வாசலில் கேட் திறக்கும் சப்தம். அழைப்பு மணியின் ஒலி; இந்நேரத்தில் யாராய் இருக்கும்? கதவைத் திறந்தாள் பாக்யம்.
இது சங்கரன் வீடுதானே? கேட்டது போலீஸ்.
ஆமாங்க, நாங்க ஒன்னும் புகார் கொடுக்கலையே? என்ன விஷயம்?
உங்க மருமக பேரு ரம்யாவாம்மா? எங்க அவங்க குடுத்த காரைக் காணும்?
காரா? அவங்க கார் ஒன்னும் வாங்கலையே! புரியும்படி சொல்லுங்கய்யா? என்ன ஆச்சு?
அம்மா, உங்க மருமக, உங்க மேலயும், உங்க வீட்டுக்காரர் மேலயும், 'டவ்ரி புகார்' கொடுத்திருக்காங்க. உங்க மகன் சதீஷா? அவரு பேருலயும் ஒரு புகார். மொத்தம் ஏழு புகார்! இன்ஸ்பெக்டர் உங்களைஅரஸ்ட் செய்ய வந்திட்டு இருக்காரம்மா!
அதிர்ந்து போனாள் பாக்யம். வீட்டுக்காரரைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல, மீண்டும் அவர் போலீசாரை 'உண்மைதானா?' என்று கேட்டு நிச்சயம் செய்து கொண்டார்.
'பாத்தா நல்லவங்க மாதிரி தெரியுது! உடனே வேற எங்கியாச்சும் தலை மறைவா போயிடுங்க. இல்லைனா ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போயிடுவாங்க!' என்றார்கள்.
உடனே தன் நண்பரை அழைத்தார் சங்கரன். ஆபீஸுக்குப் போயிருந்த இரண்டாவது பையனிடம் விஷயத்தைச் சொல்லி, நண்பன் வீட்டில் தலைமறைவாக இருக்கச் சொன்னார். தனக்குப் பரிச்சயமான வக்கீலிடம் பேசினார். உடனடியாக இடம் மாறும்படி வக்கீல் சொல்ல 90 வயதான தாயாரை அவசரம் அவசரமாக சொந்தக்காரர் வீட்டிற்கு அனுப்பினார்கள். கையில் கிடைத்த துணிகளை ஒரு பையில் அடைத்துக் கொண்டு அலமாரியில் இருந்த ஐந்தாயிரம் ரூபாயுடன் வீட்டைப் பூட்டி, பக்கத்து வீட்டில் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நண்பர் வீடு சென்றனர். அங்கிருந்து சென்னை! ஓடி ஒளிந்து தலை மறைவாக, கையில் காசின்றி நிற்கும் அவலம்!
சங்கரன் வங்கியில் மேலதிகாரியாயிருந்து ஓய்வு பெற்றவர். அதிர்ந்து பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று வம்பு தும்புகளுக்குப் போகாதவர். அடுத்தவர் விஷயத்தில் தலை நுழைக்காதவர்.அவருடைய மனைவி பாக்கியம் அவருடைய அக்காள் மகள். அவர்களுக்கு அறிவும், அழகும், நற்குணங்களும் நிறைந்த இரு மகன்கள்.
இருவருக்குமே ஐ. டியில் நல்ல வேலை ! பெரியவனுக்குதான் ஒரு மாதம் முன்பு திருமணம் செய்தார்கள். படித்த பெண், அமெரிக்கா போவதில் ஆட்சேபணை இல்லை. எல்லாம் நேரில் பார்த்துக் கூடிப் பேசி பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட கல்யாணம்தான்.
திருமணமான முதல் நாள் இரவே ரம்யாவுடைய ரகளை ஆரம்பித்து விட்டது. எடுத்த உடனேயே சொல்லி விட்டாள் 'உன்னை எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. என்னை ஏமாற்றிக் கல்யாணம் செய்து விட்டார்கள் 'என்று. முப்பது வயது ராகவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.அவன் நினைத்தது என்ன, நடப்பது என்ன?
மறுநாள் மதியம் ஒரு மணிக்கு எழுந்து வந்த ரம்யா, 'இந்த வீடே எனக்குப் பிடிக்கவில்லை,
அம்மா வீடு போகிறேன்' என ஆர்ப்பாட்டம் செய்தாள்.
அம்மா வீடு போகிறேன்' என ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மனநிலை குன்றிய பெண்ணைத் தலையில் கட்டி விட்டார்களோ?பாவம் அம்மா அப்பாவைப் பிரிந்து இருக்க முடியவில்லை போல என்று நினைத்தார்கள்.
