3 Jan 2012

நீலகிரி மாவட்டம்......குன்னூர்.

நீலகிரி மாவட்டம்......குன்னூர்.

தமிழ் நாட்டின் கோடை வாசஸ்தலம், மலைகளின் அரசி எனப் போற்றப்படும் உதகமண்டலம். நீலகிரி அதன் மற்றொரு பெயர். தொலை தூரத்தில் இருந்து பார்க்கும் போது நீலநிறமாகக் காட்சியளிப்பது, நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். நெடிதுயர்ந்த மரங்களும், குன்றுகளும், பனிமூட்டமும், குளிரும், பல வண்ணங்களில்  பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களும், சாரல் மழையும், மழையூடே தவழ்ந்துவரும் யூகலிப்டஸ் மரங்களின் மணமும், அகல் விளக்கு ஏற்றினார் போலும் இரவு நேரங்களில்
ஆங்காங்கே காட்சிதரும் விளக்குகளும் காணக் காணத் தெவிட்டாதவை.

ஒவ்வொரு முறையும் புதிதாகத் தோற்றமளிக்கும் சிம்ஸ் பார்க். மிகப்  பழமையான, அரிய வகை மரங்கள் பலவும் அங்கே உண்டு. பெரிதும் சிறிதுமாய் வண்ண வண்ண ரோஜா மலர்கள், சிறிய குளம், பலவேறு வகையான பூக்கள், பறவைகள் என பொழுது போவதே தெரியாது. எங்கள் வீட்டில் இருந்து போய்வர சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கும். அண்ணா குடையும் கையுமாய் புறப்படுவது தெரிந்தால் கூடவே நானும் கிளம்பிவிடுவேன். அமைதியாய் இயற்கையை ரசித்துக் கொண்டு, நடப்பது  ஒரு சுகமான அனுபவம். சாலை வழியே நடந்து போய் ‘சிம்ஸ் பார்க்‘ அடைந்து விட்டால் அங்கிருந்து கீழே இறங்கிவர படிக்கட்டுகள் சுமார் அறுபது உண்டு. அதன் வழி இறங்கிவிடுவோம். அண்ணா தான் என்னுடைய யோகாசன குரு. எனக்கு என் ராஜப்பா அண்ணாவை ரொம்பவே பிடிக்கும்.

ஒரு மேட்டின் மேல் இருந்த சிறிய வாடகை வீட்டிற்குத்தான் முதலில் நாங்கள் சென்றோம். அங்கிருந்து பார்த்தால் கீழே குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் நன்றாகத் தெரியும். முதன் முதலாக மேட்டுப்பாளையம்- ஊட்டி குட்டி ரயிலில் பயணம் செய்தது நினைவில் இருக்கிறது. ஸ்டேஷனின் எதிர்ப் பக்கம் பதினைந்து மண் படிகள் ஏறினால் மைசூர் லாட்ஜ் ஹோட்டல். முதன் முதலாக எங்களுக்கு அப்பா, ஸ்வெட்டர், சாக்ஸ், ஷூ  எல்லாம் வாங்கிக் கொடுத்தார். நான் ஷாந்தி விஜயா ஜெயின் ஹைஸ்கூலில் சேர்ந்தேன். பாலன் ஊட்டி கவர்மெண்ட் காலேஜில் பி.யூ,சி. சேர்ந்தான்.

முட்டை குடிக்கும் வைபவம் இங்குதான் நடந்தது. குன்னூர் தட்பவெட்ப நிலையில் குழந்தைகள் உடம்பைத் தேற்ற வேண்டும் என்று அப்பா, பியூனிடம் கோழி முட்டை வாங்கிவரச் சொல்லி, காலை ஏழு மணிக்கு  அதை ஒவ்வொன்றாக உடைத்து ஒவ்வொருவரையும் குடிக்க வைக்கச் சொல்வார். தம்பிகள் என்ன செய்தார்களோ யான் அறியேன். எனக்குப் பார்த்தாலே குமட்டும். ‘மூக்கைப் பிடித்துக் கொண்டு குடி,’ பின் இந்த ஊறுகாயை வாயிலே போட்டுக்கோ, இல்லை சர்க்கரை வேண்டுமா,’ என்று பின்னாலேயே நிற்பாள் அம்மா. டம்ளரை வாய்ப் பக்கத்தில் கொண்டு போனாலே வாந்தி எடுப்பது போல் ஓக்காளிக்கும். கடைசியில் இது தேறாத கேஸ் என்று விட்டுவிட்டார்கள். முட்டை குடித்தால் போதுமா? அது ஜீரணமாக வேண்டாமா? அதற்காக ஒரு கிலோ மீட்டர் நடைப் பயிற்சி.   இந்தக் கூத்தெல்லாம் ஞாயிற்றுக் கிழமைக்கு! சவுக்கு மரவேலிகளில் எல்லாம் பனித்துளிகள் சூரியஒளியில் பளபளப்பதைப் பார்த்துக்கொண்டு  நடப்பது என்றால் எனக்கு ரொம்பப்பிடிக்கும். வானளாவி நிற்கும் யூகாலிப்டஸ் மரங்கள்! மஞ்சள்,காவி நிறங்களில் சண்பகங்கள் மணம் பரப்பும். இயற்கையின் மடியில், தென்றலின் தாலாட்டு! 

