1 Aug 2015

நல்விருந்து


ஜே. பி. நகரின் பிரபல பள்ளி ஒன்று என் மகளை கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகக் கூப்பிட்டிருந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு அப்பள்ளியுடன் தொடர்பு
உண்டு ஆதலின் நானும் உடன் சென்றிருந்தேன்.

பள்ளி வளாகத்தில் நுழைந்ததுமே உயிர்த்தெழுந்தன நினைவுகள்.  மாணவர்களுடன் சென்று அமர்ந்ததுமே புத்துணர்வு பொங்கியது. அறிமுகமான ஆசிரியைகள் முகம் மலர அன்புடன் வரவேற்றார்கள்.

நடனம், ஓரங்க நாடகம், மாறு வேடம், ஓவியம், கைவேலைகள் என பலவிதமான போட்டிகளில் சுமார் 18 பள்ளிகள் பங்கு கொண்டன. குழந்தைகளுக்குத்தான் எத்தனை வித விதமான புது உத்திகள், யோசனைகள், புதிய பார்வைகள்.

நாட்டியப் போட்டியில் பத்து, பள்ளி மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலும் தாசர் பாடல்களுக்கு, குழலூதும் கண்ணனைக் கற்பனையில் காணச்செய்பவை!இருவர் மட்டும் சற்றே மாறுபட்ட நடனம் ஆடினர். ஆறாவது படிக்கும் குட்டிப் பெண் சிறிய பானை மேலேறி, தலையில் சிறு செம்புடன்! செம்பும் விழாமல், பானையிலிருந்து வழுக்காமல் சமநிலை காத்து, தாளம் தப்பாமல் ஆடிய அழகு, மன ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு!

அடுத்து நாட்டுப்புற நடனத்தைச் சார்ந்தது.  ஒரு ஆணும் பெண்ணும் மாற்றி மாற்றிப் பாடும் பாடல்.
தலையின் பின்பக்கம் ஆணின் முகமூடியை அணிந்து கொண்டு, அதற்கேற்றவாறு , ஆண், பெண் ஆடை அலங்காரங்களுடன் அந்தப் பெண் ஆடியது அற்புதமாயிருந்தது.

மாணவியருக்குச் சற்றும் குறைந்தவர்கள் நாங்கள் இல்லை எனக் கூறியது மாணவர்கள் ஆடிய கூட்டு நடனம். என்ன கற்பனை வளம், ஈடுபாடு! (திரைப்படங்கள் வழிகாட்டுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.)

பெரிய தியானக் கூடம், சுற்றிலும் அலங்கரிக்கும் புகைப்படங்கள். புத்தக அலமாரிகள். அமைதியின் மடியில், மொழிகளுக்கு இடமற்ற தாய்மடியில், இன்றைய தினம் இனிய தினமாயிற்று.