books I like most, to read all through the day. I have learnt over the years that apart from ones family, Books are one's best friends & you are my best friend.

    ReplyDelete
  6. நான் பள்ளியில் படித்த காலத்தில் குமுதம் இதழில் தொடர்கதைப் பக்கங்களைக் கிழித்து புத்தமாக பைண்டு செய்துவைப்பேன். துப்பறியும் நாவல்கள். கல்லூரி சென்றதும் ஆங்கிலப் புத்தகங்கள் வாடகைக்கு எடுத்துப் படிப்பது வழக்கம். ஒரு மர அலமாரி நிறைய புத்தகங்கள். நான் வேலைக்கு கோவை போனதும் அலமாரி காலியாகிக் கொண்டே வந்திருந்தது. திருமனமனதும் புத்தகம் படிக்கும் பழக்கம் மிகக் குறைந்துவிட்டது. மிக நல்ல பதிவு. புத்தகத்தை நேசிப்பவர்கள் புத்தகங்களுக்கு உயிர் இல்லையென்று சொல்லமாட்டார்கள்.

    ReplyDelete