29 Aug 2012

Corn caps

                                   ' சார், இந்த வீட்ட உங்களுக்கு வாடகைக்கு குடுக்கறதில எனக்கு சந்தோஷம்தான். ஆனா, ஒரே ஒரு கண்டிஷன்,' அப்பிடின்னார் முருகேசன்.
சொல்லுங்க, என்றார் பட்டாபி.
கடியாரத்துக்கு ஒன்னு, தினசரி காலண்டருக்கு ஒன்னுன்னு ரெண்டு ஆணி அடிச்சிருக்கேன் பாருங்க, அதுக்குமேல ஆணி அடிக்கக் கூடாது, அதுதான் கண்டிஷன்!
என்னங்க, உங்களுக்கு ஆணிமேல அவ்வளவு கோவம், என்று கேட்க நினைத்தவர்  சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார்.

என்னங்க சுவத்துல ஆணி அடிச்சா காலண்டர் மாட்டலாம். கால் ஆணியிலே மாட்ட முடியுமா? என்றாள் அவர் மனைவி பர்வதம்.
இன்னிக்கு  ''ஆணி தினம்''னு ஏதாவது பேப்பர்ல போட்டிருக்கானா என்ன? என்றார் பட்டாபி எரிச்சலுடன்.

நேத்து நீங்கதானே சொன்னீங்க அதனால என் கால் ஆணிலே 'சோளத்தொப்பி' யப் போட்டேனா, கால்பாதம் பூரா அப்பம் கணக்கா வீங்கிடிச்சு, பாருங்க.
சோளத் தொப்பியா, என்னடி அது?
அதுதாங்க, 'கார்ன் கேப்ஸ்' னு சொன்னீங்களே, பிளாஸ்டர், அதுதாங்க!

ஓ, அதுவா உனக்கு கால்ல ஆணி வந்ததும் வந்தது, எனக்கு தலைவலி. கீழே டாக்டரம்மா அவங்க ரூமுக்கு வந்திருப்பாங்க, போய் காமிச்சு மருந்து வாங்கிக்க என்றார். ஆம், அவர்கள் குடியிருப்பில் வங்கி மருத்துவர் தினம் காலையில் வருவார்.

பர்வதம் டாக்டரிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவரும் கால்மேல் தடவ ஒன்று, Brufen மாத்திரை 5 நாட்களுக்கு கொடுத்து சரியாகிவிடும் என்றார்.ஐந்து நாட்களில் கால் வீக்கம் அதிகமாகி செருப்பு போட்டுக்கொள்ள முடியாமல் போனது. மூட்டுக்களில் ஒரே வலி.

மீண்டும் மருத்துவர்! ஓ மூட்டு வலியா? அப்படீன்னா, உங்களுக்கு 'ஆர்த்தரைடீஸ்' இருக்குது. சரிதான், ஒரு கோர்ஸ் எதிர்ப்புச் சக்திக்கான ஊசி ஐந்து நாட்கள் போடுகிறேன், வலியெல்லாம் போய் விடும்.கால் வீக்கமும் சரியாகிவிடும் என்றார்.

கால்வீக்கம் வந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. பாதங்களின் மேலே கொஞ்சம் கருப்பாகிக் கொண்டு வந்தது. கால் பாத எலும்பில் ஏதாவது ஆகியிருக்கிறதோ என்னவோ! எதற்கும் ஒரு எக்ஸ்ரே, ரத்தம், நீர் பரிசோதனைகள் எல்லாம் செய்து வாருங்கள் என்றார் மருத்துவர்.

தினம் புதிதாக வலிகள் வந்தனவே ஒழிய, கால் வீக்கம் போனவழியில்லை. எலும்பு வைத்தியர் எக்ஸ்ரே பார்த்துவிட்டு  கால் எலும்பெல்லாம் நல்லாதான் இருக்கு, ஒரு தொந்தரவும் இல்லையென்றார். சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், லொட்டு, லொசுக்கு எல்லாவற்றுக்கும் ரத்தப் பரிசோதனை. எல்லாம் நார்மல்!

விஜயாமருத்துவமனை போய்  இந்த மருத்துவரிடம் காண்பியுங்கள் என்றார் வங்கி டாக்டர். இதனிடையே ஜுரம் வந்தது. கைகளைத் தூக்கிசாப்பிட முடியாமல் போனது. புதிய டாக்டர் இதய நோய்/ பொதுமருத்துவம் இரண்டும் பார்க்கிறவர்!  அவர் சொன்னார், எதற்கும் ஒரு ECG, இதய எக்ஸ்ரே பரிசோதனை செய்து விடுங்கள் என்றார். எல்லாம் சரியாக இருக்க, கால்களில் சூடு இருக்கிறது, சிவப்பாக வேறே உள்ளது. கால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதாவது இருக்க வேண்டும், அதனால்....

 அதனால் எதற்கும் ஒரு 'ஏஞ்சியோகிராம்' செய்துவிடலாம். நான் கொடுக்கும் மருந்துகளை சாப்பிடுங்கள், நாளைக்கு வந்து அட்மிட் ஆகிவிடுங்கள் என்றார். வயிற்றிலே புளியைக் கரைத்தது போலாயிற்று பர்வதத்துக்கு. பட்டாபியோ பத்து நாள் லீவு எடுத்தாயிற்று. என்ன செய்யலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார். பர்வதமோ ஆஸ்பத்திரிக்கு வரவேமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.

