11 Jul 2012

பெண் குழந்தையும் கல்வியும்

திருமணமான இரு இளஞ்சிறுமிகள் கல்வி பயில அனுமதி!
திருமணமான  இளம்பெண்களை கல்விபயில அனுமதித்தால் மற்ற மாணவ, மாணவியருக்கு முன் உதாரணமாக ஆகிவிடும். ஆகவே தவறான எடுத்துக்காட்டை ஆதரிக்க கூடாது!

இந்த இரண்டும் 7.7.12, இந்து பத்திரிக்கையின் கடைசிப் பக்கச் செய்திகள். 
 17 வயதான என் பெண் 402/500 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். என் சகோதரனுக்கே திருமணம் செய்துவிட்டேன். அவனோ மீண்டும் வேலையின் பொருட்டு  வெளிநாடு  போகிறான். மனைவி மேலும் படிக்க அனுமதி கொடுத்து விட்டான். அதனால் கல்வித் துறை அதிகாரிகளின் உதவியோடு பதினொன்றாம் வகுப்பில், அரசாங்கப்பள்ளியில் சேர்க்கமுடிந்தது என்று பெண்ணின் தாய் சொல்லியிருக்கிறார்.

அகில இந்திய மகளிர் மன்றத் தலைவி குழந்தைத் திருமணங்கள் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், ஆயின் திருமணமானசிறுமிகள் படிக்கவிரும்பினால் தடை செய்யக் கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

குழந்தைத் திருமணம் செய்பவருக்கு, இரு தரப்புப் பெற்றவர்களுக்கும் ஒராண்டு கடுங்காவல் தண்டனையையாவது கொடுத்தால்தான் இந்தப் பழக்கம் மாறும். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்திருந்தால்தான் திருமணம் செய்யலாம் என்ற சட்டமும் வந்தால் பரவாயில்லை.

அரசாங்கப் பள்ளிக் கூடங்களின் தரம் அதிகரித்தால்தான் சரியான கல்வியை அனைவருக்கும் கொடுக்கமுடியும்.

கல்வித்திட்டத்திலும் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பாடங்கள் தேவை. 'வாழ்க்கைக் கல்வி,' என்ற பெயரில் ஒரு வகுப்பு நேரம் ஒதுக்கப்படவேண்டும். அவர்களுடைய உரிமைகள் உணர்த்தப்பட வேண்டும். திருமண வயதுக்கு, அதாவது பெண்கள்(18) வயதுக்கு முன்னால் திருமணம் செய்து கொள்ள மறுக்கவேண்டும்.  திருமணத்திற்குப் பின்னால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் நிச்சயமாக மாணவ, மாணவியருக்குத் தெரிய வேண்டும்.

ஆண்,பெண் உறவின் விளைவுகள், குடும்பவருமானத் தேவைகள்,  ஆகியவைகள் இருபாலருக்கும் தெரியவேண்டும். ஒரு ஆண் மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது தவறு, தண்டனைக்கு உரியது என்பது உணர்த்தப்பட வேண்டும். உண்மையாகவே கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பலதார மணங்களை கட்டுப்படுத்தமுடியும்.

 எதுக்காக இதையெல்லாம் எழுதரேன்னு பாக்கரீங்களா? வயித்தில ஒன்னு, இடுப்புல ஒன்னு, கைபிடிச்சுக்கிட்டு ஒன்னு என்று ரோட்டோரத்தில வேலை செய்யராங்க பாருங்க பெண்கள்
அவங்க சொன்ன கதைகள்தான்.பெண்ணுக்குப் படிப்பறிவு இருந்தால் இந்த அவல நிலைவருமா?

கல்யாணம் பண்ணி மூணு பிள்ளையைக் கொடுத்துவிட்டு, போரடித்ததும் அடுத்து மீண்டும் மாப்பிள்ளை வேஷம் போடத்தயாராகும் அஹங்காரம் மிக்க ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கவாவது பெண்களுக்கு கல்வி வேண்டும்.

பணக்காரவர்கத்திலும் இந்த அக்கிரமம் நடக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால் தவறு செய்பவரைப் பின்பற்ற வேண்டிய அவசியமுமில்லை. பெண் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு அளிப்போம்.









No comments:

Post a Comment