இந்த வீட்டின் வலதுகைப் பக்கம் ஒரு புல்சரிவு உண்டு.  அது தான் என்னுடைய சாம்ராஜ்யமாக கொஞ்ச நாள் இருந்தது. அந்தப் புல் சரிவில் படுத்துக் கொண்டு கதைப் புத்தகம் வாசித்தல், வானம் பார்த்துப் படுத்துக் கிடத்தல், நிலவை ரசித்தல் எனக்குப் பிடித்தமானவை. ஒன்பது பேருக்கு அந்த வீடு சிறியது என்பதால் ஆபீஸுக்குப் பக்கத்தில் பெரிய வீட்டிற்கு இடம் பெயர்ந்தோம். வெளிகேட்டில் இருந்து உள்ளே நுழைய, வலது பக்கச்சரிவு முழுதும் யூகாலிப்டஸ் மரங்கள்.


image

நூறு அடி நடந்தால் வீடு. விருந்தினர் அறை, ஹால், மூன்று படுக்கை அறைகள், பூஜை ரூம், நடையைக் கடந்தால் சமையலறை. நடையிலிருந்து  இடது பக்கம் இறங்கினால் பெரிய விளையாட்டு மைதானம். மைதானத்தின் நடுவிலிருந்து அப்பாவின் ஆபீஸுக்கு ஆறு படி ஏறினால் போய்விடலாம். வலது பக்கம் காப்பிக்கொட்டைச் செடியோடு கூடிய புற்சரிவு. மைதானத்திலிருந்து பார்த்தால் லோயர் குன்னூர் நன்றாகத் தெரியும். மாலை நேரங்களில் ஹாக்கி, ‘பேட்மிண்டன்’ விளையாடுவோம். அப்பாவும்  இதில் கலந்து கொள்வார். குளிர் காலங்களில் கம்பளிகளை ’டெண்ட்’ மாதிரி கட்டி பாட்டியுடன் புல் தரையில் குளிர் காய்வோம். அப்பா யூகாலிப்டஸ் மரப்பட்டைகளை லீவு நாட்களில் சேகரம் செய்யும் போது நானும் சேர்ந்து கொள்வேன்.
                                       குன்னூர் வந்தவுடன் அப்பா வாங்கி வளர்க்க ஆரம்பித்த நாய்க் குட்டிதான் டாமி. டாமி ரொம்பவே புத்திசாலி. எங்களுடன் நன்றாக விளையாடும். ‘ரிங் பாலை’ மரத்தின் கிளையில் கட்டினால் ஜம்ப் பண்ணி எடுக்கும். ஒளித்து வைத்தால் தேடிக்கண்டுபிடிக்கும். ஒரு நாள் கீழ் வீட்டில் மேய்ந்து கொண்டிருந்த கோழியைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு! கீழ் வீட்டு ஆங்கிலோ இந்திய அம்மணி வந்ததும் அப்பா மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். நாங்கள் ஒரு நாள் சினிமாவிற்குப் போகும் போது எப்படியோ  கூடவே வந்து தியேட்டரில் கலாட்டா செய்தது. பிறகு அண்ணா அதை வீட்டிற்கு கூட்டிவந்து, கட்டியபின் வந்தார்.

