29 Aug 2013

கோகுலாஷ்டமி


கண்ணன் பிறந்தநாளில் முன்பெல்லாம் பக்த மீரா படம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாவின் காற்றினிலே வரும் கீதம் எங்கும் நிறையும்!

ஒரே நேரத்தில் எங்கும் இருக்கும் வல்லமையுடையவன் என்பதை உணர்த்தவே ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனின் பாதங்களை கோலமாக வரைகிறார்கள்.

உலக மேடையில் வாழ்க்கை விளையாட்டை நன்கு விளையாடத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது கண்ணனின் பிருந்தாவன லீலைகள்.

தனிப்பட்ட ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே கண்ணன் பிறந்த நாளில் முறுக்கு, சீடை ஆகிய கடிக்கக் கடினமானவற்றை நிவேதனம் செய்கிறோம்.

வெண்ணெய்க்கு 'நவநீதம்' எனப் பெயர் உண்டு. ஒரு முறை தயிர் கடைந்து வெண்ணெய் எடுத்து விட்டால் அது மீண்டும் கரையாது.

அது போல உலக வாழ்க்கை என்ற மோரிலிருந்து மனம் என்ற வெண்ணெயை பிரித்து எடுத்து கண்ணனிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

கண்ணன் திருவடிகளில் நிலைத்த மனத்தை கண்ணனே கவர்ந்து கொள்வான். அதனால் அவனை நவநீதசோரன் எனப் போற்றுவர்

கண்ணனை யோகேஸ்வரன் என்று மஹாபாரதம் போற்றுகிறது.

'கோ' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'பசு'என்று பொருள்.எல்லா ஜீவராசிகளுமே பசுக்கூட்டங்கள்.இவற்றைப் பரிபாலிப்பதால் கோபாலன்.

இந்திரியங்களுக்கு எல்லாம் தலைவன் ஆதலால் 'ஹ்ருஷிகேசன்.

ஜீவர்கள் எல்லோரும் கோபிகளே என உணர்த்தும்-'கோபிநாதன்' என்றபெயர்.

ஜகத்திலுள்ள அத்தனை உயிர்களுக்கும் உயிராய் இருக்கின்றான் ஆதலால்,'ஜகன்நாதன்'

மா- இலட்சுமி, தவ - தலைவன், இலட்சுமியின் தலைவன் ஆதலால் 'மாதவன்'

தன் பெரு நிலையிலிருந்து இறங்காதவன் எனவே,'அச்சுதன்'

கருநீலவண்ணமுடையவன், எனவே கிருஷ்ணன்,

கேசின் என்ற அசுரனை வென்றவன், அழகான ரோமத்தை உடையவன் எனவே'கேசவன்'

கோ-உயிர், விந்தன் - அறிபவன். உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அறிந்தவன் கோவிந்தன்

மது என்ற அரக்கனைக் கொன்றவன் - மதுசூதனன்

பார்த்தனுக்குத் தேரோட்டியவன் - பார்த்த்சாரதி

குதிரை வடிவெடுத்த கேசி என்ற அசுரனின் வாயினுள் கை நீட்டி, குடலைக் கசக்கிக் கொன்றதால்'கேசிநிஷூதனன்'!கைவலிவைக் காட்டியதால் 'மகாபாகு'

''பயனை விரும்பியோ, ஆடம்பரத்திற்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை நான் விரும்புவதில்லை.

துன்புறுத்தாத வாய்மையும் இனிமையும் நலனும் கூடிய வார்த்தை, இது வாக்கு மயமான தபசு எனப்படுகிறது.

மனவமைதி, அன்புடைமை, மெளனம், தன்னடக்கம், தூய நோக்கம் - இது மனதால் செய்யப்படும் தவமாகும்.''பகவத்கீதை

''பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு''

'அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு.