கடைசியாக நடன நாயகனின் அருள் பெற்ற இதய மருத்துவரிடம் காண்பிப்பதென்றும், அவர் என்ன சொன்னாலும் ஏற்பது என்றும் முடிவாயிற்று. 25 நாட்களின் மருத்துவ யாத்திரையையெல்லாம் கேட்டுக் கொண்டு கால்களைப் பரிசோதனை செய்தார் அவர். உங்களுக்கு ஆஸ்த்துமா நோய் உண்டா, என்றார்.
ஆம், பரம்பரைச் சொத்து, கேட்காமலேயே வாரி வழங்கி விட்டார்கள்  என் முன்னோர்கள் என்றார் பர்வதம்.

மருத்துவரின் முகத்திலே ஒரு பிரகாசம்! நீங்கள் கால் ஆணிக்கு என்று போட்ட 'கார்ன் கேப்ஸ்,' பிளாஸ்டரில் 'Salicyclic acid,' என்ற மருந்து உள்ளது. அது சில ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு அலர்ஜி  ஏற்படுத்தக்கூடும். அதுதான் உங்கள் கால் வீக்கத்திற்குக் காரணம். உங்களிடம் இருக்கும் எல்லா மருந்துகளையும்  தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். இதோ இந்த குட்டி மாத்திரையை இரவு படுக்கும் போது மட்டும் ஒன்றே ஒன்று சாப்பிடுங்கள் போதும். தலையணைமேல் கால்களை வைத்துப் படுங்கள். அவ்வளவுதான் என்றார்.

இரண்டே நாட்களில் கால் வீக்கம் போயிற்று! மூட்டு வலிகள் ஓடிப்போயின. ஒரு வாரத்தில் உடல் நலம் தேறியது.

ஒரு மருத்துவரின் தவறான கணிப்பும், மருந்துகளின் பின் விளைவுகளும் ஒரு மாத மனக்கஷ்டம், பணக்கஷ்டம், ஆகியவற்றை ஏற்படுத்தியதைப் பாருங்கள்!  காலில் வரும்  ஆணியெனப்படும் வளர்ச்சிக்கு கண்டிப்பாக 'கார்ன் கேப்ஸ்,' எனப்படும் பிளாஸ்டரால் ஒரு பயனுமில்லை. காசுக்கு தண்டம், காலுக்கு கஷ்டம். ஆபரேஷன் பரவாயில்லை என்கிறார்கள் சிலர். ஹோமியோபதி மருந்துகள் ஓரளவு வலியைக் குறைக்கின்றன. காலில் 'சாக்ஸ்' போட்டுக் கொள்வதும், எப்போதும், வீட்டிலும் செருப்புப் போட்டுக் கொள்வதும் சற்று வலியைக் கட்டுப்படுத்தலாம்.

பிரம்மதேவன் தலையெழுத்தை எழுதும் போது, காலில் ஆஆஆஆணீணீணீணீணீயென்று அழுத்தமாக எழுதியிருந்தால் யாராலும் மாற்ற முடியாது என்று வருபவர், போகிறவர்களிடம் எல்லாம் சொல்கிறாள் பர்வதம் மாமி.

ஆணியோடு ஆஸ்த்துமா நோய் உள்ளவர்களுக்கு எல்லாம் இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்
'சோளத் தொப்பி' யைக்  காலிலே போட்டுக் கொள்ளாதீர்கள்!!!!
22 Aug 2012

Chennai

சென்னை!
கெட்டும்  பட்டணம் சேர் என்பது பழமொழி. மெட்ராஸ் என்ற பெயரை கேட்டாலே சிறு வயதில் ஒரு பெரிய கற்பனை! எலெக்டிரிக்  டிரெயின், கலங்கரை விளக்கம், பீச், மூர்மார்க்கெட், செத்தகாலேஜ், உயிர் காலேஜ், என்று பலவற்றையும் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு! மாயாஜால உலகம்என்ற நினைப்பு.

 கடைசி சித்தப்பாவிற்கு கல்யாணம் ஆன போது பல்லாவரத்தில் குடியிருந்தார்கள். அங்கே போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். பக்கத்து வீட்டு மாமி போகிறார்கள் என்று தெரிந்ததும்  அவர்களுடன்  என்னையும் அனுப்பினார்கள். அப்போது என் வயது 10. ஸ்டேஷனில் சித்தப்பாவந்து கூட்டிப்போனார். அதுவே என்னுடைய முதல் சென்னைப் பயணம். 19 ஆண்டுகள் பிற்காலத்தில் அங்குதான் குப்பைகொட்டப் போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

ஆசிரியப் பயிற்சிக்காக மீண்டும் சென்னை வந்தேன். மயிலாப்பூரில், சாந்தோம் கடற்கரைக்கு அருகே கல்லூரி. கல்லூரியின் ஒரு பகுதி ஹாஸ்டல்,  மூன்று மாடிக்கட்டிடம். ஓராண்டு கால கல்லூரி வாழ்வின் ஒவ்வொரு நாளையும் கடற்கரையில் கழித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் இன்று ஆச்சரியமாக இருக்கிறது.

கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு, அலைஓசையைக் கேட்டுக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது ஒரு இனிமையான அனுபவம்.  அதிலே ஒரு இன்னிசை இருக்கிறது. அமாவாசை நாட்களில் அலைகள் அதிகமாக, உக்ரமாக, உயரமாக இருக்கும். பவுர்ணமி நாட்களில் நிலவின் ஒளி அலைகளுடன் உறவாடி கனவுலகிற்கு நம்மைக் கவர்ந்து செல்லும்! கடலும் அதன் அலைகளும்  மனதை ஒரு நிலைப் படுத்தும் சக்தி உடையன. நம்மை அறியாமலேயே நம் மனம்  கடலலைகளுடன் முன்னும் பின்னும் அசையும். கடற்கரையைக் காணமுடியாத சோகம் எனக்குள் இருக்கிறது!

சென்னையின் பிற பகுதிகளுக்கு எல்லாம் படிக்கின்ற நாட்களில் போனதில்லை. ஆசிரியப் பயிற்சிக்காக பாடம் எடுத்த பள்ளிகளுக்கு போயிருக்கிறோம். மவுண்ட் ரோடில் புத்தகங்கள் வாங்கப்போயிருக்கிறோம்். லஸ்  கார்னரில் போட்டோ ஸ்டுடியோ, புடவைக்கடை, ரிப்பன் வளையல் கடைகள் எல்லாம் தெரியும். முக்கியமாக நாங்கள் உடுப்பி ஹோட்டல் வாடிக் கையாளர்கள்!

66-67 ல் சென்னையில் ஒரு புயல் அடித்தது. வேகமான காற்றில், மழை, கடற்கரை மணலை சேர்த்து வீச கடல் அலைகளைப் பார்த்தவாறு  நின்றிருந்தோம். முகமெல்லாம் மணல் மழை. தாக்குப் பிடிக்க முடியாமல் ஹாஸ்டல் திரும்பினோம். அதன்பின் கடற்கரையில் கரைதட்டிய கப்பலைப் பார்ப்பதற்கென்று ஒரே கூட்டமாக இருக்கும்.

இப்படி மயிலாப்பூரில் பரிச்சயமான சென்னை,  திருவல்லிக்கேணியில் மீண்டும் புத்துயிர் பெற்றது. பார்த்தசாரதி பெருமாள்  கம்பீரமாக நின்றுகொண்டு அனைவருக்கும் அருள் பாலித்துவரும் தலம் திருவல்லிக்கேணி. கோயில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் யானை மகாகவி பாரதியை எப்போதும் நினைவுபடுத்தும். கோயில் தெப்பக்குளத்தைத் தாண்டினால் மிகமிக நெருங்கிய நண்பர் வீடு. இடது பக்கம் வந்தால் மார்க்கெட். சீசனுக்கு ஏற்ப எல்லா காய்கறிகளும் கிடைக்கும். கோவில் உற்சவங்களால் கலகலவென உயிரோட்டம் உள்ள இடம்! கோவிலிலிருந்து கிழக்கே போனால் விவேகானந்தர் இல்லம். சாலயைத் தாண்டினால் பீச். இடது பக்கம் அலைகளைப் பார்த்துக் கொண்டு நடந்தால் மெரினா கடற்கரை! தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்! ஐஸ் கிரீம்! மாலையானால்  கடைகள் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒளியில் தகதகக்கும். பாட்டியம்மா கடையில் வடை, போண்டா, பஜ்ஜி  வியாபாரம்  அமர்க்களமாக  நடக்கும் .

திருவல்லிக்கேணி பெரிய தெரு புகழ் பெற்ற இடம்! பிள்ளையார் கோவில், பக்கத்தில்  ஹிந்து ஹைஸ்கூல். பெரிய தெருவின் சந்து பொந்துகளில் நுழைந்தால் சூரப்பமுதலித் தெரு. செட்டியார் ஒருவரின் மூன்று மாடிக்கட்டிடத்தில்  ஒண்டுக்குடித்தனத்தில்தான்  என் குடும்பவாழ்க்கை தொடங்கியது. சரியாக காலை பதினோரு மணிக்கு வந்து மெயின் ஸ்விட்ச்சை ஆப் செய்துவிட்டுப் போய்விடுவார். அவர் தெருமுனை திரும்பியதும் அது மீண்டும் உயிர்க்கும். வானொலி ஒலிபரப்பும் கர்னாடக இசை ஒலிக்கும். என் தோழி சுஜாதாவின் தாய் அனந்தலஷ்மி சடகோபன் அவர்கள் பாட்டு அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு வந்த காலம் அது. வானொலி நிகழ்ச்சிகள் மாதப்பத்திரிகையைப் பார்த்து ,அவர்கள் பாட்டைக் கேட்டுவிடுவேன்.

திருவல்லிக்கேணியில் புகழ் பெற்றது ரத்னாகேப் உணவகம். மல்லிகைப் பூ இட்லிக்கும், பாசந்திக்கும் புகழ் பெற்றது.
கல்யாணம் ஆன புதிது. ‘’என்ன ஓய், பைகிராப்ட் ரோடு உமக்கு மாத்திரம் சொந்தம் என்ற நினைப்போ,’’ என்று  நண்பர்களால் கேலி செய்யப்பட்டும்  கைகோர்த்துக் கொண்டு உலக நினைவு இல்லாமல்  பல நாட்கள்  மெரினாவுக்கு  நடந்த இடம்.

