ஶ்ரீஅரவிந்தர் -15
சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குப்பின் அரவிந்தருக்கு யோக வாழ்வில் மேலும் நாட்டம் ஏற்பட்டது. சூரத்தில் அவர் 'சகரே பாபா'என்ற மகாராஷ்ட்ர யோகியை சந்தித்தார். பாபாவும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுடையவராக இருந்தார். பல வினாக்களை எழுப்பினார்.
அரவிந்தரும் தன் சாதனைகளைத் தொடர தனக்கு ஒரு வழிகாட்டி தேவை என்பதை உணர்ந்தார். தன் விருப்பத்தை தன் சகோதரர் பாரினிடம் தெரிவித்தார்.
பாரினுக்கு விஷ்ணு பாஸ்கர் லேலே என்ற யோகியின் அறிமுகம் இருந்தது. எனவே பரோடா வரும்படி அவருக்குத் தெரிவித்தார். விஷ்ணு பாஸ்கரும் தானொரு மேன்மையான மனிதரை சந்திக்கப் போவதை உணர்ந்து பரோடா விரைந்தார்.
பரோடாவின் "டாண்டியா பசாரில்" உள்ள கேசவ்ராவ் ஜாதவ் அவர்களின் இல்லத்து மாடி அறையில், 1908 ஜனவரி திங்கள் முதல் வாரத்தில் விஷ்ணு பாஸ்கர் லேலே, அரவிந்தரை அரைமணி நேரம் சந்தித்துப் பேசினார்.
அரசியலிலிருந்து விலகினால் தன்னால் உதவ முடியும் என்றார் லேலே! அரவிந்தரோ தற்காலிகமாக விலக ஒப்புக் கொண்டார். எல்லோரிடமிருந்தும் விலகி தனியே தன்னை சந்திக்குமாறு கூறினார் லேலே. மூன்று நாட்கள் அவர்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது. விஷ்ணு பாஸ்கரும் அரவிந்தரை அமரும்படி சொன்னார். "கண்களை மூடிக்கொண்டு உங்களுடைய எண்ணங்களை கவனியுங்கள். அவை வெளியிலிருந்து உங்கள் மனதில் நுழைவதைக் காண்பீர்கள்! ஆனால் அவை உங்களுக்குள் நுழைவதன் முன் அந்த எண்ணங்கள் நுழையாதவாறு தள்ளிவிடுங்கள். தடுத்து நிறுத்தி விடுங்கள் " என்றார்.
என்ன நடந்தது என்று அரவிந்தர் சொல்வதைக் கேட்போம்: "வெளியிலிருந்துதான் எண்ணங்கள் மனதுக்குள் நுழைகின்றன என்பதை அதுநாள்வரை நான் அறிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் அப்படி இருக்கக்கூடும் என்பது உண்மைதானா என்று கேள்வி கேட்கவும்விரும்பவில்லை. நான் அப்படியே அமர்ந்து கொண்டு அவர் சொன்னபடியே செய்தேன்! என் மனம் ஒரு கணத்தில் அமைதியுற்றது. மலைச் சிகரத்தின் உச்சியில் அமரும் போது கிடைக்கும் அசைவற்ற ஆழ்ந்த அமைதி! அப்போது எண்ணங்கள் ஒவ்வொன்றாக வெளியிலிருந்து என் மனதில் நுழைவதைக் கண்டேன். அவை உள் நுழையும் முன்னர் அவற்றைத் தூக்கி எறிந்தேன். மூன்று நாட்களில் நான் எண்ணங்கள் என்னுள் நுழையாமல் பாது காப்பதில் வெற்றி அடைந்தேன். என் மனம் என்றும் நீங்காத ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. அது இன்னும் இருக்கிறது.
அதன்பின் பல தீவிரமான தாக்கங்கள் உடைய பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. பரந்த பெருவெளியில் உலகமே ஒரு திரையரங்காய்க் காட்சி அளித்தது.
எழுத்துக்களால் வர்ணிக்கமுடியாத அமைதி, மிகப்பெரிய மெளனம்,
அனைத்திலிருந்தும் விடுபட்ட சுதந்திரம் என்னை அரவணைத்தது."
எண்ணங்களின் மூலம் இறந்த காலமும், எதிர் காலமும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.எனவே எண்ணங்கள் எழாமல் தடுக்க முடிந்தவர்களால்தான் ஆன்மிக வாழ்வில் வெற்றி அடைய முடியும்.
இந்த நிலையில் மும்பையின் நேஷனல் யூனியன் அரவிந்தரைப் கூட்டமொன்றில் பேச அழைத்தது.எண்ணங்களற்ற வெற்றிடமாக இருந்த மனதை வைத்துக் கொண்டு எவ்வாறு உரையாற்றமுடியும் என வியந்தார் அரவிந்தர். மக்களிடையே மிகவும் பிரபலமான, மதிப்புமிக்க பேச்சாளரான அவர் பேச முடியாது என மறுக்கமுடியுமா? ஆகவே விஷ்ணு பாஸ்கரிடம் என்ன செய்வது எனக் கேட்டார்.
அவரோ பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
பிரம்மத்தின் பரிபூரண அமைதியில் ஆழ்ந்துகிடந்த தன்னால் பிரார்த்தனை செய்யவும் முடியாது என்றார் அரவிந்தர்.
சரி, அப்படியானால் பரவாயில்லை. உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். நீங்கள் உங்கள் முன்னால் இருக்கும் கூட்டத்தினரை இறைவனாகக் கருதி வணங்குங்கள். பின் என்ன நடக்கிறது எனப் பாருங்கள் என்றார் லேலே!
அதன்படியே அவர் கூட்டத்தினரை வணங்கியதும் அவர் உள்ளே இருந்து ஏதோ ஒன்று பேசியது.
" உங்களுக்கு உள்ளே இருக்கும் வலிமை வாய்ந்த இறை சக்தியை , சத்தியத்தின் ஒளியை உணர்ந்து, வெளிக் கொணரப் பாருங்கள்.அது நீங்களல்ல!அது உங்களுக்குள்ளே மறைந்திருக்கும் இறையுருவாகும்"எனப் பேசினார் அரவிந்தர். நீயே அது, 'தத் த்வம் அசி' என்ற பேருண்மையே அது.
பிறகு விஷ்ணு பாஸ்கர் அரவிந்தரிடம் அவருள் ஒளிரும் இறை சக்தியிடம் தன்னை பரிபூரணமாக, சமர்ப்பித்து சரணடையுமாறு கூறினார். அரவிந்தரும்
தன் ஆன்ம குருவிடம் தன் உடல், உயிர், உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக சமர்ப்பித்தார். அன்று முதல் அவருடைய ஆன்மாவின் குரல் அவருக்கு வழிகாட்டியானது.
இந்த ஆத்ம சமர்ப்பணத்திற்குப் பின் பல கூட்டங்களிலும் அவர் ஆற்றிய உரைகள் மேல் மனதிலிருந்து தோன்றியதாகும். (Over mind)
மீண்டும் அரசியலில் நுழைந்தார் அரவிந்தர். ஆனால் இறையருள் வேறுவிதமாக இருந்தது.
குறிப்புகள்:
(ஶ்ரீஅரவிந்தர்,யோக வாழ்வு, விஷ்ணு பாஸ்கர் லேலேயுடன் சந்திப்பு, மேல்மனம்)
No comments:
Post a Comment