8 Aug 2012

முருகனும் நானும் 2

மனிதவாழ்வில் புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. பிறர் மனம் வருந்தாது செயல்படுவதைவிட, வருந்தும்படி எப்படி நடந்துகொள்வது என்பதில் நிறையபேர் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் எந்த ஒரு நல்லதோ, கெட்டதோ உடனடியாகப் பகிர்ந்து கொள்ள செல் பேசி இருக்கிறது. நட்பும் சுற்றமும் காது எட்டும் தூரத்தில்! யாரும் இல்லாவிட்டால் ''ட்விட்டரிலாவது ட்வீட்டலாம்.'' அந்த வசதிகளெல்லாம் இல்லாத 70 களில் 'செல்' இல்லாமலே சொல்லுவதை, செவியால் கேட்டு, புன்முறுவலெனும் மருந்திட்டு ஆறுதல் அளித்தவன் ஆறுமுகன்.

விடியற் காலை நேரங்கள் ஆகாயத்திலிருந்து அமுத அலைகள் பூமிக்கு வரும் நேரம் என்பார் வள்ளல் பெருமானார். அமைதியும், குளிர்ச்சியும், இனிமையும் நிறைந்த காலை நேரங்களில் டி,எம். சௌந்திரராஜனின் முருகன் பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றை விடாமல் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்வோம். தேன் சொட்டும் குரலில் உருகி, உருகி முருகனைப் பாடும் டி. எம். எஸ்ஸின் குரலில் ஒரு காந்தசக்தி இருக்கிறது. திரு. கிருபானந்த வாரியாரின் முன்னுரையோடு கூடிய சீர்காழி. கோவிந்த ராஜனின் குரலில்,''கந்தரலங்காரம்,'' கண் முன்னே தோன்றும்.

இசையில் இனிமை இருக்கிறது, மனதை மென்மையாக மயிலிறகு போல வருடும்  தன்மை இருக்கிறது.
மனத் துன்பங்களை ஆற்றுவிக்கும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஆக இந்த முருகன் பாடல்கள் எல்லாம் முயற்சி இல்லாமலேயே மனப்பாடமாயின. அட, சும்மா பாட்டுக் கேட்டுக்கொண்டு என்னை பக்தி செய்யலாம் என்று பார்க்கிறார்களே, என்னை தரிசனம் செய்ய வேண்டாமா என்று நினைத்தான் போலும்! எங்கள் மாடி வீட்டில் வசித்தவர்களை பேச்சுவாக்கில் திருச்செந்தூரின்
 சிறப்பையெல்லாம் சொல்லச் செய்தான்.

முதன்முதலாக செந்தூர் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்த நிலையில், ரயில்வே வேலை  நிறுத்தம்!
 உடனடியாக மதுரை செல்லும் பேருந்தில் இடம் தேட கடைசி சீட்டில் பயணம். மதுரையில் இருந்து செந்தூர்! செல்லும் வழியெல்லாம் மருக்கொழுந்தின் நறுமணம். கடற்கரையும், கோயிலும் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தின. அதன்பின் அடிக்கடி செந்தூர் செல்ல ஆரம்பித்தோம்.

ஒரு முறை உடல் நலக்குறைவினால் செந்தில் நாதனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதாக வேண்டிக்கொண்டேன். காரைக்குடியில் ஒரு கல்யாணத்திற்கு செல்லவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. முதலில் செந்தூர் செல்வதாகத் தீர்மானித்து அங்கே போய்ச் சேர்ந்தோம். ஆனால் நான் ஒரு தவறு செய்தேன். என் கணவரிடம் என் வேண்டுதலை சொல்லவில்லை. எப்போதும் செய்வதுதானே என்று இருந்து விட்டேன். அங்கே போனதும் என்னவர் அடுத்தமுறை வரும் போது தங்கி எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றலாம், இப்போது திருமணத்திற்கு வேறு செல்லவேண்டும், நேரமும் இல்லை என்றார்.

முருகன் முகத்திலோ நமட்டுப் புன்னகை! கல்யாணம் முடிந்து மாலையில் ரயிலேறியாயிற்று! குழந்தைகள் இருவருக்கும், மாமியாருக்கும் நல்ல ஜுரம். ஒரு அரைமணி நேரம் ஆயிற்று. திடீரென்று வயிற்றுப் போக்கு ஆரம்பித்தது என் பதிக்கு! பாட்டிலில் தண்ணீர் இல்லை. ஸ்லீப்பர் வண்டி, எல்லோரும் படுத்து விட்டார்கள். உடல் நலிந்து நடக்கவும் முடியாத நிலையில் ரயில் திருச்சி  ஜங்ஷனில்   நின்றது.
 கீழே இறங்கிப் போய் தண்ணீர் பிடித்து வர பயம். நான் கீழே இறங்கி திரும்ப வராவிட்டால் கூட யாருக்கும் தெரியாது!

கதவைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்த என் கண் முன்னால் கடவுளைப் போல் ஒரு போர்ட்டர் வந்தார். அவரிடம் கையில் இருந்த பணத்தையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து ஒரு சோடாவும், பாட்டிலில் தண்ணீரும் வேண்டும் எனக் கேட்டேன். ரயில் புறப்பட ஆரம்பித்த நிலையில் அந்தப் போர்ட்டர் ஓடி வந்து கொடுக்க, அவசரமாய் சோடாவை கையிலிருந்த டம்ளரில் ஊற்றிக் கொண்டேன். திருச்சி உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு பிரார்த்தனை, வேண்டுதல்.

தண்ணீரும், சோடாவும் குடித்தபின்னர் சிறிது தெம்பு வந்தது, ஆனாலும் செந்தூரானின் பன்னீர் இலை விபூதியை வயிற்றில் பூசி, கந்த சஷ்டி கவசத்தை ஒருமையுடன் அவனது திருமலரடியில் மனதை இருத்தி சொல்ல ஆரம்பித்தேன். அப்படியே உறங்கியும் போனேன். ஆனால் என் மனம் மட்டும் சஷ்டி கவசத்தை சொல்லியபடியே இருந்தது. நாசியிலே கற்பூரத்தின் நறுமணம். உள்ளமெல்லாம் ஆனந்த பரவசம். அந்த நாளில் முருகன் என்னை ஆண்டுகொண்டான்.

ஏற்கெனவே திருப்புகழ் பாடல்கள் சிலவற்றைக் கற்றுக் கொண்டிருந்தாலும், மேலும் கற்றுக் கொண்டேன். கந்தர் அலங்காரப் பாடல்களை பொருள் உணர்ந்து படிக்கப் படிக்க அவை என்னை ஆட்கொண்டன.

அப்பனுக்குப் பாடம் சொன்னவன் அல்லவா? எப்போது எந்தக் கோவிலுக்குப் போனாலும் தேவையானவற்றை முன்னேற்பாடாகக் கொண்டு செல்ல வேண்டும், அவசரத் தேவைக்கான
மருந்துகள், தேவையான அளவு தண்ணீர் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் ஆகிய பாடங்களையும் கற்றுக் கொடுத்தான் வேலவன்.

உன்னை விட்டால் வேறே கதி இல்லை, நதியோட்டம் போன்ற இந்தப் பொய் வாழ்வில், நரம்பினால் ஆன இந்த உடலாகிய மூட்டையை சுமந்து கொண்டு, திண்டாடு என்று செய்துவிட்டது விதி. நொந்துபோய் நோகின்றது என் மனம், என்று அழுதால், திருவடியும், தண்டையும், சிலம்பும், வடிவேலும், ஆறுமுகமும், பன்னிருதோள்களுமாய், கோலக்குறத்தியுடன் நீலச் சிகண்டியில் ஏறி, எப்படி வருவான் ?
குருவடிவாய் வந்து நம் உள்ளம் குளிர ஆனந்தம் அடையச் செய்வான்! செங்கோட்டு வெற்பனை சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு எந்தத் தாழ்வும் வராது. ( கந்தரலங்காரம் 26, 98, 102 )

''உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

No comments:

Post a Comment