சூரப்ப முதலித்தெருவிலிருந்து வெங்கடாசலம் செட்டித் தெருவுக்கு அடுத்து இடம் பெயர்ந்தோம்.
48ஆம் நம்பர் வீடு! கீழே இரண்டு குடித்தனங்கள்! நேர் வீடு எங்களுடையது. வெளிச்சமறியாத அறைகள். கரப்பான் பூச்சிகள் உலாவரும் குளியலறை! கைப் பம்பில் அடித்தால்தான் தண்ணீர், குடிக்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ எதுவானாலும்! அடடா, நினைத்துப் பார்த்தால் எப்படி அந்த வீட்டில் இருந்தோம் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

16 Aug 2012

Are you one of these???

 1. Some people are like wheelbarrows  - no good unless pushed
 2. Some are like canoes  -  they need to be paddled
 3. Some are like kites  -  if you don't keep a string on them they will fly away.
 4. Some are like footballs  -  you can't tell which way they're going to bounce next.
 5. Some are like balloons  -  full of wind and likely to blow up unless carefully handled.
 6. Some are like trailers  -  no good unless pulled.
 7. Some are like tumblers  -  with slight push they are out of equilibrium.
 8. Some are like glass  -  fragile, handle with care.
 9. Some are like gumne  -  nice to look at but bitter.
 10. Some are like curly hair - they would never straighten.
 11. Some are like books - others get something from them, they remain dumb and deaf.
 12. Some are like blotters -  will equally suck, red, blue and even black.
 13. Some are like black boards - will be blank within no time.
 14. Some are like paper -weights - heavy and handsome but static.
 15. Some are like mercury drops - difficult to take hold of.
 16. Some are like scissors - they move to divide.
 17. Some are like threaded  needles - they move to unite.
 18. Some are like water - no shape and any shape.   --Author unknown

15 Aug 2012

Bangalore TO Pondicherry                                                              காலை மணி 8.30. இதோ கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் சொகுசுப் பேருந்து ஒரு சில சீட்டுகளுக்கு ஆட்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் நிதானமாகக்   கிளம்பிக்கொண்டே  இருக்கிறது. செல்லப் போகிற ஊரின் நினைவுகள் உள்ளத்தை மெல்ல வருட, மனதைக் கட்டுப்படுத்த விரும்பாமல் அதன் போக்கிலேயே விட்டுவிட்டு  நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.

 சுமார் 2000 ஆண்டு வரலாற்றைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் பாண்டிச்சேரி, கிழக்குக் கடற்கரையில் ஒரு துறைமுகம். வேத காலத்தில் இது அகஸ்திய முனிவர் வாழ்ந்த இடம் ஆதலின் வேதபுரி.  இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

செஞ்சியை ஆண்ட நாயக்க வம்சத்தைச் சார்ந்த அரசர்கள் இவ்வூரை புலியசெரி, பூச்சேரி என்று அழைத்தனர். 1673-ல் பிரெஞ்சுக் காரர்கள் இந்த மீனவ கிராமத்தை வியாபார மையமாகக் கொண்டார்கள். 1954 முதல் இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் புதுச்சேரி சென்னையின் தெற்கே சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. முந்திரி, பனை,தென்னை, வேம்பு விளையும் செம்மண் பூமி!
வெயில் விளாசும் சீதோஷ்ணம். சென்னைக்குக் கூவம் போல பாண்டிச்சேரிக்கு 'பெடிட்' சாக்கடை. கொசுக்கள் உற்பத்தித்தலம்!
பிரெஞ்சுக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டிடங்கள், கடைகள். பிரெஞ்சு மொழிப் பெயர்கள் உடைய வீதிகள். புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயில். உள்ளே விநாயகப் பெருமானின் பலவேறு வடிவங்கள் ஓவியமாய். வாசலிலே  எப்போதும் காலில் கொலுசுடன் யானை!

தேசிய நெடுஞ்சாலையில்  "எயில் நாடு, தகடூர் நாடு, அதியமான் நாடு,'' என்றெல்லாம் ஒரு காலத்தில்  அழைக்கப்பட்ட கிருஷ்ணகிரியை நெருங்கிக்கொண்டிருக்கிறது பேருந்து. திருவண்ணாமலை வரையில் மாந்தோப்புகளும், வயல் வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும். இதோபார் கடலைக்காய் பயிரிட்டிருக்கிறார்கள், மல்லிகைச் செடிகள், அதோ மஞ்சள் செடிகள்  என சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல்  சொல்லும்  ஒரு குரல் கேட்கிறது.

அதோ தூரத்தில் நினைத்தாலே முக்தி அளிக்கும் அருணாசலம் சூரிய ஒளியில் தகதகக்கிறது. மலை முகட்டில் மகுடம் போல் வெண்மேகம்! ஶ்ரீ ரமணபகவானின் ஆஸ்ரமத்தைத் தாண்டிப் பறக்கிறது பஸ்.

செஞ்சிக் கோட்டையைப் பார்க்கும் போதெல்லாம் இத்தனை பெரிய கற்கள் இங்கே சிதறிக் கிடக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழும். சின்ன வயதிலே படித்த  இராசா தேசிங்கு பாடல் காதில் ஒலிக்கும். இத்தனை பெரிய மலை மீது எப்படி கோட்டையையும், கோயிலையும் கட்டினார்கள் என்று வாய் பிளக்கும்!  இயற்கையில்தான் எத்தனை அதிசயங்கள்! இதோ திண்டிவனம், புதிதாகப் போடப்பட்ட புறவழிச்சாலையில் வழுக்கிக் கொண்டு பறக்கும் பஸ்ஸில்  பாண்டிச்சேரியின் காற்றினிலே கலந்து வரும் ஏதோ ஒரு ஈர்ப்புச் சக்தி!

