11 Mar 2018

கோடீசுவரர்..

தமிழ் வார, மாத  இதழ்களையெல்லாம் தவறாமல் வாங்கும் காலம் போய் எப்போதாவது வாங்குவது வழக்கமாகிவிட்டது! கல்கி மட்டும் கணிணியிலேயே படித்து விடுகிறேன். சென்ற வாரம் பத்திரிகைகள் விற்கும் கடை வழியே ஒரு பயணம். கடைக்காரருக்கு பண வரவு வரும் நல்ல நாள்!
சட்டென்று உள்ளே நுழைந்து வார, மாத இதழ்கள் இருந்தவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டேன்.

அந்தக் காலத்தில் மருக்கொழுந்து செண்ட் மணக்க வரும் குமுதத்தின் மேல் எனக்கொரு காதல். அண்ணா வாங்கி வருவார். அப்பாவுக்குத் தெரியாமல் ஒளித்து வைக்கப்படும் புத்தகம். தெரிந்தால் செமையாய் திட்டு விழும். ஆனாலும் கட்டுப் பாடுகளைமீறுவதில் ஒரு சுகம்!
இன்று மல்லிகை, பக்தி, துக்ளக்குடன்  குமுதமும்  என் கையில்.
என்ன கமலத்தின் கையில் குமுதமா என சிரிக்கிறாள் மகள்!குமுதம் நன்றாகதான் இருக்கிறது.

சாரு நிவேதிதாவின் கட்டுரை, தமிழச்சி ஆண்டாள், என்ற ப்ரியா கல்யாணராமனின்  சொல்லோவியம், ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன், என நல்லாயிருக்கே என்று சொல்ல வைத்தது குமுதம் லைஃப். இப்பத்திரிகையில் இடம் பெற்ற, எல். மீனாம்பிகா அவர்களின் கல்விக் கடவுளான பிச்சைக்காரர், என்ற செய்தித் தொகுப்பு என் மனதைக் கவர்ந்தது, நெகிழவைத்தது.

அப்படி என்ன புதிதாயுள்ளது? ஒருவன் பாடுபட்டு பணம் சம்பாதித்து சேர்த்து வைக்கிறான். தானும் அனுபவிக்க மாட்டான்! பிறருக்கு என்ன  துன்பம் வந்தாலும் கொடுக்கவும் மாட்டான்! அந்தப் பணத்தால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை ! கஞ்சர்கள் நிறைந்த இவ்வுலகில் பிச்சையெடுத்துக் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு தேவையானவற்றை ஒருவர் வாங்கிக்கொடுக்கிறார் என்றால் அது ஆச்சர்யமானதுதானே?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பக்கத்திலுள்ள ஆலங்கிணறைச் சேர்ந்தவர் பால்பாண்டி. வயது அறுபத்து எட்டு. மனைவி இறந்துவிட்டார். இரு மகள்கள், ஒரு மகன் திருமணமாகி நல்லபடியாக இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூழலில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். திருச்செந்தூர் கோவிலின் சுற்றில் துண்டுவிரித்துப் படுத்திருந்த இவர், தன் துண்டில் நாணயங்கள் இருப்பதைப் பார்த்தாராம். பிச்சைக்காரன் என்று நினைத்து விட்டார்கள்! நிசமாகவே பிச்சைக்காரனாகிவிட்டார். கோயில் கோயிலாகப் போய் பிச்சையெடுக்க ஆரம்பித்தார்.
சாப்பாட்டுக்குத் தேவையான பணமோ குறைவு! மீதிப் பணத்தை என்ன செய்வது?

அந்தந்த இடங்களிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கிறாராம். இதுவரை பல பள்ளிகளுக்கும் இவர் இவ்வாறு உதவி செய்திருக்கிறார் என்ற செய்தி நிசமாகவே ஆச்சர்யப் படுத்துகிறது அல்லவா?

