கல்கத்தா நகரத் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்ட் பல தேசபக்தர்களையும், பத்திரிகையாளர்களையும் சிறையில் அடைத்தான். சுசில்சென் என்ற பள்ளி மாணவனுக்கு முச்சந்தியில் சவுக்கடி கொடுக்கச் செய்தான். அதனால் கொதித்தெழுந்த தீவிரவாதிகள் கிங்ஸ்போர்டைக் கொல்லத் திட்டமிட்டனர்.எண் 15, கோபி மோஹன் தத் குறுக்கு சாலையிலுள்ள வீட்டில் வெடி குண்டு தயாரிக்கப் பட்டது.
அவரைக் கொல்வதற்காக மிட்னபூரைச் சேர்ந்த குதிராம் போஸ், பிரபுல்லா சந்திர சக்கி என்ற இரு இளைஞர்களும் முசாஃபர்பூர் சென்றனர்.
30-04-1908 அன்று கிங்ஸ்போர்ட் தனது மாளிகையிலிருந்து இரண்டு கோச் வண்டிகளில் புறப்பட்டார். காத்திருந்த இளைஞர்கள் கிங்ஸ்போர்ட் இரண்டாம் கோச் வண்டியில் இருப்பதை அறியாமல் முதல் வண்டி மீது குண்டு வீசினர்.
அந்த வண்டியில் பயணம் செய்த திருமதி. கென்னடி என்ற பெண்மணியும், அவரது மகளும் இறந்தனர்.
பிரபுல்லா சந்திர சக்கி, தன்னைக் காவலர் பிடிக்குமுன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டான். பிடிபட்ட குதிராம் தூக்கிலிடப்பட்டான்.
இதைத் தொடர்ந்து பரீந்திர கோஷின் மாணிக்டோலா தோட்ட ஆசிரமத்தை போலீசார் சோதனை இட்டனர். வெடி குண்டுகள், ஆயுதங்கள் இவற்றைக் கைப்பற்றினர். பரீந்திரரும், மற்றும் 34 பேர்களும் கைது செய்யப் பட்டனர்.
ஶ்ரீ அரவிந்தரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அரவிந்தரைக் கைது செய்த காட்சிகள் கண்முன்னே தோன்றுமாறு பலரும் பதிவிட்டுள்ளார்கள்.கல்கத்தாவின் அலிப்பூர் சிறை அரவிந்தரின் யோக பூமியாக மாறி ஆன்மிக வாழ்வில் அவர் பூரணமாக ஈடுபடக் காரணமாயிற்று.
இதுவே அலிப்பூர் சதிவழக்கு அல்லது மாணிக் டோலா வெடிகுண்டு வழக்கு என அந்நாளில் புகழ் பெற்றது.
( ஶ்ரீ அரவிந்தர் கைது, அலிப்பூர் சதி வழக்கு)
No comments:
Post a Comment