பாண்டியின் எல்லைப் புற வரவேற்பை ஏற்று, ஜிப்மர் மருத்துவமனையைத் தாண்டி, ராஜீவ் காந்திசிலை, இந்திரா காந்தி வட்டம், புதிய பேருந்து நிலையம்!

கடற்கரை விருந்தினர் மாளிகை ஜன்னலிலிருந்து கடலிலே சிறு சிறு படகுகள் செல்லும் காட்சி, மாலை வெயிலில் வெப்பத்திலிருந்து  விடுபட்ட கடலலைகளின் மாறாத சங்கீதம் நம்மை வரவேற்கும்.  சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து விடியலில் சூரிய உதயத்தையும், ஒளியலைகளின் பாதையில் முகம் சிவந்து பளபளக்கும் அலையரசியையும் கண்டு மகிழலாம்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அரசு அலுவலகர் மாளிகை தொடங்கி, காந்தி சிலைக்கு அப்பால் புதிய விருந்தினர் மாளிகைவரை, போக்குவரத்து  மாலை 5 மணியிலிருந்து நிறுத்தப்பட்டுவிடும். குடும்ப சமேதரராக  எல்லோரும் காற்று வாங்கவும், இளங்காதலர்கள் காதல் செய்யவும், சிறு குழந்தைகளை விளையாட விட்டு மகிழவும், இளைஞர்கள் பேசி கலகலக்கவும், முதியோர்கள் அரசியலிலிருந்து வீட்டுப் பிரச்சினைகள் வரை அலசவும், வருவார்கள். நடைப் பயிற்சி செய்வோர், தின் பண்டங்கள் விற்போர், கைரேகை சாஸ்திரம் சொல்லவரும் பெண்டிர், பூ விற்போர், என எங்கும் மனிதக் கூட்டம்.

காந்திசிலை அருகே இசை நிகழ்ச்சிகள் நடை பெறும். முட்டைக்கோஸ் பஜ்ஜி வெகுவேகமாக விற்பனையாகும். சுற்றுலா வருவோர் காந்திசிலை அருகே புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். குச்சி ஐஸ் வண்டிகள், பலூன் விற்போர், இயலாமையால் அதை வாங்கித்தர மறுக்கும் அப்பா, அழும் குழந்தை, முகம் தூக்கும் அம்மா என, பல முகங்களின் தரிசனங்கள்.

Gandhi
 பல மனித முகங்களின் சந்திப்பிலே ஆர்ப்பரித்து மகிழ்ந்த கடலலைகள், கையசைத்து வழியனுப்ப பத்து மணியோடு கூட்டம் கலைந்து விடும். வானத்துத் தாரகைகளின் துணையோடு இசைபாடும் காட்சியைக் காண யாரும் இருக்கமாட்டார்கள்.

சுதந்திர தினவிழாவின் போது கவர்னர் மாளிகை வண்ணவிளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் தேவலோகமாய்க் காட்சி தரும். கவர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே மஹாகவி பாரதியின் சிலை உள்ளது.
மஹாகவி பாரதியும், ஶ்ரீ அரவிந்தரும் நண்பர்கள். பாரதியின் நினைவில்லம், துவிபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் நினைவில்லம் பார்க்கத் தகுந்தவை.

இந்திய நாட்டின் மானசரோவரில் மலர்ந்த  வெண்தாமரைமலர் ஶ்ரீ அரவிந்தர். மஹாபுருஷர், மஹாயோகி. இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், ஆங்கிலேயர்களுக்கு  சிம்ம சொப்பனமாக விளங்கியவர். பன்மொழிப் புலவர், சாவித்ரி எனும் காவியக் கவிதையை  ஆத்ம சாதனை புரிபவர்களுக்காக எழுதியவர்.

கல்கத்தாவில் பிறந்து, இங்கிலாந்தில் கல்வி பயின்று, பரோடாவில் பணியாற்றி, வங்காளத்தின் நேஷனல் கல்லூரியின் முதல்வராய், தீவிரவாத இயக்கத்தின் முன்னோடியாய்த் திகழ்ந்து, சிறைச்சாலையில் யோகம் பயின்று, தன் யோக சக்தியால் கேட்ட இறைவனின் ஆணையை ஏற்று, அந்தக் கணமே புறப்பட்டு  வந்து 40 ஆண்டுகள் பாண்டிச்சேரியை புனிதப் படுத்திய புண்ணியர்.

பிரெஞ்சு நாட்டிலே பிறந்து, 1920 முதல் 1973 வரை இந்தியத் தாய் மண்ணிலே யோக வாழ்க்கையை மேற்கொண்டு,  அனைவருக்கும் வழிகாட்டியாய் அவருடைய அருள் வேண்டும் அனைவருடைய  மலர்ச் சமர்ப்பணத்தையும் ஏற்றுக் கொள்ளும் அன்னையின் புனிதப் பாதங்கள் பதிந்த புதுச்சேரி.