தீபாவளி சமயத்தில் ஒரு நாள் சிறிய ஊசிப்பட்டாசு சரம் ஏற்றப் பட்டவுடன் எதிர் பாராமல் எங்கிருந்தோ ஓடி வந்த டாமி, டக்கென்று அதை வாயில் கவ்வி விட்டது. பட்டாசு வெடிக்க வாயெல்லாம் புண்ணாகி கஷ்டப்பட்டதைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டோம். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அதற்கு ‘ரேபிஸ்’ நோய் வந்து விட்டதால் அதனைக் கருணைக் கொலை செய்யவேண்டி வந்தது. அப்பா, ரவி இருவருடைய கைகளிலும் அதன் எச்சல் பட்டதால் இருவரு ‘பாஸ்ச்சர் இன்ஸ்டிடியூட்டில்’ ஊசி போட்டுக் கொண்டார்கள். டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அது இறந்த நாள்! கவிமணியாரின், ‘வையகத்தில் நாய் போல் வாய்த்த துணையும் உண்டோ,’ என்றவரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. அதன் பின் பிராணிகளைப் பிரியப்பட்டு வளர்த்து, அதனுடைய அன்பில் திளைத்து,    எக்காரணங்கொண்டு அதனை இழந்தால் தாங்கும் மன வலிமை இன்மையால் அவற்றை வளர்ப்பதில்லை.

ஷாந்தி விஜயா பள்ளிக்கூடம் மிகச்சிறியது. ஆறாம் வகுப்பு முதல் பத்து வகுப்பு வரை, இரண்டு பிரிவுகள் A,B, என்று. என்னை எட்டாம் வகுப்பு ‘ஏ’ பிரிவிற்கு அனுப்பினார்கள். திருமதி. ஜெயலட்சுமிதான் வகுப்பு ஆசிரியை. ஒன்பதாம் வகுப்பில் சோஷியல் ஸ்டடீஸ் பாடம் தனம் டீச்சர் எடுப்பார்கள். வெள்ளிக் கிழமைதோறும் மாலை கடைசி இரண்டு பீரியட், ஒவ்வொரு  வாரம் ஒவ்வொரு வகுப்பு கலை நிகழ்சிகள் கொடுக்க வேண்டும். பிறகு பஜனை, தீப ஆராதனை. ஜைன மதத்தை சார்ந்தவர்கள் பள்ளி ஆகையால் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் அங்கே படித்ததும் கற்றுக் கொண்டதும் நிறைய. கலை நிகழ்ச்சிகள் தயார் செய்யவும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது அங்கே தான். என்னுடைய ஆசிரியை திருமதி.ஜயலஷ்மி எப்போது கடிதம் எழுதினாலும் பதில் எழுதுவார். தனம் டீச்சர் அன்பின் உறைவிடம். என் தோழி பட்டு, மனோன்மணி ஆகியோர் எங்கே இருக்கிறார்களோ?

நாங்கள் குன்னூர் சென்ற ஓராண்டில், அண்ணா  திருவனந்தபுரம் ஏ.ஜி.எஸ் ஆபீசில் வேலை கிடைத்துப் போனார். பாலன் அண்ணாவும் காரைக்குடி, செட்டினாடு பாலிடெக்னிக்கில் எல்.எம்.ஈ., படிப்பில் சேர்க்கப்பட்டான்.  பழனியில் வைத்து பாலனுக்குப் பூணூல் போட்டார்கள்.

இதமான குளிரும், இயற்கை அழகும், அற்புதமான, அன்பு நிறைந்த தோழிகளும், சண்பக மரங்களின் மணம் நிறைந்த பூங்காற்றும், இதமாக இதயத்தை மயிலிறகால் வருடினார் போலும் பொங்கிப் பெருகும் ஆனந்தமும் நிறைந்த குன்னூர் வாழ்க்கை என் தந்தையாரின் பிரமோஷனுடன் கூடிய இட மாற்றத்தால் ஒரு முடிவுக்கு வந்தது.

அதற்குப் பின் நான்கு முறை, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மலையரசியின் கரம் பற்றி  நடந்திருந்தாலும், சுதந்திரப்பறவையாய், கட்டுப்பாடுகள் அற்ற காட்டாற்று வெள்ளமாய், சுற்றித் திரிந்த இளமையின் இன்பம் காணாமல் போனது உண்மைதான்.

1961 ஆம் ஆண்டு, தென்னாற்காடு மாவட்டம், கடலூர், கடற்கரை ஊர் வந்து சேர்ந்தோம். ‘’புட்டிடியாப்பே……, மல்லாட்டே,’’ என்று இரவு முழுதும் கூவும் குரல்………,கொசுக்கடிக்கும், யானைக்கால் நோய்க்கும், சாக்கடைகளுக்கும் புகழ் பெற்ற கடலூர்……….!

‘’உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்’’

No comments:

Post a Comment