''எந்தை தந்தை தந்தைதந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழியாட் செய்கின்றோம்'' பெரியாழ்வார்

யோகேஸ்வர ஸ்ரீகிருஷ்ணன் அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
பி. லீலாவின் குரல் குருவாயூரப்பனை வர்ணிப்பதைக் கேட்டு மகிழுங்கள். கீழே சுட்டி.


http://www.devaragam.com/vbscript/WimpyPlayer_ext.aspx?ord=t&var=12207

27 Aug 2013

யாதும் ஊரே......



ஒரு நாள் உங்களோட ஊர் சுத்த ஆசையா இருக்கு, ஜெயநகர் வாங்கன்னு பேரன் சொன்னான். சரிதான் அவன் ஆசையைக் கெடுப்பானேன் என்று சரியென்றேன். இன்னிக்கு வாங்க, கொஞ்சம் ஷாப்பிங்,  பின்னாலே ஜெயநகர் மையாஸ்ல லஞ்ச் சாப்பிடலாம், என்று சொல்ல காலையில் எழுந்ததும் தயாரானேன்!
கிட்டத் தட்ட இரண்டு மாதத்திற்குப் பின் ஆட்டோல  ஏறினேன். ஆட்டோ ஓட்டுநர்
சங்கர், இளைஞர். ஒல்லியான உடம்பு, அரும்பு மீசை, ஆனால் கண்ணாடி.  முதலில் ஜே. பி. நகர் வழி தெரியுமா என்று கேட்டேன். தெரியும் என்றார்.
சீதா சர்க்கிள் போனதுமே ரிங் ரோட்டில் திருப்ப இருந்தவரை, 'லெஃப்ட் ஹோகி,' என்றேன். அஜ்ஜி ரிங்ரோட்தான் சிக்னல் இல்லாம சீக்கிரம் போற வழி என்றார்.
வித்யாபீடம், வந்தவுடன் அஜ்ஜி ரைட்டா, லெஃட்டா, ஸ்ட்ரெய்ட்டா? ஹேளி, என்றாரா,'' இதோ பாரு 'பேரா' எனக்கு எல்லா வழியும் தெரியும், உனக்கும் தெரியும், தகராரு செய்யப்போறேன்னா சொல்லிடு. இறங்கிக்கிறேன்,'' என்று சொன்னேன். வண்டி கொஞ்சம் கன்னாபின்னான்னு பறந்தது. நீங்க எனக்கு வழி சொல்லாம வாங்க, என்னா? காது கேக்குதா அஜ்ஜி?  என்றார். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நல்ல குணாதிசயம் உள்ள ஆளுதான். ஒரு வழியாக இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தினார்.
என்னுடைய ஆசீர்வாதமாக  ஐந்து ரூபாய்!
பாக்கியை வாங்காமல் விட்டதில சங்கருக்கு சந்தோஷம்.  
முன்பின் அறிமுகம் இல்லாதவருடைய 'அஜ்ஜி ' ஆனதில எனக்கு சந்தோஷம். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'  அல்லவா?

21 Aug 2013

மாப்பிள்ளை வந்தான்!

ஒரு கல்யாணம் அமர்க்களமாக நடக்கிறது.  அலங்கார,  ஆடம்பரம் மிக்க மண்டபங்கள் இல்லை, மேளதாளங்கள் இல்லை. கேட்டரிங் சர்வீஸ் இல்லை, பட்டும், நகையும் படாடோபங்களும் இல்லை. பெண்ணும், மாப்பிள்ளையும் அழகு நிலையத்துக்குப் போய் வரவேற்பு சாப்பாடு, முடிந்தபின் வருகின்ற அசட்டுத்தனம் இல்லை. போலியாய்ச் சிரித்து போஸ்கொடுத்து போட்டோ பிடித்தலும் இல்லை. இதெல்லாம் இல்லாம ஒரு கல்யாணமா? சும்மா டூப் விடாதீங்கன்னு சொல்றீங்க!