ஶ்ரீ அரவிந்தர், அன்னை இருவரும் இடம் கொண்ட சமாதியால், அதன் மேல் மணம் பரப்பும் வண்ணமலர் அலங்காரத்தால், உரிமையோடு வட்டமிடும் தேனீக்களின் ரீங்காரத்தால், உயிர்த்தெழும் அமைதியின் அணைப்பால், மவுனத்தின் இசையால், இயல்பாய் நிகழும் ஆத்ம சமர்ப்பணத்தால் என்னை, நான் யார் என்று உணர வைத்து, கணந்தோறும் என்னை இயக்கும் அன்னை, அரவிந்தரின் உணர்வலைகளால் நிரம்பிய புதுச்சேரி என் உள்ளம்  கவர்ந்த ஊர்.


Bharati on Independence day


10 Aug 2012

என் கேள்விக்கென்ன பதில்?'

                                                                  சரியான நேரத்தில் ஸ்கூல் பஸ் வந்து விட்டது!  சிரிப்பும் விளையாட்டுமாய்  ஒரே குதியல்! கிருஷ்ணர்  பிறந்த நாளுக்காக நாளைக்கு லீவு என்று கோஷ்டிகானம் வேறு!

அம்மா, நாளைக்கு கிருஷ்ணர் எப்பம்மா பிறப்பார்? கேட்கிறாள் என் பேத்தி அக்ஷயா. அம்மாவும் பெண்ணும் பேசிக்கொள்கிறார்கள்.

கிருஷ்ணர் பொறந்து ரொம்ப வருஷம் ஆச்சு! உனக்கு ''பர்த்டே'' கொண்டாடற மாதிரி வருஷா வருஷம் நாம எல்லாரும் அவருக்கு பிறந்த நாள் கொண்டாடறோம்.

பாரும்மா, எங்க  டிராயிங்  டீச்சர்  கிருஷ்ணரை  வரையணும்னு,  பெல்  அடிச்சப்ப  கூட  சாப்பிடப்  போகவிடலைம்மா. ஏம்மா எனக்கு எப்பிடி கிருஷ்ணரைத் தெரியும்? நான்  என்ன  நேரில  பாத்திருக்கேனா? எனக்கு   ஒரே  பசி.  நீ  வேற  உருளைக்  கிழங்கும், சாதமும் மதிய உணவு அனுப்பியிருந்தாயா, ஐயோ இந்த டீச்சர் படுத்திட்டாங்க.

சரிதான் போகட்டும் விடு, டீச்சர் சொன்னா கேட்கணும் .

ஏம்மா, கிருஷ்ணர் குழந்தைதானே? பொறந்த உடனே எப்பிடி சீடை, முறுக்கு எல்லாம் சாப்பிட்டார்.?
அவருக்கும் கேக்தானே செய்யணும்?

அம்மா, கிருஷ்ணர் மட்டும் ஏன் வேஷ்டி, அதுவும் பட்டுல போட்டுக்கறார்? தலையில கிரீடம், நகை, பூ மாலை எல்லாம் போட்டுக்கிட்டா வேர்க்காதா அம்மா?

அம்மா, இந்த கிருஷ்ணர் 'கால்' வாசல்லேந்து போட்டு அழகா இருக்காங்கறே! நான் விளையாடிட்டு வந்தா மட்டும் வீடெல்லாம் அழுக்கு பண்ணாதன்னு ஏன் திட்டணும்?

அம்மா, கிருஷ்ணர் ஜெயில்ல பொறந்ததாதானே கதை சொன்னே! ஆஸ்பத்திரிலேதானே ஜெயா சித்திக்கு பவ்யா பொறந்தா?  ஜெயில்ல டாக்டர் இருந்தாரா?

அம்மா, கிருஷ்ணர் எப்பிடிம்மா பாம்புமேல ஏறி டான்ஸ் ஆடினார். நீ ரொம்ப பொய்க் கதையெல்லாம் சொல்றே. என்ன மட்டும் பொய் சொல்லாதேன்னு சொல்லு.

அம்மா, நீ ஏன் வீட்டில வெண்ணெய் பண்ணறது இல்ல?

அம்மா, அன்னிக்கு அப்பா அண்ணனத் திட்டினார் இல்லியா, நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு,
கிருஷ்ணர் அப்பாவும் அப்பிடி திட்டியிருப்பாரா?

அம்மா தாயே, நீ போய் விளையாடு.  உன் கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.

 விளையாடிட்டு வந்துடறேன்னு ஓடிப்போனாள் குழந்தை. திரும்பி வந்ததும் அடுத்த கேள்வி 'செஷன்' ஆரம்பிக்கும். அதுவரை கொஞ்சம் ஓய்வு.

8 Aug 2012

முருகனும் நானும் 2

மனிதவாழ்வில் புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. பிறர் மனம் வருந்தாது செயல்படுவதைவிட, வருந்தும்படி எப்படி நடந்துகொள்வது என்பதில் நிறையபேர் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் எந்த ஒரு நல்லதோ, கெட்டதோ உடனடியாகப் பகிர்ந்து கொள்ள செல் பேசி இருக்கிறது. நட்பும் சுற்றமும் காது எட்டும் தூரத்தில்! யாரும் இல்லாவிட்டால் ''ட்விட்டரிலாவது ட்வீட்டலாம்.'' அந்த வசதிகளெல்லாம் இல்லாத 70 களில் 'செல்' இல்லாமலே சொல்லுவதை, செவியால் கேட்டு, புன்முறுவலெனும் மருந்திட்டு ஆறுதல் அளித்தவன் ஆறுமுகன்.

