29 Aug 2012

Corn caps

                                   ' சார், இந்த வீட்ட உங்களுக்கு வாடகைக்கு குடுக்கறதில எனக்கு சந்தோஷம்தான். ஆனா, ஒரே ஒரு கண்டிஷன்,' அப்பிடின்னார் முருகேசன்.
சொல்லுங்க, என்றார் பட்டாபி.
கடியாரத்துக்கு ஒன்னு, தினசரி காலண்டருக்கு ஒன்னுன்னு ரெண்டு ஆணி அடிச்சிருக்கேன் பாருங்க, அதுக்குமேல ஆணி அடிக்கக் கூடாது, அதுதான் கண்டிஷன்!
என்னங்க, உங்களுக்கு ஆணிமேல அவ்வளவு கோவம், என்று கேட்க நினைத்தவர்  சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார்.

என்னங்க சுவத்துல ஆணி அடிச்சா காலண்டர் மாட்டலாம். கால் ஆணியிலே மாட்ட முடியுமா? என்றாள் அவர் மனைவி பர்வதம்.
இன்னிக்கு  ''ஆணி தினம்''னு ஏதாவது பேப்பர்ல போட்டிருக்கானா என்ன? என்றார் பட்டாபி எரிச்சலுடன்.

நேத்து நீங்கதானே சொன்னீங்க அதனால என் கால் ஆணிலே 'சோளத்தொப்பி' யப் போட்டேனா, கால்பாதம் பூரா அப்பம் கணக்கா வீங்கிடிச்சு, பாருங்க.
சோளத் தொப்பியா, என்னடி அது?
அதுதாங்க, 'கார்ன் கேப்ஸ்' னு சொன்னீங்களே, பிளாஸ்டர், அதுதாங்க!

ஓ, அதுவா உனக்கு கால்ல ஆணி வந்ததும் வந்தது, எனக்கு தலைவலி. கீழே டாக்டரம்மா அவங்க ரூமுக்கு வந்திருப்பாங்க, போய் காமிச்சு மருந்து வாங்கிக்க என்றார். ஆம், அவர்கள் குடியிருப்பில் வங்கி மருத்துவர் தினம் காலையில் வருவார்.

பர்வதம் டாக்டரிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவரும் கால்மேல் தடவ ஒன்று, Brufen மாத்திரை 5 நாட்களுக்கு கொடுத்து சரியாகிவிடும் என்றார்.ஐந்து நாட்களில் கால் வீக்கம் அதிகமாகி செருப்பு போட்டுக்கொள்ள முடியாமல் போனது. மூட்டுக்களில் ஒரே வலி.

மீண்டும் மருத்துவர்! ஓ மூட்டு வலியா? அப்படீன்னா, உங்களுக்கு 'ஆர்த்தரைடீஸ்' இருக்குது. சரிதான், ஒரு கோர்ஸ் எதிர்ப்புச் சக்திக்கான ஊசி ஐந்து நாட்கள் போடுகிறேன், வலியெல்லாம் போய் விடும்.கால் வீக்கமும் சரியாகிவிடும் என்றார்.

கால்வீக்கம் வந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. பாதங்களின் மேலே கொஞ்சம் கருப்பாகிக் கொண்டு வந்தது. கால் பாத எலும்பில் ஏதாவது ஆகியிருக்கிறதோ என்னவோ! எதற்கும் ஒரு எக்ஸ்ரே, ரத்தம், நீர் பரிசோதனைகள் எல்லாம் செய்து வாருங்கள் என்றார் மருத்துவர்.

தினம் புதிதாக வலிகள் வந்தனவே ஒழிய, கால் வீக்கம் போனவழியில்லை. எலும்பு வைத்தியர் எக்ஸ்ரே பார்த்துவிட்டு  கால் எலும்பெல்லாம் நல்லாதான் இருக்கு, ஒரு தொந்தரவும் இல்லையென்றார். சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், லொட்டு, லொசுக்கு எல்லாவற்றுக்கும் ரத்தப் பரிசோதனை. எல்லாம் நார்மல்!

