இராமாயணத்தில் ஒரு காட்சி. காட்டிலே சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள் சூர்ப்பணகை. சூர்ப்பம் என்றால் முறம்! முறம் போன்ற நகங்களையுடையவள்! அந்தக் காலத்திலேயே நகம் வளர்த்துக் கொள்வார்கள் போல? அழகே உருவான இராமனையும், இலக்குவனையும் சீதா தேவியையும் பார்க்கிறாள். சீதையின் அழகு அவளை ஆச்சரியப்படுத்தியது என்றால், இராமனின் அழகு கண்டதும் காதல் கொள்ளச் செய்கிறது. அழகிய வடிவத்துடன் இராமன் முன் சென்று தன்னை மணம் முடிக்க வேண்டுகிறாள். இலக்குவன் கோபம் கொண்டு அவள் மூக்கை கத்தியால் வெட்டிவிடுகிறான்.
கதையைக் கேட்கும் குழந்தைகள் எல்லாம் சிரித்து மகிழும்.
கதையைக் கேட்கும் குழந்தைகள் எல்லாம் சிரித்து மகிழும்.
அழுகின்ற சின்னக் குழந்தையிடம் மூக்கின்மேல் விரலை வைத்துத் தேய்த்தால் சிரிக்கும். "முளைச்சு மூணு இலை விடல, மூக்குக்கு மேல கோவத்தைப் பாரு', 'அவன் மூக்கை உடைச்ச மாதிரி பண்ணிட்டேன்', 'மூக்கு மேல விரல வைக்கற மாதிரி செய்யலன்னா பெயரையே மாத்திக்கிறேன்', 'மூக்கும் முழியுமா உனக்கு பொண்ணு பொறந்திருக்கு', 'கிளி மூக்கு, கொடமொளகா மூக்கு, சப்பை மூக்கு',"என்றெல்லாம் சொல்வதைக் கேட்கிறோம். கண்ணுக்குப் போடற கண்ணாடிய மூக்குக் கண்ணாடி என்கிறோம்!
''எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு,'' என்று எதிர் நீச்சல் படத்தில் செளகார் ஜானகி கழுத்தை ஒரு வெட்டு வெட்டுவார்! அந்தக் காலத்தில் இந்த எட்டுக்கல் பேசரிக்கு ஏக டிமாண்ட்!
வரப் போகிற மருமகளுக்கு வைர மூக்குத்தி போட்டே ஆக வேண்டும் என்று பெண் வீட்டாரின் கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டும் பிள்ளை வீட்டார் உண்டு. எல்லாம் மூக்காலதானே வந்தது?
மூக்கு இல்லைனா சளி பிடிக்காமயாவது இருந்திருக்குமோ என்னவோ?
'சும்மா மூக்கசிந்தாதே வாங்கித் தந்து தொலைக்கிறேன்,' என்று கோபத்தில் புருஷன் காரன் கத்தாம இருந்திருப்பானோ?
கண்ணாடின்னு தலைப்பைப் போட்டுவிட்டு மூக்கைப் பத்தி என்ன ஆராய்ச்சி என்கிறீர்களா? எல்லாம் எனக்கு உடம்பு சரியில்லாம போனதாலதாங்க! காலங்கார்த்தால இரண்டு வரிகள் என் தலையில ஓடிட்டு இருக்கு!
''மூக்கிலன் முன் காட்டும் முகுரமாகாது எனைத் தூக்கி அணைந்தருள் அருணாசலா''(81)
ஶ்ரீரமணபகவான் அருளிச் செய்த அருணாசல அக்ஷரமணமாலையில் வரும் இரண்டு வரிகளே அவை!
மாலை நேரம்! குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடுகிறார்கள். இடையிலே இரண்டு பேருக்குச் சின்ன சண்டை! ஒருவன் மற்றவனை அடிக்கிறான். அடி வாங்கியவன் சும்மா இருப்பானா? அவன் ஒரு குத்து விடுகிறான். இருவரும் அழுது கொண்டு அம்மாவிடம் ஓடுகிறார்கள். குத்து வாங்கியவனின் மூக்கில் அடிபட்டுவிடுகிறது. அம்மா இருவரையும் கோபித்துக் கொள்கிறாள். ஆனால் குத்து வாங்கின குழந்தையைத் தூக்கி தோளிலே சாய்த்துக் கொள்கிறாள்! தட்டிக் கொடுக்கிறாள். இனிமே சண்டை போடக் கூடாது என்கிறாள்.
கீழே குதிக்கிறான் குழந்தை! நேராக கண்ணாடி முன் போய் தன் முகத்தைப் பார்த்துக் கொள்கிறான்.
''அம்மா, பாத்தியா எப்பிடி அடிச்சிருக்கான்''!
நீ என்னடா செஞ்சே? - பதில் இல்லை! கருணை மிகுந்த அம்மா,போகட்டும் விடு, மருந்து போடுகிறேன் வா, என்கிறாள்!
கண்ணாடியின் வேலை பிரதிபலிப்பதுதானே?அதற்குத் தெரியுமா தன்முன் நிற்பவருக்கு மூக்கு இருக்கிறதா இல்லையா, அடி பட்டிருக்கிறதா என்று? வெளியில் தெரியும் உருவத்தை, உள்ளதை உள்ளபடி காட்டும் செயலை மட்டுமே செய்யும் கண்ணாடி.
