24 Sept 2012

இரண்டு மணி நேரம்

                                      குழந்தை ரம்யா எங்கே? கொஞ்ச நேரம் விளையாடலாம்னு வந்தேன், என்றேன்  பக்கத்து வீட்டு பார்வதி அம்மாவிடம்.  ஓ, உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேனா, அதைக் கொண்டுபோய் ஸ்கூல்ல சேத்தாச்சு, ஒரு வாரமாப்  போகுது என்றார்.

ரம்யாவுக்கு இரண்டு வயசுதானே ஆகுது! அதுக்குள்ள ஸ்கூலா? என்று நான் ஆச்சரியப்பட, சிரித்தார் அவர். உங்க வீட்டில சின்னக் குழந்தைகள் இல்ல, அதனால உங்களுக்குத் தெரியல! இன்னும் கொஞ்ச நாளானா பிறந்த குழந்தையையே ஸ்கூலில விட்டுவிடுவாங்க போல.

பார்வதி அம்மாவுக்கு ஒரே பையன். மருமகளும் வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்கிறாள். குழந்தை பார்வதி அம்மா வளர்ப்பில். வீட்டையும் நிர்வாகம் செய்துகொண்டு, குழந்தையையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று புலம்பியதால் வந்த வினை இது.

 கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் உங்களுக்கு, மத்யானம் வரைதானே ஸ்கூல்?

அத ஏன் கேட்கறீங்க, காலைல எட்டரையில இருந்து, பத்தரை, பதினொன்னில இருந்து ஒரு மணி அப்பிடின்னு இரண்டு பகுதி இருக்கு. அவ்வளவுதான். எட்டரை மணின்னா யாராச்சும் கொண்டு விடுவாங்க! நாம திரும்ப கூட்டியாந்தா போதும். பதினொன்னுனா போகவர  நாமதான் ததிகிணதோம் போடணும்.
அப்பிடியா, அட ராமா! ஆமாம் எவ்வளவு பணம் கட்டறீங்க?
இருங்க, உள்ள போய் ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வரேன். மயக்கம் போட்டு கீழே விழுந்திட்டீங்கன்னா நான் ஓட வேண்டாம் என்று சொல்லி ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்தார் பார்வதி அம்மா.

அப்பிடியொன்னும்  பெரிசா இல்லீங்க, மாதம் மூவாயிரம் ரூபாய்தான். வருடம் முழுவதற்கும் முப்பத்தாறாயிரம்  ரூபாயைக் கட்டினால்தான்  சேர்த்துக்குவாங்களாம். இல்லைன்னா சீட்டு கிடையாது நேத்து பாருங்க, முடியலன்னு ரம்யாவ வீட்டிலயே வைச்சுக்கிட்டேன். மருமக ஒரே கத்தல்.
இவ்வளவு  பணத்தைக் கட்டி அனுப்பலன்னா  என்ன அர்த்தம்னு.

ரெண்டு மணி நேரத்துக்கு ஆயிரம்னா இருவத்துரெண்டு மணி நேரத்துக்கு எவ்வளவு? ஒன்றாம் வகுப்பிலிருந்து, முதுகலை பட்டப்படிப்புவரை கூட மூவாயிரம் செலவு செய்யவில்லையே என்று எண்ணிக்கொண்டே வீட்டுக்குப் போனேன்.

இரண்டு வயதுக் குழந்தையின் மழலையைக் கேட்டு, மகிழ்ந்து, விளையாடி, முத்தமிட்டுக் கொஞ்சி, அணைத்து மகிழாமல் தாய்க் குலங்கள் செல்வம் தேடுகிறார்கள் என்று வருந்தும் அதே வேளையில், சிறு வயதிலேயே பந்த பாசச் சுழலில் சிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?









  




2 comments:

  1. Very true! :-) But the mother should be doing the enjoying the joys of her baby's childhood and not pass on the responsibility to the grandmother. Very well written.

    amas32

    ReplyDelete
  2. நன்றி,சுஷிமா,தாய்மையின் ஆனந்தத்தை ரசிக்கமுடியாமல் போவது வருந்தத்தக்கது தான்.

    ReplyDelete