விஜயாமருத்துவமனை போய்  இந்த மருத்துவரிடம் காண்பியுங்கள் என்றார் வங்கி டாக்டர். இதனிடையே ஜுரம் வந்தது. கைகளைத் தூக்கிசாப்பிட முடியாமல் போனது. புதிய டாக்டர் இதய நோய்/ பொதுமருத்துவம் இரண்டும் பார்க்கிறவர்!  அவர் சொன்னார், எதற்கும் ஒரு ECG, இதய எக்ஸ்ரே பரிசோதனை செய்து விடுங்கள் என்றார். எல்லாம் சரியாக இருக்க, கால்களில் சூடு இருக்கிறது, சிவப்பாக வேறே உள்ளது. கால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதாவது இருக்க வேண்டும், அதனால்....

 அதனால் எதற்கும் ஒரு 'ஏஞ்சியோகிராம்' செய்துவிடலாம். நான் கொடுக்கும் மருந்துகளை சாப்பிடுங்கள், நாளைக்கு வந்து அட்மிட் ஆகிவிடுங்கள் என்றார். வயிற்றிலே புளியைக் கரைத்தது போலாயிற்று பர்வதத்துக்கு. பட்டாபியோ பத்து நாள் லீவு எடுத்தாயிற்று. என்ன செய்யலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார். பர்வதமோ ஆஸ்பத்திரிக்கு வரவேமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.

கடைசியாக நடன நாயகனின் அருள் பெற்ற இதய மருத்துவரிடம் காண்பிப்பதென்றும், அவர் என்ன சொன்னாலும் ஏற்பது என்றும் முடிவாயிற்று. 25 நாட்களின் மருத்துவ யாத்திரையையெல்லாம் கேட்டுக் கொண்டு கால்களைப் பரிசோதனை செய்தார் அவர். உங்களுக்கு ஆஸ்த்துமா நோய் உண்டா, என்றார்.
ஆம், பரம்பரைச் சொத்து, கேட்காமலேயே வாரி வழங்கி விட்டார்கள்  என் முன்னோர்கள் என்றார் பர்வதம்.

மருத்துவரின் முகத்திலே ஒரு பிரகாசம்! நீங்கள் கால் ஆணிக்கு என்று போட்ட 'கார்ன் கேப்ஸ்,' பிளாஸ்டரில் 'Salicyclic acid,' என்ற மருந்து உள்ளது. அது சில ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு அலர்ஜி  ஏற்படுத்தக்கூடும். அதுதான் உங்கள் கால் வீக்கத்திற்குக் காரணம். உங்களிடம் இருக்கும் எல்லா மருந்துகளையும்  தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். இதோ இந்த குட்டி மாத்திரையை இரவு படுக்கும் போது மட்டும் ஒன்றே ஒன்று சாப்பிடுங்கள் போதும். தலையணைமேல் கால்களை வைத்துப் படுங்கள். அவ்வளவுதான் என்றார்.

இரண்டே நாட்களில் கால் வீக்கம் போயிற்று! மூட்டு வலிகள் ஓடிப்போயின. ஒரு வாரத்தில் உடல் நலம் தேறியது.

ஒரு மருத்துவரின் தவறான கணிப்பும், மருந்துகளின் பின் விளைவுகளும் ஒரு மாத மனக்கஷ்டம், பணக்கஷ்டம், ஆகியவற்றை ஏற்படுத்தியதைப் பாருங்கள்!  காலில் வரும்  ஆணியெனப்படும் வளர்ச்சிக்கு கண்டிப்பாக 'கார்ன் கேப்ஸ்,' எனப்படும் பிளாஸ்டரால் ஒரு பயனுமில்லை. காசுக்கு தண்டம், காலுக்கு கஷ்டம். ஆபரேஷன் பரவாயில்லை என்கிறார்கள் சிலர். ஹோமியோபதி மருந்துகள் ஓரளவு வலியைக் குறைக்கின்றன. காலில் 'சாக்ஸ்' போட்டுக் கொள்வதும், எப்போதும், வீட்டிலும் செருப்புப் போட்டுக் கொள்வதும் சற்று வலியைக் கட்டுப்படுத்தலாம்.

பிரம்மதேவன் தலையெழுத்தை எழுதும் போது, காலில் ஆஆஆஆணீணீணீணீணீயென்று அழுத்தமாக எழுதியிருந்தால் யாராலும் மாற்ற முடியாது என்று வருபவர், போகிறவர்களிடம் எல்லாம் சொல்கிறாள் பர்வதம் மாமி.

ஆணியோடு ஆஸ்த்துமா நோய் உள்ளவர்களுக்கு எல்லாம் இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்
'சோளத் தொப்பி' யைக்  காலிலே போட்டுக் கொள்ளாதீர்கள்!!!!
















No comments:

Post a Comment