இந்தியாவின் வடகிழக்கே வங்கமா நிலத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் பாய்கிறது பாகீரதி நதி. அந்நதியின் மேற்குக் கரையில் ஜனத் தொகை மிகுதியான கொன்னகர் எனப்படும் ஊர்- கல்கத்தாவின் வடக்கே 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெருமை வாய்ந்த ஊர் அது.
இந்த கொன்னகரில் 'ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் என்னும் ஊரிலிருந்து வந்து குடியேறிய 'கோஸ்' என்ற குடும்பப் பெயருள்ள பலகுடும்பங்கள் வாழ்ந்து வந்தன. கோஸ் என்ற பெயருக்கு 'புகழ் பெற்ற' என்று பொருள்.
கொன்னகரில் வாழ்ந்துவந்த காளிப்பிரசாத் கோஸுக்கும், கைலாஸபாஸினி தேவிக்கும் 1845 ல் மகனாகப் பிறந்தவர் கிருஷ்ணதான் கோஸ். பரம்பரைப் பணக்காரர்களான இவர்கள் கிருஷ்ணதான் தாஸ் பிறந்த வேளையில் மிகவும் ஏழ்மையான நிலையிலேயே இருந்தனர். எனவே உதார குணமுடையவர்களின் உதவியினால் இவர் பள்ளி,கல்லூரி படிப்பை முடித்தார்.
1858 -ல் கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். நான்காம் ஆண்டு படிக்கும் போது ரிஷி இராஜநாராயணபோஸின் முதல் மகளான பன்னிரண்டு வயது ஸ்வர்ணலதா தேவியை பிரம்மசமாஜ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
1869 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் கிருஷ்ணதான்கோஸ். ஆங்கிலேயர்களுடைய நடை, உடை, பாவனைகளில் மோகம் உடையவராகவும்,கடவுள்நம்பிக்கை இல்லாதவராகவும் இருந்தார். மிகச்சிறப்பாக மருத்துவத்தில் தேர்வு பெற்று 1871 ல் இந்தியா திரும்பினார். அந்தக்காலத்தில் கடல் கடந்து சென்றவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கம் இருந்தது. அதை செய்ய மறுத்த கிருஷ்ணதான் கோஸ், கொன்னகரில் தனக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்தான வீட்டை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு அரசாங்க மருத்துவராக பல மாநிலங்களிலும் பணியாற்றினார்.
வங்காளத்தின் பாகல்பூர், ரங்பூர், குல்னா போன்ற ஊர்களில் அவர் பிரபலமானவராக விளங்கினார். அறிவிற்சிறந்தவர், தாராளமனப்பான்மையும், மென்மையான இதயமும் உடையவர், தன்னுடைய நலனைவிட மற்றவர்களின் துன்பத்தைப் போக்குவதில் நாட்டமுடையவர் என்றெல்லாம் போற்றப்பட்டவர் கிருஷ்ணாதான் கோஸ்
ரங்கப்பூரின் ரோஜா, எனப்புகழப்பட்டவர் இவர் மனைவியார் ஸ்வர்ணலதா தேவி. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். மூத்தவர் பினாய் பூஷன், அடுத்தது மன்மோகன். மூன்றாவது மகனாக 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள், விடியற்காலை 5 மணியளவில் பிறந்தவர் மகாயோகியாகவும், இந்தியாவின் இளைஞர்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவராகவும் விளங்கிய ஶ்ரீஅரவிந்தர்.
குறிப்பு;
குறிப்பு;
(பிரம்ம சமாஜம் - 1774 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தலை சிறந்த சீர்திருத்தவாதியான இராசாராம் மோகன் ராய். தன்னுடைய புரட்சிகரமான கருத்துகளைப் பரப்புவதற்காக ஆன்மிகசபை என்ற அமைப்பினை ஏற்படுத்தி, பின்னர் பிரம்மசமாஜம் என்று அதன் பெயரை மாற்றினார்.
1.உருவ வழிபாட்டை எதிர்த்தார்.
2. மூட நம்பிக்கைகளை அழித்தொழிக்கப் பாடுபட்டார்.
3.ஆணுக்குப் பெண் சமம் என்ற நீதியைப் பரப்பினார். பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தார்.
பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார் )
(ஶ்ரீஅரவிந்தர், வங்கம், பெற்றோர், பிறப்பு, பிரம்மசமாஜம்) -இன்னும் வரும்
No comments:
Post a Comment