24 Feb 2012

ஒரே கல்லில்......


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பல வகுப்புகளுக்கும் போய்க்கொண்டிருந்த கால கட்டம். வகுப்பு பத்தரை மணிக்கு என்றால் பத்து மணிக்கு அழைத்துச் செல்ல வேன் வந்துவிடும். பள்ளிக்கூட வாசலில் நிற்கும் வேனை அடைவதற்கு எங்கள் வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடக்கவேண்டும். அதாவது ஒன்பது முப்பதுக்கு கதவுகளைப் பூட்ட ஆரம்பித்தால்தான்  நிதானமாக நடந்து போக முடியும். அப்படி என்றால் ஒன்பது மணிக்குள் எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும்.

காலை ஆறு மணிக்கு எழுந்தால் செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டே காப்பி குடித்து,  குளித்து, சமையல் செய்து, துணிகளை வாஷிங் மிஷினில் போட்டு எடுத்து, காயப்போட்டு, காலை உணவுசாப்பிட்டு, இடையே வரும் உதவியாளரிடம் வேலை வாங்கி, டிரெஸ் செய்து கொண்டு கிளம்பவேண்டும் . எதையுமே மாற்ற முடியாது! செய்தி படிக்காவிட்டால் சூடு ஆறிவிடும். குளிக்காமல் சமையல் செய்து பழக்கம் இல்லை.  குளித்து துணிதோய்த்துக் காயப்போடாவிட்டால் தோஷம்! எல்லாம் சரி, எப்படியும் நாம் தானே செய்யவேண்டும்?

எல்லாம் செய்து விடலாம். இந்த சமையலின் உப்பு, புளி, காரம்தான் காலை வாரிவிடும்.  என்னதான் கவனமாக இருந்தாலும் சரிவருவதில்லை. என்ன செய்யலாம் என யோசித்ததில் ரெடிமேட் புளிப் பசை வாங்கி உபயோகித்தேன். நம்முடைய  நாக்குக்குத்தான்  எத்தனை  சக்தி?  உடனே ஆட்சேபணை வந்து விட்டது.  இதில் என்ன வாசனை?  நன்றாக இல்லை என்று!

இந்த ரெடி மிக்ஸ்களின் குறிப்புகளையெல்லாம் பார்த்தேன். சரிதான் ஒரு முறை செய்துதான் பார்க்கலாமே என்று  அளவுகளை எழுதிக்கொண்டேன். புளி கால் கிலோ? வீட்டிலோ சாம்பார் பொடி உள்ளது.  புளியை குக்கரில் வேகவைத்து, மிக்ஸியில் அரைத்தேன்.  நான் ஸ்டிக் கடாயில் சற்று அதிகமாக எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து, கடுகு வெடித்ததும் அரைத்த புளியைப் போட்டு  உப்பு சேர்த்துக் கிளறி, சற்று கெட்டியானதும் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி  ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டேன். அளவு என்ன?

தினப்படி சமையலுக்கு எடுத்துக்கொள்ளும் புளி அளவில் பத்து நாட்களுக்கு வேண்டியது எடுத்துக் கொள்ளவும்..அதே போல் உப்பு,சாம்பார்பொடி, தாளிக்க எண்ணை, கடுகு, பெருங்காயம்,வெந்தயம், கருவேப்பிலை. புளிக்காய்ச்சல் பதம் வரவேண்டும் என்பதால் எண்ணை கொஞ்சம் அதிகம் வேண்டும். இந்த சாம்பார் பேஸ்ட் கண்டிப்பாக கெட்டுப்போகாது.

ஆறவிட்டு பாட்டிலில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் தேவையான அளவு வத்தல் குழம்பாகவோ, பருப்புக் குழம்பாகவோ, சாம்பாராகவோ நிமிடத்தில் செய்துவிடலாம். பருப்புடன் காய் சேர்த்து குக்கரில் வைத்துவிட்டால் இந்த பேஸ்ட் வேண்டிய அளவு சேர்த்தால் போதும். குழம்பு ரெடி.
வேண்டிய காய்களை வதக்கிக்கொண்டு இந்தக் கூழ் சேர்த்தால் வற்றல் குழம்பு, ஒரே சுவை போரா? சிறிது தேங்காயுடன்  தனியாவை வறுத்து அரைத்து விட்டால் அரைத்த சாம்பார்.  முந்திரிப்பருப்பு வறுத்துக் கொண்டு, கூழ் சேர்த்து,வெந்தய, தனியாப்பொடி தூவினால் புளியோதரை.

நேரமிருந்தால் இதே போல் ரசக்கூழ் செய்யலாம். சாம்பார்ப் பொடிக்கு பதில் ரசப் பொடி சேர்க்கவேண்டும். கஷ்டப்படாமல் டக்கென்று பூண்டு ரசம், புதினா ரசம், மைசூர் ரசம், மிளகு ரசம் என எது வேண்டுமோ அது .                     

இந்த புளிக்கூழ்களின் உதவியால் எல்லா வகுப்புகளுக்கும்  போகமுடிந்தது. இரண்டு ஆண்டுகள், தீரத்தீர ஒரு நாள் வேலைதான். வேலைக்குப் போகின்றவர்களுக்கு வரப்பிரசாதம். திடீர் விருந்தினர் வந்தால் கை கொடுக்கும் தெய்வம்!  என்ன, ஒரு நாள் கஷ்டப்படவேண்டும். ஒரு மாதம் நிம்மதியாக இருக்கலாம். செய்து பாருங்களேன்!


No comments:

Post a Comment