ஒரு கல்யாணம் அமர்க்களமாக நடக்கிறது. அலங்கார, ஆடம்பரம் மிக்க மண்டபங்கள் இல்லை, மேளதாளங்கள் இல்லை. கேட்டரிங் சர்வீஸ் இல்லை, பட்டும், நகையும் படாடோபங்களும் இல்லை. பெண்ணும், மாப்பிள்ளையும் அழகு நிலையத்துக்குப் போய் வரவேற்பு சாப்பாடு, முடிந்தபின் வருகின்ற அசட்டுத்தனம் இல்லை. போலியாய்ச் சிரித்து போஸ்கொடுத்து போட்டோ பிடித்தலும் இல்லை. இதெல்லாம் இல்லாம ஒரு கல்யாணமா? சும்மா டூப் விடாதீங்கன்னு சொல்றீங்க!
நெசம்தாங்க, பாருங்களேன்! இதோ மாப்பிள்ளை சல்சல் என்று சலங்கை சத்தம்போடும் மாட்டு வண்டியிலே வருகிறார் ஜம்மென்று! பெண் வருகிறாள் பெட்டி வண்டியில்! மத்தவங்க எல்லாம் எங்கே? அதோ..... அங்க பாருங்க புள்ளயப் பெத்த அம்மா, பெண்ணுக்கு மாமியார் மேல் கூரையில்லாத மொட்டை வண்டியிலே வாரா வெகு கம்பீரமாக!
பொண்ண பெத்த அப்பா பாவம், பரிதாபமாக ஒரு ஓட்டை வண்டியிலே வந்து இறங்குகிறார்.
ஊருக்கு வெளியே மாமரத்தடியிலே கல்யாணம். பனையோலையிலே செய்த ஊதல் ஒலிக்கிறது. நாதஸ்வரம்!
கல்யாணம் ஆச்சு. பொண்ணு என்ன செய்யுது? இடுப்பிலே ஒளித்து வச்சுருக்கிற கம்மர்கட்டு மிட்டாய, காக்கா கடி கடிச்சு பாதி பண்ணி மாப்பிள்ளைக்கு கொடுக்கிறா, இந்தக் காலத்து கேட்பரீஸ் சாக்லேட் மாதிரி. ஆனா என்னதான் சொல்லுங்க கம்மர்கட் மிட்டய்க்கு ஈடு இணை உண்டா? மாப்பிள்ளயோ பாதி கம்மர்கட்டை சோக்கா( ஸ்டைலா) வாங்கித் தின்னாராம். ஒரே களைப்பு பாருங்க, கொட்டாவி விடுகிறார்.
கல்யாணத்துக்கு விருந்து வெக்க வேணாமா? ஓட்டாஞ் சல்லிய எடுத்துக் கொண்டு பொண்ணு வீட்டுக்காறங்க மார்க்கட் போய் ஓராழாக்கு அரிசி வாங்கி வாராங்க! அது என்ன ஓய் ஓட்டாஞ்சல்லி?
ஒடைஞ்சு போன ஓட்டின் துண்டுதான்! அத வெச்சு பாண்டியாட்டம் ஆடுவோமில்ல? ஓட்டாஞ் சல்லிதான் காசு. ஓராழாக்கு அரிசிய வாங்கிட்டு வந்து, ஒலையில போட்டு கூட்டாஞ் சோறு சமையால் விருந்து! கும்மாளம் போட்டுக் கொண்டு சாப்பாடு ஆச்சு.
அடுத்தது என்ன? கொழவிக்கல்லு பிள்ளைய குஷியாகப் பெத்துக்கறா பொண்ணு! ஆராரோ, நீ ஆரோ? அருமையான கொழந்த யாரோ?' என்று ஒரு தாலாட்டுப் பாட்டில் ஒரு கல்யாண வைபோகத்தைக் கண்முன்னால் நிறுத்துகிறார் பாடலாசிரியர்!
குழந்தைகள் விளையாட்டில்தான் எத்தனை அழகு! கள்ளங்கபடம் இல்லாமல் ஆனந்தமயமாகக் குதித்துக் கும்மாளம் இடுவதில்தான் எத்துணை தெய்வீகம்!
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு மணநாளின் நினைவலைகள் இந்தப் பாடலின் பின்னணியில்.....! நினைவுகளைச் சுமப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது!
(1959 ல் ''காவேரியின் கணவன்'' என்று ஒரு திரைப் படம். அந்தப் படத்தில் எல். ஆர். ஈஸ்வரியும், எம். எஸ். ராஜேஸ்வரியும், கே. வீ. மஹாதேவன் இசையில் இணைந்து பாடிய இனிய பாடல்! பாடலாசிரியர்
டீ.என். இராமையாதாஸ்)
பாடலைக் கேட்டு மகிழுங்களேன். இரண்டு ஈஸ்வரிகளின் தேனொழுகும் குரல்.......!
(பாடலைக் கேட்க கீழே க்ளிக் செய்யவும்.)
No comments:
Post a Comment