அகக்கண்ணாடி என்று ஒன்று இருக்கிறது. அது நம் உள்ளத்தில் வெளியே யாருக்கும் தெரியாத நம்முடைய உண்மையான எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், விருப்பு வெறுப்புகளையும் காட்டும் ஆன்மாவாகிய கண்ணாடி! அதனிடம் நம்மால் எதையும் மறைக்க முடியாது! நாம் சொல்லாமலே நம்மை அடிமுதல் நுனி வரை அறிந்த கண்ணாடி, அதுதான் கடவுள். அவன்தான் சரீரமாகிய இந்த வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறான். செலுத்துதல் என்றால் கடவுதல். அதனால் கடவுள்!
பகவான் சொல்கிறார்,''மூக்கு இல்லாதவன் முன்னாலே வைக்கின்ற கண்ணாடியப் போல''! மூக்கு சின்னாபின்னமானவன் முகத்துக்கு நேரே ஒருவன் கண்னாடியைக் காட்டுகிறான். அவன் என்ன செய்வான்? அழுவான். ஐயோ எல்லோரும் என்னைப் பார்த்து மூக்கே இல்லாதவண்டா என்று கேலி செய்வார்களே! என் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லையே என்று நொந்து கொள்வான். அது போல நல்ல குணங்கள் இல்லாத என் குற்றங்குறைகளையெல்லாம் தயவு செய்து எனக்கு பிரதிபலித்துக் காட்டி, பரிகாசம் செய்யும் முகக் கண்ணாடியாய் இருக்காது என்னை உயர்த்துவாய்! என் குறைகள் எனக்கும் உனக்கும் தெரியும்! தயவு செய்து, கருணையுடன், என்மேல் இரக்கம் வைத்து என்னை தூக்கி அணைத்து, எனக்கு ஆறுதல் தருவாய். குற்றம் செய்தல் என் இயல்பு. மன்னித்து அருள் செய்ய வேண்டியது உன் பொறுப்பு!
''மூக்கிலன் முன் காட்டும் முகுரமாகாமல் எனைத் தூக்கி அணைந்தருள்'' -முகுரம்னா கண்ணாடி!
'அடுத்தது காட்டும் பளிங்கு' என்பார் வள்ளுவப் பெருந்தகை. ''மனத்தவக் கண்ணாடியில் தடம் கண்ட வேலா,'' என்பார் அருணகிரியார். வள்ளல் பிரானுக்கு தணிகை வேலன் கண்ணாடியில் காட்சி கொடுத்து அருள் புரிந்தான். ''தர்ப்பணமதனில் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற் கீந்த விளைவும்,'' (சாந்தம் புத்தூரில் வில்லைக் கொண்டு போர் புரிகின்ற வேடனுக்கு கண்ணாடியிலே காட்சி கொடுத்தருளினை) என மாணிக்கவாசகர் கீர்த்தித் திருவகவலில் இறைவனின் கருணையைப் போற்றுகிறார்! தர்ப்பணம் என்றால் கண்ணாடி.
வள்ளலார் சொல்வார், எல்லாம் நம்மைப் பற்றிதான்! ''பொய்யகத்தேன், புலையேன், கொடு மனத்தேன், தவம் புரியேன், வஞ்சமனப் பாறை சுமந்து உழல்வேன், தருக்குகின்றேன், கடுமையேன்,'' - ஆனால் ''என்னைக்காப்பது உன்கடன் காண், கைவிடேல் எந்தாய், அரசே, என் அம்மே, என் அப்பா, குற்றமெல்லாம் நல்ல குணமாய்க் கொண்டவனே''- என்ன சரணாகதி பாருங்கள்?
நினைக்க முக்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. சாதி, மத, இன, நிற, தேச வேறுபாடுகள் எதுவும் இன்றி, எல்லோருக்கும் '' நான் யார்,'' என்ற ஆத்ம விசார மார்க்கத்தைக் காண்பித்தவர் ஶ்ரீ. ரமணபகவான். அவர் அருணாசலேஸ்வரருக்கு சூட்டிய சொன்மாலையே அக்ஷரமணமாலை. 'அ' கரம் முதல் னகரம் ஈறாக எழுத்து வரிசைப்படி ஆரம்ப எழுத்துக் கொண்ட பாக்களாலான சிறந்த பூமாலை.
ஆன்ம சமர்ப்பணத்திற்கு வழிகாட்டும் 108 கண்ணிகளையுடைய இப்பாமாலையைப் படிப்பவர் உள்ளத்தில் பொங்கிப் பெருகி வெள்ளமென சுழித்தோடும் ஆனந்தத்தையும், அமைதியையும் எழுத்துக்களால் எழுதவோ, எடுத்துச் சொல்லவோ வார்த்தைகள் இல்லை. அக்ஷரமணமாலை வாழ்க்கைத் துணை, வழித்துணை!
''வாழி நீ அருணாசல உனை வழுத்தி வாழ்த்திடத் தாழ்த்தும் என் தலையே''
''வாழி நீ அருணாசல உனை வழுத்தி வாழ்த்திடத் தாழ்த்தும் என் தலையே''
No comments:
Post a Comment