26 Jul 2012

சங்கர நாரயணன்

''ஓ ரோஜாப்பூ ரொம்ப அழகாக இருக்கிறது, உன்னைப் போல,'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தால் மங்களவிலாஸ் மாமியின் இரண்டாவது பிள்ளை! அசடு வழிய ஒரு சிரிப்பு, காலில் இருப்பதைக் கழட்டி அடிக்கலாம் போல ஆத்திரம் வந்தாலும் கிறுக்கு என்று திட்டிக்கொண்டே போனாள் சாரதா. தன் சினேகிதிகள் பாமா,  பிரேமாவுடன் மெயின் ரோட்டில் காலடி எடுத்து வைக்கவும் இந்த லூசு சைக்கிளில் வேகமாக  வழுக்கைத்தலை சூரிய ஒளியில் மினுமினுக்கப் போகிறது! அரைக்கிழம் ஆனாலும் பெரிய ஹீரோ என்று நினைப்பு! டேய், எந்த ஷுபாலிஷ் போட்டுக்கறே தலையில, நல்லா பளபளன்னு இருக்கு என்று கேட்கணும் இதுகிட்ட, என்றாள் பாமா!

அடுத்து 'அழகான புடவை, திலகம் நல்லா இருக்கு, போன்ற வெவ்வேறு வியாக்கியானங்கள். தூவென்று துப்பிப் பார்த்தாள், ம்ஹூம் அந்த ஆளுக்கு சூடு சொரணை இருந்தால்தானே! இத்தனைக்கும் அரசாங்கக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் சங்கரநாராயணன்! குழந்தைச் செல்வம் இல்லை. பொழுது போவதற்கு இது போல  கிறுக்குத்தனம்.

அம்மாவிடம் சாயங்காலம் டிபன் சாப்பிட்டுக் கொண்டே சங்கரநாராயணனின் திமிர்த்தனத்தைச் சொல்லப்போய் மாட்டிக்கொண்டாள் சாரதா. இதோ பார், நீ நாளையிலிருந்து பக்கத்து ரோடு வழியாப் போ; போகும் போது புடவைத் தலைப்பை செருகிக்கொண்டு போ! தலையைக் குனிந்துகொண்டு போ. நீ ஏன் அவனைப் பார்த்தாய்? நீ ஏன் அவன் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கிறாய்? இப்படியாக அம்மாவின் புலம்பல்கள் தொடர்ந்தன.

அரசாங்கக் கல்லூரியில் படிக்கும் புவனா அன்று மாலையில் சாரதா வீட்டுக்கு வந்தாள்.  நோட்ஸ் ஏதாவது இருந்தால் கொடு சாரதா. இந்த ஆங்கில ஆசிரியர்  தொல்லை தாங்க முடியவில்லை, வகுப்பில் மானம் போகும்படி அசிங்கமாகப் பேசுகிறது. வேண்டாத கேள்வியெல்லாம் கேட்கிறது என்றவளின் கண்களில் கண்ணீர். அந்த ஆளுக்கு ஒரு சூடு குடுத்தாதான் சும்மா இருப்பான். நான் அது வரை கூடவரேன் என்று போனாள் சாரதா.

 ஒரு நாள் சாலையைக் கடக்கும்போது குறுக்கே வந்தது ருத்ராட்சப் பூனை. பறவைகள் சைக்கிளைச் சுற்றிக் கொண்டன. பிரேமா கேட்டாள், ''சார் மாமி நல்லா இருக்காங்களா? சாயங்காலம் பார்க்க வரேன்னு சொல்லுங்க.''
 ''சார், உங்க காலேஜ்ல  கணக்குப் பேராசிரியர்  ராமன்தான் எங்க அப்பா. நீங்க அவர் கூடப் பேசியிருக்கீங்களா?'' இது பாமா.
 '' ஒங்க கோட்டும் சூட்டும்  ரொம்ப நல்லாஇருக்கு. இல்லியாடி?'' இது சாரதா.
எதிர் பாராத இந்தத் தாக்குதலால் சங்கர நாராயணனுக்கு சப்தநாடியும்ஒடுங்கிப் போனது. தனியாகப் போறவங்களை கிண்டல் செய்வதிலே ஒரு ஆனந்தம்தான். ஆனால் ஒரு சமுதாயத்தில இருக்கிறதும், எல்லாரும் எப்பவும் ஊமையா வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள் என்று எண்ணியதும் முட்டாள்தனம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.  உண்மைக்கதைதாங்க!


No comments:

Post a Comment