எப்போதுமே புத்தாண்டு என்றால் தியான மையம் சென்று அமைதியாக கூட்டுத் தியானத்தில் பங்கேற்று மனநிறைவுடன் திரும்புவது வழக்கம். இந்த ஆண்டு இரவு முழுதும் மழையானதால் காலையில் போக முடியவில்லை. மாலையில் சென்றேன்.
தியான மையத்தில் அமைதிக்கும், ஆழ்ந்த தெய்விக சூழ்நிலைக்கும் என்றும் குறைவே இல்லை. இதயமெங்கும் பரவி, உள்ளத்தை நிரப்பும் அன்னை, அரவிந்தரின் புன்னகை! ஒரு தாயின் தோளில் சாய்ந்து கொண்ட இனிய அனுபவம்.
ஒரு மேகப் பொதிபோல் வானில் பறக்கும் உணர்வோடு கீழே இறங்கி வந்தேன். நான் விட்டுவந்த இடத்தில் என் காலணிகளைக் காணவில்லை. ஆனால் அதே நிறத்தில் சற்றே உயரமான 'ஹீல்ஸ்'
உடைய ஒரு ஜதை பக்கத்தில். காலணிகள் மாறிப் போச்சு!
அங்கே மேற்பார்வையாளர் வேலை செய்யும் சகோதரி சொன்னார், 'சில்க் போர்ட்' பக்கத்திலிருந்து வந்த அந்த அம்மாதான் உங்களுடைய காலணிகளைப் போட்டுக்கொண்டு போயிருக்க வேணும். இங்கே இருப்பது அவர்களுடையதுதான். என்ன செய்வது? காலணியில்லாமல் வீட்டுக்குள்ளேயே என்னால் நடக்க முடியாது. காலண்டர் கூட மாட்ட முடியாத "காலாணி"களைக் கொண்ட கால் என்னுடையது!
தியானமையத்திற்கு எதிரே பெருமாள் கோயில்......
புத்தாண்டு தினத்தன்று வைகுண்ட ஏகாதசி. எனவே பெருமாள் கோயில் தரிசனத்திற்காக நீண்ட நெடும் வரிசையில் மக்கள் கூட்டம். ஒரு புறம் டிக்கட் தரிசனம், மறுபுறம் இலவசம். ஆட்டோக்காரர்களுக்கு அன்று பெருமாள் ஆசியால் லாப தினம். ஜெயநகர் போக எவரும் வரமாட்டார்களாம்! ஐம்பது ரூபாய் கொடுத்தால் சரி. இல்லாவிட்டால் வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு ஜெய நகர்?
என்காலுக்கு ஏற்ற "சாஃப்ட்" காலணி அங்கேயுள்ள கடை ஒன்றில் மட்டுமே கிடைக்கும். சரி, முப்பது தருகிறேன் என்று சொல்லி ஒரு ஆட்டோவில் ஏறிவிட்டேன். இருள் கவிகிற நேரம், சரியான போக்குவரத்து நெரிசல். ஒரு போக்குவரத்துப் போலிசையும் காணவில்லை. ஆட்டோக்காரரோ முழு போதையில் வளைத்து, குறுக்கே புகுந்து, இப்படியா, அப்படியா என்று குழறிக் குழறி கண்டபடி ஓட்டுகிறார்....! என் மனமோ ''எங்குறு தீமையும் எனைத் தொடராவகை கங்குலும் பகலும் மெய்க்காவல் செய் துணையே" என்று அகவலை விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு தப்பு என்னவென்றால் ஏறியவுடனே மீட்டரைப் போடச் சொல்லாதது. அது ஏற்கெனவே 200 ரூபாய் காட்டிக் கொண்டிருந்தது. நாம்தான் முப்பது ரூபாய் என்று சொல்லிவிட்டோமே என்று நானும் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த ஆட்டோவில் ஓட்டுனர் விவரம் அடங்கிய அட்டையும் இருக்கவில்லை.
ஒரு வழியாக கடை வாசலை அடைந்தவுடனே தயாராக வைத்திருந்த மூன்று பத்து ரூபாய்த் தாள்களை ஆட்டோக்காரர் கையில் திணித்துவிட்டு ஒரே ஓட்டம் கடையை நோக்கி!
அன்று என்னை மிகவும் சந்தோஷப் படுத்திய இரண்டாவது விஷயம் என்னவென்றால், பெருமாள் கோயில் வரிசையைப் படம் பிடித்த போது இரு இளம் பெண்கள் என்னைப் பார்த்து சிரித்து, ''ஹை ஆண்ட்டி'' என்று சொன்னது மட்டுமல்லாமல் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள என்னை அணைத்துக் கொண்டதுதான்! அந்த நாளை அது இனியதாக்கியது.
புத்தாண்டு தினத்தன்று இப்படியான ஒரு அனுபவம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன?
( புத்தாண்டு பிறந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு எதற்கு இதை பதிவு செய்கிறேன் என்கிறீர்களா? ஆரம்பித்தேன்.......நடுவே கொஞ்சம் ....நாட்கள் ...காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் புதிய நாள்தானே? எல்லோரும், எல்லா நலன்களையும், எப்போதும் பெற்று இனிது வாழ வேண்டுமென்று
ஆண்டவனை வாழ்த்தி வணங்குகிறேன்)
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteha ha ha very nice post :-)
ReplyDeleteamas32