25 Jun 2017

ஶ்ரீஅரவிந்தர்-11(அலிபூர் சதிவழக்கு)கல்கத்தா நகரத் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்ட் பல தேசபக்தர்களையும், பத்திரிகையாளர்களையும் சிறையில் அடைத்தான். சுசில்சென் என்ற பள்ளி மாணவனுக்கு முச்சந்தியில் சவுக்கடி கொடுக்கச் செய்தான். அதனால் கொதித்தெழுந்த தீவிரவாதிகள் கிங்ஸ்போர்டைக் கொல்லத் திட்டமிட்டனர்.எண் 15, கோபி மோஹன் தத் குறுக்கு சாலையிலுள்ள வீட்டில் வெடி குண்டு தயாரிக்கப் பட்டது.
அவரைக் கொல்வதற்காக மிட்னபூரைச் சேர்ந்த குதிராம் போஸ், பிரபுல்லா  சந்திர சக்கி என்ற இரு இளைஞர்களும்  முசாஃபர்பூர் சென்றனர்.

30-04-1908 அன்று கிங்ஸ்போர்ட் தனது மாளிகையிலிருந்து இரண்டு கோச் வண்டிகளில்  புறப்பட்டார். காத்திருந்த இளைஞர்கள் கிங்ஸ்போர்ட் இரண்டாம் கோச் வண்டியில் இருப்பதை அறியாமல் முதல் வண்டி மீது குண்டு வீசினர்.
அந்த வண்டியில் பயணம் செய்த  திருமதி. கென்னடி என்ற பெண்மணியும், அவரது மகளும் இறந்தனர்.

பிரபுல்லா சந்திர சக்கி, தன்னைக் காவலர்  பிடிக்குமுன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டான். பிடிபட்ட குதிராம் தூக்கிலிடப்பட்டான்.

இதைத் தொடர்ந்து பரீந்திர கோஷின் மாணிக்டோலா தோட்ட ஆசிரமத்தை போலீசார் சோதனை இட்டனர். வெடி குண்டுகள், ஆயுதங்கள் இவற்றைக் கைப்பற்றினர். பரீந்திரரும், மற்றும் 34 பேர்களும் கைது செய்யப் பட்டனர்.
ஶ்ரீ அரவிந்தரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அரவிந்தரைக் கைது செய்த காட்சிகள் கண்முன்னே தோன்றுமாறு பலரும் பதிவிட்டுள்ளார்கள்.கல்கத்தாவின் அலிப்பூர் சிறை அரவிந்தரின் யோக பூமியாக  மாறி ஆன்மிக வாழ்வில் அவர் பூரணமாக ஈடுபடக் காரணமாயிற்று.

இதுவே அலிப்பூர் சதிவழக்கு அல்லது மாணிக் டோலா  வெடிகுண்டு வழக்கு என அந்நாளில் புகழ் பெற்றது.


( ஶ்ரீ அரவிந்தர் கைது, அலிப்பூர் சதி வழக்கு)

19 Jun 2017

ஶ்ரீ அரவிந்தர் -10

ஶ்ரீ அரவிந்தர் -10 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முப்பது   ஆண்டுகளும்
இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளும் இந்திய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலமாகும்.
இந்தியாவில் பல சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஒருவருக் கொருவர் போரிட்டு வந்தனர். சுக வாழ்வு வாழ்ந்து வந்த அவர்கள் அடிமைத்தனத்தை ஆதரித்தனர்
மக்கள்மூட நம்பிக்கை உடையவர்களாக,அடிமைத்தனத்திற்கு அடிபணிபவர்களாக, சோம்பி இருந்தனர்
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய நாட்டின் செல்வங்களைச் சூறையாடியது. சாதி வேற்றுமைகள் வளர்ந்தன. இந்தப் பின்புலத்தில்தான் சுதந்திர இயக்கம், தேசிய இயக்கமாகத் தோன்றியது.

இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர் குலைக்க 1905 ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினையை அமல் படுத்தியது ஆங்கில ஆட்சி எனப் பார்த்தோம்

அடிமைகளாக வாழ்ந்த மக்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து சுதந்திர உணர்வு பெற வேண்டுமென்பதற்காகவே அரவிந்தரின் பேனா முனை பல கட்டுரைகளை எழுதியது.
சமுதாய முன்னேற்றத்திற்கு விடுதலை இன்றியமையாதது என வலியுறுத்தியது.

