11 Mar 2018

கோடீசுவரர்..

தமிழ் வார, மாத  இதழ்களையெல்லாம் தவறாமல் வாங்கும் காலம் போய் எப்போதாவது வாங்குவது வழக்கமாகிவிட்டது! கல்கி மட்டும் கணிணியிலேயே படித்து விடுகிறேன். சென்ற வாரம் பத்திரிகைகள் விற்கும் கடை வழியே ஒரு பயணம். கடைக்காரருக்கு பண வரவு வரும் நல்ல நாள்!
சட்டென்று உள்ளே நுழைந்து வார, மாத இதழ்கள் இருந்தவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டேன்.

அந்தக் காலத்தில் மருக்கொழுந்து செண்ட் மணக்க வரும் குமுதத்தின் மேல் எனக்கொரு காதல். அண்ணா வாங்கி வருவார். அப்பாவுக்குத் தெரியாமல் ஒளித்து வைக்கப்படும் புத்தகம். தெரிந்தால் செமையாய் திட்டு விழும். ஆனாலும் கட்டுப் பாடுகளைமீறுவதில் ஒரு சுகம்!
இன்று மல்லிகை, பக்தி, துக்ளக்குடன்  குமுதமும்  என் கையில்.
என்ன கமலத்தின் கையில் குமுதமா என சிரிக்கிறாள் மகள்!குமுதம் நன்றாகதான் இருக்கிறது.

சாரு நிவேதிதாவின் கட்டுரை, தமிழச்சி ஆண்டாள், என்ற ப்ரியா கல்யாணராமனின்  சொல்லோவியம், ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன், என நல்லாயிருக்கே என்று சொல்ல வைத்தது குமுதம் லைஃப். இப்பத்திரிகையில் இடம் பெற்ற, எல். மீனாம்பிகா அவர்களின் கல்விக் கடவுளான பிச்சைக்காரர், என்ற செய்தித் தொகுப்பு என் மனதைக் கவர்ந்தது, நெகிழவைத்தது.

அப்படி என்ன புதிதாயுள்ளது? ஒருவன் பாடுபட்டு பணம் சம்பாதித்து சேர்த்து வைக்கிறான். தானும் அனுபவிக்க மாட்டான்! பிறருக்கு என்ன  துன்பம் வந்தாலும் கொடுக்கவும் மாட்டான்! அந்தப் பணத்தால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை ! கஞ்சர்கள் நிறைந்த இவ்வுலகில் பிச்சையெடுத்துக் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு தேவையானவற்றை ஒருவர் வாங்கிக்கொடுக்கிறார் என்றால் அது ஆச்சர்யமானதுதானே?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பக்கத்திலுள்ள ஆலங்கிணறைச் சேர்ந்தவர் பால்பாண்டி. வயது அறுபத்து எட்டு. மனைவி இறந்துவிட்டார். இரு மகள்கள், ஒரு மகன் திருமணமாகி நல்லபடியாக இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூழலில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். திருச்செந்தூர் கோவிலின் சுற்றில் துண்டுவிரித்துப் படுத்திருந்த இவர், தன் துண்டில் நாணயங்கள் இருப்பதைப் பார்த்தாராம். பிச்சைக்காரன் என்று நினைத்து விட்டார்கள்! நிசமாகவே பிச்சைக்காரனாகிவிட்டார். கோயில் கோயிலாகப் போய் பிச்சையெடுக்க ஆரம்பித்தார்.
சாப்பாட்டுக்குத் தேவையான பணமோ குறைவு! மீதிப் பணத்தை என்ன செய்வது?

அந்தந்த இடங்களிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கிறாராம். இதுவரை பல பள்ளிகளுக்கும் இவர் இவ்வாறு உதவி செய்திருக்கிறார் என்ற செய்தி நிசமாகவே ஆச்சர்யப் படுத்துகிறது அல்லவா?

அரசாங்கத்தை கொள்ளையடிக்கும் கயவர்கள் நிறைந்த இவ்வுலகில் மனிதனுடைய உண்மையான தேவைகள் மிக மிகக் குறைவே என்று உணர்த்துகிறார் இந்தப் பெரியவர்.
அது மட்டுமா, பிறருக்கு உதவுவதற்கு முதுமை தடையல்ல, என நிரூபிக்கும் இளைஞர்!
ஏழ்மையிலும் மனதால் கோடீசுவரராகலாம் என்பதையும் அல்லவா வெளிச்சமிட்டுக்  காண்பிக்கிறார்.
நன்றி- குமுதம் லைஃப்,மீனாம்பிகா அவர்கள்

இனி குமுதம் வாங்குவது என்று தீர்மானித்து விட்டேன்.

No comments:

Post a Comment