27 Sep 2013

அருட்பா அமுதம்


பல ஆண்டுகளுக்கு முன்......                                    
ஒருநாள் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்த போது கிடைத்த அரிய பொக்கிஷம் தான் சிறிய வடிவிலான திருஅருட்பா. எடுத்தவுடன் கண்ணில் பட்டது ஒரு பாடல்.

தாய் தந்தையரின் ஒரே பிள்ளை அவன். செல்லப் பிள்ளை!கொஞ்சம் வளர்ந்த பிள்ளைதான்! குழந்தை அல்ல. ஆனால் குறும்பு அதிகம்.அலுத்துக் களைத்து வந்த அப்பாவுக்குப் பிள்ளையின் ரகளை பொறுக்க முடியவில்லை. அடிக்க கையை ஓங்குகிறார்! அதற்குள்  அம்மா என்று அலறும் பிள்ளையிடம் ஓடி வருகிறாள் தாய். தாங்குபவள் இல்லையா? தன் மகனை அணைத்துக் கொள்கிறாள். தடவிக் கொடுக்கிறாள். கண்களிலே கண்ணீரோடு  ரொம்ப வலிக்குதா கண்ணே! என் ராசா, என் செல்லம் என்றெல்லாம்  கொஞ்சுகிறாள். பையனுக்குத் தெரியாமல் தன் கணவனை முறைத்துப் பார்க்கிறாள். தகப்பன் சொல்கிறான்,' நானெங்கே அடித்தேன்? கையை ஓங்குவதற்குள் கலாட்டா செய்கிறீர்களே?' தாயின் அணைப்பில் மகன் சிரிக்கிறான்.

அம்மா மட்டும் கோபத்தில் குறைந்தவளா என்ன? ஏதோ கோபம்! ஒரு சாத்து சாத்தினேன்னா தெரியும், என்று கையை ஓங்குகிறாள்!
தந்தை ஓடி வருகிறார். ஏண்டி, ராட்சசி மாதிரி என் பிள்ளைய அடிக்கிறே? நீ அழாத ராசா, அம்மாவ ரெண்டுபேரும் சேந்து மொத்தலாம் என்று ஆறுதல் சொல்கிறார்.

ஒருத்தர் அடித்தால் இன்னொருவர் ஆறுதல் சொல்ல  இருக்கிறார்கள் இந்த உலகத்தில்! ஆனால் எனக்கோ அம்மா, அப்பா என்று இரண்டு பேர் இல்லையே!

யார்தான் இருக்கிறார்கள் உனக்கு? சொல்லேன்! வள்ளல் பெருமான் சொல்கிறார்,

ஓ, அதுவா, எனக்கு தந்தையும், தாயும் ஒருவர்தான்! அவர் பெயர் அம்மையப்பன், தாயுமானவன்!செம்பவள மேனியெல்லாம் திருநீறு பூசியவன்! பொன்னம்பலத்திலே திருக்கூத்தாடும் தூயவன்! கல்விச் சாலைக்குப் போகாமலே எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவன்!
ஆனால் பாருங்கள் இந்த உலக வாழ்க்கைத் துன்பங்கள் என்னை வருத்துமாறு செய்கிறான்.
அம்மையப்பனே, அடித்தது போதும் ஐயனே, என்னை அணைத்துக் கொள்! என் துன்பமெல்லம் பறந்தோடச் செய், அது போதும் எனக்கு!

கால்பந்தாட்டத்தில் உதை வாங்குகிற பந்தைப் போல் வாழ்க்கைத் துயரங்கள் மனிதனைப் பந்தாடும் போது அவனுக்குத் தேவை இதமான சொல்லும், அன்பான அணைப்பும்தானே?

தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தாற் றாயுடன ணைப்பள் தாயடித்தாற்
பிடித்தொரு தந்தை யணைப்பனிங் கெனக்குப் பேசிய தந்தையுந் தாயும்
பொடித்திரு  மேனி யம்பலத் தாடும் புனிதநீ யாதலா லென்னை
அடித்தது போது மணைத்திடல் வேண்டும் அம்மையப் பாவினி யாற்றேன்.

சிறுவயதில் தன் மனதில் எழுந்த விருப்பு வெறுப்புகளை எடுத்துக் கூறி இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்வதாக அமைந்த இப்பாடல்தான் என்னை அருட்பா அமுதத்தைப் பருகச் செய்து அருட்பாவிற்கு அடிமையாக்கியது.

அம்மையப்பா அடித்தது போதும் இனிமேல் தாங்கமுடியாது என்னை அணைத்துக் கொள் என்று சொல்லும் போது அழத்தோன்றும். இறைவனின் அரவணைப்பில்தான் எத்தனை சுகம்?அடுத்து பல பாடல்களில் மகனே என்று தன்னை இறைவன் பரிவோடு அணைத்து அருள் செய்ததையும் சொல்கிறார். படிக்கப் படிக்கத் தெவிட்டாத தெள்ளமுதம் திருவருட்பா!

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை!