''வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி:
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி;
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.''
-- மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
பாட்டுக்கொரு புலவனுக்குத்தான் எத்தனை ஆசை! வீதிக்கு இரண்டு பள்ளி, நகர்களெங்கும் பலபல பள்ளி! கல்வி இல்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமாம்! அட நம் நாட்டில் மட்டுமல்ல கடற் புறத்தினில் காணும் பற்பல நாட்டில் எல்லாம் கல்வித் தேவியின் ஒளி ஓங்க வேண்டுமாம். ஓர் ஏழைக்கு கல்வி அறிவு கொடுப்பதைவிட ஏதய்யா பெரிய புண்ணியம்? அன்னச்சத்திரமும், ஆலயங்களும் ஆயிரக் கணக்கில் கட்டுவதைவிட கல்விக்கூடங்கள் அல்லவா வேண்டும்?
காவடி ஆட்டம் |
வங்கிப் பணி செய்து ஓய்வு பெற்றபின்னும் தன்னுடைய வேர்களை மறவாது குருகுலத்தில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தன் தந்தை ஶ்ரீமான்.நாகநாதன் அவர்கள் நினைவாக எஸ்.எஸ். எல். சி, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல், இரண்டு, மூன்றாம் இடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளித்து ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வட்டித்தொகை வருமாறு பத்தாயிரம் ரூபாயை வைப்புநிதியில் வைத்தார். மிகக் குறைந்த தொகைதான்.
ஆனால் உடன் பலரும் இந்த நற்பணியில் பங்கு கொள்ளக் காரணமாக அமைந்தது இந்த நற் செய்கை!
தன் விருப்பத்தை பள்ளித்தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தார். இவருடைய விருப்பத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்தது. 15.07.2005 ல் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.குப்பான் செட்டி வரவேற்புரை வழங்க, பள்ளிச் செயலர் திரு.முரு.கணேசன் செட்டியார் தலைமையில், பள்ளித் தலைவர் திரு.சா. சு. முருகப்பச் செட்டியார் முன்னிலையில், கயிலைமணி காசிஶ்ரீ அரு. சோமசுந்தரம் ஶ்ரீமான்.திரு. நாகநாதன் அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து பாராட்டிப் பேசினார்.
ஶ்ரீமான்.சந்திரமணி பரிசளித்து மாணவர்களை வாழ்த்தினார். அவருடைய மாணவர் தமிழாசிரியர் இராம. வள்ளியப்பன்! அவருடைய பணி நிறைவுப் பாராட்டு விழாவும் உடன் இனிதே நடைபெற்றது.
இவ்வாறாகத் தொடங்கிய ஒரு புனிதமான நற்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா திரு.எம் ஆர். கணேசன் செட்டியர் தலைமையில், திருமதி. ஜி. காந்திமதி ஆச்சி அவர்கள் முன்னிலையில் இனிதே நடை பெற்றது.
தலைமை ஆசிரியர் உயர்திரு.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும் நன்கொடையாளர்கள் பலருடைய உதவியால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசளித்துப் பாராட்டினார்கள்.
சிவதாண்டவம் |
மாணவ, மாணவியரின் காவடி ஆட்டமும், சிவதாண்டவ நடனமும், நடைபெற்றது. அகிலம் புகழும் கவியரசு. கண்ணதாசன் கல்வி பயின்ற கலைக்கூடம் என்ற பெருமையுடைய குருகுலத்தில் கண்ணதாசன் குடும்பத்தார் பங்கு கொண்டு பரிசளித்துப் பாராட்டினார்கள். உயர் திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் அருமையான கதையைச் சொல்லி, படிப்புடன் பணிவும், நல்லொழுக்கங்களும், தேவை என்பதை விளக்கினார். பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் மறவாமை வேண்டும் என்றார்.
தலைமை ஆசிரியர் திரு. சொக்கலிங்கம், பரிசு பெறும் மாணவி அமுதா,ஶ்ரீமதி. சந்திரமணி. |
நல்ல உள்ளங்களை ஆண்டவன் விரைவில் கவர்ந்து சென்று விடுகிறான்! தற்போது அதிக மதிப்பெண் பெற்ற மூன் று மாணவியர்களுக்கு ஶ்ரீமான். சந்திரமணி அவர்களின் நினைவாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. உயிருக்கும் மேலாகத் தான் நேசித்த பள்ளியின் பரிசளிப்பு விழாவிலே கலந்துகொண்டு மகிழ அவர் இல்லையே என்று வருத்தமடைந்த தருணத்தில் என் மகன் ''பாருங்கள் அம்மா, ஒலி பெருக்கியை'' என்றான். மூன்று ஒலி பெருக்கிகள் மீதும் ''சந்திரா'' என்ற பெயர்!!
ஆசைப்பட்டு என்னத்தை செய்கிறது? கட்டிடம் வேண்டும், பரிசோதனைக் கூடம், மற்றும் வகுப்பறைகளுக்குத் தேவையான டெஸ்குகள் வேண்டும்! எத்தனையோ தேவைகள்! கடவுளே!
குருகுலத்தில் கல்வி பயின்ற மாணவர்களைத்தான் கூப்பிடுகிறேன்! சிறு துளி பெருவெள்ளமன்றோ?
என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்குத்தான் இங்கே என் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளேன். வணக்கம்.
''நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!''
பாரதியின் வேண்டுகோளின் சக்தியால் கனவு மெய்ப்படுமாக!
மாணவச்செல்வங்கள் |
very good
ReplyDeleteகுருகுல முன்னாள் மாணவன் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி .
ReplyDelete