நெசம்தாங்க, பாருங்களேன்! இதோ மாப்பிள்ளை சல்சல் என்று சலங்கை சத்தம்போடும் மாட்டு வண்டியிலே வருகிறார் ஜம்மென்று! பெண் வருகிறாள் பெட்டி வண்டியில்! மத்தவங்க எல்லாம் எங்கே? அதோ..... அங்க பாருங்க புள்ளயப் பெத்த அம்மா, பெண்ணுக்கு மாமியார் மேல் கூரையில்லாத மொட்டை வண்டியிலே வாரா வெகு கம்பீரமாக!
பொண்ண பெத்த அப்பா பாவம், பரிதாபமாக ஒரு ஓட்டை வண்டியிலே வந்து இறங்குகிறார்.
ஊருக்கு  வெளியே மாமரத்தடியிலே கல்யாணம். பனையோலையிலே செய்த ஊதல் ஒலிக்கிறது.  நாதஸ்வரம்!

கல்யாணம் ஆச்சு. பொண்ணு என்ன செய்யுது?  இடுப்பிலே ஒளித்து வச்சுருக்கிற கம்மர்கட்டு மிட்டாய, காக்கா கடி கடிச்சு பாதி பண்ணி மாப்பிள்ளைக்கு கொடுக்கிறா, இந்தக் காலத்து கேட்பரீஸ் சாக்லேட் மாதிரி. ஆனா என்னதான் சொல்லுங்க கம்மர்கட் மிட்டய்க்கு ஈடு இணை உண்டா? மாப்பிள்ளயோ பாதி கம்மர்கட்டை சோக்கா( ஸ்டைலா) வாங்கித் தின்னாராம். ஒரே களைப்பு பாருங்க, கொட்டாவி விடுகிறார்.

கல்யாணத்துக்கு விருந்து வெக்க வேணாமா? ஓட்டாஞ் சல்லிய எடுத்துக் கொண்டு பொண்ணு வீட்டுக்காறங்க மார்க்கட் போய் ஓராழாக்கு அரிசி வாங்கி வாராங்க! அது என்ன ஓய் ஓட்டாஞ்சல்லி?
ஒடைஞ்சு போன ஓட்டின் துண்டுதான்! அத வெச்சு பாண்டியாட்டம் ஆடுவோமில்ல? ஓட்டாஞ் சல்லிதான் காசு. ஓராழாக்கு அரிசிய வாங்கிட்டு வந்து, ஒலையில போட்டு கூட்டாஞ் சோறு சமையால் விருந்து! கும்மாளம் போட்டுக் கொண்டு சாப்பாடு ஆச்சு.

அடுத்தது என்ன? கொழவிக்கல்லு பிள்ளைய குஷியாகப் பெத்துக்கறா பொண்ணு! ஆராரோ, நீ ஆரோ? அருமையான கொழந்த யாரோ?' என்று ஒரு தாலாட்டுப் பாட்டில் ஒரு கல்யாண வைபோகத்தைக் கண்முன்னால் நிறுத்துகிறார் பாடலாசிரியர்! 

குழந்தைகள் விளையாட்டில்தான் எத்தனை அழகு! கள்ளங்கபடம் இல்லாமல் ஆனந்தமயமாகக் குதித்துக் கும்மாளம் இடுவதில்தான் எத்துணை தெய்வீகம்!

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு மணநாளின் நினைவலைகள் இந்தப் பாடலின் பின்னணியில்.....! நினைவுகளைச் சுமப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது! 

(1959 ல் ''காவேரியின் கணவன்'' என்று ஒரு திரைப் படம். அந்தப் படத்தில் எல். ஆர். ஈஸ்வரியும், எம். எஸ். ராஜேஸ்வரியும், கே. வீ. மஹாதேவன் இசையில்  இணைந்து பாடிய இனிய பாடல்! பாடலாசிரியர்
டீ.என். இராமையாதாஸ்)

பாடலைக் கேட்டு மகிழுங்களேன். இரண்டு ஈஸ்வரிகளின் தேனொழுகும் குரல்.......! 

(பாடலைக் கேட்க கீழே க்ளிக் செய்யவும்.)










