15 Aug 2012

Bangalore TO Pondicherry



                                                              காலை மணி 8.30. இதோ கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் சொகுசுப் பேருந்து ஒரு சில சீட்டுகளுக்கு ஆட்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் நிதானமாகக்   கிளம்பிக்கொண்டே  இருக்கிறது. செல்லப் போகிற ஊரின் நினைவுகள் உள்ளத்தை மெல்ல வருட, மனதைக் கட்டுப்படுத்த விரும்பாமல் அதன் போக்கிலேயே விட்டுவிட்டு  நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.

 சுமார் 2000 ஆண்டு வரலாற்றைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் பாண்டிச்சேரி, கிழக்குக் கடற்கரையில் ஒரு துறைமுகம். வேத காலத்தில் இது அகஸ்திய முனிவர் வாழ்ந்த இடம் ஆதலின் வேதபுரி.  இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

செஞ்சியை ஆண்ட நாயக்க வம்சத்தைச் சார்ந்த அரசர்கள் இவ்வூரை புலியசெரி, பூச்சேரி என்று அழைத்தனர். 1673-ல் பிரெஞ்சுக் காரர்கள் இந்த மீனவ கிராமத்தை வியாபார மையமாகக் கொண்டார்கள். 1954 முதல் இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் புதுச்சேரி சென்னையின் தெற்கே சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. முந்திரி, பனை,தென்னை, வேம்பு விளையும் செம்மண் பூமி!
வெயில் விளாசும் சீதோஷ்ணம். சென்னைக்குக் கூவம் போல பாண்டிச்சேரிக்கு 'பெடிட்' சாக்கடை. கொசுக்கள் உற்பத்தித்தலம்!
பிரெஞ்சுக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டிடங்கள், கடைகள். பிரெஞ்சு மொழிப் பெயர்கள் உடைய வீதிகள். புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயில். உள்ளே விநாயகப் பெருமானின் பலவேறு வடிவங்கள் ஓவியமாய். வாசலிலே  எப்போதும் காலில் கொலுசுடன் யானை!

தேசிய நெடுஞ்சாலையில்  "எயில் நாடு, தகடூர் நாடு, அதியமான் நாடு,'' என்றெல்லாம் ஒரு காலத்தில்  அழைக்கப்பட்ட கிருஷ்ணகிரியை நெருங்கிக்கொண்டிருக்கிறது பேருந்து. திருவண்ணாமலை வரையில் மாந்தோப்புகளும், வயல் வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும். இதோபார் கடலைக்காய் பயிரிட்டிருக்கிறார்கள், மல்லிகைச் செடிகள், அதோ மஞ்சள் செடிகள்  என சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல்  சொல்லும்  ஒரு குரல் கேட்கிறது.

அதோ தூரத்தில் நினைத்தாலே முக்தி அளிக்கும் அருணாசலம் சூரிய ஒளியில் தகதகக்கிறது. மலை முகட்டில் மகுடம் போல் வெண்மேகம்! ஶ்ரீ ரமணபகவானின் ஆஸ்ரமத்தைத் தாண்டிப் பறக்கிறது பஸ்.

செஞ்சிக் கோட்டையைப் பார்க்கும் போதெல்லாம் இத்தனை பெரிய கற்கள் இங்கே சிதறிக் கிடக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழும். சின்ன வயதிலே படித்த  இராசா தேசிங்கு பாடல் காதில் ஒலிக்கும். இத்தனை பெரிய மலை மீது எப்படி கோட்டையையும், கோயிலையும் கட்டினார்கள் என்று வாய் பிளக்கும்!  இயற்கையில்தான் எத்தனை அதிசயங்கள்! இதோ திண்டிவனம், புதிதாகப் போடப்பட்ட புறவழிச்சாலையில் வழுக்கிக் கொண்டு பறக்கும் பஸ்ஸில்  பாண்டிச்சேரியின் காற்றினிலே கலந்து வரும் ஏதோ ஒரு ஈர்ப்புச் சக்தி!

பாண்டியின் எல்லைப் புற வரவேற்பை ஏற்று, ஜிப்மர் மருத்துவமனையைத் தாண்டி, ராஜீவ் காந்திசிலை, இந்திரா காந்தி வட்டம், புதிய பேருந்து நிலையம்!

கடற்கரை விருந்தினர் மாளிகை ஜன்னலிலிருந்து கடலிலே சிறு சிறு படகுகள் செல்லும் காட்சி, மாலை வெயிலில் வெப்பத்திலிருந்து  விடுபட்ட கடலலைகளின் மாறாத சங்கீதம் நம்மை வரவேற்கும்.  சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து விடியலில் சூரிய உதயத்தையும், ஒளியலைகளின் பாதையில் முகம் சிவந்து பளபளக்கும் அலையரசியையும் கண்டு மகிழலாம்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அரசு அலுவலகர் மாளிகை தொடங்கி, காந்தி சிலைக்கு அப்பால் புதிய விருந்தினர் மாளிகைவரை, போக்குவரத்து  மாலை 5 மணியிலிருந்து நிறுத்தப்பட்டுவிடும். குடும்ப சமேதரராக  எல்லோரும் காற்று வாங்கவும், இளங்காதலர்கள் காதல் செய்யவும், சிறு குழந்தைகளை விளையாட விட்டு மகிழவும், இளைஞர்கள் பேசி கலகலக்கவும், முதியோர்கள் அரசியலிலிருந்து வீட்டுப் பிரச்சினைகள் வரை அலசவும், வருவார்கள். நடைப் பயிற்சி செய்வோர், தின் பண்டங்கள் விற்போர், கைரேகை சாஸ்திரம் சொல்லவரும் பெண்டிர், பூ விற்போர், என எங்கும் மனிதக் கூட்டம்.