அரசியல், பொருளாதார சுதந்திரமே ஒரு நாட்டை வலிமையுறச் செய்யும் என எடுத்தியம்பியது.
அடக்கு முறை, இனப்பாகுபாடு, அரசியல் விடுதலை இன்மை, வறுமை இவற்றிலிருந்து மக்களை விடுவிப்பதே தன் தலையாய கடமை என்று எண்ணிய அரவிந்தர் 1906 ஆம் ஆண்டு 710 ரூபாய் சம்பளத்துடன் கூடிய பரோடா கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கல்கத்தா சென்றார். 'வங்காள நேஷனல் கல்லூரியில்' 150 ரூ சம்பள வேலையை ஏற்றுக் கொண்டார்.
அத்துடன் அரவிந்தரின் பதிமூன்று ஆண்டு கால பரோடா வாழ்வு நிறைவுற்றது.

வங்காளத்தில் அவரது சகோதரர் 'பாரின்' நடத்திவந்த "யுகாந்தர்" பத்திரிகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்

இதே சமயம் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திர மல்லிக் என்பாரின் நிதி உதவியுடன்  விபின் சந்திரபால் என்பவர் நடத்திவந்த " வந்தேமாதரம்" என்ற பத்திரிகையைத் தன் புரட்சிகரமான கருத்துக்களைப் பரப்பப் பயன்படுத்திக் கொண்டார்.
அரவிந்தரே முதன் முதலாக பூரண சுதந்திரமே எங்களது நோக்கம் என வெளிப்படையாக  தைரியமாக முழங்கினார். மீண்டும் மீண்டும் 'சுதந்திரம் எங்களது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவோம்' என கோஷமிட்டார். "ஸ்வராஜ்யம்" என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்கக் காரணமானவர் அரவிந்தரே!

1. ஒத்துழையாமை 2. சாத்விக எதிர்ப்பு 3.வெளிநாட்டுப் பொருட்களை ஒதுக்குதல் 4. தேசியக் கல்வி  ஆகியவை அவருடைய அரசியல் கொள்கைகளாகும்.

இதனால் ஆங்கில அரசு அவரை அரசுக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டிவிடும் பயங்கரவாதி என அறிவித்தது.' வந்தே மாதரம்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளால் அவரைக் கைது செய்யவும் முயன்றது. ஆனால் போதிய சாட்சியங்கள் இன்மையால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் போனது. அரவிந்தரோ வங்கத்தின் மூலை முடுக்குகளிலுள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று தன் பேச்சு வன்மையால் சுதந்திர தாகத்தை மக்களிடையே எழுப்பி வந்தார். ஆங்கிலேயர்களும் அவருடைய பேச்சுக்கும், எழுத்துகளுக்கும் மக்கள் செவி சாய்ப்பதை உணர்ந்து அவரைக் கண்டு நடுங்கினர்.
சூரத் காங்கிரஸ் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார்.

இந்திய விடுதலை இயக்கத்தின் பின்புலத்தில் இயங்கிய மாபெரும் சக்தியாக ஶ்ரீ அரவிந்தர் இயங்கினார். அதனாலேயே அவர் தன் தாயாகவே கருதி  பூரண சுதந்திரத்திற்காக மேற்கொண்ட தவவாழ்வின் மேன்மையை யாரும் உணரவில்லை

அரவிந்தர் தன் எழுத்துக்களால் மக்களின் உணர்வுகளை தூண்டினாரே தவிர  குண்டு வெடிப்பு, கொலை இவற்றால் சுதந்திரம் பெறமுடியும் என்று நம்பவில்லை.
ஆனால் அரவிந்தரின் சகோதரர் பாரின் என்பவரும்,அவருடைய நண்பர்களும் வெடிகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்
கல்கத்தா நகர தலைமை நீதிபதி கிங்ஸ்போர்ட் என்பவரைக் கொல்லவும் திட்டமிட்டனர்.

(அரவிந்தரின் அரசியல் கொள்கைகள், வந்தேமாதரம், யுகாந்தர்,எழுத்துகள்)