14 Aug 2013

Service of the Mother - India

India is not the earth, rivers and mountains of this land, neither is it a collective name for the inhabitants of this country. India is a living being, as much living as, say, Shiva. India is a goddess as Shiva is a god. If she likes, she can manifest in human form.                                                                                             
Love has a place in politics, but it is the love of one's country, for one's countrymen,, for the glory, greatness and happiness of the race, the divine ananda of self- immolation for one's fellows, the ecstasy of  relieving their sufferings, the joy of seeing one's blood flow for country and freedom,  the bliss of union in death with the fathers of the race.
The feeling of almost physical delight in the touch of the Mother soil, of the winds that blow from Indian seas, of the rivers that stream from Indian hills, in the hearing of Indian speech, music, poetry, in the familiar sights, sounds, habits, dress,  manners of our Indian life, this is the physical root of that LOVE. The pride in our past, the pain of our present, the passion for the future are its trunk and branches. Self- sacrifice and self - forgetfulness, great service, high endurance for the country are its fruit. And the sap which keeps it alive is the realisation of the Motherhood of God in the country, the vision of the Mother, the knowledge of the Mother, the perpetual contemplation, adoration and service of the Mother. 
SRI AUROBINDO

Each nation has a psychic being which is its true being and moulds its destiny from behind the veil: 
it is the SOUL of the country, the national genius,  the spirit of the people, the centre of national aspiration, the fountainhead of all that is beautiful, noble, great and generous in the life of the country.
True patriots feel its presence as a tangible reality. In India it has been made into an almost divine entity,  and all who truly love their country call it ''MOTHER INDIA'' (Bharat Mata) and offer her a daily prayer for the welfare of their country. It is she who symbolizes and embodies the true ideal of the 
country, its true mission in the world  - THE MOTHER

IT IS BY BEING SINCERE, COURAGEOUS, ENDURING AND HONEST THAT YOU CAN BEST SERVE YOUR COUNTRY, MAKE IT ONE AND GREAT IN THE WORLD.

THE MOTHER.











5 Aug 2013

கண்ணாடியும் மூக்கும்

இராமாயணத்தில் ஒரு காட்சி. காட்டிலே சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள் சூர்ப்பணகை. சூர்ப்பம் என்றால் முறம்! முறம் போன்ற நகங்களையுடையவள்! அந்தக் காலத்திலேயே நகம் வளர்த்துக் கொள்வார்கள் போல? அழகே உருவான இராமனையும், இலக்குவனையும் சீதா தேவியையும் பார்க்கிறாள். சீதையின் அழகு அவளை ஆச்சரியப்படுத்தியது என்றால், இராமனின் அழகு கண்டதும் காதல் கொள்ளச் செய்கிறது. அழகிய வடிவத்துடன் இராமன் முன் சென்று தன்னை மணம் முடிக்க வேண்டுகிறாள். இலக்குவன் கோபம் கொண்டு அவள் மூக்கை கத்தியால் வெட்டிவிடுகிறான்.
கதையைக் கேட்கும் குழந்தைகள் எல்லாம் சிரித்து மகிழும்.

அழுகின்ற சின்னக் குழந்தையிடம் மூக்கின்மேல் விரலை வைத்துத் தேய்த்தால் சிரிக்கும். "முளைச்சு மூணு இலை விடல, மூக்குக்கு மேல கோவத்தைப் பாரு',  'அவன் மூக்கை உடைச்ச மாதிரி பண்ணிட்டேன்', 'மூக்கு மேல விரல வைக்கற மாதிரி செய்யலன்னா பெயரையே மாத்திக்கிறேன்', 'மூக்கும் முழியுமா உனக்கு பொண்ணு பொறந்திருக்கு', 'கிளி மூக்கு, கொடமொளகா மூக்கு, சப்பை மூக்கு',"என்றெல்லாம் சொல்வதைக் கேட்கிறோம். கண்ணுக்குப் போடற கண்ணாடிய மூக்குக் கண்ணாடி என்கிறோம்!

''எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு,'' என்று எதிர் நீச்சல் படத்தில் செளகார் ஜானகி கழுத்தை ஒரு வெட்டு வெட்டுவார்! அந்தக் காலத்தில் இந்த எட்டுக்கல் பேசரிக்கு ஏக டிமாண்ட்!
வரப் போகிற மருமகளுக்கு வைர மூக்குத்தி போட்டே ஆக வேண்டும் என்று பெண் வீட்டாரின் கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டும் பிள்ளை வீட்டார் உண்டு. எல்லாம் மூக்காலதானே வந்தது?