சரிதான் அமெரிக்கா போனால் சரியாகிவிடும் என்று நம்பினார்கள். விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே ,'எனக்கு அழகு நிலையம் போகணும் என்று ரம்யா சொல்ல, அழைத்துப் போனான் ராகவன். வெளியே வந்தவளை அவனுக்கு அடையாளமே தெரியவில்லை. தலை முடி வெட்டப்பட்டு, உதட்டுச் சாயமும் அதுவுமாய்.......! வீடு போய்ச் சேர்ந்தால் அவளுடைய தோழி காத்திருந்தாள்! இருவரும் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தார்கள். வாயில் வந்தபடி ஆங்கிலத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் ஒரு பெண்ணால் சொல்ல முடியுமா என ஆச்சரியத்துடன் அசந்து போய் நின்றான்அவன்! "அம்மா தாயே உனக்கும் எனக்கும் சரிப்படாது, என்றவன் கண்ணீரோடு நண்பன் இல்லம் சென்றான். ரம்யாவோ வீட்டைப் பூட்டி சாவியையும் எடுத்துக் கொண்டு தோழி வீடு சென்று விட்டாள்.
வீட்டிற்கு விவரம் சொல்லி, ரம்யாவின் பெற்றோருடன் பேசி, வீட்டுச் சாவியை வாங்குவதற்குள் போதுமடா சாமியென்றானது ராகவனுக்கு.
திரும்ப இந்தியா வந்த ரம்யா, ராகவனை அழைத்தாள். என்னை திருப்பி அனுப்பினே இல்லையா? உன்னையும் உன் வீட்டாரையும் நான் என்ன செய்கிறேன் பார்! வரதட்சணைக் கொடுமைப் புகார் கொடுத்திருக்கிறேன். இப்போது போலிஸ் உங்கள் வீட்டு வாசலில்!
ஒரே பெண். வேலைக்குப் போகும் அம்மா! வாய் திறவாத அப்பா! தன் விருப்பம் போல் எதையும் செய்யும் பிடிவாதம் நிறைந்த ரம்யா!
நல்வழி நடத்த நேரமில்லாத பெற்றோர்! பிடிவாதம் நிறைந்த குழந்தைகள்! விரும்பியவாறு நடக்க தைரியம் தரும் கல்வி, கை நிறைய சம்பளம், பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்க மறுக்கும் ஆணவம்,...............! அறிவு மேம்பாட்டுக்கும், தன்னம்பிக்கைக்கும், உதவிக்கரம் நீட்ட வேண்டிய கல்வியும், அதன்பயனாகிய செல்வமும் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுத்து விட்டது என்பது நிதர்சனமான உண்மையாகும். மனித நேயமும், அன்பும், நட்பும் பொலிய வேண்டிய இடங்களில்,பொறுமையின்மையும், வெறுப்பும், அகங்காரமும் காணப்படுகின்றதே?
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தலை மறைவாய் இருந்த சங்கரன் தன்மேல் தொடர்ந்த வழக்கு பொய்யானது என்று வக்கீல் மூலம் நிரூபித்தபின் மனைவியுடன் வீடு திரும்பினார். விதியின் வலிமையைப் பாருங்கள். அடுத்த மகனுக்குக் கல்யாணம் என்றாலே ஐயய்யோ வேண்டாம் என்கிறார்.
இது சும்மா பொழுது போகாமலெழுதிய பதிவல்ல. நிஜமாக சமீபத்தில் நடந்தது. அந்தப் பெண் ரம்யா நல்லவள். விவாகரத்து நோட்டீசில் ராகவனின் விரல் நுனி கூட தன் மேல் படவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டாள். அந்தவரை புண்ணியம்தான். இன்றைய பாலியல் பலாத்காரச் செய்திகளுக்கு இடையில் இது ஒரு நல்ல விஷயம்தானே?
பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யும் முன் நிதானமாக யோசியுங்கள் பெற்றோர்களே!
வருத்தமாக இருக்கிறது. திருமண பந்தம் அறுந்து போவதுடன் ஆறாத வடுவை மனதில் பதித்து விடிகின்றனர். டௌரி வழக்கு மற்றும் ஜாதி வழக்கு (வன்கொடுமை) வழக்குகள் சாதாரண மனிதர்கள் மீது காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளப் போடப்படுகின்றன என்பது உண்மை. இணையத்தில் இதைப்பேசி நம்மால் வெல்ல முடியாது.
ReplyDeleteஎளிய கேள்விதான். திருமணபந்தம் வேண்டாம் என்பவர்கள் நீதிமன்றம் மூலமாக சுமூகமாகப் பிரியலாமே. ஐடி படித்து மேல் தட்டில் இருந்துகொண்டு போலீசுக்கு ஏன் போகவேண்டும்?
அகங்கார உணர்வுதான் காரணம். திருமணத்திற்கு முன்பே சரியாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இதில் பெற்றோர்களுடைய பங்கும் அதிகம் இருக்கிறது.அவர்களும் சரியாக வழி காட்டுவதில்லை என்பது என் அபிப்ராயம்.
ReplyDelete