1872, ஆகஸ்ட் 15
அற்புதமான அந்த விடியலில் இந்திய நாட்டின் மானசரோவரில் பூத்தது அரவிந்த வெண்தாமரை. வங்கத்தில் பிறந்து, லண்டனில் கல்வி பயின்று, குஜராத் மாநிலம், பரோடாவில் பணியாற்றி,சுதந்திரப் போராட்ட வீரர்களை வங்கத்தில் உருவாக்கி, ஶ்ரீகிருஷ்ணவாசுதேவரின் பாதுகாப்பில் பாண்டிச்சேரியை அடைந்து அதனைத் தன் யோகசாதனைக் களமாக்கிக் கொண்டவர் ஶ்ரீஅரவிந்தர்.
கிருஷ்ணாதன் தன் மகனுக்கு அரவிந்தா அக்ராய்ட் கோஸ் என்ற பெயரைச் சூட்டினார். ஐரோப்பிய ஆங்கில மோகம் கொண்டு ஆங்கிலேய நாகரிகத்தைக் கற்றுக் கொடுக்க விரும்பினார். குழந்தைகள் ஆங்கிலம் கற்க ஒரு ஆங்கில செவிலியை நியமித்தார். வங்க மொழியை வீட்டில் பேசுவதற்கும் தடை விதித்தார்.இந்திய கலாசாரத்ததையும், வாழ்க்கை முறைகளையும் வெறுத்தார்.
1877 ஆம் ஆண்டு, அரவிந்தரின் ஐந்தாம் வயதில் டார்ஜிலிங் என்ற இடத்தில் ஐரிஷ்காரர்களால் நடத்தப்பட்ட 'லோரெட்டோ' கான்வெண்ட் பள்ளிக்கு சகோதரர்களோடு அனுப்பினார்.
டார்ஜிலிங், வங்கத்தில் உள்ள தேயிலை உற்பத்தி செய்யும் மலைப்பிரதேசமாகும். அங்கு ஆங்கிலக் கல்விபயில்விக்கும் கான்வெண்ட் பள்ளிகள் நிறைய உண்டு.
வெண்பனிப்படலம் போர்த்திய 'கஞ்சன் ஜங்கா' மலைத்தொடரின் அற்புத இயற் கைக்காட்சிகள் சகோதரர்களுடைய உள்ளத்தை அந்த இளம் வயதிலேயே கொள்ளை கொண்டன.
இரண்டு ஆண்டுகள்!
தாய் தந்தையரின் அன்பும் கவனிப்பும் இல்லாத ஹாஸ்டல் வாழ்க்கை.
1879 ஆம் ஆண்டு கிருஷ்ணதான் தன் மூன்று மகன்களுடனும், மகள் சரோஜினியுடனும் இங்கிலாந்து சென்றார். அங்கு ஆங்கில கனவான், வில்லியம் டிரெவிட் என்பவரின் குடும்பத்தாரிடம் தன் மூன்று மகன்களையும் ஒப்படைத்தார்.
ரங்கபூரின் மாஜிஸ்ட்ரேட் 'டிரெவிடின்' உறவினர்தான் இந்த ஆங்கிலேயர்.இந்திய கலாசாரத்தின் தாக்குதல் தன் மகன்களுக்கு எந்தவிதத்திலு ஏற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
ஆங்கில கலாசாரம் மட்டுமே அவர்களை கனவான்களாக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இங்கிலாந்தில் அவர் இருந்தபோது அவர் மனைவி தன் ஐந்தாவது குழந்தையான பாரிந்த்ர குமாரை பெற்றெடுத்தார்.
மான்செஸ்டரின் இலக்கணப்பள்ளியில் பினாய் கோஸும், மன்மோகனும் சேர்க்கப்பட்டார்கள். உயர் கல்வி பயின்றவரும் அறிவிற்சிறந்தவருமான திரு. ட்ரெவிட் அரவிந்தரின் முதல் ஆசிரியரானார். வீட்டிலேயே லத்தீன், ஆங்கில மொழிகளைக் கற்பித்தார். இவரது மனைவி பிரெஞ்ச், பூகோளம், கணக்குப் பாடங்களைப் பயில்வித்தார். ஆங்கிலக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி, இவர்களின் ஆங்கிலக் கவிதைகளையும் எழுத்துகளையும்,ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், கிறித்துவ வேதமான பைபிளையும் அந்த இளம் வயதிலேயே பயில அரவிந்தருக்கு நிறைய நேரம் கிடைத்தது.
(ஶ்ரீஅரவிந்தர், பெற்றோர், இங்கிலாந்தில் கல்வி)
இந்த மகானின் வாழ்க்கையை உங்கள் வாயிலாக அறிந்து கொள்கிறேன் நன்றி.
ReplyDeleteamas32
நன்றி சகோதரி.வெகுநாட்களாக எழுத வேண்டுமென்ற என் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறேன்.அவ்வளவே.தொடர்ந்து படியுங்கள்.
Delete