மூக்கு இல்லைனா சளி பிடிக்காமயாவது இருந்திருக்குமோ என்னவோ?
'சும்மா மூக்கசிந்தாதே வாங்கித் தந்து தொலைக்கிறேன்,' என்று கோபத்தில் புருஷன் காரன்  கத்தாம இருந்திருப்பானோ?
கண்ணாடின்னு தலைப்பைப் போட்டுவிட்டு மூக்கைப் பத்தி என்ன ஆராய்ச்சி என்கிறீர்களா? எல்லாம் எனக்கு உடம்பு சரியில்லாம போனதாலதாங்க! காலங்கார்த்தால இரண்டு வரிகள் என் தலையில ஓடிட்டு இருக்கு!

''மூக்கிலன் முன் காட்டும் முகுரமாகாது எனைத் தூக்கி அணைந்தருள் அருணாசலா''(81)

ஶ்ரீரமணபகவான் அருளிச் செய்த அருணாசல அக்ஷரமணமாலையில் வரும் இரண்டு வரிகளே அவை!

மாலை நேரம்! குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடுகிறார்கள். இடையிலே இரண்டு பேருக்குச்  சின்ன சண்டை! ஒருவன் மற்றவனை அடிக்கிறான். அடி வாங்கியவன் சும்மா இருப்பானா? அவன் ஒரு  குத்து விடுகிறான். இருவரும் அழுது கொண்டு அம்மாவிடம் ஓடுகிறார்கள். குத்து வாங்கியவனின் மூக்கில்  அடிபட்டுவிடுகிறது. அம்மா இருவரையும் கோபித்துக் கொள்கிறாள். ஆனால் குத்து வாங்கின குழந்தையைத் தூக்கி தோளிலே சாய்த்துக் கொள்கிறாள்! தட்டிக் கொடுக்கிறாள். இனிமே சண்டை போடக் கூடாது என்கிறாள்.

கீழே குதிக்கிறான் குழந்தை! நேராக கண்ணாடி முன் போய் தன் முகத்தைப் பார்த்துக் கொள்கிறான்.
''அம்மா, பாத்தியா எப்பிடி அடிச்சிருக்கான்''! 
நீ என்னடா செஞ்சே? - பதில் இல்லை! கருணை மிகுந்த அம்மா,போகட்டும் விடு, மருந்து போடுகிறேன் வா, என்கிறாள்!

கண்ணாடியின் வேலை பிரதிபலிப்பதுதானே?அதற்குத் தெரியுமா தன்முன் நிற்பவருக்கு மூக்கு இருக்கிறதா இல்லையா, அடி பட்டிருக்கிறதா என்று? வெளியில் தெரியும் உருவத்தை, உள்ளதை உள்ளபடி  காட்டும்  செயலை  மட்டுமே  செய்யும்  கண்ணாடி.

அகக்கண்ணாடி என்று ஒன்று இருக்கிறது. அது நம் உள்ளத்தில் வெளியே யாருக்கும் தெரியாத நம்முடைய உண்மையான எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், விருப்பு வெறுப்புகளையும் காட்டும் ஆன்மாவாகிய கண்ணாடி! அதனிடம் நம்மால் எதையும் மறைக்க முடியாது! நாம் சொல்லாமலே நம்மை அடிமுதல் நுனி வரை அறிந்த கண்ணாடி, அதுதான் கடவுள். அவன்தான் சரீரமாகிய இந்த வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறான். செலுத்துதல் என்றால் கடவுதல். அதனால் கடவுள்! 

