30 Nov 2016

புதிய பார்வைஅமைதி தவழும் உச்சி வெயில் பொழுது. வேப்பம் பூக்கள் நறுமணம் பரப்பும் பங்குனி மாதத்து, மென்குளிர் காற்றில் ஆங்காங்கே காகங்கள் கரைய, அணில்கள் ஓடிவிளையாட சிறிய ஊஞ்சலில்  அந்த இல்லத்து விளையாட்டு மைதானத்தில் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள் சங்கரியும் சாந்தாவும். மதிய உணவுக்குப் பின் அங்கே அமர்ந்து பேசுவது அவர்களுக்கு வாடிக்கைதான்.

அந்த நேரத்தில் இல்லத்தின் வேலையாள் சுரேஷ் அங்கேவந்து, அம்மா உங்க இரண்டு பேரையும்  ஐயா ஆபீஸ் ரூமுக்கு வரச்சொன்னாங்க, என்றான்.
என்ன சுரேஷ், என்ன சமாச்சாரம்? ஐயா எப்பவும் கூப்பிட்டு அனுப்பமாட்டாரே என்றார் சங்கரி
அது என்னவோ தெரியலைங்க. இந்த இல்லத்தப் பார்க்க யாரோ வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன் என்றான் சுரேஷ்.

அலுவலக அறையின் வாசலிலே நின்றிருந்தார் அந்த இல்லத்தின் உரிமையாளர் மாதவன். வாங்கம்மா, என்றவர் அவர்களை சுரபிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  இவங்க பிரபலமான தமிழ் மாத இதழ் , "செங்கமலம்" பத்திரிகையின் உதவி ஆசிரியர். சுற்றுவட்டாரத்தில் உள்ள முதியோர் இல்லங்களைச்சுற்றிப் பார்த்து ஒவ்வொரு இல்லத்தின் சிறப்பம்சங்களைப்பற்றியும், சுகாதாரம், உணவின் தரம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றைத் தரவரிசைப்படி மதிப்பீடு செய்து தங்கள் பத்திரிகையில் வெளியிடப் போகிறார்களாம்.

நான்கு பேரை பேட்டி எடுக்க வேண்டுமென்றார்கள். அதற்குதான் உங்களைக் கூப்பிட்டேன். மங்களம்மாவையும், சேதுப்பாட்டியையும் வரச் சொல்லியிருக் கிறேன். புகைப்படம் வேண்டாமென்றால் சொல்லிவிடுங்கள். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று சொல்லி எழுந்து போனார் மாதவன்.

மாதவன் தாயை நேசித்தவர். வேலை நிமித்தம் வெளிநாட்டில் வாழ்ந்த பொழுது, அவருடைய மனைவியின் அலட்சியம், கவனிப்பின்மை காரணமாகத் தாயை இழந்தவர். அதனாலேயே ஆதரவற்ற முதியோர்களைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருக்கிறது என்று தன் மனைவியை விவாகரத்து செய்து தனியொருவராக, நிலம் வாங்கி சகல வசதிகளுடன் கூடிய அந்த முதியோர் இல்லத்தைத் தன் தாயின் பெயரால் நடத்தி வருகிறார். தன் தாய் கடைசி காலத்தில் யாருமில்லாதவராக இறந்ததைப் போல குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் தவிக்கக்கூடாது. அவர்களுக்கு உறு துணையாக இருக்கவேண்டும் என்பதே அவர் லட்சியமாக இருந்தது.

வணக்கம் அம்மா! சார் சொன்னது போல நான் செங்கமலம் பத்திரிகையிலிருந்து  வந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் நிறைய முதியோர் இல்லங்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கிறோம். இந்த இல்லத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டதால் நேரில் வந்தோம். சொல்லுங்கள், இந்த இல்லத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஏன் இங்கு வந்தீர்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? உங்களுடைய அனுபவங்களை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சங்கரி சொன்னார். வணக்கம் சுரபி அவர்களே. இந்த இல்லத்தில் அயல் நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுடைய பெற்றோர், உள்நாட்டிலேயே இருந்து கொண்டு பராமரிக்க முடியாத குழந்தைகளின் தாய், தந்தையர், தாங்களாகவே விரும்பி வந்தவர்கள், குழந்தையில்லாதவர்கள், என்று பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் சொல்ல ஒரு கதை இருக்கி றது.

ஆமாம் அம்மா! கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்த சமுதாய அமைப்பு நீங்கி இன்று பெரும்பாலும் தனித்தீவுகளாகவே இளைய தலைமுறை வாழவிரும்புகிறது இல்லையா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சாந்தாம்மா?

