25 May 2013

கமொலா எர்கஷெவா! (Kamola Ergasheva)

திருப்பரங்குன்றத் திருப்புகழில் அருணகிரிநாதர்,
''எண்திசை புகழும் புகழ் கொண்டவன் வண்டமிழ்
பயில்வோர்பின் திரிகின்றவன்,''
எனத் திருமாலைப் போற்றுகிறார். எட்டுத்திசையிலும் புகழ் பெற்ற திருமால் தெளிவுடைய செந்தமிழைப்  பயில்வாரது பின்னே அவர் பாடும் பாடலைக் கேட்கும் பொருட்டுத் திரிகிறாராம். தமிழின் பெருமையைப் பாருங்கள்! இத்தனிச் சிறப்பு எம்மொழிக்கு இருக்கிறது?

எட்டுத் திசையிலும் புகழ் மணக்கும் தமிழ் மொழி என்பது எத்துணை பொருத்தமானது என்பதை செய்தித்தாள் செய்தியொன்று எடுத்துச் சொன்னது!

 இந்தியாவிலிருந்து ரஷ்யாவின் ஒரு பகுதியான உஸ்பெகிஸ்தானுக்கு இந்தியக் குழு ஒன்று சென்றது. விமானத்திலிருந்து இறங்கியவுடன் வணக்கம் என்று தேனினும் இனிய தமிழ்ச் சொல்லால் வரவேற்றார் உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்மணி கமொலா எர்கஷெவா! தமிழ் மொழியின் விசிறி! தமிழ் இலக்கண ஆராய்ச்சிசெய்கிறார். இவர் மூன்றாண்டுகள் முதுகலைப் படிப்பில்  தமிழ் இலக்கணம் பயின்றிருக்கிறார். இன்னும் ஓராண்டில் தமிழ் முனைவர் பட்டம் பெற இருக்கிறார்.

தாஷ்கண்ட் மாநில கீழ்த்திசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகத்தில் மிகப் பெரிய நூலகம் அமைந்துள்ளது.  இந்நூலகத்திற்குச் சென்ற கமொலா அங்கிருந்த    500 க்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்களயும், அகராதிகளையும் பார்த்து ஆச்சரியத்திற்கு உள்ளானார். அவற்றைப் படிக்க ஆர்வமுற்ற அவர் அமுதத் தமிழைக் கற்க ஆரம்பித்தார். 

இவர் மாத்திரம் அல்ல! விரைவில் முனைவர் பட்டம் பெற இருக்கும் ''லோல மக்துப'' என்ற ஆராய்ச்சிக் கழக மாணவி 'திரு. சின்னப்ப பாரதி'யின் நாவல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். ஒரு நாவலை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும், இவர் சுத்தமான ஹிந்தி மொழியில் பேசி  ஆச்சரியப்படுத்தினார். இவருடைய ஆசிரியர் இவருக்குள்ள மொழி பயிலும் திறமையை உணர்ந்து முதலில் ஹிந்தியும், பின்னர் தமிழும் கற்க ஊக்கப்படுத்தினாராம். தமிழ் கற்ற இவர் பிற மாணவர்களுக்கும் கற்பிக்க, இவரின் முதல்மாணவி கமொலா. 

இங்குள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் பன்மொழியாளர் 'அசாத் என் ஷாமடொவ்'.  சுமார்  எண்பது மாணவர்கள் ஹிந்தி, உருது, தமிழ், பெங்காலி, பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளைப் பயில்வதாகத் தெரிவித்தார். தென் ஆசிய மொழித்துறைத் தலைவர் சிராஜுதின் நர்மோதேவ்  நிறைய மாணவர்களைத் தமிழ்,  ஹிந்தி மொழிகளைப் படிக்க ஊக்குவிக்கிறார்.
{நன்றி - The Hindu, 24th May, Puduchery edition}

குறிப்பு: திரு. சின்னப்ப பாரதி சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சார்ந்த பரமத்தி ஊர்க்காரர்.
இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதி, பிரபல இலக்கியவாதி.
இவருடைய 'சங்கம்' என்ற நாவல் பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டின் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.
'சுரங்கம்' என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றது. இந்நாவலை 'உபாலி நாணயக்காரா' சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தாகம், சர்க்கரை, பவளாயி-  நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கெளரவம், தெய்வமாய் நின்றாள்- இரண்டும் சிறுகதை தொகுப்புகள்.

பிறநாட்டினர் தமிழ் மொழியை ஆர்வத்துடன்  கற்றுக் கொள்கின்றனர் என்று கேள்விப்படும் போது ஆனந்தமாயிருக்கிறது. ஒரு மொழிக்காக தமிழ் பயிலும் கமொலா எர்கஷெவா அவர்களுக்கும், லோலமக்துப அவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்! வாழிய செந்தமிழ்!

                                                          









19 May 2013

மூங்கில் குழாய் எறும்பு!

