30 May 2014

அலையின் அலைகள்

வழக்கம்போல பூங்காவிலிருந்து திரும்பி வரும்போது  இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைக்குள் நுழைந்தேன்.  அங்கே காய்கறிகளை நோட்டம்விட்டபோது அலைபேசி அடிக்கவும் அதை எடுத்துப் பேசினேன். முடித்தவுடன் அந்தக் கடையில் பகுதி நேர வேலை செய்யும் வாலிபர்,''அட நீங்க கூட Android phone எல்லாம் வெச்சிருக்கீங்களே! பரவாயில்ல, என் பாட்டிகிட்ட அலைபேசியக் கொடுத்தா தள்ளிவிடறாங்க. போடா, எனக்கு இதெல்லாம் வேண்டாம், யாரு இதயெல்லாம் கத்துப்பாங்க? அப்படீங்கறாங்க,' என்றார்.

அதுக்கு என்னப்பா செய்யறது? ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு பிடிக்கும் என்றேன்.
ஆமாங்க, இன்னி தேதிக்கு செல் போனும், லேப்டாப்பும் உபயோகப் படுத்தாதவங்க ரொம்ப கம்மி. அதனால எத்தனை சீக்கிரமா எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்க முடியுது என்றான்.
சரிதான் என்று சிரித்தேன்.

உண்மையைச் சொல்லப் போனால் இடுப்பிலே குழந்தையையும், தலையில் அன்று சமைக்க வேண்டியு உணவுப் பொருளையும் சுமந்து கொண்டு நாள்முழுதும் உழைத்த உழைப்பின் துன்பத்தையெல்லாம் மறந்து, தலயை ஆட்டி ஆட்டி, அலை பேசியில் சிரிக்க சிரிக்க  எந்த உறவுடனோ பேசிச் செல்லும் ஏழை எளிய மக்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இங்கே மரத்தடியில் ஒரு வயதான அனாதைத் தாய் அமர்ந்திருப்பார். கையில் அலை பேசி.பேசும் போது பொங்கி வழியும் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே! அலை பேசி நம் சமுதாயத்திற்கு மிகப் பெரிய நன்மையைதான் செய்துள்ளது. பயன் படுத்தத் தெரிந்த சந்தோஷம். அன்பு மிக்கவர்களின் குரலைக் கேட்பதில் ஆனந்தம்.

என்னுடைய தோழியர் வட்டத்தைப் பார்த்தால் நிறைய பேர்,'' அட போப்பா, இந்த 'டச் போன் தலைவலியெல்லாம் நமக்கு எதுக்குன்னு நான் அந்தப் பக்கமே போவதில்லை. பேரன் பேத்திகிட்ட கேட்டா கூட சொல்லித்தரமாட்டேங்குதுங்க. தப்பா எதாச்சும் செஞ்சா திருதிருன்னு முழிக்க வேண்டி இல்ல இருக்கு? கரண்ட் இல்லைன்னா 'நெட்' இல்ல! இருந்தா அத்தன பேரும் 'செல்ல' சார்ஜ் பண்ண போட்டியே நடக்குது.  எல்லாம் இருந்தா நேரம் இல்ல! டீ. வி. சீரியல் பார்த்தாலே பொழுது போயிடும் என்கிறார்கள்.

என்ன செய்வது? எனக்குக் கூட எதுவும் தெரியாமல்தான் இருந்தது! இப்போ மட்டும் என்ன ரொம்ப தெரியுமா? காலத்தின் கட்டாயம், வேற வழியில்ல பொழுதுபோக்க! கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன், அவ்ளவுதான்!

வாழ்க்கையின் திருப்பு முனையில், திகைத்து நின்ற கால கட்டத்தில் 'உனக்கு ஒரு துணை வேண்டும்' என்ற போது,''ஐயய்யோ, திரும்பவுமா'' என்றேன். அட பயப்படாதே!  மடிக் கணிணியும், அலைபேசியும்
உன்னை ஒன்றும் செய்யாது. சொன்னபடி கேட்கும். உலகம் சுற்றச் செய்யும்! நண்பர்களோடு மீண்டும் இணைக்கும். ஊர்வம்பு, உலக வம்புகள் உடனுக்குடன் உன்னை சிரிக்கச் செய்யும்!இங்கு நகைச்சுவையும் உண்டு சோகமும் உண்டு! இலக்கிய உலகில் உன் விருப்பப்படி படிக்கலாம், பாட்டுக்கேட்கலாம், எல்லாம் அடங்கிய சிறு பெட்டியம்மா இது. உன் வாழ்வை புதிப்பிக்கும் கற்கண்டுக் கட்டி என்றதும் பயமாகதான் இருந்தது. ஆம் என் கல்லூரித் தோழிக்ளைக் கண்டு பிடித்துத் தந்துள்ளது முக நூல். எத்தனை சந்தோஷம்! சொல்லி முடியாது!

தமிழ் தட்டச்சு, ட்விட்டர், முகநூல் எல்லா அறிமுகங்களும் கிடைத்தன. இன்றைக்கும் கூட ட்விட்டர், முக நூல் எல்லாவற்றிலும் நான் 'பெயில்'தான். இருபது வருடங்களுக்கு முன்னென்றால் நன்றாக இருந்திருக்கும். இப்போது இரண்டு வரி எழுத ஆயிரம்தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனாலென்ன? காதலும், பாடலும், இலக்கியமும், அரசியலும், சினிமாவும் கலந்து கட்டி நகைச்சுவை விருந்தளிக்கிறது ட்விட்டர். ஒரு பார்வையாளியாக சிரிக்கிறேன் ரசிக்கிறேன்.

சமூகவலைத் தளங்கள் நிச்சயமாக தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பலவற்றையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. புதிய அறிமுகங்கள், புதிய நட்புகள்!
எத்தனையோ வலைப்பதிவாளர்களின் பதிவுகள் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன.  பரந்து விரிந்த இந்த உலகின் பல்வேறு பரிமாணங்களைப் பார் என்கின்றன.

இராமாயண, மகாபாரத, புராண பழங்கதைகளைக் கேட்டு என்ன ஆகப் போகிறது? கற்றுக் கொள்ளப் போவது என்ன? நம்மால் பின்பற்றமுடியாத எந்த ஒரு அறிவுரையையும் விட்டுவிடுவது நல்லது அல்லவா?

நான்கு ஆண்டுகள்!நம்பதான் முடியவில்லை! ஆனால்,

இந்த நிமிடம் தரும் சந்தோஷம் மட்டுமே சத்தியம், நித்தியம்!
வாழ்க்கை கடந்த காலத்தில் இல்லை! இணைய தளத்தின் வலையில், பிரபஞ்ச அலைகளின் ஊடே நம்மை  நாமறியாமல் இணைக்கும் அலை பேசியின் ஒலியில்.................
தன்னைத்தானே உணர்ந்த, சுமைகளற்ற சுதந்திரப் பறவையாய்ப் பறப்பதில் ஒரு சுகம். அந்த சுகத்தின் அமைதியில், ஆனந்தத்தில், வானவெளியில், நீலவானத்தின் மடியில்,கடலலைகள் சாட்சியாக நான்..... !