மேடம், இன்றைக்கு பெரும்பாலும் பிள்ளைங்க அப்பா,அம்மாவை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுகிறார்கள், என்ற தவறான அபிப்ராயம் இருக்கிறது. என்னைப் பாருங்கள். நான் ஆசைப்பட்டுதான் இங்கே வந்தேன். எங்கள் வீட்டில் அனுப்பவே விரும்பவில்லை. குடும்ப வாழ்க்கைப் பொதியை எல்லாம் சுமந்துட்டேன். எல்லாக் கடமைகளையும் முடித்தும் விட்டேன்.
எனக்காக நான் வாழ விரும்புகிறேன். அதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று நான் எண்ணினேன்.

அப்படியா, ஆச்சர்யமாயிருக்கிறது! உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
எனக்கு ஒரு மகனும்,மகளும் இருக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அப்படியா! பேரன் பேத்திகளோடு ஜாலியாக விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பதற்கு பதில் இங்கே ஏன் வந்தீர்கள்?
 நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது? எல்லாதாய்மார்களும் பையனுக்குத் திருமணம் ஆனாலும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தானே சமைப்பது, எல்லாவற்றிலும் தலையிடுவது, மருமகளுக்கு அறிவுரைகள் சொல்வது, பேரக் குழந்தைகளை வளர்ப்பதில் ஆளுமை செய்வது என செயல்படுகிறார்கள்.

திருமணம் என்று ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ நாம் அனுமதிக்க வேண்டும்.  குடும்பம், சாப்பாடு, தூக்கம் இவை எல்லாவற்றுக்கும் மேலே ஒரு வாழ்க்கை இருக்கிறது

நீங்கள் என்னை ஆச்ச ர்யப்படுத்துகிறீர்கள்.

 கடவுளைக் காண வேண்டும், அதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. தியானம் செய்து தவ வாழ்க்கை மேற்கொள்ளவும், பெரிய மகான்களுடைய வாழ்க்கை வரலாறுகள், அறிவுரைகள் ஆகியவற்றைப் படித்து உணரவும் ஆசைப்பட்டேன். அதற்கான சகல வசதிகளும் இங்கே உள்ளன.

நல்லா இருக்கே நீங்க சொல்வது! எல்லோரும் இந்தக்காலத்தில் எல்லோரும் காசி, கைலாச, மானசரோவர் யாத்திரைகள் போகிறார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்கிறார்கள். நீங்க என்னவோ முதியோர் இல்லத்தில் கடவுளைப் பார்க்கணும் என்று சொல்கிறீர்களே.

ஆமாம், கடவுளை வெளியே தேடுபவர்கள் யாத்திரை போகிறார்கள். "உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்" என்ற தெளிவு இருப்பதால் என்னுள்ளே
இருக்கும் ஆண்டவனைத் தேடி எனக்குள் நானே யாத்திரை செய்கிறேன்!ஓ, இங்கே எங்களுக்கு வேளைக்கு உணவு, படிக்க நூலகம், விளையாட உடற்பயிற்சி செய்ய வசதிகள், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனை எல்லாம் உள்ளது. ஓய்வு நேரத்தில் சத்சங்கம் நடத்துகிறோம், ஞானிகளுடைய அறிவுரைகளையும், வாழ்க்கை வரலாறுகளையும் வாசிக்கிறோம்.உடல் நலமில்லாதவர்களுக்கு அனுசரணையாக, ஒருவர்க்கு ஒருவர் உதவியாக ஒரு குடும்பமாக இருக்கிறோம்.

சுரபி, சாந்தா அவர்கள்தான் இங்கே வருகிறவர்களுக்கெல்லாம் கவுன்சிலிங் கொடுப்பார்கள். வந்தவுடன் அழுகையும், துக்கமுமாய் வருபவர்கள் பிறகு வீட்டிற்கு போகவே விரும்புவதில்லை தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக மாதவன் எங்கள் எல்லோருக்கும் பிள்ளையாக இருக்கிறார்.

கேட்கவே நன்றாக இருக்கிறது. கடைசியாக ஒரே ஒரு கேள்வி. நீங்கள் கடவுளைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

ஆம் சுரபி! சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட தன்னலமற்ற அன்புதான் கடவுள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளத்திலிருந்து பொங்கிப் பெருகும் உணர்வுதான் கடவுள். அதில் அமைதியும் ஆனந்தமும் இருக்கிறது மகளே.

புதியதோர் பார்வையில் முதியவர்களின் முதிர்ச்சி நிறைந்த எண்ணங்களை அறிந்து கொண்டேன்.
அந்த ஆனந்தத்தை, அமைதியை நான் என்னுடன் அடுத்துச் செல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் சாந்தா, சங்கரி அவர்களே! நன்றி வணக்கம்.