நேற்று மாலை அவசரமாக கடைக்குப் போக வேண்டி வந்தது. ஒரு கிலோமீட்டர் தூரம் போயிருப்போம்.

முன்னால் போக முடியாமல் மண் ஏற்றிச் செல்லும் டிராக்டர் நின்றிருந்தது. வண்டியை எடுப்பார்கள் என்று பொறுத்து ஒரு நிமிடத்திற்குப் பின்தான் தெரிந்தது வண்டி ரிப்பேர் என்று! சின்னப் பையன் ஒருவன் டிரைவர் சீட்டில்! உதவியாள் ஒருவன் நீள கம்பியை வைத்துக்கொண்டு  குடைந்து கொண்டு இருந்தான். சிறிய சாலை! டிராக்டரின் மறுபக்கம் இரண்டு ஆட்டோக்கள். இடையே நுழைந்து பெரிய வண்டி போகமுடியாது!

5 நிமிடத்தில் பின்னால் இரண்டு கார், நாலு பைக்! முன் பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் வேறு. பைக், ஸ்கூட்டர் எல்லாம் இடைவெளியில்  நுழைந்து  போயின. ஆட்டோ சொந்தக்காரர் யார் என்று கேட்டும் பதில் வரவில்லை! டிராக்டர் நின்றிருந்த வீட்டு வாசலில் ஒரு அம்மாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்! வேறு வழியில்லாமல் பின்னால் நின்றிருந்த வண்டிகளை 'ரிவர்ஸ்'  எடுக்க வைத்து மாற்றுப் பாதையில் புறப்பட்ட போது அந்த அம்மாள் ''டேய், ராமைய்யாவ கூப்பிட்டு ஆட்டோவ எடுக்க சொல்லுடா" என்று சொல்ல, டிராக்டர் நகர, எங்களுக்கு சிரிப்பு வர, மீண்டும் அதே பாதையில் எங்கள் கார் பறந்தது........ 20 நிமிடங்கள்!

இப்படிதான் வாழ்க்கையில் சில சமயங்களில் முன்னாலும் போக முடியாமல், பின்னாலும் போக முடியாமல் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறோம். மாற்றுப் பாதையில் போகும்போது அந்தப் பாதையின் ஏற்ற இறக்கங்களில், தடங்கல்களைத் தாண்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும். 

கந்தரலங்காரப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நீண்ட மூங்கில் குழாய். உள்ளே ஒரு எறும்பு. இரண்டு பக்கங்களிலும் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. எறும்பு பாவம் இந்தப்பக்கமும், அந்தப் பக்கமும் அலைகிறது. வெளிவரமுடியாமல் திண்டாடுகிறது.

ஒருவன் இருக்கிறான். அவன் மனம் ஏதோ துன்பத்தில் தவிக்கிறது. பாவம் வெளியில் யாரிடமும்போய் சொல்லிக் கொண்டு அழவோ, அதற்கு ஒரு தீர்வு காணவோ அவனுக்கு வழியில்லை! அந்தத்துயரை மறக்கவும் முடியவில்லை. அவன் மனம் நினைந்து நினைந்து வருந்தி நிலைகுலைந்து போகிறது. இந்த எறும்பைப் போல, கொள்ளிக்கட்டையின் இடையே அகப்பட்டதைப் போல தவிக்கிறான். தீர்வு இருக்கிறதா? இருக்கிறது  என்கிறது கந்தரலங்காரம்!

கோடிக்கணக்கான முத்துக்களை வாரி வழங்கும் திருச்செந்தில் கடற்கரையில் கோயில் கொண்டவன். துன்பம் வருங்கால் எடுத்து அணைக்கும் தந்தை, கீழே விழுந்தால் தூக்கிவிடும் தாய்! வள்ளியம்மையாரின் கணவர். மயிலேறிய மாணிக்கம்! சண்முக நாதனின் திருத்தாள்களாகிய படகைப் பற்றிக் கொண்டால் எங்கே, எப்போது நினைக்கினும், அங்கே, அப்போதே வந்து கண்முன் நிற்பான்! உள்ளத்துயரை நீக்குவான். வாழ்க்கைக் கடலை சிரமமின்றிக் கடக்கலாம் என்கிறார் அருணகிரிநாதர்.

கொள்ளித் தலையின் எறும்பது போலக் குலையும் எந்தன் உள்ளத் துயரை ஒழித்தருள்வாய், என அருணகிரிநாதர் பாடுகிறார்.
மாணிக்கவாசகர்,
''இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்''
எனப் பாடிப் பரவுகிறார்.

துன்பங்கள் வருங்கால் நமக்குப் பற்றுக்கோடாய் விளங்குவது இறைவன்தான். அவன் திருவடி சேர்ந்தாருக்கு எவ்வகையாலும் துன்பம் வாராது. நான் சொல்லவில்லை ஐயா, நம்முடைய முன்னோர்கள் அப்படிதான் சொல்லி இருக்கிறார்கள்.