22 Feb 2012

அசைவு

எங்கோ ஓர் உயிர் அசைந்தது. வரும் வழிதேடிச் சுழன்றது. சுற்றிலும் பேரலைகள் மேலும், கீழுமாய்! முன்னும் பின்னுமாக,  தள்ளுகின்ற வேகம், இப்படி, அப்படியென எங்கும் உந்துதல்கள். திடீரென ஓர் அமைதி. இல்லை, இல்லை இதோ மீண்டும் இன்னும் வேகமாய்! ஒரே மூச்சாய், இதோ இருண்ட வழியில் ஒரு புதுப் பயணம் வெளிச்சத்தை நோக்கி!

இத்தனை சுழற்சியிலும் பாதிக்கப்படாமல் வழிதேடி வந்து விழுந்தது அது. உயிர்ச் சக்தியோடு இணந்தது. துயிலில் ஆழ்ந்தது. வெற்றியுடன் வெளியே வீழ்ந்ததை எண்ணி அவ்வப்போது சிரித்தது. வரப்போகும்  வாழ்வை அறிந்து அவ்வப்போது அழுதது.

காலம் சென்றது. உடலும், மனமும், அறிவும் வளர்ந்தது. கற்றது, பெற்றது. வாழ்ந்தது வயதில் முதிர்ந்தது.
பிணியில் வீழ்ந்தது. மீண்டும் பேரலைகளால் அலைக்கழிக்கப்பெற்றது. ஒளியைத் தேடித் தேடி வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல் வேகமாக வந்த இடம் நோக்கிப் பறந்தது.

வந்தது எது? போனது எது? வந்ததுதான் போனது என்றால் வாழ்ந்தது எது?
வாழ்ந்ததுதான் போனதென்றால் கற்றதும் பெற்றதும்  போனதெங்கே?
அசைந்து வந்தது, அசையாமல் போனதெங்கே அறிவீரா? அறிவீரா?

No comments:

Post a Comment