பகவான் சொல்கிறார்,''மூக்கு இல்லாதவன் முன்னாலே வைக்கின்ற கண்ணாடியப் போல''! மூக்கு சின்னாபின்னமானவன் முகத்துக்கு நேரே ஒருவன் கண்னாடியைக் காட்டுகிறான். அவன் என்ன செய்வான்? அழுவான். ஐயோ எல்லோரும் என்னைப் பார்த்து மூக்கே இல்லாதவண்டா என்று கேலி செய்வார்களே! என் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லையே என்று நொந்து கொள்வான். அது போல நல்ல குணங்கள் இல்லாத என் குற்றங்குறைகளையெல்லாம் தயவு செய்து  எனக்கு பிரதிபலித்துக் காட்டி, பரிகாசம் செய்யும் முகக் கண்ணாடியாய் இருக்காது என்னை உயர்த்துவாய்! என் குறைகள் எனக்கும் உனக்கும் தெரியும்! தயவு செய்து, கருணையுடன், என்மேல் இரக்கம் வைத்து என்னை தூக்கி அணைத்து, எனக்கு ஆறுதல் தருவாய். குற்றம் செய்தல் என் இயல்பு. மன்னித்து அருள் செய்ய வேண்டியது உன் பொறுப்பு!
''மூக்கிலன் முன் காட்டும் முகுரமாகாமல் எனைத் தூக்கி அணைந்தருள்'' -முகுரம்னா கண்ணாடி!

'அடுத்தது காட்டும் பளிங்கு' என்பார் வள்ளுவப் பெருந்தகை. ''மனத்தவக் கண்ணாடியில் தடம் கண்ட வேலா,'' என்பார் அருணகிரியார். வள்ளல் பிரானுக்கு தணிகை வேலன் கண்ணாடியில் காட்சி கொடுத்து அருள் புரிந்தான். ''தர்ப்பணமதனில் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற் கீந்த விளைவும்,'' (சாந்தம் புத்தூரில் வில்லைக் கொண்டு போர் புரிகின்ற வேடனுக்கு கண்ணாடியிலே காட்சி கொடுத்தருளினை) என மாணிக்கவாசகர் கீர்த்தித் திருவகவலில் இறைவனின் கருணையைப் போற்றுகிறார்! தர்ப்பணம் என்றால் கண்ணாடி.

வள்ளலார் சொல்வார், எல்லாம் நம்மைப் பற்றிதான்! ''பொய்யகத்தேன், புலையேன், கொடு மனத்தேன், தவம் புரியேன், வஞ்சமனப் பாறை சுமந்து உழல்வேன், தருக்குகின்றேன், கடுமையேன்,''  - ஆனால் ''என்னைக்காப்பது உன்கடன் காண், கைவிடேல் எந்தாய், அரசே, என் அம்மே, என் அப்பா, குற்றமெல்லாம் நல்ல குணமாய்க் கொண்டவனே''- என்ன சரணாகதி பாருங்கள்?

நினைக்க முக்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. சாதி, மத, இன, நிற, தேச வேறுபாடுகள் எதுவும் இன்றி, எல்லோருக்கும் '' நான் யார்,'' என்ற ஆத்ம விசார மார்க்கத்தைக் காண்பித்தவர் ஶ்ரீ. ரமணபகவான். அவர் அருணாசலேஸ்வரருக்கு சூட்டிய சொன்மாலையே அக்ஷரமணமாலை. 'அ' கரம் முதல் னகரம்  ஈறாக எழுத்து வரிசைப்படி ஆரம்ப எழுத்துக் கொண்ட பாக்களாலான சிறந்த பூமாலை.

ஆன்ம சமர்ப்பணத்திற்கு வழிகாட்டும் 108 கண்ணிகளையுடைய இப்பாமாலையைப் படிப்பவர் உள்ளத்தில்  பொங்கிப் பெருகி வெள்ளமென சுழித்தோடும் ஆனந்தத்தையும், அமைதியையும் எழுத்துக்களால் எழுதவோ, எடுத்துச் சொல்லவோ வார்த்தைகள் இல்லை. அக்ஷரமணமாலை வாழ்க்கைத் துணை, வழித்துணை!

''வாழி நீ அருணாசல உனை வழுத்தி வாழ்த்திடத் தாழ்த்தும் என் தலையே''