19 May 2013

மூங்கில் குழாய் எறும்பு!

நேற்று மாலை அவசரமாக கடைக்குப் போக வேண்டி வந்தது. ஒரு கிலோமீட்டர் தூரம் போயிருப்போம்.

முன்னால் போக முடியாமல் மண் ஏற்றிச் செல்லும் டிராக்டர் நின்றிருந்தது. வண்டியை எடுப்பார்கள் என்று பொறுத்து ஒரு நிமிடத்திற்குப் பின்தான் தெரிந்தது வண்டி ரிப்பேர் என்று! சின்னப் பையன் ஒருவன் டிரைவர் சீட்டில்! உதவியாள் ஒருவன் நீள கம்பியை வைத்துக்கொண்டு  குடைந்து கொண்டு இருந்தான். சிறிய சாலை! டிராக்டரின் மறுபக்கம் இரண்டு ஆட்டோக்கள். இடையே நுழைந்து பெரிய வண்டி போகமுடியாது!

5 நிமிடத்தில் பின்னால் இரண்டு கார், நாலு பைக்! முன் பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் வேறு. பைக், ஸ்கூட்டர் எல்லாம் இடைவெளியில்  நுழைந்து  போயின. ஆட்டோ சொந்தக்காரர் யார் என்று கேட்டும் பதில் வரவில்லை! டிராக்டர் நின்றிருந்த வீட்டு வாசலில் ஒரு அம்மாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்! வேறு வழியில்லாமல் பின்னால் நின்றிருந்த வண்டிகளை 'ரிவர்ஸ்'  எடுக்க வைத்து மாற்றுப் பாதையில் புறப்பட்ட போது அந்த அம்மாள் ''டேய், ராமைய்யாவ கூப்பிட்டு ஆட்டோவ எடுக்க சொல்லுடா" என்று சொல்ல, டிராக்டர் நகர, எங்களுக்கு சிரிப்பு வர, மீண்டும் அதே பாதையில் எங்கள் கார் பறந்தது........ 20 நிமிடங்கள்!

இப்படிதான் வாழ்க்கையில் சில சமயங்களில் முன்னாலும் போக முடியாமல், பின்னாலும் போக முடியாமல் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறோம். மாற்றுப் பாதையில் போகும்போது அந்தப் பாதையின் ஏற்ற இறக்கங்களில், தடங்கல்களைத் தாண்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும். 

கந்தரலங்காரப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நீண்ட மூங்கில் குழாய். உள்ளே ஒரு எறும்பு. இரண்டு பக்கங்களிலும் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. எறும்பு பாவம் இந்தப்பக்கமும், அந்தப் பக்கமும் அலைகிறது. வெளிவரமுடியாமல் திண்டாடுகிறது.

ஒருவன் இருக்கிறான். அவன் மனம் ஏதோ துன்பத்தில் தவிக்கிறது. பாவம் வெளியில் யாரிடமும்போய் சொல்லிக் கொண்டு அழவோ, அதற்கு ஒரு தீர்வு காணவோ அவனுக்கு வழியில்லை! அந்தத்துயரை மறக்கவும் முடியவில்லை. அவன் மனம் நினைந்து நினைந்து வருந்தி நிலைகுலைந்து போகிறது. இந்த எறும்பைப் போல, கொள்ளிக்கட்டையின் இடையே அகப்பட்டதைப் போல தவிக்கிறான். தீர்வு இருக்கிறதா? இருக்கிறது  என்கிறது கந்தரலங்காரம்!

கோடிக்கணக்கான முத்துக்களை வாரி வழங்கும் திருச்செந்தில் கடற்கரையில் கோயில் கொண்டவன். துன்பம் வருங்கால் எடுத்து அணைக்கும் தந்தை, கீழே விழுந்தால் தூக்கிவிடும் தாய்! வள்ளியம்மையாரின் கணவர். மயிலேறிய மாணிக்கம்! சண்முக நாதனின் திருத்தாள்களாகிய படகைப் பற்றிக் கொண்டால் எங்கே, எப்போது நினைக்கினும், அங்கே, அப்போதே வந்து கண்முன் நிற்பான்! உள்ளத்துயரை நீக்குவான். வாழ்க்கைக் கடலை சிரமமின்றிக் கடக்கலாம் என்கிறார் அருணகிரிநாதர்.

கொள்ளித் தலையின் எறும்பது போலக் குலையும் எந்தன் உள்ளத் துயரை ஒழித்தருள்வாய், என அருணகிரிநாதர் பாடுகிறார்.
மாணிக்கவாசகர்,
''இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்''
எனப் பாடிப் பரவுகிறார்.

துன்பங்கள் வருங்கால் நமக்குப் பற்றுக்கோடாய் விளங்குவது இறைவன்தான். அவன் திருவடி சேர்ந்தாருக்கு எவ்வகையாலும் துன்பம் வாராது. நான் சொல்லவில்லை ஐயா, நம்முடைய முன்னோர்கள் அப்படிதான் சொல்லி இருக்கிறார்கள். 

   
3 comments:

  1. What a true saying?. Many problems we doint know how to express it outside. true sayings.

    ReplyDelete
  2. வாழ்க்கையே சில சமயங்களில் கழுதை போலாகிவிடுகிறது. முன்னே போனால் கடிக்கும். பின்னே வந்தால் உதைக்கும். நாம் அப்போதெல்லாம் இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்க வேண்டி இருக்கிறது. கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியற்று போகிறது.

    ReplyDelete
  3. ஆம்.இக்கட்டான தருணங்களிலும் ஏதோ ஒரு சக்தி நம்மைத் தட்டிக் கொடுத்து, போகட்டும், விட்டுவிடு மேல்கொண்டு செல்' எனச் சொல்வது போல் தோன்றும்.

    ReplyDelete