9 Feb 2012

கஞ்சி (kanji) - Kamala's kitchen

காலை 9 மணி. தொலைபேசி அலற,'' ஹலோ, யார் பேசரது?''
நான்தான் சரோஜா, குட் மார்னிங், என்ன செய்யரே? டிபன் ஆச்சா?
என்னம்மா புதுசா கேள்வி! இப்பொல்லாம் இட்லி, தோசை, உப்புமா எல்லாம் காலை வேளை டிபன் இல்லை.
நாங்க எல்லாம் ஒட்ஸ் தான் சாப்பிடுவோம். நான் அமெரிக்கா போய்ட்டு வந்ததிலிருந்து ஓட்ஸ் தான். ஸ்வாமிக்கு நைவேத்யமும் ஓட்ஸ் பாயசம்தான். ஒனக்கு ரெசிப்பி வேணுமானா தரேன்.

இந்த ஓட்ஸ் இருக்கே இதை தண்ணியிலே போட்டு, அடுப்பை பத்தவை. ஒரே ஒரு கொதிதான் வந்ததும் சர்க்கரையைப் போட்டு  பால் விட்டால் ரெடி. அதைக் கஞ்சின்னு சொன்னால் கஞ்சி, முந்திரிப்பருப்பை நெய்யிலே வருத்துப் போட்டால் பாயசம். ரொம்ப சுலபம் செய்வதற்கு, உடம்புக்கு நல்லது.

காலங்கார்த்தால எழுந்து வெங்காயத்தை நறுக்கு, இஞ்சிக்குத்   தோல் சீவு, சட்னி அரை, இந்த வம்பெல்லாம் கிடையாது. முக்கியமா வெயிட் போடாது. சரியா. வைக்கட்டுமா? 'ஜிம்முக்கு,' போவணும்.
                                       
இன்றைக்கு இந்த ஓட்ஸுக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! அமெரிக்கர்கள் சாப்பிடுவதால் வந்த பழக்கம். நம் நாட்டு அரிசிக் கஞ்சிக்கும், ராகிக் கஞ்சிக்கும் இல்லாத ருசியா,சத்தா?

நம் நாட்டிலும், சைனாவிலும்தான் முதன் முதலாக கஞ்சி குடிக்கும் பழக்கம் இருந்ததாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

கஞ்சி நம் நாட்டின் மிக முக்கியமான உணவு. ஒரு மடங்கு அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் வைத்து  சமைத்தால்  கஞ்சி. அதுவும் புழுங்கல் அரிசி கஞ்சியில் துளி உப்புப் போட்டு, மோர் விட்டுக் குடித்தால் வயிறு நிறையும். வெண்கலப்பானையிலோ, மண்பானையிலோ சமைக்கும் போது அதிகமான தண்ணீரை வடிப்பார்கள். அதில் உப்பு, மோர் சேர்த்துக் குடித்தால் தேவாமிர்தமாக இருக்கும். அந்தக்கஞ்சியில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் குடித்தால் உடல் குளிரும்.

தற்போது புதிய கஞ்சி மெனுக்கள் வந்துவிட்டன. அமெரிக்கா,ஆஸ்த்ரேலியாவில் உள்ள சிட்னி ஆகிய நாடுகளில் கஞ்சி ஒரு ஸ்பெஷல் சாப்பாட்டு ஐட்டம் என்பது புதுச் செய்தி...... சந்திப்போம் கஞ்சி உணவு வகைகளுடன்.


No comments:

Post a Comment