காந்திசிலை அருகே இசை நிகழ்ச்சிகள் நடை பெறும். முட்டைக்கோஸ் பஜ்ஜி வெகுவேகமாக விற்பனையாகும். சுற்றுலா வருவோர் காந்திசிலை அருகே புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். குச்சி ஐஸ் வண்டிகள், பலூன் விற்போர், இயலாமையால் அதை வாங்கித்தர மறுக்கும் அப்பா, அழும் குழந்தை, முகம் தூக்கும் அம்மா என, பல முகங்களின் தரிசனங்கள்.

Gandhi
 பல மனித முகங்களின் சந்திப்பிலே ஆர்ப்பரித்து மகிழ்ந்த கடலலைகள், கையசைத்து வழியனுப்ப பத்து மணியோடு கூட்டம் கலைந்து விடும். வானத்துத் தாரகைகளின் துணையோடு இசைபாடும் காட்சியைக் காண யாரும் இருக்கமாட்டார்கள்.

சுதந்திர தினவிழாவின் போது கவர்னர் மாளிகை வண்ணவிளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் தேவலோகமாய்க் காட்சி தரும். கவர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே மஹாகவி பாரதியின் சிலை உள்ளது.
மஹாகவி பாரதியும், ஶ்ரீ அரவிந்தரும் நண்பர்கள். பாரதியின் நினைவில்லம், துவிபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் நினைவில்லம் பார்க்கத் தகுந்தவை.

இந்திய நாட்டின் மானசரோவரில் மலர்ந்த  வெண்தாமரைமலர் ஶ்ரீ அரவிந்தர். மஹாபுருஷர், மஹாயோகி. இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், ஆங்கிலேயர்களுக்கு  சிம்ம சொப்பனமாக விளங்கியவர். பன்மொழிப் புலவர், சாவித்ரி எனும் காவியக் கவிதையை  ஆத்ம சாதனை புரிபவர்களுக்காக எழுதியவர்.

கல்கத்தாவில் பிறந்து, இங்கிலாந்தில் கல்வி பயின்று, பரோடாவில் பணியாற்றி, வங்காளத்தின் நேஷனல் கல்லூரியின் முதல்வராய், தீவிரவாத இயக்கத்தின் முன்னோடியாய்த் திகழ்ந்து, சிறைச்சாலையில் யோகம் பயின்று, தன் யோக சக்தியால் கேட்ட இறைவனின் ஆணையை ஏற்று, அந்தக் கணமே புறப்பட்டு  வந்து 40 ஆண்டுகள் பாண்டிச்சேரியை புனிதப் படுத்திய புண்ணியர்.

பிரெஞ்சு நாட்டிலே பிறந்து, 1920 முதல் 1973 வரை இந்தியத் தாய் மண்ணிலே யோக வாழ்க்கையை மேற்கொண்டு,  அனைவருக்கும் வழிகாட்டியாய் அவருடைய அருள் வேண்டும் அனைவருடைய  மலர்ச் சமர்ப்பணத்தையும் ஏற்றுக் கொள்ளும் அன்னையின் புனிதப் பாதங்கள் பதிந்த புதுச்சேரி.

ஶ்ரீ அரவிந்தர், அன்னை இருவரும் இடம் கொண்ட சமாதியால், அதன் மேல் மணம் பரப்பும் வண்ணமலர் அலங்காரத்தால், உரிமையோடு வட்டமிடும் தேனீக்களின் ரீங்காரத்தால், உயிர்த்தெழும் அமைதியின் அணைப்பால், மவுனத்தின் இசையால், இயல்பாய் நிகழும் ஆத்ம சமர்ப்பணத்தால் என்னை, நான் யார் என்று உணர வைத்து, கணந்தோறும் என்னை இயக்கும் அன்னை, அரவிந்தரின் உணர்வலைகளால் நிரம்பிய புதுச்சேரி என் உள்ளம்  கவர்ந்த ஊர்.


Bharati on Independence day






3 comments:

  1. பிரயாணம் செல்வது போலவே உள்ளது.

    ReplyDelete
  2. அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி ஒரு அமைதிப் பூங்கா. தனது நோய்வாய்ப்பட்ட உடம்பை வைத்துக்கொண்டு சென்னையை விட்டு எங்கும் போகமுடியாமல் தவித்த நான் மதிக்கும் ஒருவரை அழைத்துக்கொண்டு சென்று அன்னையின் சமாதி முன் நிறுத்தினேன். அவர் உடைந்து அழுததைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். எனக்கும்தான். தங்களுடைய அருமையான கட்டுரை பல வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. நன்றி.

    ReplyDelete
  3. நன்றி ஸ்வாமிநாதன், எங்கும் கிடைக்காத பேரமைதியும், மனச்சாந்தியும் கிடைக்கும் சரணாலயம்தான் அன்னை சமாதி.அம்மா வீடு.எத்தனை எழுதினாலும் அலுக்காதது.பகிர்ந்து கொண்டது நிறைவு தருகிறது.

    ReplyDelete