அரசாங்கத்தை கொள்ளையடிக்கும் கயவர்கள் நிறைந்த இவ்வுலகில் மனிதனுடைய உண்மையான தேவைகள் மிக மிகக் குறைவே என்று உணர்த்துகிறார் இந்தப் பெரியவர்.
அது மட்டுமா, பிறருக்கு உதவுவதற்கு முதுமை தடையல்ல, என நிரூபிக்கும் இளைஞர்!
ஏழ்மையிலும் மனதால் கோடீசுவரராகலாம் என்பதையும் அல்லவா வெளிச்சமிட்டுக்  காண்பிக்கிறார்.
நன்றி- குமுதம் லைஃப்,மீனாம்பிகா அவர்கள்

இனி குமுதம் வாங்குவது என்று தீர்மானித்து விட்டேன்.

நாட்டுப் பற்று

பல ஆண்டுகளுக்கு முன் அந்தமானின் அழகைப் பார்க்க வேண்டுமென்று   நானும் கணவரும் ஒரு பயணம் மேற்கொண்டோம்.
 இயற்கை அழகு மிக்க அந்த ஊர் இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின்  வன்முறைகளுக்கு பெயர் பெற்றது அந்த மானின் தனிமைச் சிறை.
வங்கத்து இளைஞர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை, சுக போகங்களை விட்டுவிட்டு சுதந்திரத்திற்காகப் போராடி புன்முறுவலோடு அந்தமான் தனிமைச் சிறைசாலையின் அளப்பறிய கொடுமைகளையும் தாங்கிக் கொண்டார்கள்.

குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு, சகல செல்வங்களையும் இழந்து சவார்கர் என்ற இளைஞன் சுதந்திரப் போராட்டத்தில் துணிவோடு இறங்கினான். அவனும் அந்தமானுக்கு அனுப்பப்பட்டான்.  அங்கே அவன் தாங்க வேண்டி வந்த கொடுமைகள் அவனைத் தன்னை மன்னிக்கும்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் மன்னிப்புக் கோர வைத்தது என்றால் அவர் பெற்ற தண்டனைகள் எப்படி இருந்திருக்க வேண்டும்?

மன்னிப்பு கேட்டது தவறாம். ஆளாளுக்கு  கேவலப் படுத்துகிறார்கள். ஆனால் அதே பிரிட்டிஷாரிடம் வெட்கமில்லாமல்  இன்றைக்குப் போய் கை கட்டி உத்யோகம் பார்ப்பதை விடவா கேவலம்?

ஆம், பிஜேபி அரசு அவருடைய தியாகங்களைக் கொண்டாடுகிறதாம்.! பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கே சென்று மரியாதை செலுத்துகிறாராம்!

ஒருவர் சொல்கிறார் அந்தமான் சிறைக்குப் போனவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகளாம்! இன்னொருவர் சொல்கிறார் வீரசவார்கர் உண்மையான வீரர் இல்லை, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்டவர்! இதையெல்லாம் படிக்கும் போது புத்திகெட்ட அந்தக் கால  இளைஞர்கள் எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரே ஒரு நாள் உங்கள் செல்போன், கணினி எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்தமான் போங்கள். அங்கு பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும் சாக்கு மூட்டையால் தைக்கப்பட்ட அரைக்கால் டவுசரையும், மேல் சட்டையையும் போட்டுக் கொண்டு நாள் முழுதும் தேங்காய் உரித்து, செக்கிழுத்து இரவில் அந்த உப்பங்காற்றில்  சாக்கு உடையில் தூங்கப் பாருங்கள்.

அதிக பட்சம் இரண்டு நாள் இருந்து பாருங்கள். பிறகு உயிர்த்தியாகம் செய்தவர்களையெல்லாம்  இழிவு படுத்தும் வேலையைச் செய்யலாம்.

த்தூ!

எங்கே எத்தனைபேர் முன் வருவீர்கள்? இணைய தளத்தில் உட்கார்ந்து கொண்டு குற்றப் பத்திரிகை படித்து தங்கள் அதி புத்திசாலித் தனத்தை விளம்பரப் படுத்திக்கொள்ளாமல் அரை மணி நேரம் இருக்க முடியுமா?

ஒரு நாட்டின் சரித்திரம், படித்து தியாகம் செய்தவர்களை நினைவு கூறத்தான். எல்லாவற்றுக்கும் குற்றம் கண்டு பிடித்து பெருமையோடு அதனை சொல்லுவது தன்னைத் தானே இழிவு படுத்திக்கொள்வதாகும்.