விடியற் காலை நேரங்கள் ஆகாயத்திலிருந்து அமுத அலைகள் பூமிக்கு வரும் நேரம் என்பார் வள்ளல் பெருமானார். அமைதியும், குளிர்ச்சியும், இனிமையும் நிறைந்த காலை நேரங்களில் டி,எம். சௌந்திரராஜனின் முருகன் பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றை விடாமல் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்வோம். தேன் சொட்டும் குரலில் உருகி, உருகி முருகனைப் பாடும் டி. எம். எஸ்ஸின் குரலில் ஒரு காந்தசக்தி இருக்கிறது. திரு. கிருபானந்த வாரியாரின் முன்னுரையோடு கூடிய சீர்காழி. கோவிந்த ராஜனின் குரலில்,''கந்தரலங்காரம்,'' கண் முன்னே தோன்றும்.

இசையில் இனிமை இருக்கிறது, மனதை மென்மையாக மயிலிறகு போல வருடும்  தன்மை இருக்கிறது.
மனத் துன்பங்களை ஆற்றுவிக்கும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஆக இந்த முருகன் பாடல்கள் எல்லாம் முயற்சி இல்லாமலேயே மனப்பாடமாயின. அட, சும்மா பாட்டுக் கேட்டுக்கொண்டு என்னை பக்தி செய்யலாம் என்று பார்க்கிறார்களே, என்னை தரிசனம் செய்ய வேண்டாமா என்று நினைத்தான் போலும்! எங்கள் மாடி வீட்டில் வசித்தவர்களை பேச்சுவாக்கில் திருச்செந்தூரின்
 சிறப்பையெல்லாம் சொல்லச் செய்தான்.

முதன்முதலாக செந்தூர் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்த நிலையில், ரயில்வே வேலை  நிறுத்தம்!
 உடனடியாக மதுரை செல்லும் பேருந்தில் இடம் தேட கடைசி சீட்டில் பயணம். மதுரையில் இருந்து செந்தூர்! செல்லும் வழியெல்லாம் மருக்கொழுந்தின் நறுமணம். கடற்கரையும், கோயிலும் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தின. அதன்பின் அடிக்கடி செந்தூர் செல்ல ஆரம்பித்தோம்.

ஒரு முறை உடல் நலக்குறைவினால் செந்தில் நாதனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதாக வேண்டிக்கொண்டேன். காரைக்குடியில் ஒரு கல்யாணத்திற்கு செல்லவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. முதலில் செந்தூர் செல்வதாகத் தீர்மானித்து அங்கே போய்ச் சேர்ந்தோம். ஆனால் நான் ஒரு தவறு செய்தேன். என் கணவரிடம் என் வேண்டுதலை சொல்லவில்லை. எப்போதும் செய்வதுதானே என்று இருந்து விட்டேன். அங்கே போனதும் என்னவர் அடுத்தமுறை வரும் போது தங்கி எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றலாம், இப்போது திருமணத்திற்கு வேறு செல்லவேண்டும், நேரமும் இல்லை என்றார்.

முருகன் முகத்திலோ நமட்டுப் புன்னகை! கல்யாணம் முடிந்து மாலையில் ரயிலேறியாயிற்று! குழந்தைகள் இருவருக்கும், மாமியாருக்கும் நல்ல ஜுரம். ஒரு அரைமணி நேரம் ஆயிற்று. திடீரென்று வயிற்றுப் போக்கு ஆரம்பித்தது என் பதிக்கு! பாட்டிலில் தண்ணீர் இல்லை. ஸ்லீப்பர் வண்டி, எல்லோரும் படுத்து விட்டார்கள். உடல் நலிந்து நடக்கவும் முடியாத நிலையில் ரயில் திருச்சி  ஜங்ஷனில்   நின்றது.
 கீழே இறங்கிப் போய் தண்ணீர் பிடித்து வர பயம். நான் கீழே இறங்கி திரும்ப வராவிட்டால் கூட யாருக்கும் தெரியாது!

கதவைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்த என் கண் முன்னால் கடவுளைப் போல் ஒரு போர்ட்டர் வந்தார். அவரிடம் கையில் இருந்த பணத்தையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து ஒரு சோடாவும், பாட்டிலில் தண்ணீரும் வேண்டும் எனக் கேட்டேன். ரயில் புறப்பட ஆரம்பித்த நிலையில் அந்தப் போர்ட்டர் ஓடி வந்து கொடுக்க, அவசரமாய் சோடாவை கையிலிருந்த டம்ளரில் ஊற்றிக் கொண்டேன். திருச்சி உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு பிரார்த்தனை, வேண்டுதல்.

தண்ணீரும், சோடாவும் குடித்தபின்னர் சிறிது தெம்பு வந்தது, ஆனாலும் செந்தூரானின் பன்னீர் இலை விபூதியை வயிற்றில் பூசி, கந்த சஷ்டி கவசத்தை ஒருமையுடன் அவனது திருமலரடியில் மனதை இருத்தி சொல்ல ஆரம்பித்தேன். அப்படியே உறங்கியும் போனேன். ஆனால் என் மனம் மட்டும் சஷ்டி கவசத்தை சொல்லியபடியே இருந்தது. நாசியிலே கற்பூரத்தின் நறுமணம். உள்ளமெல்லாம் ஆனந்த பரவசம். அந்த நாளில் முருகன் என்னை ஆண்டுகொண்டான்.

ஏற்கெனவே திருப்புகழ் பாடல்கள் சிலவற்றைக் கற்றுக் கொண்டிருந்தாலும், மேலும் கற்றுக் கொண்டேன். கந்தர் அலங்காரப் பாடல்களை பொருள் உணர்ந்து படிக்கப் படிக்க அவை என்னை ஆட்கொண்டன.

அப்பனுக்குப் பாடம் சொன்னவன் அல்லவா? எப்போது எந்தக் கோவிலுக்குப் போனாலும் தேவையானவற்றை முன்னேற்பாடாகக் கொண்டு செல்ல வேண்டும், அவசரத் தேவைக்கான
மருந்துகள், தேவையான அளவு தண்ணீர் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் ஆகிய பாடங்களையும் கற்றுக் கொடுத்தான் வேலவன்.

உன்னை விட்டால் வேறே கதி இல்லை, நதியோட்டம் போன்ற இந்தப் பொய் வாழ்வில், நரம்பினால் ஆன இந்த உடலாகிய மூட்டையை சுமந்து கொண்டு, திண்டாடு என்று செய்துவிட்டது விதி. நொந்துபோய் நோகின்றது என் மனம், என்று அழுதால், திருவடியும், தண்டையும், சிலம்பும், வடிவேலும், ஆறுமுகமும், பன்னிருதோள்களுமாய், கோலக்குறத்தியுடன் நீலச் சிகண்டியில் ஏறி, எப்படி வருவான் ?
குருவடிவாய் வந்து நம் உள்ளம் குளிர ஆனந்தம் அடையச் செய்வான்! செங்கோட்டு வெற்பனை சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு எந்தத் தாழ்வும் வராது. ( கந்தரலங்காரம் 26, 98, 102 )

''உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

5 Aug 2012

முருகனும் நானும் 1

உங்களுக்கு முருகனைத் தெரியுமா? தமிழ் தெரிந்த எல்லோரும் வழிபடும்  அழகன், தெய்வயானையின் மணவாளன், வள்ளிநாயகியின் உள்ளம் கவர்ந்த கள்வன், ஒரு நொடியில் மயில் மீதேறி உலகையே வலம் வந்து எல்லோரையும் அதிசயிக்கச் செய்தவன்! ஒரு கணத்தில் உலகமே தாய் தந்தையருள் அடங்கி இருக்கிறது என வலம் வந்து மாங்கனியை வென்ற விநாயகரின் தம்பி.  செஞ்சடையில் கங்கையையும்,  அம்புலியையும், நீலகண்டத்தில் பாம்பையும், கொன்றை மாலையையும், இடையிலே யானைத் தோலையும்  தரித்து, அங்கமெல்லாம் வெண்ணீறு அணிந்தவன் குமாரன். "திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை,'' உமையவளின் செல்வமுத்துக் குமரன்.ஆறு படை வீடுகளுக்கு உரிமை உடையவன்.

போதும், போதும் தெரிந்துவிட்டது, அபிஷேக, அலங்காரப் பிரியனாய், வள்ளி தெய்வானையோடு திருத்தணியில் காட்சிகொடுப்பவன், மாம்பழம் கிடைக்கவில்லையென்று கோபித்துக் கொண்டு ஆண்டிக் கோலத்தில் பழனிமலையில் கோயில் கொண்டவன். அவனைத் தெரியாமல்  யார் இருக்க முடியும்? திருச்செந்தூரின் கடலோரத்தில் அரசு புரியும் செந்தில்நாதன் அவனைத்தானே சொல்கிறீர்கள்.
திருப்பரங்குன்றம் என்ற இடத்திலும், பழமுதிர்ச்சோலையிலும், திருவேரகத்திலும் அதே பெயருடைய ஒருவன் இருக்கிறான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன்தானே.

ஆமாம் அவனையேதான் சொல்கிறேன். அவனுக்கு பல வீடுகள், பல நாமங்கள். அவனுக்கும் எனக்கும் என்ன உறவு என்கிறீர்களா? அவன் எல்லோருக்கும் உறவுதான். எனக்கு? துன்பம் வந்து அழும்போதெல்லாம் அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லும் அம்மா. வாழ்க்கைப் போராட்டத்தில் ஓடிக்களைத்து விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தித் தாங்கிக் கொள்ளும் அப்பன், திக்குத் தெரியாது தவிக்கும் போது வழிகாட்டும் குருநாதன். விளையாட்டுத் தோழன். வள்ளல் பெருமான் கூறுவதுபோல்,''தந்தையும், தாயும், குருவும், நான் வணங்கும் சாமியும், பூமியும், பொருளும், சொந்தநல் வாழ்வும்,'' அவனே!

வாழ்க்கையிலே எத்தனை சோதனைகள், வேதனைகள்! சோதனையையும், வேதனையையும் வெல்லும் உபாயம் உன்னிடத்திலேதான் இருக்கிறது என்று காண்பித்து, ''இதயந்தனில் இருந்து கிருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க,'' அருள் புரிகிறான். பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால் உறங்குகின்றேன், ஆட்டுவித்தால் ஆடுகின்றேன். என்னால் ஆவது ஏதுமில்லை'' என்பதை உணரச்செய்தவன் அவனே.

கந்தரலங்காரம் நூறு பாடல்களையும் மனனம் செய்யவைத்து, திருப்புகழிலே திளைத்தாடச்
செய்து   முருக   பக்தியிலே   மூழ்கச் செய்த செய்திகளைப் பின்னர் பதிவு செய்வேன்.