16 Feb 2012

முத்துக் குழம்பும், சவரன் துவையலும்

நகைச்சுவை வாழ்க்கையின் சாரம் என்று சொல்வார்கள். நகை என்றால் சிரிப்பு, மகிழ்ச்சி.  நகை என்றால் சிரித்தல் செய்.  ஒரு பெண்ணை வாய் நிறைய சிரிக்க வைப்பதால் தான் ஆபரணங்களுக்கு நகை என்று பெயர் வைத்தார்கள் போல! தினந்தோறும் செய்கின்ற சமையலிலும், சாப்பாட்டிலும், இல்லாத நகைச்சுவையா?

தேர்வு எழுதுகிற  மாணவனின் தேர்வுத் தாளை ஒரே ஒரு ஆசிரியர்தான் திருத்துவார். ஆனால் ஒருத்தர் எழுதி பலரும் மார்க் போடுகிற பரிட்சை இந்த சமையல்தாங்க.

என்னம்மா இவ்வளவு உப்பு? அதிக உப்பு சேர்த்தால் ரத்த அழுத்தம் எகிறிடும், இது கணவர்.
உப்பே இல்லாம இது என்ன சப்பென்று? எவன் சாப்பிடுவான், இது பிள்ளை.

எண்ணை அதிகமானால் கொலஸ்ட்ரால், கம்மியானால்  பேஸ்ட் உப்புமா.
காரம் அதிகமானால் அல்சர். இல்லையென்றால் சப் சப்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் முடிவே இல்லையா?

நாங்கள் அடிக்கடி பாண்டிச்சேரி செல்வோம். கடற்கரையில் ஒரு உணவகம். ஒரு நாள் மாலை ஏதாவது சாப்பிடலாம் என்று உள்ளே போனோம். தயிர் வடை ஆர்டர் செய்தோம். பத்து நிமிடத்திற்குப் பின் சுடச்சுடத் தயிர் வடை வந்தது. சூடான வடை மேல் தயிர் ஒரு கரண்டி!
என்ன சார், அப்பிடி பார்க்கறீங்க? தயிர்  வடைதானே கேட்டீங்க?

மகாத்மா காந்தி சாலையில் புகழ் பெற்ற முருகப் பெருமானின் பெயர் உடைய ஹோட்டல்:-
"என்ன வேணும்?
இரண்டு மசால் தோசை.
என்னப்பா, தோசை இவ்வளவு ஆறிப்போயிருக்கு?
ஏ.ஸி.ரூம்ல எப்படி சார் தோசை சூடாயிருக்கும்?"

சரிதான் இன்னிக்கு பார்சல் வாங்கிட்டு வந்திடுங்க.
 வெங்காய தோசை வாங்கி வந்தார்.
சரியான பசி. பார்சலைப் பிரித்தேன்.
தோசை மேலே நறுக்கிய  வெங்காயம் தூவப்பட்டிருக்கு!
பசியை மீறி சிரிப்போ சிரிப்பு. இவையெல்லாம் பாண்டிச்சேரி அனுபவங்கள்தான்.

இன்னிக்கு என்ன டிபன்?
புது டிபன்.
எந்த ரெசிப்பியை பார்த்து செஞ்சே?........இதோ பாரும்மா, புது ரெசிப்பியெல்லாம் செஞ்சு என்னை சோதிக்காதே! வேறே ஏதாவது குடு.
இருங்க, அவல் தோசை, மெத்து மெத்துன்னு இருக்கும்னு போட்டிருந்துதேன்னு கஷ்டப்பட்டு அரைச்சு வெச்சேன். ரெண்டே ரெண்டு.
சரி சரி விடமாட்டியே!
அடுப்பின் மேலே கல்.
கல்லின் மேலே அரைத்தமாவு.
ஓ, ரெண்டு ஸ்பூன் எண்ணை! கல்லோடுதான் உறவாடுவேன், வீணையும் நாதமும் போல என்னைப் பிரிக்கமுடியாது  என்று  கல்லோடு  ஒட்டிக்கொண்டு  தோசை  அழிச் சாட்டியம் பண்ண, பழைய புளித்தமாவு தோசை வேறொரு கல்லில்!

பெண் பார்க்க வந்தவர்கள்.
உங்க பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?
ம்ம், நல்லா வென்னீர் வைப்பா! இன்ஸ்டண்ட் காப்பி போடுவா, எம்.டீ.ஆர் பாக்கெட்டை மைக்ரோ ஓவனிலே வைச்சு சமைச்சுடுவா. என்ன சார், இந்தக்காலத்திலே சமையல்?

எப்பப்பார்த்தாலும் ஒரே டேஸ்டில, சாம்பார், ரசம் இதைத் தவிர எதுவும் தெரியாதா?
எங்க அம்மா எப்படி சமைப்பாங்க தெரியுமா? முத்துக் குழம்பும், தங்கப்பூ ரசமும், சவரன்
துவையலும்!
அடடா, நீங்க என்ன மகாராஜா பரம்பரையா?
என்ன ரகசியமோன்னு பார்த்தேனா? வற்றல் குழம்பிலே மணத்தக்காளி வற்றலை நெய்யில் பொரித்துப் போட்டார்களே, அதுதான் முத்துக்குழம்பு!
பொன் போலக் காய்ந்த வேப்பம் பூவை வறுத்துப் போட்டார், பூ ரசம்  ஆயிற்றா?
துவரம் பருப்பை சிவக்க வறுத்து, மிளகு சேர்த்து அரைத்தால் சவரன் துவையல்!
அட ஜம்பமே, என்று சிரித்தாலும் என்ன ஒரு கற்பனை பாருங்கள்!

முத்துக் குழம்பும், பூ ரசமும், சவரன் துவையலும் பெஸ்ட் காம்பினேஷன் சமையல்.
செய்து பாருங்களேன்!
                                      -----------------------------------------







2 comments:

  1. மிக நல்ல நகைச்சுவை இழையோடும் பதிவு...

    ReplyDelete
  2. எழுதுவதற்கு ஊக்கம் கொடுப்பதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete