22 Aug 2012

Chennai

சென்னை!
கெட்டும்  பட்டணம் சேர் என்பது பழமொழி. மெட்ராஸ் என்ற பெயரை கேட்டாலே சிறு வயதில் ஒரு பெரிய கற்பனை! எலெக்டிரிக்  டிரெயின், கலங்கரை விளக்கம், பீச், மூர்மார்க்கெட், செத்தகாலேஜ், உயிர் காலேஜ், என்று பலவற்றையும் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு! மாயாஜால உலகம்என்ற நினைப்பு.

 கடைசி சித்தப்பாவிற்கு கல்யாணம் ஆன போது பல்லாவரத்தில் குடியிருந்தார்கள். அங்கே போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். பக்கத்து வீட்டு மாமி போகிறார்கள் என்று தெரிந்ததும்  அவர்களுடன்  என்னையும் அனுப்பினார்கள். அப்போது என் வயது 10. ஸ்டேஷனில் சித்தப்பாவந்து கூட்டிப்போனார். அதுவே என்னுடைய முதல் சென்னைப் பயணம். 19 ஆண்டுகள் பிற்காலத்தில் அங்குதான் குப்பைகொட்டப் போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

ஆசிரியப் பயிற்சிக்காக மீண்டும் சென்னை வந்தேன். மயிலாப்பூரில், சாந்தோம் கடற்கரைக்கு அருகே கல்லூரி. கல்லூரியின் ஒரு பகுதி ஹாஸ்டல்,  மூன்று மாடிக்கட்டிடம். ஓராண்டு கால கல்லூரி வாழ்வின் ஒவ்வொரு நாளையும் கடற்கரையில் கழித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் இன்று ஆச்சரியமாக இருக்கிறது.

கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு, அலைஓசையைக் கேட்டுக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது ஒரு இனிமையான அனுபவம்.  அதிலே ஒரு இன்னிசை இருக்கிறது. அமாவாசை நாட்களில் அலைகள் அதிகமாக, உக்ரமாக, உயரமாக இருக்கும். பவுர்ணமி நாட்களில் நிலவின் ஒளி அலைகளுடன் உறவாடி கனவுலகிற்கு நம்மைக் கவர்ந்து செல்லும்! கடலும் அதன் அலைகளும்  மனதை ஒரு நிலைப் படுத்தும் சக்தி உடையன. நம்மை அறியாமலேயே நம் மனம்  கடலலைகளுடன் முன்னும் பின்னும் அசையும். கடற்கரையைக் காணமுடியாத சோகம் எனக்குள் இருக்கிறது!

சென்னையின் பிற பகுதிகளுக்கு எல்லாம் படிக்கின்ற நாட்களில் போனதில்லை. ஆசிரியப் பயிற்சிக்காக பாடம் எடுத்த பள்ளிகளுக்கு போயிருக்கிறோம். மவுண்ட் ரோடில் புத்தகங்கள் வாங்கப்போயிருக்கிறோம்். லஸ்  கார்னரில் போட்டோ ஸ்டுடியோ, புடவைக்கடை, ரிப்பன் வளையல் கடைகள் எல்லாம் தெரியும். முக்கியமாக நாங்கள் உடுப்பி ஹோட்டல் வாடிக் கையாளர்கள்!

66-67 ல் சென்னையில் ஒரு புயல் அடித்தது. வேகமான காற்றில், மழை, கடற்கரை மணலை சேர்த்து வீச கடல் அலைகளைப் பார்த்தவாறு  நின்றிருந்தோம். முகமெல்லாம் மணல் மழை. தாக்குப் பிடிக்க முடியாமல் ஹாஸ்டல் திரும்பினோம். அதன்பின் கடற்கரையில் கரைதட்டிய கப்பலைப் பார்ப்பதற்கென்று ஒரே கூட்டமாக இருக்கும்.

இப்படி மயிலாப்பூரில் பரிச்சயமான சென்னை,  திருவல்லிக்கேணியில் மீண்டும் புத்துயிர் பெற்றது. பார்த்தசாரதி பெருமாள்  கம்பீரமாக நின்றுகொண்டு அனைவருக்கும் அருள் பாலித்துவரும் தலம் திருவல்லிக்கேணி. கோயில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் யானை மகாகவி பாரதியை எப்போதும் நினைவுபடுத்தும். கோயில் தெப்பக்குளத்தைத் தாண்டினால் மிகமிக நெருங்கிய நண்பர் வீடு. இடது பக்கம் வந்தால் மார்க்கெட். சீசனுக்கு ஏற்ப எல்லா காய்கறிகளும் கிடைக்கும். கோவில் உற்சவங்களால் கலகலவென உயிரோட்டம் உள்ள இடம்! கோவிலிலிருந்து கிழக்கே போனால் விவேகானந்தர் இல்லம். சாலயைத் தாண்டினால் பீச். இடது பக்கம் அலைகளைப் பார்த்துக் கொண்டு நடந்தால் மெரினா கடற்கரை! தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்! ஐஸ் கிரீம்! மாலையானால்  கடைகள் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒளியில் தகதகக்கும். பாட்டியம்மா கடையில் வடை, போண்டா, பஜ்ஜி  வியாபாரம்  அமர்க்களமாக  நடக்கும் .

திருவல்லிக்கேணி பெரிய தெரு புகழ் பெற்ற இடம்! பிள்ளையார் கோவில், பக்கத்தில்  ஹிந்து ஹைஸ்கூல். பெரிய தெருவின் சந்து பொந்துகளில் நுழைந்தால் சூரப்பமுதலித் தெரு. செட்டியார் ஒருவரின் மூன்று மாடிக்கட்டிடத்தில்  ஒண்டுக்குடித்தனத்தில்தான்  என் குடும்பவாழ்க்கை தொடங்கியது. சரியாக காலை பதினோரு மணிக்கு வந்து மெயின் ஸ்விட்ச்சை ஆப் செய்துவிட்டுப் போய்விடுவார். அவர் தெருமுனை திரும்பியதும் அது மீண்டும் உயிர்க்கும். வானொலி ஒலிபரப்பும் கர்னாடக இசை ஒலிக்கும். என் தோழி சுஜாதாவின் தாய் அனந்தலஷ்மி சடகோபன் அவர்கள் பாட்டு அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு வந்த காலம் அது. வானொலி நிகழ்ச்சிகள் மாதப்பத்திரிகையைப் பார்த்து ,அவர்கள் பாட்டைக் கேட்டுவிடுவேன்.

திருவல்லிக்கேணியில் புகழ் பெற்றது ரத்னாகேப் உணவகம். மல்லிகைப் பூ இட்லிக்கும், பாசந்திக்கும் புகழ் பெற்றது.
கல்யாணம் ஆன புதிது. ‘’என்ன ஓய், பைகிராப்ட் ரோடு உமக்கு மாத்திரம் சொந்தம் என்ற நினைப்போ,’’ என்று  நண்பர்களால் கேலி செய்யப்பட்டும்  கைகோர்த்துக் கொண்டு உலக நினைவு இல்லாமல்  பல நாட்கள்  மெரினாவுக்கு  நடந்த இடம்.

சூரப்ப முதலித்தெருவிலிருந்து வெங்கடாசலம் செட்டித் தெருவுக்கு அடுத்து இடம் பெயர்ந்தோம்.
48ஆம் நம்பர் வீடு! கீழே இரண்டு குடித்தனங்கள்! நேர் வீடு எங்களுடையது. வெளிச்சமறியாத அறைகள். கரப்பான் பூச்சிகள் உலாவரும் குளியலறை! கைப் பம்பில் அடித்தால்தான் தண்ணீர், குடிக்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ எதுவானாலும்! அடடா, நினைத்துப் பார்த்தால் எப்படி அந்த வீட்டில் இருந்தோம் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

2 comments:

  1. Interesting. Reminds me of my stay for 5 years in Triplicane - Big street, Mami mess, Ratna cafe, Beach road street-lights[study for CA exams] and the Marina waves that gave me the dreams. Life-changing period during early to mid seventies.

    ReplyDelete
  2. Chennai, I love the place so much.22 years story is there.Triplicane, of those years was not crowded.Nice place.

    ReplyDelete